வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு” என்னும் பெயரை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் யார் என்பதை முறையாக அறியாமல் இருக்கலாம். அதனை ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் தனது நூலின் அறிமுகத்தில் மிக எளிதாக விளக்கியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள் இங்கே.

பகவான் சைதன்யரின் புகழை அறியாத மேற்கத்திய உலகில், கிருஷ்ண சைதன்யர் யார்? என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியரான ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அக்கேள்விக்கு தனது நூலின் மூன்றாவது ஸ்லோகத்தில் பதிலளிக்கின்றார். உபநிஷதங்கள் பரம பூரண உண்மையினை பெரும்பாலும் அருவமானதாக விளக்குகின்றன, ஆனால் பரம்பொருளின் வியக்தித்துவத்தை விளக்கும் ஈஷோபநிஷத்தில் நாம் பின்வரும் மந்திரத்தைக் காண்கிறோம்:

ஹிரண்மயேன பாத்ரேணஸத்யஸ்யாபிஹிதம் முகம்

தத் த்வம் பூஷன்நபாவ்ருணுஸத்ய-தர்மாய த்ருஷ்டயே 

எம்பெருமானே, எல்லா உயிர்களையும் காப்பவரே, தங்களின் உண்மையான முகம் தங்களது பிரகாசமான தேஜஸினால் கவரப்பட்டுள்ளது. தயவுசெய்து அத்திரையினை விலக்கி தங்களது தூய பக்தனுக்கு தங்களை வெளிப்படுத்துங்கள்.” (ஸ்ரீ ஈஷோபநிஷத் 15) கடவுளின் தேஜஸைத் தாண்டிச் சென்று அவரின் உருவத்தன்மையினை அணுகும் வலிமை அருவவாதிகளிடம் இல்லை. அருவ பிரம்மன் மறுக்கப்படுவதில்லை; அதுவும் விளக்கப்பட்டுள்ளது, ஆனால் பகவான் கிருஷ்ணரின் உடலிலிருந்து வரும் பிரகாசமான ஒளியே பிரம்மன் என்றுஅறியப்படுகிறது.

சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து பகவான் சைதன்யர் சாக்ஷாத் பகவான் கிருஷ்ணரே என்பதை உணர்கிறோம். வேறுவிதமாகக் கூறினால், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரே அருவ பிரம்மனின் ஆதாரம். ஒவ்வோர் உயிர்வாழியின் இதயத்தில் வீற்றிருப்பவரும் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவிலும் வீற்றிருப்பவருமான பரமாத்மா, பகவான் சைதன்யரின் விரிவங்கமே. எனவே, பிரம்மனுக்கும் எங்கும் பரவியிருக்கும் பரமாத்மாவிற்கும் ஆதாரமாக விளங்கும் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாவார். இதனால், செல்வம், புகழ், வலிமை, அழகு, அறிவு, துறவு ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களில் அவர் முழுமையாக இருக்கிறார். சுருக்கமாகக் கூறினால், அவர் கடவுளான கிருஷ்ணர் என்றும், அவருக்கு சமமானவரோ அவரைவிட உயர்ந்தவரோ யாரும் இல்லை என்றும் நாம் அறிய வேண்டும். அவரைவிட உயர்ந்தது எதுவும் இல்லை. அவரே பரம புருஷர்.

உயர்நிலை பக்தரான ஸ்ரீல ரூப கோஸ்வாமி எழுதுகிறார்:

நமோ  மஹா-வதான்யாய

க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாயதே

க்ருஷ்ணாய-க்ருஷ்ண-சைதன்ய-

நாம்னே கௌர-த்விஷே நம:

யாரும் இதற்கு முன் வழங்காத கிருஷ்ண பிரேமையினை எல்லாருக்கும் தாராளமாக வழங்குவதால் எல்லா அவதாரங்களையும்விட மிக கருணை வாய்ந்தவராக விளங்குபவரும், சாக்ஷாத் கிருஷ்ணருமான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யருக்கு நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை தெரிவிக்கிறேன்.” 

பகவான் சைதன்ய மஹாபிரபுவை நம்மில் ஒருவராக நினைத்துவிடக் கூடாது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், அவர் ஒருபோதும் மாயை என்னும் மேகத்தினுள் வருவதில்லை. கிருஷ்ணரும் அவரது விரிவுகளும், ஏன் அவரது உயர்ந்த பக்தர்களும்கூட மாயையின் பிடியினுள் ஒருபோதும் விழுவதில்லை. பகவான் சைதன்யர் கிருஷ்ணரின் மீதான அன்பினை கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காகவே பூமிக்கு வந்தார். வேறுவிதமாகக் கூறினால், அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே, உயிர்வாழிகள் கிருஷ்ணரை அணுகுவதற்கான முறையான வழிமுறையைக் கற்றுக் கொடுக்க அவர் வந்தார்.

அவர், மாணவன் சரியாக எழுதவில்லை என்பதைக் கண்டு அவனது கையைப் பிடித்து, அ, ஆ, இஶீஇவ்வாறு எழுத வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் ஓர் ஆசிரியரைப் போன்றவர். இதிலிருந்து ஆசிரியர் அ, ஆ, இ கற்றுக்கொள்கிறார் என்று எவரும் முட்டாள்தனமாக நினைக்கக் கூடாது. அதுபோலவே, பகவான் சைதன்யர் பக்தரின் வடிவில் தோன்றியபோதிலும், அவரை ஒரு சாதாரண மனிதராக நாம் முட்டாள்தனமாக நினைக்கக் கூடாது; அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதையும், கிருஷ்ண உணர்வை எவ்வாறு அடைவது என்று நமக்குக் கற்றுக் கொடுக்கிறார் என்பதையும் நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும், இந்த கோணத்தில்தான் நாம் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

எல்லா அவதாரங்களைக் காட்டிலும் மிகவும் கருணை வாய்ந்தவர் என்று பகவான் சைதன்யரை ரூப கோஸ்வாமி போற்றுகிறார்; ஏனெனில், பக்தித் தொண்டின் மிகவுயர்ந்த நிலையை கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர் மிகச்சிறந்த பரிசை வழங்குகிறார். பக்தித் தொண்டிலும் கடவுளை உணர்வதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன. நியாயமாகப் பார்த்தால், கடவுள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் பக்தித் தொண்டில் நிலைபெற்றுள்ளனர். கடவுள் மிகப் பெரியவர் என்பதை ஏற்றுக்கொள்வது நன்று, ஆனால் அதுவே உயர்நிலை அல்ல. மிகச்சிறந்த ஆச்சாரியராக பிரச்சாரம் செய்த சைதன்ய மஹாபிரபு, நாம் எவ்வாறு கடவுளுடன் உறவுமுறையை வளர்த்துக் கொண்டு, அவரின் நண்பனாக, பெற்றோராக, அல்லது காதலராக உண்மையிலேயே ஆவது என்பது குறித்து கற்றுத் தருகிறார்.

சைதன்ய மஹாபிரபுவின் மிகவுயர்ந்த பரிசு யாதெனில், ஒருவர் கிருஷ்ணரை தனது காதலராக நடத்தலாம் என்னும் போதனைகளேயாகும். இந்த உறவில் தனது பக்தர்களின் மீதான பகவானின் பற்றுதல் மிகமிக அதிகமாக உள்ளது, அவர்களின் அன்பிற்கு இணையாக தன்னால் செயல்பட முடியவில்லையே என்று கிருஷ்ணரே ஏங்குமளவிற்கு அஃது உள்ளது. விருந்தாவனத்தின் இடையர் குலப் பெண்களான கோபியர்களிடம் கிருஷ்ணர் மிகவும் கடன்பட்டவராகிறார், அவர்களின் அன்பினை திருப்பிச் செலுத்துவதில் தனது இயலாமையை அவர் உணர்கிறார். உங்களின் அன்பை என்னால் திருப்பிச் செலுத்த முடியாது, கொடுப்பதற்கு என்னிடம் எந்த சொத்தும் இல்லை” என்று அவர் அவர்களிடம் கூறினார். காதலன், காதலி என்ற தளத்தில் செய்யப்படும் மிகவுயர்ந்த மிக அற்புதமான இந்த பக்தித் தொண்டு, முந்தைய ஆச்சாரியர்களாலோ அவதாரங்களாலோ ஒருபோதும் வழங்கப்படாத இந்த பக்தித் தொண்டு, சைதன்ய மஹாபிரபுவினால் வழங்கப்பட்டது.

எனவேதான், கிருஷ்ணதாஸ கவிராஜர் தனது நூலின் நான்காவது ஸ்லோகத்தில் எழுதுகிறார், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பொன்னிற மேனியுடன் விளங்கும் கிருஷ்ணர், அவர் ஸச்சிநந்தன, அதாவது தாய் ஸச்சியின் புதல்வர். கிருஷ்ண பிரேமையினை (கிருஷ்ணரின் மீதான களங்கமற்ற அன்பினை) வழங்க வந்ததால் அவரே மிகச்சிறந்த கொடைவள்ளல். அவரை உங்களின் இதயத்தில் எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள், கிருஷ்ணரை அவரின் மூலம் அறிந்து கொள்ளுதல் எளிது.”

இறையன்பு (பிரேமை) என்னும் வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கிறோம். இந்த இறையன்பினை எந்த அளவிற்கு உண்மையில் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை நாம் வைஷ்ணவ தத்துவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். இறையன்பு குறித்த ஏட்டுக்கல்வியை பல்வேறு இடங்களிலும் பல்வேறு சாஸ்திரங்களிலும் காணலாம், ஆனால், அந்த இறையன்பு என்றால் உண்மையில் என்ன என்றும், அதனை எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும் என்பதையும் வைஷ்ணவ சாஸ்திரங்களில் காண முடியும். சைதன்ய மஹாபிரபுவினால் வழங்கப்பட்ட இறையன்பு தன்னிகரற்றதும் மிகுந்த வளர்ச்சி பெற்றதுமாகும்.

ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஒவ்வொரு மத நூலிலும் இறையன்பைப் பற்றிய சிறு குறிப்பு இருப்பதாக சைதன்ய மஹாபிரபு நமக்குத் தெரிவிக்கிறார். ஆனால் இறையன்பு என்றால் உண்மையில் என்ன என்பதை எவரும் அறிவதில்லை. வெளியில் அவர்கள் இறையன்பை பற்றி பிரச்சாரம் செய்தாலும், அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த எந்த எண்ணமும் அவர்களிடம் இல்லை. ஆனால் சைதன்ய மஹாபிரபுவோ காதலன், காதலி என்ற உறவுமுறையுடன் இறைவனிடம் அன்பு செலுத்துவது எவ்வாறு என்பதற்கு செய்முறை விளக்கமளித்துள்ளார்.

ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தை ஏற்றிருந்த சைதன்ய மஹாபிரபு, ராதை கிருஷ்ணரின் மீது கொண்டிருந்த அன்பினைப் போன்று அவரிடம் அன்பு செலுத்த முயற்சி செய்தார். ராதாராணியின் அன்பினால் கிருஷ்ணர் எப்போதும் ஆச்சரியப்படுகிறார். ராதாராணியினால் எவ்வாறு எனக்கு இவ்வளவு இன்பத்தை வழங்க முடிகிறது?” என்று அவர் கேட்பார். ராதாராணியை அறிந்துகொள்ள கிருஷ்ணரே அவளது மனோபாவத்தில் வாழ்ந்து தன்னைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். இதுவே சைதன்ய மஹாபிரபு அவதரித்ததன் இரகசியம். சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரே, ஆனால் அவர் ராதாராணியின் மனோபாவத்தைத் தாங்கியபடி கிருஷ்ணரின் மீது எவ்வாறு அன்பு செலுத்துவது என்பதை நமக்குக் காட்டினார். எனவே, சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியர் தனது ஐந்தாவது ஸ்லோகத்தில், ராதாராணியின் மனோபாவத்தில் மூழ்கியுள்ள முழுமுதற் கடவுளுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்,” என்று எழுதுகிறார்.

ராதாராணி கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டவர் அல்ல. சக்திக்கும் சக்திமானுக்கும் வேற்றுமை இல்லை என்பதால் ராதாராணியும் கிருஷ்ணரே. சக்தியில்லாவிடில் சக்திமானுக்கு எந்த அர்த்தமும் இல்லை, சக்திமான் இல்லாவிடில் சக்தி இல்லை. அதுபோலவே, ராதை இல்லாவிடில் கிருஷ்ணருக்கு அர்த்தமில்லை, கிருஷ்ணர் இல்லாவிடில் ராதைக்கும் அர்த்தமில்லை. இதனால்தான் வைஷ்ணவ தத்துவத்தில் முழுமுதற் கடவுளின் அந்தரங்க ஆனந்த சக்திக்கே முதல் வணக்கமும் முதல் வழிபாடும் செலுத்தப்படுகிறது. இதனால் பகவானும் அவரது சக்தியும் ராதா-கிருஷ்ணர் என்றே எப்போதும் குறிப்பிடப்படுகின்றனர். அதுபோலவே, நாராயணரை வழிபடுவோரும் முதலில் லக்ஷ்மியின் பெயரையே உச்சரிப்பர். இராமரை வழிபடுவோரும் சீதையின் பெயரையே முதலில் உச்சரிப்பர்ஶீசீதா-ராமர், ராதா-கிருஷ்ணர், லக்ஷ்மி-நாராயணர்ஶீசக்தி எப்போதும் முதலில் வருகின்றது.

ராதையும் கிருஷ்ணரும் ஒருவரே, கிருஷ்ணர் ஆனந்தத்தை அனுபவிக்க விரும்பியபோது, அவர் தன்னை ராதாராணியாக வெளிப்படுத்தினார். ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான ஆன்மீக அன்புப் பரிமாற்றம் உண்மையில் கிருஷ்ணரின் அந்தரங்க ஆனந்த சக்தியினால் வடிவமைக்கப்படுவதாகும்.

ராதை தன்மீது கொண்டிருக்கும் அன்பின் பெருமையை கிருஷ்ணர் அறிய விரும்பினார். ஏன் அவள் என்மீது அவ்வளவு காதல் கொண்டுள்ளாள்? அவளை அவ்வாறு கவரும் வண்ணம் என்னிடம் அப்படி என்ன சிறப்புத் தன்மை உள்ளது? மேலும், அவள் என்னை வழிபடும் முறை என்ன?” என்று கிருஷ்ணர் கேட்டார். கிருஷ்ணரே ஆச்சரியமுற்றார்: நான் ஏன் ராதாராணியினால் கவரப்படுகிறேன்? என் மீதான காதலை ராதாராணி உணரும்போது, அவள் உண்மையில் உணர்வதுதான் என்ன?” அந்த அன்புப் பரிமாற்றத்தின் சாரத்தைச் சுவைப்பதற்காக, கடலின் அடிவானில் சந்திரன் தோன்றுவதுபோல, சைதன்ய மஹாபிரபு என்னும் சந்திரன் தோன்றினார்.