குரு என்றால் என்ன?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

குரு என்றால் என்ன?

 

நிருபர்: ஆனால் ஓர் உண்மையான குரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்வதையோ, சொகுசு ஓட்டலில் ஆடம்பரமான அறையில் தங்குவதையோ எவ்வாறு புரிந்துகொள்வது?

ஸ்ரீல பிரபுபாதர்: சில வேளைகளில் முதல் தரமான ஓட்டலில் மக்கள் எங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்; ஆனால் பொதுவாக நாங்கள் எங்கள் கோயில்களிலேயே தங்குவது வழக்கம். உலகம் முழுவதும் எங்களுக்கு சுமார் நூறு கோயில்கள் உள்ளன. எனவே, எந்த ஓட்டலுக்கும் செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

நிருபர்: நான் உங்களைக் குற்றம் சொல்ல விரும்பவில்லை. உதாரணத்திற்காகத்தான் கூறினேன். உங்களுடைய எச்சரிக்கை மதிப்பு மிக்கதாகும். ஆன்மீக வாழ்வை தேடுவதில் ஆர்வமுடையவர்கள் பலர் உள்ளனர், அதே வேளையில், குரு வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களும் பலர் உள்ளனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் ஆன்மீக வாழ்க்கை என்ன என்பதை அறியாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்?

நிருபர்: நல்ல கேள்வி, எனக்கு சரியாகத் தெரியாது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறியாதபோதிலும், நீங்கள் ‘இது அது,’    என்று கூறுகிறீர்கள். ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்த உடல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளும்போது ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது. இதுவே ஆன்மீக வாழ்வின் உண்மையான தொடக்கம். உங்களுடைய ஆத்மாவிற்கும் உடலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்து, நீங்கள் ஓர் ஆன்மீக ஆத்மா என்பதை உணரத் தொடங்குங்கள்.

நிருபர்: இந்த ஞானம் ஒவ்வொருவரின் கல்வியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களின் உடலா? அல்லது வேறு ஏதாவதா? இதுவே கல்வியின் தொடக்கம். தற்போது ஒவ்வொருவரும் தன்னை உடல் என்று நினைக்கும்படி கற்பிக்கப்படுகின்றனர். தற்செயலாக அமெரிக்கனின் உடலைப் பெற்றிருப்பதால், ஒருவன் நினைக்கின்றான், “நான் ஓர் அமெரிக்கன்.” நீங்கள் சிகப்பு நிறச் சட்டையை அணிந்திருப்பதால், அந்த சட்டையே நீங்கள் அல்ல, நீங்கள் ஒரு மனிதன். அதுபோலவே இந்த உடலானது உண்மையான நபரின் மீது இருக்கும் ஒரு சட்டை அல்லது கோர்ட்டைப் போன்றதாகும். நாம் நமது சட்டையின் மூலமாக நம்மை அடையாளப்படுத்திக் கொண்டால், நம்மிடம் ஆன்மீகக் கல்வி ஏதுமில்லை என்றுதான் பொருள்.

நிருபர்: அம்மாதிரி கல்வி பள்ளிகளில் தொடங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலியவற்றில் கற்றுத் தரப்பட வேண்டும். இவ்வகையான பாடத்திற்கு அளவு கடந்த நூல்கள் உள்ளன. சமுதாயத் தலைவர்கள் இந்த இயக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவையாகும்.

நிருபர்: இதற்கு முன்பு போலி குருவின் தொடர்பிலிருந்தவர் யாரேனும் உங்களிடம் வந்த அனுபவம் உண்டா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், பல பேர் வந்துள்ளனர்.

நிருபர்: அந்த போலி குருவினால் அவர்களின் ஆன்மீக வாழ்க்கை கெட்டுப் போனதுண்டா?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, அவர்கள் உண்மையாகவே ஆன்மீக விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தனர்; அதுவே அவர்களின் தகுதி. கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக்கிறார்; உண்மையாகவே யாராவது அவரைத் தேடினால், அந்த நபருக்கு பகவான் ஓர் உண்மையான ஆன்மீக குருவைக் கண்டுபிடிப்பதில் உதவுகிறார்.

நிருபர்: தங்களைப் போன்ற உண்மையான குருமார்கள் போலி குருக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அதாவது அவர்களை தங்களது தொழிலிலிருந்து வெளியேற்று வதற்கு நீங்கள் எப்போதாவது முயற்சித்ததுண்டா?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, அஃது என் நோக்கமல்ல. நான் வெறுமனே ஹரே கிருஷ்ண என்று கீர்த்தனம் செய்து இந்த இயக்கத்தினை தொடங்கினேன். நியூயார்க் நகரத்திலுள்ள டாம்ப்கின்ஸ் சதுக்கம் என்ற இடத்தில், நான் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபட்டேன். விரைவில் மக்கள் என்னிடம் வரத் தொடங்கினர். இவ்வாறாக, இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் படிப்படியாக வளர்ந்தது. பலர் ஏற்றுக் கொண்டனர், பலர் ஏற்கவில்லை, அதிர்ஷ்டம் உள்ளவர்கள் ஏற்கின்றனர்.

நிருபர்: ஏமாற்றும் குருமார்களிடம் ஏற்பட்ட அனுபவத்தினால் மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? ஒரு போலியான பல் மருத்துவரிடம் சென்று, அவர் உங்களது பல்லை உடைத்து விட்டால், நீங்கள் வேறொரு பல் மருத்துவரிடம் செல்லும் போது சந்தேகக் கண்களுடன் பார்க்க மாட்டீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், அஃது இயல்புதான். நீங்கள் ஏமாற்றப்பட்டால், நிச்சயம் சந்தேகம் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் ஒருமுறை ஏமாற்றப்பட்டு விட்டால், எப்போதுமே ஏமாற்றப்படுவீர்கள் என்று நினைக்க முடியாது. உண்மையான ஒருவரைக் கண்டுபிடித்தல் அவசியம். ஆனால் கிருஷ்ண உணர்விற்கு நீங்கள் வர வேண்டுமானால், நீங்கள் மாபெரும் அதிர்ஷ்டசாலியாக அல்லது இந்த விஞ்ஞானத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும். இதுபோன்ற உண்மையைத் தேடுபவர்கள் மிகவும் குறைவு என்பதை நாங்கள் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம், மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே, இலட்சக்கணக்கான மக்களில் யாராவது ஒருவர்தான் ஆன்மீக வாழ்வில் ஆர்வத்துடன் இருப்பார். பொதுவாக மக்கள் உண்பது, உறங்குவது, உடலுறவில் ஈடுபடுவது, தற்காப்பில் ஈடுபடுவது ஆகியவற்றில்தான் ஆர்வமுடையவர்களாக உள்ளனர். எனவே, எங்களால் எவ்வாறு அதிக சீடர்களை எதிர்பார்க்க முடியும்? மக்கள் தங்களின் ஆன்மீக ஆர்வத்தை இழந்து விட்டார்கள் என்பதைக் காண்பது கடினமானதல்ல. மேலும், உண்மையான ஆர்வத்துடன் இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஆன்மீகவாதிகள் எனப்படும் போலி நபர்களால் ஏமாற்றப்படுகின்றனர். ஓர் இயக்கத்தினை அதைக் கடைபிடிக்கும் நபர்களின் எண்ணிக்கையை வைத்து எடைபோட முடியாது. ஒரே ஒரு நபர் உண்மையானவராக இருந்தால்கூட, அந்த இயக்கம் வெற்றியடைகிறது. இஃது எண்ணிக்கையைப் பொறுத்த விஷயம் அல்ல, தரத்தைப் பொறுத்தது.

நிருபர்: எவ்வளவு பேர் இந்த போலி குருமார்களால் ஏமாற்றப்பட்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: ஏறக்குறைய அனைவருமே (சிரிப்பு). இலட்சக்கணக்கான மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்; ஏனெனில், அவர்கள் ஏமாற்றப்பட விரும்பினர். கடவுள் எல்லாம் அறிந்தவர், அவரால் உங்களது விருப்பத்தை அறிய முடியும். அவர் உங்களது இதயத்தினுள்ளே இருக்கின்றார்; நீங்கள் ஏமாற்றப்பட விரும்பினால், கடவுள் ஓர் ஏமாற்றுக்காரனை அனுப்பி வைப்பார்.

நிருபர்: மக்கள் தங்களது உலகாயத விஷயங்களில் ஈடுபட்ட வண்ணம் ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரிப்பதால், அல்லது ஒரு பூவைக் கையில் ஏந்துவதால் ஆன்மீக வாழ்வை அடையலாம் என்று நினைக்கின்றனர். இதுதான் மக்கள் ஏமாற்றப்பட விரும்புகின்றனர் என்று நீங்கள் கூறவது அர்த்தமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். இது “நான் எனது நோயிலேயே இருப்பேன், அதே வேளையில் நான் குணமடைவேன்,” என்று ஒரு நோயாளி கூறுவதைப் போன்றதாகும். அவர்களின் எண்ணம் முரண்பட்டதாகும். ஆன்மீக வாழ்வை அறிந்துகொள்வதற்கு மக்களுக்கு முதலில் பயிற்சியளிக்கப்பட வேண்டும். ஆன்மீக வாழ்க்கை என்பது சில நிமிடங்கள் பேசுவதால் புரிந்துகொள்ளப்படும் விஷயம் அல்ல, இதற்கு பல தத்துவபூர்வமான வேத சாஸ்திரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மக்களுக்கு ஆர்வம் இல்லை, இதுவே பிரச்சனை. உதாரணமாக, ஸ்ரீமத் பாகவதம் என்பது மிகப்பெரிய நூல்; நீங்கள் இதைப் படிக்க முயற்சித்தால் அதன் ஒரு வரியைப் புரிந்துகொள்ள உங்களுக்கு பல நாள்கள் ஆகலாம். ஸ்ரீமத் பாகவதம் கடவுளைப் பற்றிய பூரண உண்மையை விளக்குகிறது. ஆனால் மக்கள் இம்மாதிரி இலக்கியங்களில் ஆர்வமாக இல்லை. யாராவது ஒருவர் ஆன்மீக வாழ்வில் ஆர்வமுடையவராக இருந்தால்கூட, அவர் உடனடி பலன்களையும் மலிவான விஷயங்களையும் விரும்புகிறார். எனவே, அவர் ஏமாற்றப்படுகிறார்.

உண்மையில் மனித வாழ்க்கை என்பது தவத்திற்காகவும் விரதங்களுக்காகவும் உள்ளதாகும். அதுவே வேதப் பண்பாடாகும். வேதப் பண்பாட்டில் இளைஞர்களுக்கு பிரம்மசாரிகளாக இருப்பதற்கு பயிற்சியளிக்கப்படுகிறது, இருபத்தைந்து வயது வரை காம வாழ்க்கைக்கு அனுமதி கிடையாது. அந்த மாதிரியான கல்வி தற்போது எங்குள்ளது? பிரம்மசாரி என்பவன் முழு பிரம்மசரியத்தைக் கடைபிடித்து வாழும் ஒரு மாணவன். அவன் குருகுலத்தில் குருவின் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பான். தற்போது பள்ளிகளும் கல்லூரிகளும் துவக்கத்தில் இருந்தே காமத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் இளைஞர்களும் யுவதிகளும் காமத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களால் எவ்வாறு ஆன்மீக வாழ்க்கையைப் பெற முடியும்? ஆன்மீக வாழ்க்கை என்பது கடவுளை உணர்வதற்காக தாமாகவே முன்வந்து சில கட்டுப்பாடுகளை ஏற்பதாகும். அதனால்தான், நாங்கள் தகாத உடலுறவு கூடாது, மாமிசம் கூடாது, சூதாடுதல் கூடாது, போதை வஸ்துக்கள் கூடாது என்று வலியுறுத்துகிறோம். இம்மாதிரியான கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு யோக தியானம், அல்லது ஆன்மீக ஒழுக்கங்களும் உண்மையானதாக இருக்க முடியாது. அஃது ஏமாற்றுபவருக்கும் ஏமாற்றப்படுபவருக்கும் இடையிலான வெறும் ஒப்பந்தமாகவே இருக்கும்.

நிருபர்: மிக்க நன்றி!

ஸ்ரீல பிரபுபாதர்:  ஹரே கிருஷ்ண!

 

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives