மேற்கத்திய பண்பாடே

பிரச்சனைகளுக்கான காரணம்

பத்திரிகையாளர்களுடன் நிகழ்ந்த கீழ்க்காணும் உரையாடலில், உலகிலுள்ள பிரச்சனைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம் காரணமல்ல என்றும், மேற்கத்திய பண்பாடுதான் காரணம் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: தற்சமயத்தில் மேற்கத்திய பண்பாட்டைப் பின்பற்றுவதால் இந்தியா பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

விருந்தினர்: அப்படியெனில், மக்கள் தொகை பெருக்கத்தால் பிரச்சனைகள் ஏதும் உண்டாவதில்லையா?

ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் தொகை பெருக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த எண்ணம் முட்டாள்தனமானது.

விருந்தினர்: முட்டாள்தனமானதா!

ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80 இலட்சம் உயிரினங்கள் மனித இனத்தைச் சார்ந்தவை அல்ல. நான்கு இலட்சம் உயிரினங்கள் மட்டுமே மனித இனம். அதிலும் நாகரிகமடைந்தவர்கள் சிலரே. அனைத்து பிரச்சனைகளும் இந்த பெயரளவு நாகரிகமான மக்களிடம் மட்டுமே உள்ளது.

கடவுளே அனைவருக்கும் தந்தை என்பது நாம் அறிந்ததே. நமது பராமரிப்புக்குத் தேவையானவற்றை அவரே வழங்குகிறார். மக்கள் தொகை பெருகினால், கடவுள் தேவையானவற்றை வழங்கும் சக்தி படைத்தவர். எனவே, மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை, அசுர குணம் கொண்ட மக்களே பிரச்சனை.

பத்திரிகையாளர்: நான் அந்த நாகரிகத்தைப் பற்றி வினவ இருந்தேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: அசுர குணம் கொண்ட மக்களே பிரச்சனைகளுக்கு காரணமே தவிர, மக்கள் தொகை பெருக்கம் பிரச்சனையே அல்ல. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் பெருமளவில் காலியிடங்கள் உள்ளதால், தற்போதைய உலக மக்கள் தொகை பத்து மடங்கு அதிகரித்தாலும் அவர்களுக்கு போதுமான உணவு கிட்டும் என்பதை நான் படித்துள்ளேன்.

பத்திரிகையாளர்: போதிய உணவு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: போதிய வசதிகள் உள்ளன. ஆனால் நாம் செயற்கையான பிரிவுகளை உருவாக்கியுள்ளோம். அமெரிக்கர்கள் ஐரோப்பாவிலிருந்து சென்று, அமெரிக்காவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். தற்போது அங்கு மற்றவர்கள் வருவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. அதே போல, ஆஸ்திரேலியர்களும் அவர்களது நாட்டிற்கு மற்றவர்கள் வருவதை அனுமதிக்கமாட்டார்கள். நியூசிலாந்திலும் ஆப்பிரிக்காவிலும்கூட இதே நிலைதான். இதற்கான காரணம் என்ன? அனைத்தும் கடவுளுக்குச் சொந்தம்; நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்; அனைவருக்கும் இறைவனின் கருணையைப் பெற்று வாழ்வதற்கான உரிமை உண்டு. இதுவே எங்களது தத்துவம்.

பத்திரிகையாளர்: ஆனால் மேற்கத்திய பண்பாட்டின் மதிப்பு …

ஸ்ரீல பிரபுபாதர்: மேற்கத்திய பண்பாடு, “இஃது ஆப்பிரிக்கா, இஃது ஐரோப்பா, இஃது அமெரிக்கா” என்னும் செயற்கையான எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

பத்திரிகையாளர்: எனவே, கடவுளின் குழந்தைகளாக நாம் வாழ்வதை மேற்கத்திய பண்பாடு சாத்தியமற்றதாக்கி விட்டது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கடவுளின் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை தனது நாட்டினுள் நுழைய அனுமதிப்பதில்லை. அவ்வாறு தடுப்பதற்கான உரிமை அவனுக்கு இல்லை. உதாரணமாக, ஒரு தந்தைக்கு பத்து மகன்கள் இருந்தால், சட்டத்தின்படி தந்தையின் சொத்தை அனுபவிக்கும் உரிமை அனைத்து மகன்களுக்கும் உண்டு. அதுபோலவே, மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு. இதுவே ஆன்மீகம், தெய்வீக பொதுவுடைமை. வேதப் பண்பாட்டின்படி, இல்லத்திலுள்ள பல்லிக்கும் உணவு கிடைக்கிறதா என்பதை இல்லறத்தான் கவனிக்க வேண்டும். இல்லறத்தான் தெரு முனையில் நின்று “யாரேனும் பசியோடு இருக்கிறீர்களா? வாருங்கள், உணவருந்தலாம்” என்று அழைக்க வேண்டும். யாரும் வரவில்லையெனில், அவன் உணவருந்தலாம்.

பத்திரிகையாளர்: இக்கொள்கையினைப் பின்பற்றுதல் இன்றைய நாகரிகத்தில் பலருக்கும் கடினமானதாகும்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அதுவே உண்மையான நாகரிகம். விலங்குகளின் சமூகத்தில், ஒரு நாய் வந்தவுடன் மற்றொரு நாய், “லொள்! லொள்! நீ ஏன் வருகிறாய்?” என்று குரைக்கிறது. அதுபோலவே, எல்லா இடத்திலும் குடியுரிமை அதிகாரிகள், “நீங்கள் எவ்வளவு நாள் இங்கு தங்குவீர்கள்?” என்று வினவுகின்றனர். ஏன் இவ்வாறு வினவ வேண்டும்? வேதப் பண்பாட்டில், எதிரியே வீட்டிற்கு வந்தாலும், அவன் எதிரி என்பதை மறந்துவிடுமளவிற்கு, அவனை நட்புடன் வரவேற்று உபசரித்தனர்.

பத்திரிகையாளர்: ஆனால், இன்றைய சூழ்நிலையில் இத்தகைய கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தல் உங்களுக்கு கடினமாக இருக்குமே!

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த நாகரிகம் அசுரத்தனமானதாக இருப்பதால் சற்று சிரமமே. இந்தியா அனைவரையும் வரவேற்றது; ஆனால், இந்தியா ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை வரவேற்றனர், ராபர்ட் கிளைவ் வரவேற்கப்பட்டார். ஆனால், அவர் சூழ்ச்சியின் மூலம் இந்தியாவை ஆக்கிரமித்தார். அவரது சிலை இங்கு [இலண்டனில்] வழிபடப்படுகிறது. ஆனால், அவர் என்ன செய்தார்? சூழ்ச்சி. அவர் சட்ட விரோதமான முறையில் இந்தியாவினை ஆக்கிரமித்தார். இதுவே மேற்கத்திய பண்பாடு.

பத்திரிகையாளர்: இன்றைய சமூகத்தில் சகோதரத்துவத்தை பிரச்சாரம் செய்வதும் உங்களுக்கு மிகவும் கடினமானதல்லவா?

ஸ்ரீல பிரபுபாதர்: சகோதரத்துவம் என்பது இயற்கையானது. ஒரு குடும்பத்தில் பத்து மகன்கள் இருந்தால், அவர்கள் சகோதரர்களே. ஆனால், ஒரு மகன் மட்டும் சூழ்ச்சியினால் அனைத்து சொத்துகளையும் அடைய விரும்புகிறான். இந்த அசுரத்தனம் காலங்காலமாகத் தொடர்கிறது.

பத்திரிகையாளர்: இதை எவ்வாறு தடுப்பது?

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் மூலமாகவே இதனைத் தடுக்க இயலும். கடவுள் ஒருவரே; அவரே அனைவருக்கும் தந்தை; நாம் அனைவரும் அவரின் குழந்தைகள் என்னும் அறிவினை நீங்கள் பெறும்போது இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கும்.