வழங்கியவர்கள்: ஸத்ய நாராயண தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கிருஷ்ண பக்தர்கள் அசைவம் உண்பதில்லை-சரி, புரிகிறது. கிருஷ்ண பக்தர்கள் உணவகங்களில் உண்பதில்லை-அப்படியா, நல்லதுதான். கிருஷ்ண பக்தர்கள் உறவினர்கள் வீடு உட்பட வெளியில் எங்குமே உண்பதில்லை, எங்குச் சென்றாலும் கிருஷ்ண பிரசாதத்தை மட்டுமே உண்கின்றனர்- ஏன் இந்த கடுமை? இதெல்லாம் தேவையா? சைவ உணவு எங்கு கிடைத்தாலும் உண்ணலாமே! இவ்வளவு கடுமையாக இருந்தால் வெளியே செல்லும்போது சிரமமாக இருக்குமே!

இந்த உரையாடல் கிருஷ்ண பக்தர்களின் வாழ்வில் சகஜமாக நிகழும் ஒன்று. ஆம். கிருஷ்ண உணர்வில் உண்மையாக இருப்பவர்கள் கிருஷ்ண பிரசாதம் தவிர வேறு எதையும் பொதுவாக உண்பதில்லை. இதற்கான காரணம் என்ன? வெளியில் தயாரிக்கப்பட்ட உணவினை உட்கொள்வதால் விளையும் தீமைகள் யாவை? விரிவாகக் காணலாம்.

ஐந்து காரணங்கள்

கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ண பிரசாதம் மட்டும் உண்பதற்கான காரணங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்: (1) பாவகரமான உணவைத் தவிர்த்தல், (2) தூய்மையான உணவை ஏற்றல், (3) மனம் களங்கமடையாமல் பாதுகாத்தல், (4) கிருஷ்ண பிரசாதத்தின் சுவை, (5) கிருஷ்ணரின் மீதான அன்பு. பக்தியின் வெவ்வேறு நிலையிலுள்ள பக்தர்கள் வெவ்வேறு காரணங்களினால் கிருஷ்ண பிரசாதத்தை மட்டும் உண்கின்றனர். ஆரம்ப நிலையிலுள்ளோர் பாவத்தைத் தவிர்ப்பதற்காகவும் உயர்ந்த நிலையிலுள்ளோர் கிருஷ்ணரின் மீதான தூய அன்பினாலும் கிருஷ்ண பிரசாதத்தை உண்கின்றனர். எனவே, ஒரு பக்தன் எந்த நிலையில் இருந்தாலும், அவன் கிருஷ்ண பிரசாதத்தை மட்டுமே உண்கிறான்.

பாவகரமான உணவைத் தவிர்த்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படாத உணவு பாவப்பட்ட உணவு எனப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள், நான் சைவ உணவு மட்டுமே உட்கொள்கின்றேன். அதனால் பாவத்தில் சிக்கிக்கொள்ள மாட்டேன்,” என்று நினைக்கின்றனர். ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்பதால், அவற்றை உண்பதாலும் பாவத்தைப் பெறுவோம். தாவரங்களை உண்பதால் விளையும் பாவம் விலங்குகளை உண்பதைக் காட்டிலும் குறைவு என்றபோதிலும், அந்த தாவர உணவும் பாவமாகவே கருதப்படுகிறது. அந்த தாவர உணவு எப்போது கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பிரசாதமாக மாறுகிறதோ, அப்போதே அஃது உண்பதற்கு உகந்த உணவாக மாறுகிறது.

ஜடவுலகிலுள்ள நபர்கள் தங்களுடைய நாவின் ருசிக்காக சமைத்து சாப்பிடுகின்றனர். அவர்கள் திருடர்கள் மட்டுமல்லாமல் பாவத்தை உண்பவர்களாகவும் இருக்கின்றனர். பாவிகளாகவும் திருடர்களாகவும் இருப்பவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. தங்களது சுய புலனின்பத்திற்காக உணவு தயாரித்து உண்பவர்கள் பாவத்தையே உண்கின்றனர் என்று பகவான் கீதையில் (3.13) கூறுகிறார்.

கிருஷ்ண பக்தியின் மிகமிக ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், அசைவம், வெங்காயம், பூண்டு முதலியவை இல்லாத உணவுப் பொருட்களை கடைகளில் வாங்கி சாப்பிடலாம் என்று கருதுகின்றனர். ஆனால், வெங்காயம், பூண்டு முதலியவற்றை நீக்கினால், அது சைவ உணவு மட்டுமே அன்றி, பிரசாதமாக மாறி விடாது. அந்த உணவை உண்பதால், நாம் பாவத்திற்கு உட்படுவது மட்டுமன்றி, நம்முடைய கிருஷ்ண பக்தியைத் தொடர்வதற்கும் அது பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.

எனவே, பாவகரமான உணவைத் தவிர்க்க விரும்பும் பக்தர்கள் வெளியுலக உணவினைத் தவிர்த்து கிருஷ்ண பிரசாதத்தை மட்டும் ஏற்கின்றனர்.

தாவர உணவு வகை  மற்றும் அசைவ உணவு வகை எதை உண்டாலுமே பாவம்தான்.

தூய்மையான உணவை ஏற்றல்

வெளியுலக உணவு வகைகள் உள்ளும் புறமும் அசுத்தமானவை. பெரும்பாலான உணவகங்களில் உணவு தயாரிக்கப்படும் இடத்தைப் பார்த்தாலே, அந்த உணவு உண்ணத்தக்கதல்ல என்பதை உணர்ந்து விடலாம். வெளியே உள்ள பெட்டியிலிருந்து லட்டை எடுக்கும்போது, பாலிதீன் உறையை கையிலிட்டு எடுப்பர். ஆனால் அந்த லட்டு பிடிக்கப்படும் இடத்திற்குச் சென்றால், சில நேரங்களில் வாந்தியே வந்து விடும்.

அவ்வளவு மோசமாக இல்லாமல், சிலர் தூய்மையான முறையில் சமைப்பவர்களாகத் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவெனில், தூய்மை என்றால் என்னவென்றே இன்றைய மக்களில் பலருக்குத் தெரியாது. சிறுநீர் கழித்த பின் கை, கால், வாயைக் கழுவ வேண்டும் என்பதைக்கூட அறியாதவர்கள் பலர் உள்ளனர். மலம் கழித்தால் குளிக்க வேண்டும் என்பதைச் சொன்னால், நம்மை ஏற இறங்கப் பார்ப்பார்கள். எச்சில்பட்ட உணவின் தன்மைகளை எடுத்துரைத்தால், அவர்களுக்கு ஆச்சரியம் தலையைச் சுற்றிவிடும். சாப்பிட்ட கையிலேயே பரிமாறுவர், மற்றவர் சாப்பிட்ட இடத்தைத் துடைக்காமல் அதே இடத்தில் அமர்ந்து உண்பர், கையை நீரால் கழுவி சுத்தம் செய்வதற்கு பதிலாக தன்னை புத்திசாலி என்று எண்ணி எச்சிலால் கையை நக்கிக்கொள்வர்ஶீஇவையெல்லாம் இன்றைய ஊரில் நாம் காணும் சகஜமான நிலை.

சிலர் ஆச்சார அனுஷ்டானங்களோடு வெளிப்புறத்தில் வேண்டுமானால் தூய்மையான உணவினைச் சமைக்கலாம். ஆனால் கிருஷ்ண பிரசாதம் மட்டுமே உள்ளும் புறமும் தூய்மையானது.

கிருஷ்ண பிரசாதம் சமைப்பவர்கள் அதற்குரிய முறையான பயிற்சியினைப் பெற்று, தூய்மையான முறையில் சமைக்கின்றனர். எனவே, எப்படிப் பார்த்தாலும், வெளியுலக உணவு உண்பதற்கு உரியதல்ல.

மனதை களங்கமடையாமல் பாதுகாத்தல்

கிருஷ்ண பக்தியில் சற்று முன்னேறிய பக்தர்கள் தங்களது மனதை களங்கமடையாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்காத எந்த உணவையும் ஏற்பதில்லை; ஏனெனில், பக்தர்கள் அல்லாத நபர்களால் சமைக்கப்பட்ட உணவானது நிச்சயம் களங்கமுடையதாக இருக்கும். மண் மீதும், பெண் மீதும், பொன் மீதும் ஆசை கொண்டுள்ள அபக்தர்கள் எப்போதும் பௌதிக எண்ணத்துடனே இருப்பதால், அவர்களால் சமைக்கப்படும் உணவில் அவர்களுடைய உணர்வு நிச்சயம் வெளிப்படும்.

இது தொடர்பாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்துகிறார், விஷயீர அன்ன காஇலே துஷ்ட ஹய மன, பௌதிகவாதிகளிடமிருந்து உணவைப் பெற்றால், மனம் களங்கமடையும்.” (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 12.50) பௌதிகவாதிகளிடமிருந்து பணம் அல்லது உணவினை ஏற்பது மிகவும் அபாயகரமானது என்றும், அவ்வாறு ஏற்பவரின் மனதினை அது களங்கமடையச் செய்யும் என்றும் மஹாபிரபு இங்கே எச்சரிக்கின்றார். விஷயீ (பௌதிகவாதிகள்) மக்களின் மனமானது எப்போதும் பாலுறவு, போதைப் பொருட்கள், சூதாட்டம், மாமிசம் என பாவச் செயல்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். இவர்கள் சமைத்த உணவினை உட்கொள்ளும்போது, மனம் களங்கமடைவது திண்ணம். மஹாபிரபுவின் அடிச்சுவட்டினைப் பின்பற்றக்கூடிய கிருஷ்ண பக்தர்கள் இத்தகு உணவினை முற்றிலுமாகத் தவிர்ப்பர்.

மஹாபிரபு மேலும் கூறுகிறார்:

மன துஷ்ட ஹஇலே நஹே க்ரிஷ்ணேர ஸ்மரண

க்ரிஷ்ண-ஸ்ம்ரிதி வினு ஹய நிஷ்பல ஜீவன

ஒருவனது மனம் களங்கமடையும்போது, கிருஷ்ணரை நினைப்பது மிகவும் கடினமாகிவிடும். பகவான் கிருஷ்ணரின் ஸ்மரணம் தடுக்கப்படும்போது, அவனது வாழ்க்கை பலனற்றதாகிவிடும்.” ( சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 12.51) அதாவது, கிருஷ்ண பக்தியில் தீவிரமாக இருப்பவர்கள் பௌதிகவாதிகளின் உணவினைத் தவிர்ப்பதில் கவனமாக இல்லாவிடில், அவர்களின் மனம் களங்கமடைந்து படிப்படியாக அவர்களது வாழ்வின் நோக்கத்தை இழந்துவிடுவர்.

இவ்வுலகிலுள்ள எல்லா உணவும் ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணத்திற்கு உட்பட்டவை. ஆனால் பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதமோ, இம்மூன்று குணங்களுக்கு அப்பால் சுத்த-ஸத்வத்தில் இருக்கிறது. எனவே, பிரசாதத்தை ஏற்கக்கூடிய பக்தர்களின் மனமானது மூன்று வகையான குணங்களினால் களங்கமடையாமல் உள்ளது.

கிருஷ்ண பிரசாதத்தின் உயர்ந்த சுவை

மேற்கூறிய நிலைகளைத் தாண்டி மேலும் உயர்வு பெற்ற பக்தர்கள், கிருஷ்ண பிரசாதத்தின் உண்மையான சுவையினை உணர்ந்து, வேறு எந்தச் சுவையிலும் நாட்டமின்றி வாழ்கின்றனர். நாவின் சுவைக்காக ஏங்குவோரால் கிருஷ்ணரின் மீதான சுவையைப் பெற முடியாது. இதனை உணர்ந்தவர்கள் நாவிற்காக அங்குமிங்கும் அலைவதில்லை. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்துகிறார்:

ஜிஹ்வார லாலஸே ஜேஇ இதி-உதி தாய

ஷிஷ்னோதர-பராயண க்ரிஷ்ண நஹி பாய

நாவிற்கு அடிமையாகி அதனை திருப்தி செய்வதற்காக இங்குமங்கும் செல்பவன், தனது வயிறு மற்றும் பாலுறுப்பின் தொண்டில் ஈடுபட்டுள்ளான், அவனால் கிருஷ்ணரைப் பெற முடியாது.” (சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை 6.227)

நாவிற்கு அடிமையாக வாழும் நிலையிலிருந்து உயர்வு பெற்று, கிருஷ்ண பிரசாதத்திற்கு அடிமையாக வாழும் நிலையை அடைந்தவர்கள், அந்த பிரசாதத்தைத் தவிர எதையும் சீண்டக்கூட மாட்டார்கள். கிருஷ்ண பிரசாதம் பகவானின் அதரங்களினால் (உதடுகளால்) சுவைக்கப்பட்டது என்பதால், அது மிகவும் சுவையுடையதாக உள்ளது. கிருஷ்ணருடைய அதரங்களின் சுவையை அந்த கிருஷ்ண பிரசாதத்தை உண்பவர்கள் நிச்சயம் சுவைக்கின்றனர். பல நேரங்களில் எளிமையான கிருஷ்ண பிரசாதம் அருமையான சுவையுடன் இருப்பதை பக்தர்கள் உணர்ந்துள்ளனர். விலை மதிப்புடைய பொருட்களால் சமைக்கப்பட்ட வெளி உணவைக் காட்டிலும், எளிமையான கிருஷ்ண பிரசாதம் அருமையான சுவை கொண்டது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவே முடியாது, அனைவரும் அனுபவத்தில் இதனை உணரலாம்.

உலகத்திலுள்ள எல்லா உணவும் ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணத்திற்கு உட்பட்டதாக உள்ளது.

கிருஷ்ணரின் மீதான அன்பு

கிருஷ்ண பக்தியில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களுக்கு, கிருஷ்ணருக்கு வழங்காமல் உண்ணுதல் என்பது சாத்தியமல்ல. கிருஷ்ணரின் மீதான தூய அன்பின் காரணத்தினால், அவர்கள் எல்லா உணவையும் கிருஷ்ணருக்காகவே சமைப்பர், கிருஷ்ணருக்காக அன்புடன் வழங்குவர், கிருஷ்ணர் உண்ட பின்னர் அவரது மீதியை மட்டுமே உண்பர். இந்த நிலை மிகவுயர்ந்த நிலையாகும். ஒரு நல்ல வேலைக்காரன் தனது எஜமானர் உண்ணாமல் உண்ண மாட்டான், ஒரு நல்ல நண்பன் தனது நண்பனுக்குக் கொடுக்காமல் எதையும் உண்ண மாட்டான், ஒரு நல்ல தாய் தனது மகனுக்கு ஊட்டாமல் உண்ண மாட்டாள், ஒரு நல்ல மனைவி தனது கணவனுக்கு வழங்காமல் எதையும் உண்ண மாட்டாள்; அதுபோலவே, கிருஷ்ணரிடம் சேவகனாக, நண்பனாக, தாயாக, தந்தையாக, காதலியாக உறவை வளர்த்துள்ள கிருஷ்ண பக்தனால், அவருக்கு வழங்காமல் உண்ணுதல் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

அத்தகு தூய அன்பின் நிலையை அடைந்தவர்கள் மிக அரிதானவர்கள். ஆயினும், கிருஷ்ண பக்தர்கள் ஒவ்வொருவரும் அத்தகு உயர்ந்த அன்பினை இலக்காகக் கொண்டுள்ளனர். எனவே, அந்த இலக்கின் பயிற்சியாக அனைத்தையும் கிருஷ்ணருக்கு வழங்கி விட்டு அதன் பிறகே பக்தர்கள் உண்கின்றனர். இத்தகு பாக்கியத்திற்கு ஈடுஇணை கிடையாது.

 

கிருஷ்ண பிரசாதம் உண்போம்

இவ்வளவு சிறப்பம்சம் கொண்டுள்ள கிருஷ்ண பிரசாதத்தினை விடுத்து ஏன் மற்ற உணவினை உண்ண வேண்டும்? இவையே கிருஷ்ண பக்தர்கள் வெளியில் கிடைக்கும் உணவினை முற்றிலும் தவிர்ப்பதற்கான காரணங்களாகும்.

கிருஷ்ண பிரசாதத்தை மட்டுமே உண்ணுதல் என்பதை சிலர் சிரமமானதாக நினைக்கலாம். சிரமம் என்று நினைத்தால், நிச்சயம் சிரமமே. தேவை என்று நினைத்தால், கிருஷ்ணர் நிச்சயம் அதற்கு உதவுவார். மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பது பழமொழி. அது கிருஷ்ண பிரசாதத்திற்கும் பொருந்தும். பிரசாதம் மட்டுமே உண்ண விரும்புபவர்களுக்கு, கிருஷ்ணர் எப்படியேனும் பிரசாதத்தை வழங்குவார். இதை அனுபவத்தில் உணரலாம். ஸ்ரீல பிரபுபாதரின் கருணையினால் இன்று கிருஷ்ண பக்தர்கள் உலகெங்கிலும் உள்ளனர். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கே கிருஷ்ணர் தமது பக்தனுக்கு எப்படியாவது தமது பிரசாதத்தினை வழங்குவார், நாம் அதில் உறுதியுடன் இருந்தால்.

கிருஷ்ணர் உலகிற்கே படியளப்பவர்; அவரது பிரசாதத்தை மட்டுமே உண்ண நினைப்பவனுக்கு உணவளிக்க மாட்டாரா!!! கிருஷ்ண பிரசாதத்தினைச் சுவைப்போம்! கிருஷ்ண உணர்வில் திளைப்போம்!

கிருஷ்ண பக்தர்கள் எப்போதுமே உணவினை பகவானுக்கு அர்ப்பணம் செய்த பின்னரே உண்பர்.