கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று தொடங்கி, சுமார் ஒரு டஜன் வரிகளில் கீதாசாரம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் போஸ்டர் குறித்து சென்ற இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி.

சென்ற இதழின் சுருக்கம்

வேதங்களின் சாரம் உபநிஷத்துகள், உபநிஷத்துகளின் சாரம் பகவத் கீதை. இந்த பகவத் கீதைக்கு ஆச்சாரியர்கள் பலரும் விளக்கமளித்துள்ளனரே தவிர, சுருக்கமாக டஜன் வரியில் கவிதை எழுதிவிட்டு, அதனை கீதாசாரம் என்று கூறவில்லை. கலி யுகத்தின் மக்கள் மிகுந்த சோம்பேறிகளாக இருப்பதால், கீதையை முழுமையாக படிப்பதற்கு அவர்களுக்கு ஆர்வம் இல்லை. அவர்களின் சோம்பேறித்தனத்தை வசதியாக ஏற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க முயல்பவரின் படைப்பே “கீதாசாரம்” போஸ்டர். இதிலுள்ள கருத்துகள் கீதையின் சாரமும் அல்ல, கீதையின் தத்துவத்திற்கு ஒத்துவரக்கூடியவையும் அல்ல.

 

இவ்வுலகம் துக்கம் நிறைந்த இடம் என்று கூறி, இதிலிருந்து வெளியே வரும்படி கீதையில் கிருஷ்ணர் அழைப்பு விடுக்கின்றார். ஆனால் கீதாசாரம் போஸ்டரோ, இவ்வுலகில் நடந்தவை அனைத்தும் நன்றாகவே நடந்தது என்றும் நடப்பவை, நடக்க இருப்பவையும் நன்றாகவே நடக்கும் என்று கூறி, கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு எதிரான தகவல்களை வழங்குகின்றது. மேலும், உலக யதார்த்தத்தில் பார்த்தாலும், உலகில் நடைபெறும் விபத்துகள், தீவிரவாதம், இயற்கை சீரழிவு போன்றவற்றை நல்லது என்று நாம் எடுத்துக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது. கீதாசாரம் போஸ்டரில் உள்ள முதல் கருத்து, கீதைக்கு முற்றிலும் முரணானது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

 

இந்த இதழில், போஸ்டரின் (இனிமேலும் இதனை “கீதாசாரம் போஸ்டர்” என்று கூற வேண்டிய அவசியமில்லை) இதர வரிகளில் உள்ள குறைகளையும் உண்மையான கீதாசாரத்தையும் காண்போம்.

 

எதை இழந்தாய்?

அனைத்தும் நன்றே என்பதை எடுத்துரைக்கும் மூன்று வரிகளைத் தொடர்ந்து, இவ்வுலகில் யாருக்கும் எதிலும் எந்த இழப்பும் இல்லை என்ற கருத்துடன் கீழ்காணும் மூன்று வரிகள் வருகின்றன.

 

உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?

 

மேலோட்டமாகப் பார்த்தால், பிறப்பவர்கள் எவரும் எதையும் கொண்டு வருவதில்லை; அதனால் எதையும் இழப்பதற்கும் வாய்ப்பில்லை என்பது நம்பக்கூடியதாகத் தோன்றலாம்

ஆனால் கீதையைப் படிப்பவர்கள், கீதையின் முதல் பாடம், “நாம் இந்த உடலல்ல, ஆத்மா. ஆத்மா பல்வேறு உடல்களை ஒன்றன்பின் ஒன்றாக ஏற்று பிறப்பு இறப்பின் சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது,” என்பதையும், “ஆத்மா ஓருடலிலிருந்து அடுத்த உடலிற்குச் செல்லும்போது தனது பூர்வ ஜன்ம வாசனைகளைத் (தன்மைகளை) தாங்கிச் செல்கிறது,” என்பதையும் எளிதில் அறியலாம்.

 

வேறு விதமாகக் கூறினால், பிறப்பவர்கள் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே பூர்வ ஜன்ம கர்மங்களுடன் பிறக்கின்றனர். ஒவ்வொருவரும் தான் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இவ்வுலகில் பிறக்கின்றனர். அதனால்தான் மக்களிடையே பல்வேறு வேற்றுமைகள் உள்ளன; ஒருவன் பணக்காரனாகப் பிறக்கிறான், ஒருவன் ஏழையாகப் பிறக்கிறான்; ஒருவன் புத்திசாலியாக வளர்கிறான், ஒருவன் முட்டாளாக வளர்கிறான். இவையாவும் பூர்வ ஜன்ம கர்ம பயனே.

 

பிறக்கும்போது யாரும் எதையும் கையில் கொண்டு வருவதில்லை என்பதை பாமரனும் அறிவான். அதைச் சொல்வதற்காகவா பகவான் பகவத் கீதையை உரைக்க வேண்டும்? பாமரனுக்கும் தெரிந்ததை அர்ஜுனன் அறியாமலா இருந்தான்? இராஜ்ஜியத்தை இழப்பதற்காகவா அவன் வருந்தினான்? நிச்சயம் இல்லை.

 

கீதையின் கருத்துகள் ஆழமானவை; இது சாதாரண மனோவியல் வல்லுநரின் புத்தகமல்ல, உலகைப் படைத்து காத்து அழிக்கும் பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புத்தகம். இதில் கர்ம வினைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. பூர்வ ஜன்ம கர்மத்தின்படி, பிறக்கும்போதே சிலர் நற்குணங்களுடன் பிறக்கின்றனர், சிலர் தீய குணங்களுடன் பிறக்கின்றனர்–இது கீதையில் கிருஷ்ணர் கூறும் கருத்து. போஸ்டரின் கருத்து இதிலிருந்து மாறுபடுகிறது. அது கீதாசாரமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

பாவ புண்ணியத்தைத் தாண்டி கிருஷ்ணரை திருப்தி செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும் என்பதே கீதையின் கருத்து

எதை நீ படைத்தாய்?

போஸ்டரின் அடுத்த வரி: எதை நீ படைத்திருந்தாய், அது வீணாகுவதற்கு?

 

அர்ஜுனனின் வருத்தம் உறவினர்களைக் கொல்லப் போகிறோம் என்பதில் தொடங்கியது, அவர்களைக் கொல்வதால் வரக்கூடிய பாவத்தை எண்ணி அவன் வருந்தினான். ஒவ்வொருவரும் பல்வேறு கர்ம வினைகளை தங்களின் வாழ்வில் படைக்கின்றனர்; பாவச் செயல்களைச் செய்து அந்த படைப்புகளை வீணாக்கிவிடக் கூடாது என்பதை அர்ஜுனன் உணர்ந்திருந்தான். அர்ஜுனனின் அத்தகு எண்ணங்களுக்கு கிருஷ்ணர், “நீ எதையும் படைக்கவில்லை,” என்று பதில் கூறவில்லை.

 

பாவ புண்ணியத்தை எண்ணி வருந்திய அர்ஜுனனிடம், பாவ புண்ணியத்தைத் தாண்டி பக்தியின் தளத்தில் நிலைபெறும்படி கிருஷ்ணர் கட்டளையிட்டார். இதுவே

கீதையின் உண்மையான கருத்து. பாவத்தையும் புண்ணியத்தையும் யாரும் படைக்கவில்லை என்று கிருஷ்ணர் எங்கும் கூறவில்லை. போஸ்டரின் கருத்து இதிலிருந்து மாறுபடுகிறது. அது கீதாசாரமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

போஸ்டரின் இதர கருத்துகள்

போஸ்டரின் இதர வரிகளும் மேற்கூறியபடி கர்ம வினைகளின் அறியாமையுடன் எழுதப்பட்டுள்ளன. எல்லாம் இங்கிருந்து கொடுக்கப்பட்டது என்னும் போஸ்டரின் கருத்து, தானம் செய்வதற்கு எதிரானதாக உள்ளது. ஆனால் கீதையில் தானத்தினை யாரும் கைவிடக் கூடாது என்று கிருஷ்ணர் வலியுறுத்துகிறார். மேலும், இக்கருத்துகள் யாவும் மனோதத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. உலக மக்கள் யாவரும் பொதுவாக புலன்களின் தளத்தில் செயல்படுகின்றனர், போஸ்டரோ மனதின் தளத்தில் எழுதப்பட்டுள்ளது. புலன்களின் தளத்தில் இருப்பவர்களுக்கு மனதின் தளத்தில் எழுதப்பட்டுள்ள இந்த போஸ்டர் மிகவும் அருமையாகத் தோன்றலாம். ஆனால் பகவத் கீதையானது மனதின் நிலையைத் தாண்டி, புத்தியின் நிலையைத் தாண்டி, ஆத்ம தளத்தில் பேசப்பட்டதாகும்.

 

ஆத்மாவைப் பற்றிய கீதையின் கருத்துகளை இவ்வளவு மலிவாக்கி வெளியிடுவது கடுமையாக கண்டிக்கத்தக்க ஒன்று. “இதுவே உலக நியதியும் என் படைப்பின் சாராம்சமுமாகும்”–என்று எழுதியவர் உண்மையான மனிதனாக இருந்தால், கீழே தனது பெயரைக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, “பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்” என்று எழுதியது மன்னிக்க முடியாத குற்றமாகும். எழுதியவர் தனது பெயரைப் போட்டிருந்தால், யாரும் எதுவும் சொல்வதற்கில்லை; ஆனால் கிருஷ்ணரின் பெயரை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்தது எந்த விதத்தில் நியாயமோ? யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு புத்தகத்தை எழுதி விட்டு, அதன் ஆசிரியர் “திரு.மன்மோகன் சிங்” என்று பிரகடனம் செய்தால், அந்த புத்தகம் ஒருவேளை நன்றாக விற்கலாம்; ஆனால் அடுத்த சில நாட்களில் அதன் (உண்மையான) ஆசிரியர் சிறைச்சாலையில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருப்பார். இந்த போஸ்டர் கீதாசாரத்தை எழுதியவர் கம்பி எண்ணும் நாள் என்றோ? இவ்வுலகில் கம்பி எண்ணாமல் தப்பிவிடலாம், ஆனால் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையே “கீதாசாரம்” என்ற பெயரில் ஏமாற்றிய கடும் குற்றத்திற்காக, எமராஜரின் உலகில் அவர் நிச்சயம் கடும் துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.

 

சாதாரண சுவற்றில் எழுதப்படும் வாசகங்கள்கூட மேற்கோள்களுடன் எழுதப்படும்போது, கீதாசாரம் என்ற பெயரில் போஸ்டராக அடித்து விநியோகிக்கப்படும் இந்த வாசகங்கள், கீதையில் எங்குள்ளன என்பதற்கான எந்தவொரு மேற்கோளும் இல்லை என்பதை வைத்தே, ஆன்மீக அன்பர்கள், “இந்த போஸ்டர் போலியான போஸ்டர்” என்பதை எளிதில் உணர முடியும்.

உண்மையான கீதாசாரம்

சென்ற இதழில் யாம் கூறியபடி, கீதையே ஒரு சாரம், அதற்கான விளக்கத்தை நாம் தேட வேண்டுமேயொழிய சாரத்தைத் தேடக் கூடாது. இருப்பினும், கீதையின் சாரம் என்று கீதையில் சாக்ஷாத் கிருஷ்ணரே ஏதேனும் சில தகவல்களைக் கூறினால், அதனை நாம் கீதையின் சாரமாக ஏற்று நடக்க வேண்டும். கீதையின் இறுதி அத்தியாயத்தின் கடைசியில், “நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், என்னுடைய அறிவுரைகளில் மிகவும் உன்னதமான, எல்லாவற்றிலும் மிகமிக இரகசியமான ஞானத்தை நான் உனக்குக் கூறுகின்றேன்,” என்று அர்ஜுனனிடம் கூறிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (பகவத் கீதை 18.64) கீதையின் மிகமிக முக்கியமான ஸ்லோகங்களாக அறியப்படுவதும் கீதையின் சாரமாக அறியப்படுவதுமான இரண்டு ஸ்லோகங்களைக் கூறினார்.

 

இந்த இரண்டு ஸ்லோகங்கள் குஹ்யதமம், அதாவது மிகமிக இரகசியமானவை என்று கிருஷ்ணராலேயே கூறப்படுகின்றன. குஹ்யம் என்றால் இரகசியமானது என்று பொருள்; குஹ்யதரம் என்றால் மிகவும் இரகசியமானது என்று பொருள்; குஹ்யதமம் என்றால் மிகமிக இரகசியமானது என்று பொருள். வேறு விஷயங்களை கிருஷ்ணர் குஹ்யதமம் என்று கூறவில்லை என்பதால், கீதையை அதன் உண்மையுருவில் நாம் ஏற்போமானால், இந்த இரண்டு ஸ்லோகங்களை கீதையின் உண்மையான சாரமாக ஏற்க வேண்டும்.

அந்த இரண்டு ஸ்லோகங்கள்

மன்மனா பவ மத்பக்தோ  மத்யாஜி மாம் நமஸ்குரு

மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே  ப்ரதிஜானே ப்ரியோஸி மே

 

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய  மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ  மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

 

“எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கின்றேன். எல்லா விதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.” (பகவத் கீதை 18.65–66)

சாரத்தின் பொருள்

இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்வாழிகளும் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்பதே உண்மையான கீதாசாரம். ஜீவனின் ஸ்வரூபம் கிருஷ்ணருக்கு நித்தியமாக தொண்டு செய்வதே. அதனை மறந்துள்ள ஜீவன் இவ்வுலகில் பல்வேறு பாவச் செயல்களால் துன்பப்படுகிறான். தனது உண்மையான நிலையில் தன்னை மீண்டும் நிலைநிறுத்துவதன் மூலமாக ஜீவனால் நிரந்தர மகிழ்ச்சியை அடைய முடியும். அதனை அடைவதற்கான வழிமுறை: சரணாகதி, அல்லது தூய பக்தித் தொண்டு எனப்படுகிறது. இந்நிலையில் நாம் ஸதா ஸர்வ காலமும் கிருஷ்ணரை நினைத்தபடி, அவரது பக்தராக, அவரை வழிபட்டு, அவரிடம் சரணடைந்து வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கை முறையே கீதையில் இறுதியாக கிருஷ்ணரால் பரிந்துரைக்கப்படுவதாகும்.

இந்த சாரம் மட்டும் போதுமா?

கீதையின் சாரம் இந்த இரண்டு ஸ்லோகங்கள் என்று கீதையில் கூறப்பட்டுள்ளபோதிலும், ஆச்சாரியர்கள் யாரும் இதனை மட்டும் மக்களுக்கு எடுத்துரைப்பதில் ஆர்வம் காட்டியது இல்லை. ஏனெனில், இந்த “இரண்டு ஸ்லோகங்கள் போதும்” என்று கூறினால், அதில் எத்தனையோ கேள்விகள் எழும். நான் ஏன் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும்? “நான் ஏன் அவருக்குத் தொண்டு செய்ய வேண்டும்? அவரையே எப்போதும் நினைத்தல் என்றால், அன்றாட வேலைகளை நாம் எப்படி செய்வது? ஏன் கிருஷ்ணரை மட்டும் வழிபட வேண்டும்? எத்தனையோ கடவுள்கள் உள்ளனரே? முக்தி என்றால் என்ன? பாவம் என்றால் என்ன?” போன்ற பல்வேறு கேள்விகள் பதிலின்றி நிற்கும். அவற்றிற்கான பதிலை அறிய வேண்டுமெனில், கீதையை முழுமையாக படிக்க வேண்டும். வேறு விதமாகக் கூறினால், கீதையை முழுமையாகப் படிக்காமல் கீதையின் சாரத்தை அறிந்துகொள்ள முடியாது.

பகவத் கீதை உண்மையுருவில்

கீதையை முழுமையாக படிக்க விரும்புவோர், அதாவது, தங்களின் வாழ்வை பக்குவமாக்க விரும்புவோர், கீதையினை முறைப்படி தெரிந்து கொள்ள வேண்டும். கீதைக்கு எத்தனையோ உரைகள் இருந்தாலும், அவற்றின் கருத்துரையாளர்கள் கீதையின் உண்மையான பொருளை வழங்காமல், தத்தமது சொந்த அபிப்பிராயத்தையே வழங்கியுள்ளனர். மருந்தை உட்கொள்ள விரும்புவோர் அதனை மனம்போனபடி எடுத்துக் கொள்ளக் கூடாது, மருத்துவரின் அறிவுரைப்படியோ மருந்து அட்டையிலுள்ள விளக்கங்களின்படியோ எடுக்க வேண்டும். அதுபோல, கீதையின் ஞானம் முறையான குரு சீடப் பரம்பரையின் மூலமாகப் பெறப்பட வேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையிலேயே (4.2) விளக்குகிறார். ஆனால், கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான பகவத் கீதைகள் பிரபலமான நபர்களால் எழுதப்பட்டுள்ளபோதிலும், சீடப் பரம்பரையில் வந்தவர்களால் எழுதப்பட்டவை அல்ல. அரசியல்வாதிகள், கவிஞர்கள், மற்றும் தன்னையே கிருஷ்ணர் எனக் கூறிக் கொள்வோர் மட்டுமின்றி, குடிகாரர்கள், அசைவ உணவு சாப்பிடுவோர் என பலரும் கீதையின் பெயரில் தத்தமது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

 

இவை எல்லாவற்றிக்கும் மத்தியில், கீதையில் கிருஷ்ணர் உரைத்த கருத்துகளை துளியும் பிறழாமல், உள்ளது உள்ளபடி, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பகவத் கீதை உண்மையுருவில் என்னும் நூலில் வழங்கியுள்ளார். இந்நூலைப் படிப்பவர்கள், கீதையில் கிருஷ்ணர் என்ன உரைத்தாரோ அர்ஜுனன் என்ன புரிந்து கொண்டானோ, அதனை அப்படியே நடைமுறைக்கு ஏற்ற முறையில் புரிந்து கொண்டு, அர்ஜுனனின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியும்.

 

போஸ்டரை நம்பி ஏமாறாதீர்! படியுங்கள், பகவத் கீதை உண்மையுருவில்!

 

திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக நிறுவனத்தின் தமிழ் பதிப்புகளுக்கு தொகுப்பாசிரியராக தொண்டாற்றி வருகிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives