மாமன்னர் பரீக்ஷித்தின் கதையை எடுத்துரைப்பதில், ஸ்ரீமத் பாகவதமும் மஹாபாரதமும் வேறுபடுகின்றன. என்ன வேறுபாடு? ஏன்?

ஸ்ரீமத் பாகவதத்தின்படி, ஏழு நாளில் தக்ஷகனால் மரணமடைவோம் என்பதை அறிந்த மாமன்னர் பரீக்ஷித் உடனடியாக அனைத்தையும் துறந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் செவியுற்றார், ஏழாம் நாள் முடிவில் மனமகிழ்ச்சியுடன் தக்ஷகனால் தீண்டப்பட்டு மரணத்தை ஏற்றார்.

மஹாபாரதத்தின்படி, தனக்களிக்கப்பட்ட சாபத்தை அறிந்த மாமன்னர் பரீக்ஷித் யாரும் அணுக முடியாத கடுமையான கோட்டையைக் கட்டி அதனுள் தனக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டார். தக்ஷகனால் உள்ளே நிச்சயம் வர முடியாது என்று அவர் நினைத்திருந்த தருணத்தில், ஒரு பழத்தினுள் புகுந்த தக்ஷகன், அதனை பரீக்ஷித் கடிக்கும்போது வெளியே வந்து, அவரைத் தீண்டி மரணத்தை வழங்கினான்.

ஸ்ரீமத் பாகவதத்தின் படி பரீக்ஷித் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை, ஆனால் மஹாபாரதம் வேறு விதமாகக் காட்டுகிறது. ஏன், எவ்வாறு புரிந்து கொள்வது?

ஒரு பிரச்சனையும் இல்லை. பிரம்மாவின் ஒரு நாளில் 14 மனுக்கள் உள்ளனர், ஒவ்வொரு மனுவும் சுமார் 71 சதுர் யுகங்களை ஆள்கின்றனர்.

பகவானுடைய லீலைகளும் அவர் சார்ந்த நபர்களின் லீலைகளும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அவ்வாறு அவை அரங்கேறும்போது, அந்த லீலைகள் சில வேறுபாடுகளுடன் நிகழ்த்தப்படுகின்றன. அதாவது, வெவ்வேறு கல்பத்தில் ஒரே லீலைகள் நிகழ்த்தப்பட்டாலும், அவை வெவ்வேறு சுவையினை வழங்கும் பொருட்டு, சற்று மாறுதலான வழியில் நிகழ்த்தப்படுகின்றன. இதனை அறிஞர்கள் கல்ப பேதம் என்கின்றனர்.

எனவே, மஹாபாரதத்தின் சம்பவமும் ஸ்ரீமத் பாகவதத்தின் சம்பவமும் வெவ்வேறு கல்பத்தில் நிகழ்ந்தவை என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.