யாருக்கு பக்தி செய்ய வேண்டும்?

வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்

நம்மில் பலருக்கு பக்தி செய்வது என்பது தெரிந்த விஷயமே. இருப்பினும், மக்கள் பொதுவாக கோயில்களுக்குச் சென்று, சாமி தரிசனம் செய்து, தனக்கு வேண்டியவற்றை கேட்டுப் பெறுவதே பக்தி என்று நினைக்கிறார்கள். ஆனால், அஃது உண்மையான பக்தி அல்ல. உண்மையான பக்தி என்பது எந்தவொரு சுய நல ஆசையும் இன்றி, கடவுளை திருப்தி செய்வதற்காக மட்டுமே அவருக்குத் தொண்டு செய்வதாகும். இருப்பினும், கடவுள் என்பவர் யார் என்பதை நாம் அறியாவிடில், யார் யாருக்கோ தொண்டு செய்துவிட்டு அதனை பக்தி என்று நினைத்துக் கொள்வோம். வேத சாஸ்திரங்களில் பல்வேறு கடவுள்கள் அல்லது தேவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவே முழுமுதற் கடவுள் அல்லது ஆதிதேவர் என்று அறியப்படுகிறார் (பகவத் கீதை 10.12).

தேவர்களை வழிபடுவது இறுதி நிலை அல்ல

முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவதே உண்மையான பக்தி என்பது பகவத் கீதை உட்பட பல்வேறு வேத சாஸ்திரங்களில் நிலைநாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த உயர்நிலையை அடைய இயலாத பலரும் பல்வேறு தேவர்களை வழிபட்டு வருகின்றனர். அத்தகு வழிபாடு, மக்களை தெய்வ நம்பிக்கையுடன் வைத்திருப்பதுடன் நாத்திக நிலைக்கு இழிந்துவிடாமல் பாதுகாக்கின்றது. இருப்பினும், அவை வாழ்வின் இறுதி நோக்கம் ஆகாது.

அந்தவத் து பலம் தேஷாம் தத் பவத்-யல்ப மேதஸாம்

தேவான் தேவ-யஜோ யாந்தி மத்-பக்தா யாந்தி மாம் அபி

பகவத் கீதையின் (7.23) மேற்கண்ட ஸ்லோகத்தில், தேவர்களை வழிபடும் சிற்றறிவு படைத்த மக்கள் பெறும் பலன்கள் தற்காலிகமானவை என்பதும் ஓர் எல்லைக்கு உட்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவர்களை வழிபடுவோர் அவர்கள் வழிபடும் குறிப்பிட்ட தேவரின் உலகத்திற்குச் செல்வர் என்பதும் கிருஷ்ண பக்தர்கள் அவரது உன்னத உலகை அடைவர் என்பதும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

தேவர்களை வழிபடுவது இறுதி நிலை அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம். அவ்வாறு வழிபடுபவர்கள் சிற்றறிவு படைத்தவர்கள் என்றல்லவா கூறப்பட்டுள்ளது!

நன்மையை வழங்குபவர் கிருஷ்ணரே

தேவர்களை வழிபடுவோர் சிற்றறிவு படைத்தவர்கள் என்றபோதிலும், அவர்களால் வேண்டப்படும் தேவைகளை பூர்த்தி செய்பவர் கிருஷ்ணரே. பகவான் கிருஷ்ணர் எல்லோரது இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கின்றார் (பகவத் கீதை 15.15). பொதுவாக மக்கள் கோயிலுக்குச் சென்று தனக்கு வேண்டியவற்றை கேட்டுப் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். தேர்வில் தேர்ச்சி, நல்ல வேலை, நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, நிலம், வங்கியில் சேமிப்பு என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். தனது காரியம் நிறைவேறினால், அதில் அந்த கடவுளுக்கு ஒரு பங்கைக் கொடுப்பதாக வேண்டிக் கொள்வர். ஆனால் உண்மை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபட ஒருவர் நினைக்கும்போது அந்த தேவரிடம் பக்தி செய்வதற்கான நம்பிக்கையை கிருஷ்ணரே பலப்படுத்துகிறார், அந்த நன்மைகளும் கிருஷ்ணராலேயே வழங்கப்படுகின்றன. (பகவத் கீதை 7.21–22)

தேவ வழிபாட்டின் குறைகள்

இருப்பினும், தேவர்களை வழிபடுதல் மறைமுகமான வழிபாடு என்பதால் கிருஷ்ணர் அதனை கீதையில் கண்டிக்கின்றார். தேவர்களை வழிபடுவோர் தேவர்களை அடைவர், ஆனால் தேவர்களின் உலகம் நிரந்தரமானது அல்ல. மாறாக, பகவான் கிருஷ்ணரை வழிபடுபவர்கள் அவருடைய நித்திய உலகமான கோலோக விருந்தாவனத்தை அடைந்து அங்கேயே வாழ்வர். தேவர்களை வழிபடுவோர் தங்களுடைய புண்ணியங்களின் பலன்கள் தீர்ந்த பின்னர், மீண்டும் இந்த பூமிக்கு வந்து (பகவத் கீதை 8.16), பிறப்பு இறப்பின் சுழற்சியில் சிக்கிக் கொள்வர். எனவே, பக்தி என்பது முழுமுதற் கடவுளான விஷ்ணுவிற்கு (அல்லது கிருஷ்ணருக்கு) செய்யப்பட வேண்டும்.

கிருஷ்ணரே முழுமுதற் கடவுள்

கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவிற்கு பக்தி செய்வதே சிறந்தது என்று சாஸ்திரங்கள் கூறும்போது, சிலர் அதில் சந்தேகம் கொள்ளலாம். அத்தகு சந்தேகங்கள் அர்த்தமற்றவை. அழகு, அறிவு, செல்வம், வீரம், புகழ், துறவு ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களையும் பூரணமாகப் பெற்றவர் யாரோ, அவரே பரம புருஷ பகவான் என்று பராசரர் குறிப்பிட்டுள்ளார். பகவான் கிருஷ்ணரிடம் இந்த ஆறுவித ஐஸ்வர்யங்கள் முழுமையாக உள்ளதை யாவரும் அறிவர்.

 

மேலும், கீதையில் பகவான் கிருஷ்ணர் ஸ்வயம் தாமே முன்வந்து இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ    மத்த: ஸர்வம் ப்ரவர்ததே

இதி மத்வா பஜந்தே மாம்  புதா பாவ ஸமன்விதா:

 

“ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.” (பகவத் கீதை 10.8)

 

கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை அவரே தம் திருவாயால் கூறியது மட்டுமின்றி, இக்கருத்து அர்ஜுனனாலும், நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த முனிவர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரம்மதேவரும் தன்னுடைய பிரார்த்தனையில், கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்று குறிப்பிடுகின்றார் (பிரம்ம ஸம்ஹிதை 5.1). அவரே எல்லா காரணங்களுக்கும் காரணமாக அறியப்படுகிறார்.

எல்லா வழிபாட்டு வழிமுறைகளிலும் கிருஷ்ணரே வழிபடுவதே சிறந்தது.

கிருஷ்ணருக்கு பக்தி செய்வோம்

மேலும், ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம், “வழிபாட்டு முறைகளில் சிறந்தது விஷ்ணுவை வழிபடுவதே,” என்று சிவபெருமானும் பத்ம புராணத்தில் கூறியுள்ளார். எனவே, பக்தி என்பது முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு மட்டுமே செய்யப்பட முடியும், அதுவே உண்மையான பக்தி.

கிருஷ்ண பக்தனின் செயல்கள் அனைத்தும் அவரை திருப்திபடுத்துவதற்காகவே இருக்கும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை ஜபம் செய்தல், கீர்த்தனம் செய்தல், கிருஷ்ணரைப் பற்றிய புத்தகங்களைப் (பகவத் கீதை, பாகவதம் போன்றவற்றைப்) படித்தல், கிருஷ்ணரைப் பற்றிய உபன்யாஸங்களை பக்தர்களிடமிருந்து கேட்டல், கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவை பிரசாதமாக ஏற்றல், கிருஷ்ணரின் கோயிலை தனது கரங்களைக் கொண்டு சுத்தம் செய்தல், அவருக்கு உபயோகிக்கப்படும் பாத்திரங்களை சுத்தம் செய்தல் என கிருஷ்ண பக்தன் சதா ஸர்வ காலமும் கிருஷ்ணருக்கான செயல்களில் ஈடுபடுவான். தனது செயலை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்காமல் ஒரு நொடிப் பொழுதையும் அவன் கழிப்பதில்லை. இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதையும் கிருஷ்ண உணர்வில் கழிப்பவன், இறுதியில் கிருஷ்ணரின் நித்திய உலகினை அடைகிறான்.

கிருஷ்ணருக்கு பக்தி செய்வோம்! அவரது ஆன்மீக உலகிற்கு ஏற்றம் பெறுவோம்!

திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், வேலூரில் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

About the Author:

mm
திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment