ஆன்மீக ஆர்வம் குறைகிறதா?

உலகில் ஆன்மீக நாட்டம் குறைந்து வருவதுகுறித்து சோயர்மென், கெர்ன் ஆகிய இரண்டு பாதிரியார்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி.

 

 

ஸ்ரீல பிரபுபாதர்: தற்கால மக்கள் ஆன்மீகத்தில் ஆர்வமற்று இருப்பதாக நினைக்கிறீர்களா?

கெர்ன்: ஆம். கடவுளைப் பற்றிய எண்ணம் குறைந்து வருகிறது. கடவுள்குறித்து கேட்பதற்கான ஆர்வம் மக்களிடம் இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள்குறித்து கேட்பதற்குக்கூட மக்கள் தயாராக இல்லை, இந்த நிலைக்கு காரணம் என்ன? போஸ்டனில் பாதிரியார் ஒருவரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார், உங்களது சீடர்கள் அனைவரும் கிறிஸ்தவம் அல்லது யூத மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முன்பு அவர்கள் தேவாலயங்களுக்கு வந்ததில்லை, இறைவனைக் குறித்து ஒருபோதும் வினவியதில்லை. ஆனால் இன்று அதே ஆண்களும் பெண்களும் இறைவனுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.” லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் நாங்கள் ஒரு தேவாலயத்தை விலைக்கு வாங்கியுள்ளோம். முன்பு அது மக்கள் யாரும் வராமல் காலியாக இருந்தது. அதே தேவாலயம், அதே மக்கள் (லாஸ் ஏஞ்சல்ஸ் வாசிகள்); ஆனால், தற்பொழுது இங்கே மக்கள் நிரம்பி வழிகின்றனர்.

கெர்ன்: இளைய சமுதாயத்தினர் தங்கள் வாழ்வில் சிறந்தவொன்றைத் தேடுகின்றனர் என்பதற்கு இஃது ஓர் அறிகுறி.

சீடர்: மேற்கத்திய மதத்தை விட கிருஷ்ண பக்தி எங்களைக் கவர்ந்ததற்கு ஸ்ரீல பிரபுபாதரே காரணம். கடவுள் உயர்ந்தவர் என்பதை மட்டுமின்றி, அவர் ஏன் உயர்ந்தவர், அவரது பெயர் என்ன, இருப்பிடம் என்ன என்பன போன்ற பல்வேறு விவரங்களை இவர் தெளிவாக விவரிக்கின்றார். இந்த விவரங்கள் மேற்கத்திய மதத்தில் இல்லை. ஆனால், வேதங்கள் கடவுள்குறித்த தெளிவான விவரங்களை நமக்கு வழங்குகின்றன.

கெர்ன்: இறைவன் தம்மை பலவிதங்களில் வெளிப்படுத்துகின்றார். மக்கள்தான் அவரை அறிவதற்கு ஆர்வமற்று இருக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களால் கடவுளை அறியவியலாது என்று பகவத் கீதை கூறுகின்றது. ஆகவே, பாவச் செயல்களில் ஈடுபடக் கூடாது. மக்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவார்களேயானில், அவர்களால் எவ்வாறு கடவுளை அறியவியலும்? பாவச் செயல்களில் ஈடுபடும் உங்களிடம் கடவுள் தம்மை வெளிப்படுத்துவார் என்று எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கலாம்? அது சாத்தியமில்லை.

சோயர்மென்: ஒப்புக்கொள்கிறேன். பாவச் செயல் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கக் கூடியது என்பதை நாங்களும் ஏற்கிறோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், மக்கள் பாவச் செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்களால் கடவுளை அறிய இயலவில்லை. மனித சமுதாயத்தின் மிக மோசமான பாவச் செயல் மிருக வதை. ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது,
நிவ்ருத்த-தர்ஷைர் உபகீயமானத்
பவௌஷாதாச் ச்ரோத்ர-மனோ-’பிராமாத்
க உத்தமஷ்லோக குணானுவாதாத்
விரஜ்யேத புமான் வினா பஷு-க்னாத்
பகவான் முக்தி பெற்றவர்களால் போற்றப்படுகிறார். பகவானைப் போற்றுதல் மிகவும் இனிமையானது. ஆகவே, மிருக வதையில் ஈடுபடுபவர்களைத் தவிர மற்றவர்களால் இறைவனைப் புகழந்து உரைக்கவியலும்.”
மனிதர்கள் மிருக வதையில் ஈடுபடுவதைத் தவிர்த்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும். பகவத் கீதையில் மனித சமுதாயம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கடவுளை உணர்வதற்கு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நமது தலை, கை, வயிறு, கால் என அனைத்து உறுப்புகளும் உடலைப் பராமரிப்பதற்குச் செயல்படுவதைப் போல, சமுதாயம் செயல்படுவதற்கும் தலை”, கை” முதலியவை வேண்டும்.
சோயர்மென்: புத்திசாலி நபர்கள் பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் மற்றவர்களை வழிநடத்த வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அமைதி, தவம், தூய்மை, பொறுமை, நேர்மை முதலியவை முதல்தர மனிதரின் குணங்களாகும். (பார்க்க, பகவத் கீதை 18.42)

சோயர்மென்: ஆம், இவை மிகவுயர்ந்த குணங்களே.

ஸ்ரீல பிரபுபாதர்: இவற்றைக் கற்பிக்கும் நிறுவனங்கள் எங்கே இருக்கின்றன? பெரும்பாலான நிறுவனங்கள் தொழில்நுட்பத்தையே போதிக்கின்றன. ஆனால் சமுதாயத்தில் மூளையாகிய முதல்தர மனிதன் இல்லையெனில், கை, கால் போன்ற மற்றவர்களை யார் வழிநடத்துவது?

சோயர்மென்: தேவனுடைய ராஜ்ஜியத்தை முதலில் நாடுங்கள், பிறகு அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும் என்று ஏசு கூறுகிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: முதல்தர மனிதன் சமுதாயத்தின் தலைவனாக இருக்கும்போது, அனைத்தும் முறையாகச் செய்யப்படும்.
சோயர்மென்: ஏழைகளாகிய அடித்தட்டு மக்களைப் பற்றி கூறுங்களேன்?

ஸ்ரீல பிரபுபாதர்: அறியாமையில் இருக்கும் மனிதனே உண்மையில் ஏழையாவான். உணவு தேவை நிறைவேற்றுவது கடினமான பணியல்ல. அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஏராளமான காலி நிலங்கள் உள்ளன. அங்கே விவசாயத்தில் ஈடுபடுதல் நன்று. மக்களோ விவசாயத்தில் ஈடுபடுவதற்கு மாறாக, டெட்ராய்ட் நகருக்கு வரவழைக்கப்பட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சோயர்மென்: தீர்வை வழங்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்குப் பயிற்சியளித்து பிரச்சனைகளை சரி செய்ய முயல்கிறீர்கள். இது மறைமுக வழிமுறை. நாங்கள் பசிக்கும் மனிதனுக்கு உணவளிக்கும் நேரடி வழிமுறையில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: வங்காளத்தில் நாங்கள் தினமும் குறைந்தது ஆயிரம் நபர்களுக்கு உணவளிக்கிறோம். இங்கே எங்களது டெட்ராய்ட் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும், வருபவர்கள் அனைவருக்கும் நாங்கள் உணவளிக்கிறோம்.

சோயர்மென்: நீங்கள் நேரடி வழிமுறையையும் கையாளுகிறீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: இங்கே வருபவர் வெறும் உணவு, தங்குமிடம் முதலியவற்றை மட்டுமின்றி, ஆன்மீகக் கல்வியையும் பெறுகின்றனர். பாவ வாழ்வில் ஈடுபடாத முதல்தர மனிதனாக வாழ்வது எவ்வாறு என்பதை நாங்கள் அவர்களுக்குக் கற்பிக்கின்றோம். இவர்களை நான் இந்தியாவிலிருந்து வரவழைக்கவில்லை. இவர்கள் அனைவரும் இந்த நாட்டினரே.

சோயர்மென்: கிழக்கத்திய கலாச்சாரத்தின் மீது இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: கிழக்கு, மேற்கு என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. அமைதி என்பது எவ்வாறு கீழ் நாடு, மேல் நாடு என அனைவருக்கும் பொதுவானதோ, அவ்வாறே கிருஷ்ண உணர்வும் அனைவருக்கும் பொதுவானது. நாங்கள் எந்த குறிப்பிட்ட பிரிவினருக்காகவும் பேசவில்லை, அனைவருக்காகவும் பேசுகிறோம். கிருஷ்ண உணர்வு அனைவருக்கும் உரித்தானது.

மனித சமுதாயத்தின் நான்கு பிரிவினரும் ஒற்றுமையுடன் பகவானை வழிபட வேண்டும்.

கோயில் வரும் பக்தர்கள்  அனைவருக்கும் பிரசாதமும் ஆன்மிகக் கல்வியும் வழங்கப்படுகிறது

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment