வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் “ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தல்” எனும் எளிய வழிமுறையின் மூலம் மக்கள் மீண்டும் ஆன்மீக நிலைக்கு வர உதவி செய்கிறது. பெளதிக வாழ்வின் துயர‍ங்களை முடிவிற்குக் கொண்டு வருவதே மனித வாழ்வின் நோக்கமாகும். தற்போதைய சமுதாயம் பெளதிக முன்னேற்றத்தின் மூலமாக இத்தகு பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டு வர முயல்கிறது. ஆயினும், இந்த பெளதிக முன்னேற்றத்தினால் மனித சமுதாயம் மகிழ்ச்சியாக இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஏன் மகிழ்ச்சியாக இல்லை? ஏனெனில், நாம் அனைவரும் ஆத்மாக்கள், ஆத்மாக்களான நம்மால் பௌதிக உடலில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இந்த பெளதிக உடலிற்கு ஆத்மாவே ஆதாரம். உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கும் இந்த உயிர்சக்தியை, ஆத்மாவை பௌதிக விஞ்ஞானிகள் மறுக்கின்றனர் என்னும்போதிலும், உடலினுள் இருக்கும் இந்த உயிர்சக்தியை ஏற்றுக்கொள்வதே மிகச்சிறந்த அறிவாகும்.

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது, ஆனால் ஆத்மாவோ மாற்றம் ஏதுமின்றி இருக்கிறது. இந்த உண்மையை நமது வாழ்விலும் அனுபவபூர்வமாக உணரலாம். தாயின் கருவில் நமது உடல் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் உடலின் உருமாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. வளர்ச்சி என்று பொதுவாக அறியப்பட்டாலும், இஃது உண்மையில் உடல் மாற்றமே.

ஆத்மா அழிவதில்லை

இரவு, பகல், குளிர், வெப்பம் என பல மாற்றங்களை நாம் இப்பூமியில் காண்கிறோம். சில பழங்குடியினர் குளிர்காலத்தில் சூரியன் தனது சக்தியை இழந்துவிடுவதாகவும், இரவில் அஃது இறந்துவிடுவதாகவும் கருதினர். ஆனால் முன்னேறிய அறிவுடன் இதனை அணுகும்போது, சூரியன் இதுபோன்ற மாற்றங்களுக்கு உட்படவில்லை என்றும், பருவநிலை மாற்றங்களும் தினமும் நிகழும் மாற்றங்களும் பூமியின் நிலையினைப் பொறுத்தது என்றும் அறிகிறோம்.

அதுபோலவே, உடலானது கருமுட்டையிலிருந்து குழந்தையாகவும், குழந்தையிலிருந்து சிறுவனாகவும், சிறுவனிலிருந்து இளைஞனாகவும், இளைஞனிலிருந்து கிழவனாகவும், கிழவனாக இருந்து மரணம் அடைவதையும் காண்கிறோம். இவ்வாறாக, உடல் தொடர்ந்து மாற்றமடைகிறது. பழங்குடியினர் சூரிய அஸ்தமனத்தை சூரியன் இறந்துவிடுவதாக எண்ணுவதைப் போல, குறைமதியாளர்கள் இறப்பிற்குப் பின்னர் ஆத்மாவிற்கு வாழ்வு இல்லை என்றும் அது முற்றிலும் அழிந்துவிடுவதாகவும் எண்ணுகின்றனர். உண்மையில், சூரியன் எவ்வாறு உலகின் மறு பகுதியில் உதயமாகிறதோ, அதுபோலவே, ஆத்மாவும் வேறோர் உடலை ஏற்கின்றது. உடுத்தும் ஆடை நைந்து பழையதாகும்போது அதனைக் கைவிட்டு நாம் எவ்வாறு புதிய ஆடையை ஏற்கின்றோமோ, அவ்வாறே வயதான உடலை விடுத்து ஆத்மா மற்றொரு புது உடலை ஏற்கின்றது. நவீன நாகரிகம் இந்த உண்மையை அறியாமல் இருக்கின்றது.

ஆத்மாவை அறிவதற்கான கல்விக் கூடம் எங்கே?

ஆத்மாவின் உண்மையான நிலையை மக்கள் அலட்சியம் செய்கின்றனர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகள் உள்ளன, பல தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளன. இவை அனைத்தும் பெளதிக இயற்கையின் சூட்சும விதிகளை ஆய்வு செய்கின்றன, பெளதிக உடலை ஆய்வு செய்யும் மருத்துவ ஆய்வுக்கூடங்களும் பல உள்ளன. ஆனால் ஆத்மாவின் உண்மையான நிலையினை அறிவதற்கென்று எந்தவொரு கல்வி நிறுவனமும் இல்லை. இதுவே ஜட நாகரிகத்தின் மாபெரும் குறைபாடாகும்.

இந்த உலகமும் பௌதிக உடலும் அழகாக வசீகரிக்கும்படி இருப்பதால், மக்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், அந்த வசீகரத்தின் அடிப்படை தன்மையினை அறிந்துகொள்ள அவர்கள் முயல்வதில்லை. இந்த உடல் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது, பல திறமைகளை வெளிப்படுத்தி அற்புதமாக வேலை செய்கிறது. ஆனால், உடலின் இத்தகைய தன்மைகள் அனைத்தும் உடலை விட்டு ஆத்மா நீங்கிய மறுகணமே பயனற்றதாகி விடுகிறது. பல்வேறு வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை வழங்கிய விஞ்ஞானிகளாலும் அத்தகு கண்டுபிடிப்பிற்கு காரணமான ஆத்மாவினைக் கண்டறிய முடியவில்லை.

எனவே, கிருஷ்ண பக்தி இயக்கம் ஆத்ம விஞ்ஞானத்தை கற்பிக்க முயல்கிறது; சமய மரபு என்று ஆணவத்துடன் உரைக்காமல், தத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கற்பிக்க முயல்கிறது. உடலுக்குப் பின்னால் ஆத்மா இருப்பதை உடலிலுள்ள உணர்வின் மூலமாக எவ்வாறு அறிகின்றோமோ, அவ்வாறே பிரபஞ்சம் எனும் உடலில் பரம்பொருள் உள்ளார் என்பதை உன்னத உணர்வின் மூலம் அறிய முடியும்.

இறப்பிற்குப் பின் மறுவாழ்வு உள்ளதை குறைமதியாளர்கள் உணர்வதில்லை.

பரம்பொருளின் மூன்று நிலைகள்

அந்த பரம்பொருளை வேதாந்த சூத்திரம் முறையாக விளக்குகின்றது. வேதாந்த சூத்திரத்திற்கு அதன் ஆசிரியர் வழங்கிய விரிவுரையான ஸ்ரீமத் பாகவதத்தில் பரம்பொருளின் தன்மைகள் மேலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருளின் உண்மையான நிலையை அறிவதற்கு உதவும் அந்த ஸ்ரீமத் பாகவதத்தின் அடிப்படைக் கல்வியே பகவத் கீதையாகும்.

அருவ பிரம்மன் என்றும், பரமாத்மா என்றும், இறுதியில் பரம புருஷ பகவான் என்றும் பரம்பொருள் மூன்று நிலைகளில் உணரப்படுகிறார். தனிப்பட்ட ஆத்மாவினை மூன்று நிலைகளில் உணரலாம்: முதலில் உடலெங்கும் பரவியுள்ள உணர்வாகவும், பின்னர் இதயத்தில் இருக்கும் ஆத்மாவாகவும், இறுதியில் ஒரு நபராகவும் அறியலாம். அதுபோலவே, பரம்பொருளும் மூன்று நிலைகளில் அறியப்படுகிறார். முதலில் அருவ பிரம்மனாகவும் பின்னர் உள்ளுறையும் பரமாத்மாவாகவும் இறுதியில் பரம புருஷ பகவான் கிருஷ்ணராகவும் அறியப்படுகிறார். கிருஷ்ணர் என்றால் அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று பொருள். வேறுவிதமாகக் கூறினால், நாம் எவ்வாறு ஒரே சமயத்தில் உணர்வு, ஆத்மா, மற்றும் நபராக இருக்கின்றோமோ, அவ்வாறே கிருஷ்ணர் ஒரே சமயத்தில் பிரம்மன், பரமாத்மா, மற்றும் பரம புருஷராக இருக்கின்றார்.

ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் என்ன ஒற்றுமை?

தனிப்பட்ட ஆத்மாவும், முழுமுதற் கடவுளும் தன்மையில் சமமாகவும் அளவில் வேறுபட்டும் உள்ளனர். கடலின் ஒரு துளி நீரும் மொத்த நீரும் தன்மையில் சமமாக உள்ளன, ஒரே இரசாயன கலவையைக் கொண்டுள்ளன. ஆனால், கடல் நீரிலுள்ள உப்பு மற்றும் இதர கனிமங்களின் அளவானது ஒரு துளி நீரிலுள்ள உப்பு மற்றும் கனிமங்களின் அளவைவிட பன்மடங்கு அதிகமாகும்.

இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், ஆத்மா மற்றும் பரமாத்மாவின் தனித்தன்மையை நிலைநிறுத்துகிறது. ஆத்மாவும் பரமாத்மாவும் நித்தியமான உயிர்வாழிகள் என்பதை உபநிஷதங்களிலிருந்து அறிகிறோம். அந்த பரம உயிர்வாழி எண்ணற்ற இதர உயிர்வாழிகளைப் பராமரிக்கின்றார் என்பதே அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாடாகும். கிறிஸ்துவத்திலும் இஃது ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஏனெனில், பைபிளில் கூறப்பட்டுள்ளபடி, ஜீவன்கள் பரம பிதாவிடம் பிரார்த்தனை செய்வதால் அவர் ஜீவன்களுக்குத் தேவையானதை வழங்குகிறார், பாவச் செயல்களையும் மன்னிக்கிறார்.

இவ்வாறாக, எல்லா ஆன்மீக நூல்களிலும் நாம் காண்பது என்னவெனில், எல்லா ஜீவன்களையும் பராமரிப்பவர் முழுமுதற் கடவுள் அல்லது கிருஷ்ணரே, அவர் பராமரிப்பவர் என்பதால் ஜீவன்கள் அந்த முழுமுதற் கடவுளுக்குக் கடன்பட்டவர்கள். இதுவே மதக் கொள்கைகளின் ஒட்டுமொத்த பின்னணி. இவற்றை ஒப்புக்கொள்ளாவிடில், நாம் தற்போது தினமும் அனுபவிப்பதைப் போன்று, பெரும் குழப்பமே ஏற்படும்.

சமுதாய ரீதியாக, அரசியல் ரீதியாக அல்லது தனிப்பட்ட முறையில் என ஒவ்வொருவரும் கடவுளாக முயல்கின்றனர். இதனால், இந்த தவறான ஆளுமைக்கு கடும் போட்டி ஏற்படுகிறது, உலகம் முழுவதும் பெரும் குழப்பம் நிலவுகிறது—தனிப்பட்ட நபர், நாடு, சமூகம் என எங்கும் குழப்பமே. கிருஷ்ண பக்தி இயக்கம் முழுமுதற் கடவுளின் மேன்மையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மனித உடலையும் புத்தியையும் பெற்றுள்ளவர்கள் இதனை முறையாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்; ஏனெனில், இந்த உணர்வே வாழ்வை வெற்றியடையச் செய்கிறது.

அருவ பிரம்மன், பரமாத்மா, பரம புருஷ பகவான் என பரம்பொருள் மூன்று நிலைகளில் உணரப்படுகிறார்.

இஸ்கான் இயக்கம் அதிகாரபூர்வமானது

கிருஷ்ண பக்தி இயக்கம் மன அனுமானத்தில் ஈடுபடுவோரால் தொடங்கப்பட்டதல்ல. உண்மையில், இந்த இயக்கமானது பகவான் கிருஷ்ணராலேயே தொடங்கப்பட்டது. இது குருக்ஷேத்திர போர்க்களத்தில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணரால் பகவத் கீதையின் வடிவில் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழிமுறையினை வெகுகாலத்திற்கு முன்னர், குறைந்தது 4 கோடி வருடங்களுக்கு முன்னர், சூரிய தேவனான விவஸ்வானுக்கு கிருஷ்ணர் வழங்கினார் என்பதையும் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம்.

எனவே, இந்த இயக்கம் புதியதல்ல. இது வேத நாகரிகத்தின் ஆச்சாரியர்களான சங்கராசாரியர், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், விஷ்ணு ஸ்வாமி, நிம்பார்கர், மற்றும் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பகவான் ஸ்ரீ சைதன்யரின் சீடப் பரம்பரையின் மூலமாக வருகின்றது. இந்த சீடப் பரம்பரை இன்றும் பின்பற்றப்படுகின்றது. உலகம் முழுவதிலும் உள்ள பேரறிஞர்கள், தத்துவவாதிகள் மற்றும் ஆன்மீகவாதிகளால் பகவத் கீதை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும், கீதையின் கொள்கைகள் உள்ளது உள்ளபடி பெருமளவில் பின்பற்றப்படுவதில்லை. கிருஷ்ண பக்தி இயக்கம் இந்தக் கொள்கைகளை எவ்வித மாற்றமுமின்றி உண்மையுருவில் வழங்கி வருகின்றது.

பகவத் கீதையின் ஐந்து விஷயங்கள்

இறைவன், உயிர்வாழி, பெளதிக மற்றும் ஆன்மீக இயற்கை, காலம், கர்மா ஆகிய ஐந்து விஷயங்களை பகவத் கீதையிலிருந்து அறியலாம். இந்த ஐந்தில் இறைவன், உயிர்வாழி, இயற்கை, காலம் ஆகியவை நித்தியமானவை; கர்மா (செயல்கள்) நித்தியமானதல்ல.

ஜட இயற்கையில் செய்யப்படும் செயல்கள் ஆன்மீக இயற்கையில் செய்யப்படும் செயல்களிலிருந்து வேறுபட்டவை. ஆத்மா நித்தியமானவன் என்றாலும், ஜட இயற்கையுடன் இணைந்து அவன் செய்யும் செயல்கள் தற்காலிகமானவை. ஆத்மாவை அவனது நித்தியமான செயல்களில் ஈடுபடுத்துவதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். அந்த நித்தியமான செயல்களை பெளதிகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதும் நம்மால் பயில முடியும். அவ்வாறு ஆன்மீகமாகச் செயல்படுதல் எளிதானதே, தகுந்த வழிகாட்டுதலின்கீழ் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டால் போதும்.

இஸ்கான் இயக்கம் பகவான் ஸ்ரீ சைதன்யரின் சீடப் பரம்பரையில் வருகிறது.

ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவோம், வாரீர்!

இந்த ஆன்மீகச் செயல்களை கிருஷ்ண பக்தி இயக்கம் கற்றுக் கொடுக்கிறது. இச்செயல்களில் ஒருவன் பயிற்சி பெற்று அவற்றைச் செயல்படுத்தும்போது, பகவத் கீதை முதலான சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள ஆன்மீக உலகிற்கு அவன் ஏற்றம் பெறுகிறான். ஆன்மீகப் பயிற்சி பெற்றவன் தனது உணர்வினை மாற்றுவதன் மூலமாக எளிதில் ஆன்மீக உலகிற்கு மாற்றம் பெறலாம்.

ஆத்மாவின் அடையாளம் என்பதால், உணர்வு எப்போதும் இருக்கிறது. ஆயினும், அந்த உணர்வானது தற்போது பெளதிகத்தினால் களங்கமடைந்துள்ளது. மேகம் தூய்மையான மழை நீரை வழங்கினாலும், அது பூமியைத் தொட்டவுடன் அழுக்கடைகிறது. அதனைச் சுத்திகரிப்பதன் மூலம் மீண்டும் பழைய நிலையை அடையச் செய்யலாம். அதுபோலவே, கிருஷ்ண பக்தி இயக்கம் நமது உணர்வினைத் தூய்மைப்படுத்துவதற்கானது. நமது உணர்வு தூய்மையானதாக களங்கமற்று இருக்கும்போது, நாம் அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்தியமான வாழ்விற்கு, ஆன்மீக லோகத்திற்கு, ஏற்றம் பெறலாம். பெளதிக உலகில் நாம் இந்த ஆனந்தத்தைத் தேடி ஏங்கிக் கொண்டுள்ளோம். ஆனால், பெளதிகக் களங்கத்தின் காரணமாக ஒவ்வோர் அடியிலும் நாம் ஏமாற்றப்படுகிறோம். ஆகவே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினை மனித சமுதாயத்தின் தலைவர்கள் உட்பட அனைவரும் தீவிரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.