அறிவற்ற சமுதாயம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு சவால்

 

சமுதாயத்தில் மூளை இல்லாவிடில், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என்பதை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தைச் சார்ந்த சார்லஸ் ஹென்னிஸ் என்பவரிடையே எடுத்துரைக்கும் உரையாடல்.

ஹென்னிஸ்: ஐக்கிய நாடுகள் சபையைச் சார்ந்த சர்வதேச தொழிலாளர் நிறுவனத்திற்காக நான் பணிபுரிகிறேன். உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும் நன்மைக்காகவும் நாங்கள் பாடுபடுகிறோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: வேத இலக்கியம் நான்கு சமுதாயப் பிரிவுகளை விளக்குகின்றது–அறிவாளிகள், நிர்வாகிகள், வர்த்தகர்கள், மற்றும் தொழிலாளர்கள். தொழிலாளர்கள், சமுதாயம் என்னும் உடலின் கால்களாக செயல்படுகின்றனர்; ஆனால் கால்கள் தலையினால் வழிகாட்டப்படுதல் அவசியம். சமூக உடலின் தலையைப் போன்றோர், அறிவாளி பிரிவினர். சமூக உடலின் கால்களுக்கு மட்டும் ஐக்கிய நாடுகள் சபை தனது கவனத்தைச் செலுத்துகிறது. ஆனால், மூளைக்காக, அறிவாளிகளுக்காக அவர்கள் என்ன செய்கிறார்கள்?

ஹென்னிஸ்: சமுதாயத்தின் பொருளாதார இலாபத்தில் உழைப்பாளிகள் தங்களது சரியான பங்கைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் எனது கருத்து என்னவெனில், சமுதாயத்தின் தலையை ஒதுக்கிவிட்டு கால்களுக்கு எவ்வளவு கவனத்தைச் செலுத்தினாலும், அதன் விளைவு சரியாக அமையாது. ஏனெனில், மூளை சரியான நிலையில் இருக்காது.

ஹென்னிஸ்: ஆனால் இதுவும் சமூகத்தின் முக்கிய அங்கம் என நீங்கள் நினைக்கவில்லையா? உலகிலுள்ள தொழிலாளர்களை முன்னேற்றுவதே எங்களது குறிக்கோள்.

ஸ்ரீல பிரபுபாதர்: அமெரிக்காவிலுள்ள தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், புத்திசாலி வகுப்பினரால், அதாவது மூளையினால் வழிகாட்டப்படாததால், அவர்கள் வீணாகக் குடித்து தங்களது பணத்தை விரய மாக்குகிறார்களே!

ஹென்னிஸ்: நல்லவை தவறாக உபயோகப்படுத்தப்படும்போது, அவை கெட்டவையாகி விடுவதில்லை என்பதே உண்மை.

ஸ்ரீல பிரபுபாதர்: நான் சொல்வது என்னவெனில், ஒவ்வொருவரும் மூளையினால் வழிகாட்டப்பட வேண்டும். சமுதாயத்தை ஒழுங்குபடுத்த அதுவே வழி. புத்தியின்றி, கழுதைபோல கடினமாக உழைப்பதால் என்ன பயன்?

ஹென்னிஸ்: மனிதனிடம் அவனது மூளையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்த முடியாது.

ஸ்ரீல பிரபுபாதர்: அதனால்தான், சமூகத்தின் மூளையாகச் செயல்படக்கூடிய சீர்மிகு அறிவாளிகளின் பிரிவை ஐக்கிய நாடுகள் ஆதரிக்க வேண்டும். அவர்களின் வழிகாட்டுதலால் அனைவரும் மகிழ்ச்சி அடையலாம்.

ஹென்னிஸ்: தத்துவம் அறிந்த தலைவர்களின் பிரிவு, அதாவது பாதிரியார்களின் பிரிவு உலகிலுள்ள எல்லா சமுதாயத்திலும் ஏற்கனவே இருக்கின்றது என நான் நினைக்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: பாதிரியார்களா! “கொல்லாதிருப்பாயாக” என்று பைபிள் கூறுகிறது. ஆனால் பாதிரியார்கள் அதனை தங்களுடைய சொந்த விருப்பத்திற்கேற்ப மாற்றிவிட்டார்கள். அவர்கள், ஆயிரக்கணக்கில் அப்பாவி மிருகங்களைக் கொல்லும் பெரும் கசாப்புக் கூடங்களுக்கு அனுமதியளித்து, கொலை செய்வதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அத்தகு பெயரளவு பாதிரியார்கள் எப்படி வழிகாட்ட முடியும்? எத்தனையோ கிருஸ்துவ பாதிரியார்களிடமும், பெரியவர்களிடமும் இதுகுறித்து, “உங்களது பைபிளில், ‘கொல்லாதிருப்பாயாக’ எனக் கூறப்படும் போது, நீங்கள் ஏன் இந்தக் கட்டளையை மீறுகின்றீர்கள்?” என்று நான் கேட்டுள்ளேன். அவர்கள் எனக்குத் தெளிவற்ற பதிலையே தருகின்றனர். பாவச் செயல்கள் எவை என்பதைக்கூட அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதில்லை. சமுதாயத்தில் மூளைகள் போதுமானதாக இல்லை என்பதே இதன் பொருள்.

ஹென்னிஸ்: எனது நிறுவனம் மக்களின் மூளைகள் குறித்து நேரடியாக கவனம் செலுத்துவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்கள் நிறுவனம் நேரடியாக ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால், மனித சமுதாயம் மூளையின்றி இருந்தால், நீங்கள் எந்த நிறுவனத்தை ஆரம்பித்தாலும் மக்கள் ஒருபோதும் மகிழ்வுடன் இருக்க முடியாது. நல்ல செயல்களையும் தீய செயல்களையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்பதைப் புத்திசாலி வகுப்பினர் பொதுமக்களுக்கு கற்பிக்காவிடில், அம்மக்கள் மிருகங்களைவிட மேலானவர்கள் அல்ல.

ஹென்னிஸ்: இருக்கலாம். நீங்கள் நல்ல செயல்களுக்கும் பாவச் செயல்களுக்கும் உள்ள வேற்றுமையைப் பற்றி பேசும் போது…

 ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் இதுபோன்ற வேறுபாடுகள் எதையும் தற்போது பார்ப்பதில்லை. ஆனால் எங்களது கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நாங்கள் எங்களது மாணவர்களிடம் பாவச் செயல்களைத் தவிர்க்கும்படி ஆரம்பத்திலேயே போதிக்கின்றோம். புலால் உண்ணுதல், சூதாடுதல், தகாத உடலுறவு கொள்ளுதல், போதைப் பொருள்களை உபயோகித்தல் ஆகியவற்றை அவர்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும். அவர்களது குணத்தையும் நடத்தையையும் மற்றவர்களது குணங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். கிருஸ்துவ பாதிரியார்கள் கூட ஆச்சரியப்படுகின்றனர். “இந்த மாணவர்கள் எங்களது மாணவர்கள். உங்களது இயக்கத்தில் இணைவதற்கு முன்பு இவர்கள் தேவாலயத்திற்கு வந்ததே இல்லை, ஆனால் தற்போது இவர்கள் கடவுள் மீது பைத்தியமாகி விட்டார்களே?” என்று அவர்கள் கூறுகின்றனர். தெருக்களிலுள்ள மக்கள், “நீங்கள் அமெரிக்கர்களா என்ன?” எனக் கேட்கின்றனர்.

நெறியான வழிகாட்டுதலால் எதையும் சரிப்படுத்தலாம் என்பதை இதில் கவனியுங்கள். ஆனால், மூளையற்ற சமுதாயத்தில், நீங்கள் எவ்வளவுதான் நிறுவனங்களை ஏற்படுத்தினாலும், மனிதர்களின் துன்பங்களுக்கு முடிவே கிடைக்காது. இதுவே இயற்கையின் விதியாகும்: மக்கள் பாவிகளாக இருக்கும்வரை, அவர்கள் துன்பப்படுவது நிச்சயம்.

ஹென்னிஸ்: மக்களுக்கு போதனை செய்வதற்காக சர்வதேச நிறுவனம் ஒன்றை நீங்கள் எதிர்பார்ப்பது சாத்தியமாக எனக்குத் தோன்றவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஏன் முடியாது? இது சர்வதேச நிறுவனமாகத்தான் இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை என்பது சர்வதேச செயல்களுக்கானது. ஆகவே, எங்களது அறிவுரை என்னவெனில், சமுதாயத்தில் அறிவுடன் செயல்படும் முதல்தர புத்திசாலிகளைக் கொண்டு ஒரு சர்வதேச இயக்கத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் சமுதாயத்தின் மூளையாகச் செயல்படுவர். அப்போது மக்கள் மகிழ்வுடன் வாழ முடியும். ஆனால், வழிகாட்டுதலின்றி, மூளை யின்றி, வெறும் கால்களையும் கைகளையும் வேலை செய்ய வைத்தால், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்.

ஹென்னிஸ்: மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், உலகைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ளவும் உதவும் ஒரு மனிதகுலத் தொண்டனாக நான் என்னை கருதுகின்றேன். தொழிலாளர்களின் கல்விக்குத் தேவையான திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு நான் தற்போது முயற்சி செய்து வருகின்றேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், தயவுசெய்து இதனைப் புரிந்து கொள்ளுங்கள். சமூகத்தின் மூளையைப் பற்றி நான் வலியுறுத்துகின்றேன். முன் மாதிரியான மனிதர்கள் இல்லாவிடில், அதாவது, மூளை சரியாக இல்லாதபட்சத்தில், நீங்கள் கல்வியையும் நிறுவனங்களையும் எவ்வளவுதான் உருவாக்கினாலும், அது வெற்றிகரமாக அமையாது. ஐக்கிய நாடுகள் சபை என்பது அனைத்து மனித சமுதாயத்திற்குமான ஒரு நிறுவனம், ஆனால் அந்த நிறுவனத்தின் மூளை இதுவே என்று கூறும்படி எந்தவொரு பிரிவும் உண்மையில் இல்லை.

ஹென்னிஸ்: அஃது உண்மைதான்.

ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே எனது கருத்து.

ஹென்னிஸ்: இந்த சபையில் அங்கம் வகிக்கக்கூடிய நாடுகளின் தலைவர்களுக்கு நாங்கள் வேலைக்காரர்களாகத்தான் இருக்கின்றோம். திரு, நிக்ஸன் அவர்களுக்கும் இதர நாட்டின் தலைவர்களுக்கும் மூளையில்லாத பட்சத்தில், அவர்களது மூளையை வளர்க்க ஐக்கிய நாடுகள் சபையினால் ஏதும் செய்ய முடியுமா என அச்சப்படுகிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களது இந்த மாபெரும் நிறுவனம் வெறும் பிணத்திற்குச் செய்யப்படும் அலங்காரமே. மூளையில்லாத உடல் ஒரு பிணமே. பிணத்தை நீங்கள் உங்கள் திருப்திக்கேற்றவாறு அலங்கரிக்கலாம், ஆனால் என்ன பலன்? எது சரி, எது தவறு என்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அறிவுள்ள ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இல்லையெனில், மூளையற்ற இச்சமுதாயம் பிணத்திற்குச் சமமே. மேலும், நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அவையனைத்தும் பிணத்திற்குச் செய்யப்படும் பயனற்ற அலங்காரமாகவே விளங்கும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives