வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

தாய்மார்களே! கனவான்களே! தலைசிறந்த கலைஞர் யார் என்பது குறித்து சொற்பொழிவாற்ற என்னை இங்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி.

கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர் என்று வேதங்கள் கூறுகின்றன: ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் ஸமஷ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே. பரம புருஷரைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவரும் இல்லை. மேலும், அவரே மிகச்சிறந்த கலைஞர் என்பதால், அவர் செய்ய வேண்டிய செயல் என்று எதுவும் இல்லை.

இவ்வுலகில், சிலர் நம்மைவிட தாழ்ந்தவராகவும், சிலர் நமக்கு சமமானவராகவும், சிலர் நம்மைவிட உயர்ந்தவராகவும் இருப்பதை அனுபவத்தில் காண்கின்றோம். நீங்கள் எவ்வளவுதான் சிறந்தவராக இருப்பினும், உங்களுக்கு சமமானவரையோ உங்களைவிட சிறந்தவரையோ நீங்கள் காண்பது உறுதி. ஆனால், பரம புருஷ பகவானைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவரும் இல்லை என்று மிகச்சிறந்த சான்றோர்கள் தீர்மானிக்கின்றனர்.

கிருஷ்ணரின் கலைத்திறன்

பகவானுக்கு தாம் ஆற்ற வேண்டிய கடமையோ அதற்கான கட்டாயமோ எதுவுமில்லை என்பதே அவரது சிறப்புத் தன்மையாகும் (ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே). பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ரூயதே, பீஜம் மாம் ஸர்வ-பூதானாம், அவருடைய எண்ணற்ற சக்திகள் அனைத்தும் அவருடைய விருப்பத்தின்படி தன்னிச்சையாக செயல்படுகின்றன (ஸ்வாபாவிகீ ஜ்ஞான-பல-க்ரியா ச). மிக அழகான ரோஜா ஒன்றினை நீங்கள் வரைய விரும்பினால், தூரிகை ஒன்றை எடுத்துக் கொண்டு, தட்டில் வண்ணங்களைக் கலந்து, மூளையை கசக்கி ரோஜாவை அழகுபடுத்த வேண்டும். ஆனால் தோட்டத்திலோ ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் மலர்ந்திருப்பதைக் காண்கின்றீர்கள், இவை இயற்கையால் வண்ணம் தீட்டப்பட்ட மிக அற்புதமான ஓவியங்களாகும்.

இந்த விஷயத்தை நாம் நன்கு ஆராய வேண்டியது அவசியம். இயற்கை என்பது ஒரு கருவி அல்லது சக்தி மட்டுமே. எந்தவித சக்தியும் இல்லாமல் மொட்டிலிருந்து அழகான ரோஜா எவ்வாறு மலர முடியும்? ஏதோவொரு சக்தியின் செயல்பாடு இருந்தேயாக வேண்டும், அதுவே கிருஷ்ணரின் சக்தியாகும். ஆனால் அச்சக்தி மிகவும் சூட்சுமமாகவும் விரைவாகவும் செயல்படுவதால், அஃது எவ்வாறு செயல்படுகின்றது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

பௌதிக சக்திகள் தன்னிச்சையாக செயல்படுவதைப் போன்று தோன்றினாலும், அதன் பின்னால் ஒரு மூளையின் செயல்பாடு இருப்பது உண்மையே. ஓவியத்திற்கு வண்ணம் பூசும்போது, நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அனை
வராலும் பார்க்க முடிவது போலவே, உண்மையான ரோஜாவிற்கும் பற்பல சக்திகளின் மூலமாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ரோஜாவானது பரம புருஷரின் சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த சக்திகள் மிகவும் சூட்சுமமாகவும் மிகுந்த கலைத்திறனுடனும் இருப்பதால், ஒரே இரவிற்குள் அற்புதமான மலர்களாக மலர்ந்துவிடுகின்றன.

எனவே, கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர். தற்போதைய மின்னணு யுகத்தில், விஞ்ஞானி ஒருவர் விசையை அழுத்தினாலே இயந்திரம் மிக அருமையாக செயல்படுகிறது, விமானி ஒருவர் விசையை அழுத்துவதால் பிரம்மாண்டமான விமானம் ஆகாயத்தில் பறக்கின்றது. சாதாரண மனிதனே இவ்வளவு அருமையாக செயல்பட முடியுமென்றால், கடவுளின் செயல்படும் திறன் எவ்வளவு சிறந்ததாக இருக்க வேண்டும்? அவரது மூளையானது ஒரு சாதாரண கலைஞன் அல்லது விஞ்ஞானியைக் காட்டிலும் எவ்வளவு மேம்பட்டதாக இருக்க வேண்டும்? “படைப்பு உண்டாகட்டும்!” என்று அவர் விரும்பியதும், அனைத்தும் உடனடியாகப் படைக்கப்படுகின்றன. ஆகையால், கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர்.

எல்லையற்ற கலைஞர்

கிருஷ்ணருடைய கலைத்திறனுக்கு எல்லையே இல்லை, ஏனெனில், கிருஷ்ணரே எல்லா படைப்பிற்கும் விதையாவார் (பீஜம் மாம் ஸர்வ-பூதானாம்). நீங்கள் ஆல மரத்தைப் பார்த்திருப்பீர்கள், மிகச்சிறிய விதையிலிருந்து மிகப்பெரிய மரம் வளர்கிறது. சிறிய விதையில் பெரிய சக்தி அமைந்துள்ளது. செழிப்பான நிலத்தில் அச்சிறிய விதையை விதைத்து நீரூற்றி வந்தால், ஒருநாள் அது மிகப்பெரிய ஆல மரமாக உரு™வெடுக்கும். ஒரு சிறிய விதை இவ்வளவு பெரிய ஆல மரமாக உருவெடுக்க வேண்டுமெனில், அதற்கான சக்திகளும் கலைத்திறனும் விஞ்ஞான ஏற்பாடும் எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும்? மேலும், அந்த ஆல மரத்தில் ஆயிரக்கணக்கான பழங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான விதைகளும், அவ்விதை ஒவ்வொன்றும் ஒரு முழு ஆல மரத்தையும் கொண்டுள்ளன. இதனை இவ்வளவு அருமையாக உருவாக்கிய விஞ்ஞானி யார்? இதுபோன்ற படைப்பினை உருவாக்கும் கலைஞர் எவரேனும் இப்பௌதிக உலகில் உள்ளனரா?

வேதாந்த சூத்திரத்தின் முதல் வாக்கியம், அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, “மனித வாழ்வைப் பெற்றவர் பூரண உண்மையைப் பற்றி ஆய்ந்தறிய வேண்டும்.” இவற்றை ஒருவன் கவனத்துடன் கற்க வேண்டும். இயற்கையின் பின்னணியில் மிகப்பெரிய கலைஞன் அல்லது மிகப்பெரிய விஞ்ஞானியின் மூளை இருக்கின்றது என்பதை உங்களால் மறுக்க முடியாது; இயற்கையின் செயல்பாடே இதற்கு காரணம் என்று கூறுவது போதுமான விளக்கமாகி விடாது.

வரைபட ரோஜாவிற்கு வண்ணம் தீட்டுவதில் மூளையின் செயல்பாடு எவ்வாறு உணரப்படுகிறதோ, அதுபோல உண்மையான ரோஜாவிற்குப் பின்னாலும் உயர்ந்த மூளையின் செயல்பாடு உள்ளது.

தலைசிறந்த விஞ்ஞானி

ஜன்மாத்யஸ்ய யத: “இருப்பவை அனைத்தும் பரமனிடமிருந்தே தோன்றுகின்றன,” என்பதே வேதாந்த சூத்திரத்தின் இரண்டாவது வாக்கியம். பார்வையை நாம் விசாலப்படுத்த வேண்டும். சிறிய செயற்கைக்கோள் வானில் பறப்பதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுகின்றோம். நீங்கள் புத்திசாலியாக இருந்தால், இந்தச் செயற்கைக்கோளை கோடிக்
கணக்கான இயற்கைக் கோள்களுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள். இந்த பூமியிலுள்ள பெரும் கடல்கள், மலைகள், விண்ணைத் தொடும் கட்டிடங்கள் முதலியவற்றை வானில் சில மைல் மேலே சென்று பார்த்தால், ஒரு புள்ளியைப் போலவே காட்சியளிக்கும்.

அதுபோலவே, இலட்சக்கணக்கான கிரகங்கள் வானில் ஒரு பஞ்சைப் போன்று மிதந்து கொண்டுள்ளன. ஒரு செயற்கைக்கோளை உருவாக்கிய விஞ்ஞானியை நாம் இவ்வளவு பாராட்டுகின்றோம்; இவ்வாறு இருக்கையில், வியத்தகு பிரபஞ்சங்களைப் படைத்தவருக்கு நாம் எவ்வளவு நன்றியையும் மதிப்பையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும்? தலைசிறந்த கலைஞரையும் தலைசிறந்த விஞ்ஞானியையும் பாராட்டும் இவ்வுணர்வே கிருஷ்ண உணர்வாகும்.

பிரம்மஜோதிக்கு ஆதாரமானவர்

நாம் பல்வேறு கலைஞர்களைப் பாராட்டினாலும், மிகச்சிறந்த கலைஞரான கிருஷ்ணரைப் பாராட்டவில்லை என்றால், நமது வாழ்வே அர்த்தமற்றதாகிவிடும். இத்தகைய பாராட்டுதலை பிரபஞ்சப் படைப்பாளரான பிரம்மதேவரின் பிரார்த்தனையான பிரம்ம சம்ஹிதையில் காண்கின்றோம். கோடிக்கணக்கான கிரகங்களைப் பற்றிய அறிவை பிரம்ம சம்ஹிதையிலிருந்து நம்மால் பெற முடியும்.

யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி-

கோடிஷ்வஷேஷ-வஸுதாதி விபூதி-பின்னம்

தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம்

கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி

(பிரம்ம சம்ஹிதை 5.40)

கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் பிரம்மஜோதியிலிருந்து எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் படைக்கப்படுகின்றன. அந்த எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள், அவற்றிலுள்ள எண்ணிலடங்காத சூரியன்கள், எண்ணிலடங்காத சந்திரன்கள், எண்ணிலடங்காத கிரகங்கள் என அனைத்தும் அந்த பிரம்மஜோதியிலிருந்தே தோன்றுகின்றன. அந்த பிரம்மஜோதி கிருஷ்ணருடைய திருமேனியின் பிரகாசமாகும். தங்களுடைய துளியளவு மூளையைக் கொண்டு அனுமானத்தினால் பரமனை அணுக முயலும் ஞானிகளால் இந்த பிரம்மஜோதியை மட்டுமே அடைய முடியும். பிரம்மஜோதிக்கு ஆதியான கிருஷ்ணரை அடைய முடியாது.

செயற்கைக்கோளை உருவாக்கிய விஞ்ஞானியை நாம் பாராட்டுகிறோம்; பிரபஞ்சம் முழுவதும் எண்ணற்ற இயற்கைக் கோள்களை உருவாக்கிய விஞ்ஞானியை ஏன் பாராட்டுவதில்லை?

கிருஷ்ணரை உணரும் கலை

ஆகையால், கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே எல்லா கலைகளிலும் தலைசிறந்த கலையாகும். நாம் ஒரு கலைஞனாக இருக்க விரும்பினால், அவரைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அதாவது, தலைசிறந்த கலைஞரான கிருஷ்ணருடன் நெருக்கமான முறையில் உறவுகொள்ள முயல வேண்டும். இந்த காரணத்திற்காகவே நாங்கள் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். முறையான பயிற்சியினை மேற்கொள்ளும் இவ்வியக்க உறுப்பினர்களால், கிருஷ்ணருடைய கலைத்திறனின் வெளிப்பாட்டை அனைத்திலும் காண முடிகிறது. அனைத்து இடங்களிலும் கிருஷ்ணருடைய கலைத்திறனைக் காண்பதே கிருஷ்ண உணர்வாகும்.

பகவத் கீதையில் (10.8), அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, “நீ காண்பவை அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இருப்பவை அனைத்தும் எனது சக்தியால் படைக்கப்படுபவையே,” என்று கிருஷ்ணர் கூறுகின்றார். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலாதாரம் என்னும் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரம்மதேவரும் தமது பிரம்ம சம்ஹிதையில் இதனை உறுதிப்படுத்துகின்றார் (5.1): ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:, “கிருஷ்ணரே மிகவுயர்ந்த ஆளுநர்.” இந்த பௌதிக உலகில் நாம் பல ஆளுநர்களைக் காண்கின்றோம். உண்மையில், நம்மில் ஒவ்வொருவரும் ஆளுநர்களே. நீங்களும் ஓர் ஆளுநர், ஆனால் உங்களுக்கு மேலே மற்றோர் ஆளுநர் இருக்கின்றார், அவருக்கும் மேல் மற்றொருவர் என ஆராய்ந்து கொண்டே போனால், இறுதியில் எவராலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவரும், அனைவரையும் கட்டுப்படுத்துபவருமான பரம ஆளுநரைக் காண முடியும். அந்த பரம ஆளுநரே பகவான் கிருஷ்ணர். இதுவே கடவுள் என்பதற்கு யாம் அளிக்கும் விளக்கமாகும்.

கடவுள் மலிவானவர் அல்ல

தற்போது, பற்பல கடவுள்களை உருவாக்குவது ஒரு மலிவான வியாபாரமாக மாறிவிட்டது. ஆனால் அவர்கள் உண்மையான கடவுளா என்பதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்க முடியும். அவர் யாருக்காவது கட்டுப்பட்டிருந்தால், அவர் கடவுள் இல்லை; அவர் பரம அதிகாரியாக இருந்தால் மட்டுமே, அவரைக் கடவுளாக ஏற்கலாம். இதுவே கடவுளுக்கான எளிய பரிசோதனை.

ஆனந்தமயமானவர் (ஆனந்தமயோ ’ப்யாஸாத்) என்பது கடவுளின் மற்றொரு தகுதியாகும். பரம புருஷ பகவான் இயற்கையாகவே ஆனந்தமயமானவர், இன்பமயமானவர். ஒரு ஓவியர் தனது ஓவியத்தை இன்பத்திற்காகவே மேற்கொள்கிறார். வரைவதன் மூலமாக அவர் ஒருவித சுவையையும் இன்பத்தையும் அனுபவிக்கின்றார்; இல்லையெனில், அவர் அவ்வளவு சிரமத்தை எதற்காக மேற்கொள்ள வேண்டும்?

கடவுளின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டவர்கள் கிருஷ்ணருடைய கலைத்திறனை அனைத்து இடங்களிலும் கண்டு உன்னத ஆனந்தத்தை அடைகின்றனர். இதுவே பக்தர்களின் நிலையாகும். எனவே, கிருஷ்ணரின் கைவண்ணம் எங்கும் காணும் பொருட்டே, அனைவரையும் கிருஷ்ண உணர்வுள்ள பக்தராகும்படி நாங்கள் வேண்டுகிறோம்.

பிரபஞ்சத்தைப் படைப்பதில் கிருஷ்ணருடைய கலைத்திறனைக் காண்பதே கிருஷ்ண உணர்வாகும்.

கிருஷ்ணரை எங்கும் காணுதல்

கிருஷ்ணரை எங்கும் காண்பது கடினமல்ல. ஒருவர் தாகம் தணிக்க நீர் பருகுகின்றார், அவ்வாறு பருகும்போது அளவற்ற இன்பத்தை உணர்கிறார். உண்மையில், கிருஷ்ணரே எல்லா இன்பத்திற்கும் இருப்பிடம் (ரஸோ வை ஸ:) என்பதால், நீரைப் பருகும்போது ஒருவர் உணரும் இன்பமும் கிருஷ்ணரே. கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.8) ரஸோ ’ஹம் அப்ஸு கௌந்தேய என்று கூறுகின்றார். “நீரின் சுவை நானே.” கிருஷ்ணரை முழுமையாக பாராட்ட முடியாத ஒரு சாதாரண மனிதனுக்காக, தாகத்தைத் தணிக்கும் நீரின் சுவை தாமே என்பதை அவர் உபதேசிக்கின்றார். நீரின் சுவை கிருஷ்ணரே என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தால், கடவுள் உணர்வை, கிருஷ்ண உணர்வை அடையலாம்.

கிருஷ்ண உணர்வை அடைவது அவ்வளவு கடினமானதல்ல, சிறிதளவு பயிற்சியே தேவை. கிருஷ்ணர் வழங்கிய செய்தியை அயோக்கியர்களின் கற்பனையைச் சேர்க்காமல், பகவத்கீதை உண்மையுருவில் நூலின் மூலமாக உள்ளபடி படித்து, புரிந்து கொண்டு, கிருஷ்ண உணர்வை அடையலாம். கிருஷ்ண உணர்வை அடைந்தால், வாழ்க்கை வெற்றி பெறும்; அதன் மூலம் கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்லலாம் (த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி).

கிருஷ்ண உணர்வை அடைவதில் எந்த இழப்பும் இல்லை, அடையப்படும் பலனோ ஏராளம். எனவே, கிருஷ்ண உணர்வைப் பெற முயலுங்கள் என்று அனைவரிடமும் நாங்கள் வேண்டுகிறோம். பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படிப்பதன் மூலமாக, கிருஷ்ண உணர்வைப் பெறுவதற்கான எல்லா தகவல்களையும் பெற முடியும். ஒருவேளை, பகவத் கீதையைப் படிக்க விருப்பமில்லை என்றால்கூட, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரியுங்கள். இதன் மூலமும் நீங்கள் கிருஷ்ண உணர்வைப் பெறுவது உறுதி.

நன்றி வணக்கம்.