கிருஷ்ணரை அறிவோம்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பகவத் கீதையில் மாம் என்ற சமஸ்கிருத சொல் அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது. அதற்கு “என்னிடத்தில்,” அதாவது, முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரிடத்தில் என்று பொருள். இதனை நாம் நமது இஷ்டம்போல எடுத்துக்கொள்ளக் கூடாது. “எனக்கு ஒரு கோப்பைத் தண்ணீர் கொண்டு வாருங்கள்,” என்று நான் கூறும்போது, இதன் அர்த்தம், தண்ணீர் கேட்ட என்னிடத்தில் தண்ணீரை நீங்கள் கொடுக்க வேண்டும், வேறு இடத்தில் அல்ல. அதுவே சரியானது. அதுபோல, “என்னிடத்தில்” என்று கிருஷ்ணர் கூறும்போது, அது கிருஷ்ணரிடத்தில் என்று பொருள்படுகிறது. “என்னிடத்தில் என்றால், வேறு ஏதோ ஒன்றிடம்” என்று சிலர் தவறாகத் திரித்து கூறுகிறார்கள்.

கிருஷ்ணரிடம் அன்பை வளர்த்துக் கொண்டவர் கிருஷ்ண உணர்வில் உள்ளவராவார். காதலியுடன் அன்புள்ளவர் எப்பொழுதும் காதலியையே நினைத்துக் கொண்டிருப்பார். அது காதல் உணர்வு. ஒருவரை நாம் நேசித்தால், நமது அன்றாட செயல்களுக்கு மத்தியில்கூட எப்பொழுதும் அவரை நினைக்க முடிகிறது. பௌதிகத்திலேயே இது சாத்தியமாகும்போது, ஏன் ஆன்மீகத்தில் முடியாது? அதுவே பகவத் கீதையின் முழு போதனையாகும்.

சமுதாயத்தை நெறிப்படுத்துதல்

பகவத் கீதையில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் கூறுகிறார்: “ஒரு சத்திரியன் என்ற முறையில், நீ போரிட வேண்டும். போர்க்களத்திலிருந்து பின்வாங்கக் கூடாது. இஃது உனது கடமை.” இதுகுறித்த நடைமுறை அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அமெரிக்க நாட்டில் ராணுவ ஆள்சேர்ப்பு நிர்வாகத்தினர் மாணவர்களை ராணுவத்தில் சேர அழைத்துக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் விருப்பம் இல்லாதவர்களாக இருந்தனர். ஏனெனில், அவர்கள் சத்திரியர்களாகப் பயிற்சி அளிக்கப்படவில்லை. சத்திரியர்கள் என்றால் போர் வீரர்கள். இன்றைய மக்களுக்கு உழைப்பாளியாக வாழ்வதற்கு மட்டுமே பயிற்சி கொடுக்கப்படுகிறது. வர்ணாஷ்ரம தர்மம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானதாகும்.

மக்களில் ஒரு பிரிவினர் பிராமணராக பயிற்சியளிக்கப்பட வேண்டும். போதிய அறிவுடையவர் களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர்ந்த தத்துவ விஞ்ஞானத்தை அளிக்க வேண்டும். அவர்களை (பிராமணர்களை) விட குறைவான அறிவுடையவர்களுக்கு போர்ப் பயிற்சியளிக்க வேண்டும். போர் வீரர்கள் மட்டுமின்றி சமூகத்தில் அனைவரும் தேவைப்படுகின்றனர், எல்லாருமே போர் வீரர்களாக இருக்க முடியாது. இவர்கள் சாதாரண உழைப்பாளிகளை வியட்நாமுக்கு அனுப்புகிறார்கள், அவர்கள் தேவையின்றி கொல்லப்பட்டு வருகிறார்கள். விஞ்ஞான முன்னேற்றத்தில் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எந்த தேசமும், சமூகத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதை அறியாமல் முட்டாள்களின் சமூகமாகவே காணப்படுகிறது.

 

பிராமண பயிற்சி

பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளை கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். இஃது இயற்கையானது. சிலர் ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கி மனதை செலுத்துகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் பிராமணர்கள் எனப்படுகின்றனர். ஆன்மீகத்தில் அக்கறை உள்ள அத்தகு மாணவர்களுக்கு நாங்கள் இப்போது பயிற்சி கொடுக்கிறோம். ஆனால் தேவையில்லாமல் அவர்கள் ராணுவத்திற்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகிறார்கள். சில மாணவர்களுக்கு உயர்ந்த விஞ்ஞானத்தில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்னும் அறிவு இந்த முட்டாள் களுக்கு இல்லை. பக்குவமடைந்து வரும் மாணவர்களை அவர்கள் ஏன் அழிவை நோக்கித் தள்ள வேண்டும்?

பிராமணத் தன்மையுள்ள அறிவாளிகள் பிரம்மச்சரிய வாழ்விற்கு பயிற்சியளிக்கப்படுகிறார்கள். இவர்கள் மாமிசம் சாப்பிடுவது இல்லை, தவறான உடலுறவு கொள்வதில்லை. சமூகத்தில் மிகவும் புனிதமடைந்தவர்களும் உயர்ந்த அறிவாளிகளுமான இவர்கள் முழு பிராமணர்களாக பயிற்சியளிக்கப்படுகிறார்கள். குடும்பத்தில் ஒரு பிராமணன் இருந்தால், அப்பொழுது முழு குடும்பமும் முழு சமூகமும் ஆரோக்கியமுள்ளதாக மாறும். ஆனால் தற்போதைய சமுதாயம் மக்களுக்கு பிராமண அல்லது சத்திரிய பயிற்சியினை எவ்வாறு வழங்குவது என்பதில் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். வைசியர் மற்றும் சூத்திரர் வேலைக்கு நல்ல பயிற்சிகள் உள்ளன. யாராவது ஒருவர் வியாபாரியாக மாற விரும்பினால், அதற்கு அநேக கல்லூரிகளும் தொழில்நுட்பக் கூடங்களும் உள்ளன. இதற்குக் குறைவே இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் தொழில்நுட்பத்திற்கு மட்டும் ஏன் இழுத்துச் செல்லப்பட வேண்டும்? உங்களது உடலை முறையாகப் பராமரிப்பதற்குத் தலை, கைகள், வயிறு, மற்றும் கால்கள் தேவைப்படுகின்றன, உடம்பில் உள்ள அத்தனை பாகங்களும் தேவைப்படுகின்றன. “எங்களுக்குத் தலை தேவையில்லை” என்று நீங்கள் சொல்ல முடியாது. அது முட்டாள்தனம். நமக்கு அனைத்தும் தேவைப்படுகிறது. தலை இல்லாமல் உடல் இருந்தால், அது பிணம்தான். உடலின் அறிவுள்ள பாகமாக தலை கருதப்படுகிறது. அதுபோல, சமூகத்தில் பிராமணன், அதாவது, ஆன்மீக மனிதன் இல்லையென்றால், அஃது இறந்த சமூகமே.

தலையில்லாத சமுதாயம்

அதனால்தான் கிருஷ்ணர் கூறுகிறார், “செயல் களுக்கும் குணங்களுக்கும் ஏற்ப, நான்கு வகையான சமூகத்தினை நான் உருவாக்கினேன்.” (பகவத் கீதை 4.13) பிரம்மச்சரிய பிராமணராக செயல்படுபவர்கள் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளும் தன்மையை அடைகிறார்கள். அந்த சமயத்தில் அவர்களை ஏன் போருக்கு அழைக்க வேண்டும்? உடல் வலிமை உள்ளவர்கள் சத்திரியர்கள், அவர்கள் சமூகத்தையும் நாட்டையும் காப்பாற்றத் தேவையானவர்கள். இதை யாரும் நிராகரிக்க முடியாது. ஆனால் பிராமணர்களை இதற்கு அழைக்கக் கூடாது. இது ஓட்டப்பந்தயக் குதிரையை சுமை வண்டி இழுக்கச் செய்வது போன்றதாகும்.

ஓட்டப்பந்தயக் குதிரை குறிப்பிட்ட சில நோக்கத்திற்காகத் தேவைப்படுகிறது. சுமை வண்டி இழுப்பதற்குக் கழுதைகளும் எருதுகளும் உள்ளன. ஆன்மீக நபர்கள் அல்லது கிருஷ்ண உணர்வு இல்லாத எந்த சமூகமும் அயோக்கியத்தனமான சமூகமாகும். இதை நான் வெளிப்படையாகவே சொல்லுகிறேன். யார் வேண்டு மானாலும் படிக்கட்டும். ஏனென்றால், கிருஷ்ண உணர்வு இல்லாத சமூகம் தலையில்லாத உடலுக்கு சமம். தலையில்லாதவன் வெறும் பிணம்தான். அறிவில்லா தவனும் தலையில்லாதவனுக்கு சமமே. அறிவு சரியாக வேலை செய்யாவிட்டால், அவன் பைத்தியக்காரன்.

தலைவர் இல்லாத சமூகத்திலோ பைத்தியக்கார சமூகத்திலோ அமைதியை எதிர்பார்க்க முடியுமா? அமைதி என்ற கேள்விக்கே இடமில்லை. அதே போல தற்கால சமூகத்திற்கு கிருஷ்ண உணர்வு மிக முக்கியமான பாடமாகும். சமூகத்தை வழிநடத்திச் செல்லும் தலைவர்கள் ஆத்ம விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

மிருக சமுதாயத்தில் அமைதியா?

ஜப்பானுக்கு நான் சென்றபோது, டோக்கியோவில் ஜப்பான் நாட்டு அரசாங்கச் செயலாளர் ஒருவரைச் சந்தித்தேன். எங்களது கிருஷ்ண உணர்வு இயக்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், “எந்த மத இயக்கத்துடனும் நாங்கள் ஒத்துழைக்க முடியாது,” என்று பதிலளித்தார். அவர் அரசாங்கத் தலைமைச் செயலாளர்களில் ஒருவர். இருப்பினும், அவர் ஒரு சிறந்த முட்டாள். நம்மிடம் அநேகமான கற்பனை மதங்கள் உள்ளதுபோல, கிருஷ்ண உணர்வு இயக்கத்தையும் ஒரு மத இயக்கமாக நினைக்கிறார். ஆனால் இது கற்பனையான மதம் அல்ல, இது சமூகத்திற்குத் தேவையானது. மனிதர்களில் ஒரு பிரிவினர் கிருஷ்ண உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த சமூகம் தண்டிக்கப் பட்டு நரகத்தை நோக்கிச் செல்லும். மேலும், இத்தகைய அயோக்கியர்கள் அரசாங்கத்தில் தலைவர்களாக இருக்கும்போது, எப்படி அங்கே அமைதியிருக்கும்? நாய்களின் சமூகத்தில் அமைதியை எதிர்பார்க்க முடியுமா? நாய்கள் இயற்கையாகவே வேறொரு நாயைப் பார்த்தவுடன் “வௌ, வௌ, வௌ” என்று குரைப்பவை.

மனித சமூகத்தை நாய், பூனை, புலி சமூகத்தை நோக்கித் திருப்பினால், அமைதி கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அநேக மிருகங்களைக் கொல்லக்கூடிய சக்தி புலிக்கு உண்டு. அதற்காக அதனை மிக முக்கியமான மிருகமாகச் சொல்ல முடியுமா? இல்லை. ஏனென்றால், புலியால் சமூகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அதுபோலவே, நாம் தற்போது மிகவும் சக்தியுள்ளவர்களாக இருக்கிறோம், பிறருடன் சண்டையிடுவதற்கு நம்மிடம் நல்ல ஆயுதங்கள் உள்ளன, நம்மால் பல்வேறு மக்களைக் கொல்ல முடியும். ஆனால் இவையெல்லாம் நல்ல மனிதர்கள் அல்லது நல்ல சமூகம் என்று சொல்வதற்குத் தகுதியற்றதாகும்.

மிகக் கடினமாக உழைக்கும் அயோக்கியர்கள், கழுதைகள் மற்றும் புலிகளின் சமூகத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. கழுதைகளின் சமூகம் வாழ்விற்கு ஏதேனும் நன்மையைக் கொடுக்குமா? கொடுக்காது.

அநேக மிருகங்களைக் கொல்லும் சக்தி புலியிடம் உள்ளது, அநேக மனிதர்களைக் கொல்லும் சக்தி மனிதனிடம் உள்ளது. இதுவா முன்னேற்றம்?

கிருஷ்ணர் அனைவருக்கும் சொந்தமானவர்

மேற்கத்திய நாடுகளுக்கு நான் வருவதற்கு முன்பு, கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் போன்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது இது வளர்ச்சியடைந்து வருகிறது. கிருஷ்ணரை நீங்கள் உங்களுடைய மதக் கடவுளாக ஏற்கவில்லை. ஆனால் கிருஷ்ணர் மிகவும் கவர்ச்சிகரமானவர். கிருஷ்ணருக்கு நீங்கள் வெளிநாட்டவர் அல்ல, கிருஷ்ணர் உங்களுக்கு அந்நியரும் அல்ல. அவர் அனைவரையும் தன்னுடையவராக உரிமை கொண்டாடுகிறார். நாமோ சிலரை அந்நியர்களாக நினைக்கின்றோம். இது நமது முட்டாள்தனமாகும்.

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: “எனதன்பு அர்ஜுனனே, அநேக உருவங்களில் வெவ்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. அவை எல்லாவற்றிற்கும் நானே தந்தை.” கிருஷ்ணர் எவ்வாறு எங்கும் பரவியுள்ளார் என்பதைச் சற்று கவனியுங்கள். அவர் மனித வர்க்கத்தை மட்டும் உரிமை கொண்டாடவில்லை. மிருக வர்க்கம், பறவை வர்க்கம் என அனைத்தையும் உரிமை கொண்டாடுகிறார். கிருஷ்ணர் கூறுகிறார்: “நானே தந்தை.” ஆகவே, கிருஷ்ணர் எவ்வாறு அயல்நாட்டவராவார்? கிருஷ்ணரை அயல்நாட்டவர் என்று கூறினால், அது வாய்க்கு வந்தபடி உளறுவதாகும். கிருஷ்ணர் இந்துக்களால் வழிபடப்படும் இந்திய கடவுள் என்று சிலர் கூறுகிறார்கள். “நான் இந்து கடவுள்,” “நான் ஓர் இந்தியன்” என்று கிருஷ்ணர் கூறுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் சூரியனைப் போன்றவர். அமெரிக்க சூரியன், இந்திய சூரியன் என்று ஏதுமில்லை! இந்தியன், அமெரிக்கன் என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் செயற்கையான பேச்சுகள்.

போலியான பொதுவுடைமை

“இந்த கிரகம் மனிதர்களுக்குச் சொந்தமானது,” என்று கம்யூனிஸம் கூறுகிறது. இத்தகைய பொதுவுடைமை கோட்பாடு குறைபாடுகள் கொண்டதாகும். ஏனென்றால், ரஷ்யர்கள் ரஷ்யா தங்களுக்கு மட்டுமே என்றும், சீனர்கள் சீனா தங்களுக்கு மட்டுமே என்றும் கூறுகிறார்கள். இவை ஏன் அனைவருக்கும் சொந்தமாக இருக்கக் கூடாது? இந்த பொதுவுடைமை ஏன் மனிதர்களுக்கு மட்டும்? மற்ற உயிரினங்களுக்குப் பொதுவுடைமை கிடையாதா? இந்த உலகம் மனித வர்க்கத்திற்குச் சொந்தமானது என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால், அது அரைகுறையானதாகும். இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானதாகும். இது மரங்களுக்கும் சொந்தமானது, மிருகங்களுக்கும் சொந்தமானது. வாழ்வதற்கான உரிமை அவற்றிற்கும் உண்டு. மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? எருதுகளை ஏன் கசாப்புக் கூடத்திற்கு அனுப்ப வேண்டும்? இஃது அநீதி. நீங்களே அநீதியை இழைக்கும்போது, உங்களால் எவ்வாறு நீதியைப் பெற முடியும்?

முட்டாள்களான ஐக்கிய நாடுகள்

உங்களிடம் கிருஷ்ண உணர்வு இல்லை. கிருஷ்ணரே நமது உண்மையான தந்தை. நாம் அனைவரும் அவரின் குழந்தைகள் என்பதை அறிவதில்லை. மரம் எனது சகோதரன், அமெரிக்கன் எனது சகோதரன், இந்தியன் எனது சகோதரன், சீனன் எனது சகோதரன். இதுவே கிருஷ்ண உணர்வு, இந்த கிருஷ்ண உணர்வை நாம் வளர்க்க வேண்டும். உலக சகோதரத்துவம் மற்றும் ஐக்கிய நாடுகளைப் பற்றி நாம் பேசுகிறோம். இவையனைத்தும் முட்டாள்தனம்; ஏனெனில், இவர்கள் தந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை, சகோதரத்துவம் மற்றும் மனிதத்தன்மை என்றால் என்ன என்பதை உணரும் எண்ணம் இவர்களிடம் கிடையாது. இப்படி இருக்கும் பட்சத்தில், ஐக்கிய நாட்டு ஒற்றுமையைப் பற்றி வருடக்கணக்கில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முதல் தர முட்டாள்களே.

ஐ.நா. சபையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! அவர்களது அலுவலகம் நியூயார்க்கில் உள்ளது. உலக ஒற்றுமையைப் பற்றி அவர்கள் வெறுமனே முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலை. முழு கிருஷ்ண உணர்வு இல்லையென்றால், உலகில் எவ்வித முன்னேற்றமும் காண முடியாது. எனவே, கிருஷ்ணரிடம் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஆரம்பத்திலேயே தொடங்குங்கள், இப்போதே ஆரம்பியுங்கள். இது செயற்கையானதல்ல. இதனைத் தீவிரமாக ஏற்றுக் கொண்ட மாணவர்கள் என்னிடம் சிலர் உள்ளனர். அவர்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள், இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் கிருஷ்ணரிடம் அன்பை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கிருஷ்ணரிடம் அன்பை வளர்த்தல்

கிருஷ்ணரிடம் அன்பு இல்லையெனில், அவர்கள் ஏன்  “ஹரே கிருஷ்ண” என்று உச்சரித்துக் கொண்டு, நேரத்தை வீணடிக்க வேண்டும்? நீங்கள் எதன்மீதும் அன்பை வளர்த்துக் கொள்ளலாம், ஆனால் அந்த அன்பிற்காக நீங்கள் பிரத்யேகமாக முயற்சி செய்ய வேண்டும். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே மிகவும் இயற்கையானதாகும்; ஏனென்றால், கிருஷ்ணர் ஒரு வகையான மதத்திற்கோ பிரிவினருக்கோ சொந்தமானவர் அல்ல. “நான் எல்லாருக்கும் சொந்தமானவன்” என்று கிருஷ்ணர் உரிமை கொண்டாடுகிறார். ஆகவே, உண்மையில் நாம் அனைவரும் கிருஷ்ணரோடு தொடர்புடையவர்களே, ஆனால் தற்போது அதனை மறந்த நிலையில் உள்ளோம். மஹா மந்திர உச்சாடனமானது கிருஷ்ணரின் நினைவை மீண்டும் உருவாக்குகிறது. நான் செயற்கையாக ஏதோ சிலவற்றை உங்களிடம் கூறவில்லை. கிருஷ்ணர் ஏற்கனவே உங்களிடம் தொடர்பு கொண்டிருக்கிறார், ஆனால் நீங்கள் அதனை மறந்துவிட்டீர்கள். அதனால் உங்களுடைய உண்மையான உணர்விற்குப் புத்துயிரளிக்கும் முறையை வழங்க நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம்.

ஆகவே, எங்கள் கோயிலுக்கு வாருங்கள். அதுவே ஆரம்பம். அதன்பிறகு, அங்கு நீங்கள் கிருஷ்ணரையும் அவரது பக்தர்களையும் கண்டு, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரியுங்கள். கிருஷ்ணர் அவருடைய பெயரிலிருந்து வேறானவர் அல்லர். ஏனென்றால், அவர் பூரணமானவர்.

கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துதல் இயற்கையானது, அந்த உண்மையான உணர்விற்கு புத்துயிரளிக்கும் முறையை நாங்கள் வழங்கி வருகிறோம்.

கிருஷ்ணரை அறிவோம்

“நான் அனைத்திலும் பரவியிருக்கிறேன், அஃது எனது அருவமான விசேஷத் தன்மை,” என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (13.14) கூறுகிறார். கிருஷ்ணர் தனது அருவ தன்மையினால் எல்லாவற்றிலும் இருக்கிறார், ஆனால் அவர் ஒரு நபர். கிருஷ்ணர் அனைத்துமாக மாறிவிட்டால், அவர் நபராக இருப்பது எவ்வாறு சாத்தியம் என்று மாயாவாதிகள் நினைக்கிறார்கள். இது முழு அயோக்கியத்தனம். ஏனென்றால், இது ஜடக் கருத்தாகும், ஆன்மீக அறிவு அல்ல. பௌதிகத்தில் நாம் ஒரு துண்டு பேப்பரை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தால், உண்மையான பேப்பர் அங்கு இருப்பதில்லை. இதுவே பௌதிகம். ஆனால் எவ்வளவு பகுதிகள் பூரண உண்மையான கிருஷ்ணரிடமிருந்து பிரிந்தாலும், முழுமையானது முழுமையாகவே உள்ளது. இதனை நாம் வேதங் களிலிருந்து அறிகிறோம். பௌதிகமாக ஆராய்ந்தால் ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்துவிட்டால் பூஜ்யம். ஆனால் ஆன்மீகமாகப் பார்த்தால், ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தாலும் அந்த ஒன்று ஒன்றாகவே இருக்கிறது, கூட்டினாலும் ஒன்றாகவே இருக்கும்.

கிருஷ்ணர் அனைத்திலும் உள்ளார். அருவ வாதிகளான மாயாவாதிகள் எங்கள் விக்ரஹங்களைப் பார்த்து, “இது மரத்தால் உண்டாக்கப்பட்டதுதானே, இதைப் போய் இவர்கள் கடவுளாக வழிபடுகிறார்களே” என்று கூறுகிறார்கள். ஆனால் கிருஷ்ண விஞ்ஞானத்தைத் தெரிந்துகொள்பவர் கிருஷ்ணர் அனைத்திலும் உள்ளார், ஆகவே அவரால் எதிலும் தோன்ற முடியும் என்பதைப் புரிந்துகொள்கிறார். கிருஷ்ணரிடம் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை ஒருவர் அறிய வேண்டும். கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் உள்ளார். மரம், இரும்பு மற்றும் உலோகத்தினாலான கிருஷ்ண விக்ரஹத்திலிருந்து கிருஷ்ணரை எவ்வாறு பெற முடியும் என்பதை பக்தன் அறிந்திருக்க வேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வு.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment