யார் முழுமுதற் கடவுள்?

Must read

வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ்

கடவுள் இருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொள்வோர் மத்தியிலும், யார் கடவுள்? என்ற கேள்விக்கான விடை பெரும்பாலும் இல்லை.

இந்தியாவிலுள்ள பல வீடுகளில் பூஜை அறை முழுவதும் பல படங்களை வைத்திருப்பர். திங்கள் கிழமை ஒரு கடவுள், செவ்வாய் அன்று மற்றொரு கடவுள் என்று தினமும் ஒருவரை வழிபடுவர். பூஜை அறை முழுவதும் கடவுள்களின் கண்காட்சியைப் போல காட்சியளிக்கும். நவராத்திரிக்கு முன்பாக பல வீடுகளில் கொலு வைப்பர், எத்தனை கடவுள்கள்! இவையனைத்தையும் பார்க்கும்போது, உண்மையில் யார் கடவுள் என்ற கேள்வி சிந்தனை கொண்டோர் அனைவருக்குள்ளும் எழக்கூடிய ஒன்றே.

கடவுளை அறிவதற்கு வேதங்களே சிறந்த வழி என்பதை முன்பு (ஜனவரி இதழில்) கண்டோம். வேதங்களின் சாரமான பகவத் கீதையில், வியாசர், திருதராஷ்டிரர் பேசும்போது த்ருதராஷ்ட்ர உவாச என்கிறார்; அர்ஜுனன் பேசுகையில் அர்ஜுன உவாச என்கிறார்; ஸஞ்ஜயன் பேசுகையில் ஸஞ்சய உவாச என்கிறார். ஆனால் கிருஷ்ணர் பேசுகையில் க்ருஷ்ண உவாச என்பதற்குப் பதிலாக, ஸ்ரீ பகவான் உவாச என்று குறிப்பிட்டுள்ளார். பகவான் என்ற சொல்லின் பொருள் என்ன? பக என்றால் “வைபவங்கள்” என்றும், வான் என்றால் “உடையவர்” என்றும் பொருள்படுவதால், பகவான் என்றால் “வைபவங்களை உடையவர்” என்று பொருள். ஸ்ரீல பராசர முனி இதனை விஷ்ணு புராணத்தில் (6.5.47) மேலும் விளக்குகிறார்:

ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யஷஸ: ஸ்ரீய:

க்ஞான-வைராக்யயோஷ் சைவ ஸண்ணாம் பக இதிங்கன

“பகவான், அல்லது முழுமுதற் கடவுள் என்பவர், செல்வம், புகழ், அறிவு, அழகு, பலம், துறவு ஆகிய ஆறு வைபவங்களையும் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்.” 

இப்பௌதிக  உலகிலுள்ள சிலர், இந்த வைபவங்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டினை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, மற்ற மக்களைக் காட்டிலும் அதிகமாக கொண்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக, உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக பில்கேட்ஸ் சில வருடங்கள் தொடர்ந்து இருந்தார்; ஆனால் தற்போது சார்லஸ் சிலிம் ஹேலு என்பவர் இருக்கின்றார். குத்துச்சண்டையில் தனக்கு நிகர் யாருமில்லை என்றும், தானே உலகின் பலசாலி என்றும் முகமது அலி மார்தட்டிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது பார்கின்சன் என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு சிறிய குவளையைக்கூட தூக்க சிரமப்படுகிறார்.

ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடத்தில் இந்த ஆறு வைபவங்களும் எப்பொழுதும் முழுமையாக உள்ளன. அவர் ஒரு வருட குழந்தையாக இருந்தபோது, தனது காலின் கட்டை விரலால் உதைத்து சகடாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தார்; தனது ஏழாவது வயதில் கோவர்தன மலையை இடது கை சுண்டு விரலில் ஏழு நாள்கள் இரவுபகலாக உயர்த்திப் பிடித்தார். பற்பல ஆண்டுகள் படித்தும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத பகவத் கீதையை மிகவும் எளிதாக போர்க்களத்திலிருந்த அர்ஜுனனுக்கு உபதேசித்தார். அவர் என்றும் இளமை மாறாதவர் என்றும் அவருடைய அழகா னது கோடி மன்மதர்களின் அழகை ஒன்று சேர்த்தாலும் ஒப்பிட முடியாதது என்றும் பிரம்ம சம்ஹிதையில் பிரம்மதேவர் போற்றுகிறார். இவ்வளவு வளங்கள் நிரம்பப் பெற்றிருந்தும், சற்றும் செருக்கில்லாமல் தனது நண்பனான அர்ஜுனனின் தேரோட்டியாக மஹாபாரதப் போரில் அவர் செயல்பட்டார். இஃது அவரின் துறவை காட்டுகிறது.

எனவே, பகவான் என்னும் சொல், ஸ்ரீ கிருஷ்ணருக்கு மட்டுமே பொருந்தக்கூடியது; பிரம்மா, சிவன் உட்பட வேறு எந்த தேவர்களுக்கும் அல்ல. பிரம்மா, இந்திரன், சந்திரன் என்பனவெல்லாம் வெறும் பதவிகளே, தகுதி பெற்ற ஜீவன்கள் இப்பதவியை அடைய முடியும். அவ்வப்போது காலத்தின் கோலத்தில், இந்திரன், சந்திரன், வருணன் போன்ற பதவிகளில் தகுதிபெற்ற ஜீவன்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்தானமோ நிரந்தரமானது, தற்காலிகமானதல்ல.

ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பது பகவத் கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, “ஜட, ஆன்மீக உலகங்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன,” (10.8) என்றும், நானே எல்லா யாகங்களையும் தவங்களையும் இறுதியில் அனுபவிப்பவன், எல்லா லோகங்களையும் தேவர்களையும் கட்டுப்படுத்துபவன், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன்,” (5.29) என்றும், “நானே எல்லா தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் மூலம்,” (10.2) என்றும், “நூலில் எவ்வாறு முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளனவோ, அதுபோல உலகிலுள்ள அனைத்தும் என்னைச் சார்ந்தே உள்ளன,” (7.7) என்றும் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் தெளிவாகக் கூறுகிறார்.

ஸ்ரீமத் பாகவதத்தில், (1.3.28) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா அவதாரங்களின் மூலம் என்றும், அவரே ஸ்வயம் பகவான் என்றும், இதர அவதாரங்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சம், அல்லது அம்சத்தின் அம்சம் என்றும், கிருஷ்ணரே சாக்ஷாத் முழுமுதற் கடவுள் என்றும் ஸ்ரீல வியாஸதேவர் குறிப்பிடுகிறார்.

முதன்முதலில் படைக்கப்பட்ட உயிர்வாழியான பிரம்மதேவர் பிரம்ம சம்ஹிதையில் பின்வருமாறு கூறுகிறார்:

ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:   ஸச்-சித்-ஆனந்த விக்ரஹ:

அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ-காரண-காரணம்

ஈஷ்வர என்றால் “கட்டுப்படுத்துபவர்” என்று பொருள். காற்றைக் கட்டுப்படுத்துபவர், மழையைக் கட்டுப்படுத்துபவர், ஒளியைக் கட்டுப்படுத்துபவர் என கட்டுப்படுத்துவோர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரிலும் கிருஷ்ணரே உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கூறுகிறார். அவர் மற்றெல்லா கட்டுப்பாட்டாளர்களையும் கட்டுப்படுத்துபவராக இருக்கிறார். ஸ்ரீபாத ஆதி சங்கராசாரியர் தனது கீதா மஹாத்மியத்தில், ஒருவரே  கடவுள் என்றும், அது தேவகியின் புத்திரரான ஸ்ரீ கிருஷ்ணரே என்றும் கூறுகிறார். 

இவ்வாறாக, எல்லா ரீதியிலும் சரி, பகவத்கீதையின் கூற்றின் படியும் சரி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அடுத்த இதழில் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர், பிரம்மா, சிவன் போன்ற இதர தேவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபட்டவர் என்பதைக் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives