அர்ஜுனன் திருநங்கையானது ஏன்?

பாண்டவர்கள் தங்களது வனவாசத்தின் ஒருபகுதியாக அஜ்ஞாத வாசம் எனப்படும் மறைவு வாழ்வையும் மேற்கொண்டனர். அச்சமயத்தில் அர்ஜுனன் ஒரு திருநங்கையின் உருவில், விராடரின் மாளிகையில் உத்தரைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்தார் என்பது தெரிந்த கதை. அஃது ஏன், எவ்வாறு என்பது தெரியாத துணுக்கு.

பல்வேறு சிறப்பான அஸ்திரங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் அதற்காக தேவலோகம் சென்று தனது தந்தை இந்திரனுடன் வசித்து வந்த காலம். ஒருநாள் இந்திரனின் சபையில் தேவலோக மங்கையான ஊர்வசி நாட்டியம் புரிய, அர்ஜுனன் அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அதனை இந்திரனும் கவனித்தார். அர்ஜுனன் ஊர்வசியை விரும்புகிறான் என்று தவறாக நினைத்த இந்திரன், அர்ஜுனனுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த சித்திரசேனனை அழைத்து, அர்ஜுனனுக்காக ஊர்வசியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இந்திரனின் கட்டளையை அறிந்த ஊர்வசி மிக்க மகிழ்ச்சியுடன் தன்னை அற்புதமாக அலங்கரித்துக் கொண்டு, அர்ஜுனனை அவனது அறையில் தனிமையான இரவு நேரத்தில் அணுகினாள். அந்நேரத்தில் ஊர்வசியைக் கண்டதால் திகைப்புற்றபோதிலும், அர்ஜுனன் அவளை வரவேற்று உபசரித்து விசாரித்தான், அப்ஸராக்களில் சிறந்தவளே, உமது கட்டளை என்ன?”

அர்ஜுனன் தன்னை உற்று நோக்கிய சம்பவத்தினை எடுத்துரைத்து, அன்றிலிருந்து காம தேவன் தன்னைக் கட்டுப்படுத்தி வருவதாகவும், தற்போது இரவினை அனுபவிக்க இந்திரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்வசி மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

ஆனால் அர்ஜுனனோ, உடனடியாக காதுகளை மூடிக் கொண்டு பதிலளித்தான், தயவுசெய்து இவ்வாறு கூற வேண்டாம். நீங்கள் எனது முன்னோருடைய மனைவி என்பதால், குந்தி, ஸச்சி (இந்திரனின் மனைவி) முதலியோரைப் போல எனது தாய் ஸ்தானத்தில் இருப்பவள். நீங்கள் என்னை ஒரு மகனாக மட்டுமே பாவிக்க வேண்டும், வேறு விதத்தில் அணுகக் கூடாது.” மேலும், ஊர்வசிக்கும் மன்னர் பூருரவருக்கும் பிறந்த மகனின் வம்சத்தைச் சார்ந்தவன் தான் என்பதையும் எடுத்துரைத்தான்.

இந்திர லோகத்தில் பூலோகத்தில் இருக்கும் விதிமுறைகள் எல்லாம் கிடையாது என்று ஊர்வசி வலியுறுத்தியபோதிலும், அர்ஜுனன் மசியவில்லை. சபையில் ஊர்வசியை தான் ஒரு தாயாகவே பார்த்து அதிசயித்ததாக அவன் எடுத்துரைத்தான்.

அர்ஜுனனால் நிராகரிக்கப்பட்டதால் எழுந்த அவமானமும் பூர்த்தி செய்யப்படாத காமமும் இணைய, ஊர்வசி கடும் சினம் கொண்டு அர்ஜுனனை சபித்தாள், ஆசையுடன் வந்த பெண்ணை ஏமாற்றி விட்டாய். நீ இனிமேல் ஒரு திருநங்கையாகவே வாழ்வாய்.”

ஊர்வசியின் சாபத்தை யோசித்துப் பார்த்த அர்ஜுனன், இந்திரனுடன் ஆலோசனை செய்தான். இந்திரனுடைய ஏற்பாட்டின்படி, அர்ஜுனன் ஒரு வருடத்திற்கு மட்டும் திருநங்கையாக வாழ்ந்தால் போதும் என்றும், அஃது எப்போது என்பதை அர்ஜுனனே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் சாபம் மாற்றியமைக்கப்பட்டது.

காலப்போக்கில், அந்த சாபம் அர்ஜுனனுக்கு வரமாக அமைந்தது. விராட தேசத்தில் யாருக்கும் தெரியாமல் வாழ்வதற்கு பாண்டவர்கள் முடிவு செய்தபோது, அர்ஜுனன் அக்காலத்தினை தனது சாபத்தைக் கழிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டான். பிருஹன்நலை என்ற பெயரில் ஒரு திருநங்கையாக இளவரசிக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்கும் பணியினை அர்ஜுனன் ஒரு வருட காலம் புரிந்தான். பிருஹன்நலை உண்மையிலேயே ஒரு திருநங்கைதானா என்பதில் சந்தேகமுற்ற விராட மன்னர் அதனைச் சோதித்தும் பார்த்தார். ஊர்வசியின் சாபத்தினால் அர்ஜுனன் உண்மையான திருநங்கையாகவே அத்தருணத்தில் வாழ்ந்தான்.

மாபெரும் முனிவர்களையும் தபஸ்விகளையும் வீழ்த்தக்கூடிய ஊர்வசியின் மயக்கத்தை அர்ஜுனன் வெற்றி கொண்டான், எந்தத் தருணத்திலும் தர்மத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் இருந்தான். அதுவே அவனது சாபம் வரமாக மாறியதற்கு காரணமாயிற்று.

 

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment