துறவி என்பவர் யார்?

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

துறவி, சந்நியாசி, யோகி, குரு, ஸ்வாமி, கோஸ்வாமி என பல்வேறு பெயர்களில் அறியப்படும் சாதுக்களின் உண்மையான தகுதிகள் யாவை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் இங்கே விளக்குகிறார்.

ஆத்மா எனும் சொல்லை இன்றைய மக்களில் பெரும்பாலானோர் உடல், மனம் எனும் பொருளிலேயே புரிந்துகொள்கின்றனர். உடலிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட ஆத்மாவின் ஆழ்ந்த பொருளை அறிந்துகொள்வதில் எவருக்கும் ஆர்வமில்லை, இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உடலியல், மனோவியல், தாவரவியல், சமூகவியல் முதலியவற்றை பள்ளிகளும் கல்லூரிகளும் கற்பிக்கின்றன. ஆனால் ஆத்மாவைப் பற்றிப் போதிக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் எங்கே? விஞ்ஞான முன்னேற்றத்தில் பெருமைகொள்ளும் உலக நாடுகள், உடலே எல்லாம் என்று கருதுகின்றனர். ஆனால் உடலையே ஆத்மாவாகக் கருதுபவன் வேதங்களில் கழுதை என்று கூறப்படுகிறான். ஆத்மாவைப் பற்றிய அறிவை வளர்த்தல் கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆத்மாவைப் பற்றிய அறிவு

மனக்கற்பனையிலும் புலனின்பத்திலும் ஆர்வமுடன் இருக்கும் பௌதிகவாதிகள், ஆத்மாவைப் பற்றி அறியாது உடல்சார்ந்த வாழ்வில் ஆர்வமுடன் உள்ளனர். இந்தியாவின் பிரபலமான சாதுக்களில் பலரும்கூட மனக்கற்பனையில் ஆர்வம் செலுத்துகின்றனர். அவர்கள் பக்குவமானவர்கள் இல்லை. உடல்சார்ந்த வாழ்வைப் புரிந்துகொள்வதில் ஆர்வமுடன் இருப்பவர்கள் பௌதிகவாதிகளே. துரதிர்ஷ்டவசமாக அரசியல், சமூகம், தத்துவம் முதலியவற்றிக்குத் தலைமை தாங்குபவர்களும் பௌதிகவாதிகளாகவே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரை யோகிகளாகவும் கடவுளின் அவதாரமாகவும் மக்கள் ஏற்கின்றனர். இத்தகையவர்களால் தவறாக வழிநடத்தப்படும் உலகம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றது.

பூரண உண்மையைப் பற்றிக் கூறும் ஸ்ரீமத் பாகவதத்தில் இன்றைய மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆயிரக்கணக்கான விஷயங்களில் ஆர்வமுடன் இருக்கும் இவர்கள் ஆத்மாவை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆத்மாவைப் பற்றிய அறிவில் ஆர்வமுள்ளவர்கள் கிருஷ்ண உணர்வில் இருக்கின்றனர்.

விருந்தாவனத்தின் கோஸ்வாமிகள்

பூரண கிருஷ்ண உணர்வை அடைவதே நமது குறிக்கோள். பூரண கிருஷ்ண உணர்வை அடைவதற்கு ரூபர், ஸநாதனர், ரகுநாத பட்டர், ஸ்ரீ ஜீவர், கோபால பட்டர், ரகுநாத தாஸர் ஆகிய ஆறு கோஸ்வாமிகளை (துறவிகளை) நாம் பின்பற்ற வேண்டும். இவர்கள் வெறும் பெயரில் மாத்திரம் கோஸ்வாமிகள் இல்லை. ஆத்ம விஞ்ஞானத்தில் ஆர்வம்கொள்வது எவ்வாறு என்பதை இந்த ஆறு கோஸ்வாமிகளும் விவரித்துள்ளனர்.

இன்றைய உலகில் பல்வேறு பாவச் செயல்களில் ஈடுபடுவோரும் கோஸ்வாமி (துறவி) என்று அழைக்கப்படுவது உண்மையே. ஆனால், அவர்கள் மேற்கண்ட ஆறு கோஸ்வாமிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். கோஸ்வாமி என்று கூறும்போது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நேரடி சீடர்களான மூல கோஸ்வாமிகள் அறுவரையே யாம் குறிப்பிடுகிறோம்.

விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகள்

துறவியின் தகுதிகள்

புலன்களைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பதை அறிந்திருப்பதே துறவியின் முதல் தகுதியாகும். பேச்சின் தூண்டுதல், கோபத்தின் தூண்டுதல், மனம், வயிறு, நாக்கு மற்றும் பாலுறுப்பின் தூண்டுதல் ஆகிய ஆறு வகை தூண்டுதல்களால் மக்கள் தொந்தரவிற்கு உள்ளாகின்றனர். இத்தகைய தூண்டுதல்கள் மூலம் பௌதிக இயற்கை நம்மை இவ்வுலகில் சிறைப்படுத்துகின்றது. புலன்களின் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துபவரே கோஸ்வாமி (துறவி) எனப்படுகிறார். புலன்களின் தூண்டுதலினால் செயல்படுவோரும் தங்களை கோஸ்வாமிகள் என்று உரிமை கொண்டாடுகின்றனர். கோஸ்வாமி என்பவர் தனிச்சிறப்புடன் சீரானவராக இருக்க வேண்டும்.

ஓர் உண்மையான கோஸ்வாமி ஆறு கோஸ்வாமிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். விருந்தாவனத்தில் வசிப்பவர்கள் மட்டுமே கோஸ்வாமியாக முடியும் என்று கூறிவிட முடியாது. விருந்தாவனம் எங்கும் இருக்கின்ற காரணத்தினால் அனைவரும் கோஸ்வாமிகளாகலாம். கிருஷ்ணரின் கோயில், கிருஷ்ணரின் புகழ் (ஸங்கீர்த்தனம்) முதலியவை எங்கெல்லாம் இருக்கின்றதோ அவ்விடங்கள் அனைத்தும் விருந்தாவனமே. சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்ததால், எனது மனம் எப்பொழுதும் விருந்தாவனத்தில் இருக்கின்றது,”என்று கூறினார். பகவானின் தூய பக்தனாவது எவ்வாறு என்பதைக் கற்பிப்பதற்கு பகவான் கிருஷ்ணரே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக வருகிறார்.

எவரும் கோஸ்வாமியாகலாம்

தூய பக்தனாவதற்கு அவரின் உபதேசங்களை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பகவத் கீதையிலுள்ள கிருஷ்ணரின் மிக இரகசியமான உபதேசம் (9.34):

மன்-மனா பவ மத்-பக்தோ

மத்-யாஜீ மாம் நமஸ்குரு

மாம் ஏவைஷ்யஸி யுக்வைவம்

ஆத்மானம் மத்-பராயண:

உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக. இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.” 

கிருஷ்ணரை இவ்விதமாக சிந்திப்பவர் எப்போதும் விருந்தாவனத்திலேயே வாழ்கிறார். சிரத்தையுடன் விதிமுறைகளைக் கடைப்பிடித்து ராதா கிருஷ்ணரை வழிபடுபவன் நியூயார்க், இலண்டன், ஹாங்காங் முதலிய இடங்களில் வசிப்பதுபோல பௌதிகக் கண்களுக்குத் தோன்றினாலும், உண்மையில் அவன் விருந்தாவனத்திலேயே வசிக்கிறான். இந்தியாவிலுள்ள விருந்தாவனத்தில் ராதா-கிருஷ்ணரை வழிபடுபவர் நிச்சயம் கோஸ்வாமியாக இருக்க வேண்டியது அவசியம். ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி ஆகிய இருவரும் மறைந்திருந்த விருந்தாவனத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்தனர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆணையை நிறைவேற்றுவதற்காக இவர்கள் இருவருடன் ரகுநாதர், ஜீவர், கோபால பட்டர், ரகுநாத தாஸர் ஆகிய மற்ற கோஸ்வாமிகளும் இணைந்தனர். இவர்கள் கிருஷ்ணரைப் பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் மிகவுயர்ந்த ஆன்மீக உணர்வுகளைக் கொண்ட பல்வேறு நூல்களை எழுதினர்.

அனைவருக்கும் பிரியமானவர்

கோஸ்வாமிகள் எப்பொழுதும் கிருஷ்ண கீர்த்தனத்தில் (கீர்த்தனீய ஸதா ஹரி:) ஈடுபட்டிருந்தனர். கீர்த்தனம் என்பது கருவிகளைக் கொண்டு பாடுவதை மட்டும் குறிப்பதில்லை. கிருஷ்ணரைப் பற்றிய புத்தகங்களை எழுதுவதும் படிப்பதும்கூட கீர்த்தனமே. மேலும், கீர்த்தனம் என்பது கிருஷ்ணரைப் பற்றி பேசுதல், நினைத்தல், அவரை வழிபடுதல், அவருக்காக சமைத்தல், அவருக்காக உண்ணுதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். இவ்விதமாக, கோஸ்வாமி என்பவர் இருபத்து நான்கு மணி நேரமும் கிருஷ்ண கீர்த்தனையில் ஈடுபடுகிறார். கிருஷ்ணருக்கான தூய அன்பைப் பெற்றவர் கீர்த்தனம் செய்து எளிதில் திருப்தியடைய இயலும். எனவே, கிருஷ்ண சேவையில் ஈடுபடாத நேரம் வீணடிக்கப்பட்ட நேரம் என்பதை நாம் உணர வேண்டும். தூங்குவதற்காக நாம் எடுக்கும் நேரமும் வீணடிக்கப்பட்ட நேரமே. ஆகவே, நேரத்தைச் சேமிப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

கோஸ்வாமி, கோதாஸன்

கோஸ்வாமிகள் இருபத்துநான்கு மணி நேரமும் கிருஷ்ண சேவையில் ஈடுபட்டிருந்தனர். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரமே அவர்கள் உறங்கினர். ஆறு கோஸ்வாமிகளும் நித்ரா, ஆஹார,  விஹார ஆகியவற்றை வென்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நித்ரா என்றால் உறக்கம், ஆஹார என்றால் உணவு அல்லது உணவைச் சேமித்தல், விஹார என்றால் புலனின்பம். ஸ்வாமி என்றால் எஜமானர், கோ என்றால் புலன்கள். இவ்வாறாக, புலன்களின் எஜமானரே கோஸ்வாமி எனப்படுகிறார். நாவையோ உறக்கத்தையோ கட்டுப்படுத்த இயலாதவன் கோதாஸன் எனப்படுகிறான். தாஸ என்றால் சேவகன்.

புலன்களின் சேவகனாக இருப்பதை விடுத்து கிருஷ்ணரின் சேவகனாக மாற வேண்டும். நாம் புலன்களை வெற்றி கொள்ளாதவரை உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றிற்காக புலன்கள் எப்போதும் நம்மிடம் வேண்டுதல் விடுத்துக்கொண்டே இருக்கும். இதுவே பௌதிக வாழ்க்கை. பௌதிக வாழ்வில் ஒருவன் புலன்களின் ஆணைகளுக்குக் கட்டுப்படுகிறான். அதிகம் உண்ண வேண்டும், அதிகம் உறங்க வேண்டும் என்று மனம் கூறும்போதிலும், கோஸ்வாமிகள் இல்லை” என்று புலன்களுக்கு கூறிவிடுகின்றனர். அவர்கள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை. நாமும் இல்லை” என்று கூறும் அளவிற்கு வலிமை வாய்ந்தவர்களாக மாற வேண்டும், அப்போது நாமும் கோஸ்வாமி ஆகலாம்.

அனைவருக்கும் பிரியமானவர்

கோஸ்வாமி என்பவர் அனைவருக்கும் பிரியமானவர். தீராதீர-ஜன-ப்ரியௌ. தீர என்றால் புலன்களைக் கட்டுப்படுத்துபவர், அதீர என்றால் புலன்களைக் கட்டுப்படுத்த இயலாதவர். கோஸ்வாமிகள் தீர, அதீர என இரு தரப்பினருக்கும் பிரியமானவர்கள். கோஸ்வாமிகள் அறுவரும் விருந்தாவனத்தில் இருந்தபோது மிகவும் பிரபலமானவர்களாக இருந்தனர். கணவன் மனைவியிடையே சண்டை ஏற்படும்போது, அவர்கள் ஸநாதன கோஸ்வாமியிடம் செல்வர், அவர் பிரச்சனைக்கு தீர்வை வழங்குவார். தீர்ப்பு எதுவாயினும் மக்கள் அதனை ஏற்கும் அளவிற்கு கோஸ்வாமிகள் மிகப் பிரபலமானவர்களாக இருந்தனர். தீர்ப்பு வேண்டி ஸநாதன கோஸ்வாமியிடம் சென்றவர்கள் பக்தர்களல்ல, அவர்கள் தவறு செய்தவர்களாகவும் இருக்கலாம்; ஆயினும் ஸநாதன கோஸ்வாமியின் ஆணையை அவர்கள் பின்பற்றினர். இவ்வாறாக அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டதால் அவர்களது வாழ்வு வெற்றியடைந்தது, அவர்கள் முக்தியடைந்தனர்.

சாதாரண மனிதர்களுக்கு ஸநாதன கோஸ்வாமி ஆடை, பிரசாதம் போன்றவற்றை வழங்குவதுண்டு. அவர்களும் வருகை தந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கேட்பர், இவ்விதமாக அவர்கள் கோஸ்வாமியின் கட்டுப்பாட்டில் இருந்தனர். கோஸ்வாமியின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் ஒருவன் வைஷ்ணவனாகிறான். மரியாதையை வற்புறுத்தலினால் பெறவியலாது, ஒருவர் நேர்மையான கோஸ்வாமியாக இருந்தால் மக்கள் தாமாகவே முன்வந்து மரியாதை அளிப்பர்.

கோஸ்வாமிகளின் திருப்பணி

ஒட்டுமொத்த உலகமும் பௌதிக வியாதியால் துன்பப்படுகிறது. எனவே, நாம் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்ய வேண்டும். எனது ஆன்மீக குரு, நான் நிறைய கோயில்களை வைத்துள்ளேன், இக்கட்டிடங்களை விற்பதன் மூலம் யாரேனும் ஒருவனை, பௌதிக வியாதியிலிருந்து மீட்க முடிந்தால், எமது நோக்கம் வெற்றியடைந்ததாகக் கருதுவோம்,” என்று கூறுவதுண்டு. இதுவே கோஸ்வாமிக்கான அறிகுறியாகும்.

கோஸ்வாமியானவர் பௌதிக வியாதியிலிருந்து மற்றவர்களை காப்பதற்காக எப்பொழுதும் முயல்வார். இதை மனதில் கொண்டே ரூப கோஸ்வாமி, பக்தி ரஸாம்ருத சிந்து எனும் நூலை எழுதினார். முந்தைய காலங்களில் மக்கள் வேத சாஸ்திர வாசகங்களை பிரமாணமாக ஏற்றனர். அதனால், ரூப கோஸ்வாமி தனது உரையில் புராணங்கள், வேதாந்த சூத்திரம், உபநிஷத்துகள், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற பல்வேறு வேத சாஸ்திரங்களிலிருந்து பிரமாணங்களை மேற்கோள் காட்டினார். தற்போதைய காலத்திலோ மக்கள் வேத சாஸ்திரங்களை ஏற்காது தங்களது புலன்கள் கூறுவதையே ஆதாரமாக ஏற்கின்றனர். அவர்களுக்கு ஒரு பொருள் பிடித்திருந்தால், அதனை ஏற்கின்றனர், இல்லையெனில் நிராகரிக்கின்றனர்.

மக்களின் நலனிற்காக வேத சாஸ்திரங்களை பிரமாணமாகக் கொண்டு கோஸ்வாமிகள் நிறைய நூல்களை எழுதியுள்ளனர்.

கோஸ்வாமிகளைப் பின்பற்றுவோம்

இன்று இருப்பதுபோன்று மனித சமுதாயம் முன்பு தரம் தாழ்ந்திருக்கவில்லை. வேத இலக்கியங் களிலிருந்து ஆதாரங்களைக் காட்டினால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வர். இந்த இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டுவதன் நோக்கம் உண்மையான மதத்தை (ஸத்-தர்மத்தை) ஸ்தாபிப்ப தாகும். உண்மையான தர்மத்தைப் பின்பற்றுவதால் பிரேமையைப் பெறலாம். கசாப்புக் கூடங்களை நிர்மாணிக்கும் மதங்களை என்னவென்று சொல்வது? உண்மையான மதத்தைப் பற்றிய பிரச்சாரம் நடைபெறாத காரணத்தினால், மதத்தின் பெயரிலேயே ஆயிரக்கணக்கான கசாப்புக் கூடங்கள் பராமரிக்கப்படுகின்றன.

கோஸ்வாமிகள் நிறைய நூல்களை ஏன் எழுத வேண்டும்? ஏனெனில், அவர்கள் பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். ஒருவன் தர்மத்தைப் பின்பற்றாத வரை அவனது மனித வாழ்க்கை வீணாகிறது. மனிதப் பிறவி பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து விடுபடுவதற்காக இயற்கை நமக்கு வழங்கிய ஒரு வாய்ப்பாகும். பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவையே உண்மையான பிரச்சனைகள் என்பதை உணராத அயோக்கியர்கள், தற்காலிக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயல்கின்றனர். தர்மத்தின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் பிறப்பு இறப்பின் தொடர்ச்சியினை நிறுத்த இயலும். அதற்கான ஞானத்தை வழங்குவதே கோஸ்வாமியின் பணியாகும்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணைக்குப் பாத்திரமான ஆறு கோஸ்வாமிகளால் உலகின் பாரத்தைக் குறைக்கவியலும். மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன்னுதாரணமாக அவர்கள் வாழ்ந்தனர். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் நமது வாழ்வும் வெற்றி பெறும். போலி கோஸ்வாமிகளைப் புறக்கணித்து அங்கீகரிக்கப்பட்ட கோஸ்வாமிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்வில் வெற்றி பெறுவோமாக.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment