வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

இன்றைய நவீன நாகரிக மக்கள் தாங்கள் பெருமளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் முன்னேற்றம் என்பதே பேச்சாக உள்ளது, அதுவே வாழ்க்கை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் மனித வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றம் என்றால் என்ன என்பதைச் சற்று காண்போம்.

சமுதாயத்தின் இன்றைய நிலை

இன்றைய சமுதாயத்தில் யாராவது எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் அவரை மற்றவர்கள் ஏளனமாகப் பார்க்கக்கூடிய சூழ்நிலையைக் காணலாம். மக்கள் தங்களுடைய உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு உழைப்பதற்கு பதிலாக, பெயரளவிலான நாகரிக முன்னேற்றத்திற்காக, அதாவது மிகப்பெரிய பங்களா, கார், ஸ்மார்ட் போன், வானுயர் மாளிகை, நவீன உபகரணங்கள் முதலியவற்றிற்காக கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தப் பொருட்களுடன் நாம் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதை அறியாத காரணத்தினால், அவன் கழுதையைப் போன்று கடுமையாக உழைக்க ஆர்வமாக உள்ளான்.

அனைத்துச் செயல்களும் விதிப்படியா?

மக்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் தங்களுக்குக்கென்று என்ன விதிக்கப்பட்டிருக்கின்றதோ அதனை மட்டுமே அடைகின்றனர். மக்கள் பௌதிகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும் வரை விதியினை கட்டுப்படுத்துவது எட்டாக் கனியாகவே இருக்கும். எண்ணற்ற மக்கள் மிகவும் கடுமையாக உழைப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் அவர்கள் அனைவரும் ஃபோர்டு, பில்கேட்ஸ், அம்பானி போன்றவர்களாக மாற முடிவதில்லை. அனைவரும் திறமையாகவே உழைக்கின்றனர், ஆனால் விதியின் காரணமாகவே மேலே குறிப்பிட்ட நபர்கள் செல்வந்தர்களாக முடிந்தது. இதுவே உண்மையான நடைமுறை. நாயைப் போலவும் கழுதையைப் போலவும் உழைப்பதால் விதியினை மாற்ற இயலாது.

ஆனால் கிருஷ்ண உணர்வின் –மூலமாக விதியினை மாற்ற இயலும்; குறைந்தபட்சம் விதியினால் ஏற்படும் துன்பத்தைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். தம்மிடம் சரணடைந்தால் நம்முடைய பாவ விளைவுகள் அனைத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதாக கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். எனவே, நம்முடைய தலைவிதியை கிருஷ்ண உணர்வின்றி மாற்றுதல் என்பது இயலாததாகும்.

 

பிரகலாதர் தன் நண்பர்களுக்கு ஆன்மீக விஷயங்களைக் கூறுதல்

84,00,000 வகை ஜீவன்களின் போராட்டம்

வேத சாஸ்திரங்கள் மற்றும் பத்ம புராணத்தில் கூறியிருப்பது யாதெனில், இப்பௌதிக உலகில் மொத்தம் 84,00,000 வகையான உயிரினங்கள் இருக்கின்றன. ஜீவாத்மாவானவன் நாய், பூனை, தேவன், பறவை, பூச்சி என்ற பலவிதமான உடல்களில் பற்பல பிறவிகளாகப் பயணிக்கின்றான். பலவித உடல்களை மாறிமாறி பெற்றால்கூட, அனைத்து உடல்களிலும் தன்னுடைய புலன்களை திருப்திப்படுத்துவது மட்டுமே அவனது நோக்கமாக உள்ளது. உண்ணுதல், உறங்குதல், இனக்கவர்ச்சி இன்பம், பாதுகாத்தல் போன்ற செயல்களையே அனைவரும் செய்கின்றனர். நாய், பன்றி என இதர ஜீவராசிகளும் இதே செயல்களைச் செய்கின்றன, மனித உடலைப் பெற்ற ஜீவனும் இதே செயல்களைச் செய்கின்றான்.

மனிதன் செய்ய வேண்டிய சில விசேஷ செயல்கள் உள்ளன. ஆனால் அவற்றை விடுத்து மனிதனும் மேற்கூறிய நான்கு செயல்களில் மட்டும் ஈடுபட்டால், அத்தகையவர்கள் த்விபாத பஷு, இரண்டு கால் மிருகம்” என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.

ஆனால் மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடிய மனித வாழ்க்கையை இதுபோன்ற அற்பமான விஷயங்களுக்காகச் செலவிடாமல், வாழ்வின் தொடர் போராட்டத்திலிருந்து விடுபடுவதற்கான வழியினைக் கண்டறிந்து அதன்படி செயலாற்ற வேண்டும். அதுவே உண்மையான முன்னேற்றமாகும்.

பௌதிக, ஆன்மீக முன்னேற்றம்

நாம் முன்னரே எடுத்துரைத்ததுபோல் ஒருவருடைய பௌதிக முன்னேற்றமானது அவருடைய விதிப்படியே நடக்கும். நாம் அனைவரும் துன்பத்திற்காக எந்த முயற்சியும் எடுக்காதபோதிலும், துன்பமடைய வேண்டியுள்ளது. அதுபோலவே, இன்பமும் எவ்வித முயற்சியும் இல்லாமல் வந்து சேரும். மஹாஜனங்களில் ஒருவரான பிரகலாதர் தம்முடைய நண்பர்களுக்கு அறிவுறுத்துகின்றார்: எனதருமை நண்பர்களே, இந்த பௌதிக உடலுக்கேற்ற அற்பமான பௌதிக இன்பம் அனைத்து பிறவிகளிலும் ஒரே தன்மையுடையது. மேலும் உன்னத ஏற்பாட்டின்படி நமது முயற்சியின்றியே துன்பம் வருவதுபோல, நமது தகுதிக்கேற்ப இன்பத்தையும் தானாகப் பெற முடியும்.” (ஸ்ரீமத் பாகவதம் 7.6.3)

எனவே, பௌதிக முன்னேற்றம் தானாக அடையப்படுகிறது. மேலும், இது தற்காலிகமானதுமாகும். அதாவது, இந்தப் பிறவியில் ஒருவன் மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பினும், அடுத்த பிறவியில் அவன் ஒரு நாயாக மாறக் கூடும்.

ஆனால் ஆன்மீக முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில், அது பகவானுடைய கருணையையும் அவரது பக்தர்களுடைய கருணையையும் அடிப்படையாகக் கொண்டது. அதே சமயத்தில், அது தானாக ஏற்படுவதில்லை, அதற்கான முயற்சியையும் நாம் மேற்கொள்ள வேண்டும். உண்மையான குருவினை அணுகி அவருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் ஆன்மீகத்தில் நாம் முன்னேற்றம் காண முடியும். இந்த வகையான முன்னேற்றம் நிரந்தரமானதாகும். அதாவது, இது பிறவிதோறும் நம்முடன் வரக்கூடிய முன்னேற்றமாகும். இந்தப் பிறவியில் நாம் எந்த இடத்தில் பக்திப் பாதையினை விட்டோமோ அதே இடத்திலிருந்து அடுத்த பிறவியில் நாம் தொடங்க முடியும். இருப்பினும், பக்தர்கள் இந்தப் பிறவியிலேயே பகவானின் இருப்பிடத்தை அடைவதற்குப் பேராவல் கொண்டு பக்திப் பாதையில் பயணிக்கின்றனர்.

 

குடிசை வீடுகள் மாடி வீடுகளாவதும் மாட்டு வண்டிகள் மோட்டார் வாகனங்களாவதும் உண்மையான முன்னேற்றம் அல்ல.

வேத நாகரிகத்தைப் பின்பற்றுபவர்கள் சோம்பேறிகளா?

இந்தியாவில் அனுஷ்டிக்கப்படும் எளிமையான வேத நாகரிகத்தைப் பின்பற்றுபவர்களை சிலர் சோம்பேறிகள் என்றும், முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்காதவர்கள் என்றும் நினைக்கின்றனர். உண்மையில் அவர்கள் சோம்பேறிகள் அல்லர். அவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். கௌமார ஆசரேத் ப்ரஜ்ஞோ தர்மான் பாகவதான் இஹ, வாழ்வின் ஆரம்ப காலத்திலிருந்தே ஒருவன் பாகவத தர்மத்தினை (கிருஷ்ண உணர்வினை) உணர்வதற்கு முயல வேண்டும்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (7.6.1) கூறுகிறது. அதாவது, ஒவ்வொருவரும் தமது குழந்தை பருவத்திலிருந்தே ஆன்மீக விஷயத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும்.

உண்மையான முன்னேற்றத்தை அறியாதவர்களே ஆன்மீக அன்பர்களைச் சோம்பேறிகள் என்று கூறுவர். பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் இயங்கும் நபர்களுடன் இந்த ஆன்மீக அன்பர்கள் போட்டி போடுவதில்லை. கிருஷ்ண உணர்வினை நிலைநிறுத்தும் பொருட்டே அவர்கள் தங்களுடைய விலை மதிப்புமிக்க நேரத்தைச் செலவிடுகின்றனர். கோடிக்கணக்கான தங்க நாணயங்களை கொடுத்தாலும், கடந்துசென்ற ஒரு நொடியினைத் திரும்பப் பெற இயலாது என்று சாணக்கிய பண்டிதர் கூறுகிறார். எனவே, குடிசையிலிருந்து மாளிகைக்கு மாறுதல், மாட்டு வண்டியிலிருந்து நான்கு சக்கர வாகனத்திற்கு மாறுதல் முதலிய பொய்யான முன்னேற்றத்திற்காக கிருஷ்ண பக்தர்கள் தங்களுடைய மதிப்புமிக்க நேரத்தினைச் செலவிடுபவர்கள் அல்லர். இந்தப் பொய்யான முன்னேற்றத்திற்காக உழைப்பவர்கள் அடுத்த பிறவியில் கீழ்த்தரமான உடலை ஏற்பது நிச்சயம். இதனால், வேத கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் இதுபோன்ற முன்னேற்றத்திற்காக நிச்சயம் உழைக்க மாட்டார்கள்.

உண்மையான முன்னேற்றத்தை நோக்கி…

கடவுளிடம் அன்பு செலுத்துதல் அல்லது அவரிடம் சரணடைதல் என்பதே பாகவத தர்மமாகும். அர்ஜுனன் பகவத் கீதையை பகவான் கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகக் கற்றான். நாம் அனைவரும் அர்ஜுனனை முன்னோடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அர்ஜுனன் எவ்வாறு கிருஷ்ணரைப் புரிந்து கொண்டு செயல்பட்டானோ, அதே வழியினை நாமும் பின்பற்ற வேண்டும். அதுவே மஹாஜனங்கள் காட்டும் உண்மையான பாதையாகும். மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:, மஹாஜனங்கள் ஏற்படுத்திய பாதையினை நாம் பின்பற்ற வேண்டும்,” என்று மஹாபாரதம் (வன பர்வம் 313.117) கூறுகிறது. கிருஷ்ண பக்தி இயக்கம் அதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ளார். அவரே உண்மையான பக்தனுக்கு நன்மை அளிப்பவராக இருக்கின்றார். அவரது செய்திகளை முறையாக உச்சரிக்கும்போதும் கேட்கும்போதும் அவை வீரியமிக்கதாகின்றன. அவற்றைச் சுவைக்கும் பக்தனின் இதயத்திலிருந்து பௌதிக ஆசைகளை அவரே நீக்குகின்றார்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.17)

ஒருமுறை ஸ்ரீல பிரபுபாதர் தம்முடைய சீடர்களுடன் உரையாடுகையில் கூறினார், என்னுடைய வாழ்நாளில் ஒருமுறை கூட பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மறந்ததே இல்லை.” இதுபோன்ற நிலையே உண்மையான முன்னேற்றம். எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை,” என்று பகவத் கீதையில் (18.65) பகவான் கூறுகிறார்.

எனவே, எப்போதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்து அவரை மறக்காதவாறு இருப்பதே உண்மையான முன்னேற்றமாகும். சூரியன் உதித்தவுடன் மூடுபனி விலகுவதுபோல, இந்த கலி யுகத்தில், குறிப்பாக, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினால் அனைத்து பாவங்களும் அழிந்து ஒருவன் சீரடைகிறான், ஆன்மீகத் தளத்திற்கு வருகிறான். அதுவே வாழ்வின் உண்மையான முன்னேற்றமாகும்.

வாருங்கள் நாமும் உண்மையான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்போம்.

அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக விளங்கும் கிருஷ்ணர் பக்தனின் இதயத்திலிருந்து பௌதிக ஆசைகளை நீக்குகிறார்.