நாரதர் எங்கும் பயணம் செய்வது ஏன்?

தெரிந்த கதை தெரியாத துணுக்கு

மாபெரும் பக்தரான நாரதர் பூலோகம், ஸ்வர்க லோகம், வைகுண்டம் என எல்லா இடங்களுக்கும் செல்வதால், திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்படுகிறார். இது தெரிந்த கதை. அவர் ஓரிடத்தில் தங்காமல் ஆங்காங்கே அவ்வாறு பயணம் செய்வதற்கு காரணம் என்ன என்பதே தெரியாத துணுக்கு.

பிரஜாபதி தக்ஷன் தனது மனைவி பாஞ்சஜனியின் மூலமாக பத்தாயிரம் மகன்களைப் பெற்றெடுத்தார். அம்மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதிகமான மக்களைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அவர்களிடம் தக்ஷன் கட்டளையிட்டார். அதன்படி, ஹர்யஸ்வர்கள் மேற்கில் சிந்து நதி கடலில் கலக்கும் இடத்திற்குச் சென்று தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டனர். அவர்களுடைய சீரான தவத்தினையும் சிறப்புகளையும் கண்ட நாரதர், இவர்கள் தங்களது உயரிய தவ வலிமையினை சாதாரண பௌதிகப் படைப்பிற்காக செலவழிக்கின்றனரே,” என்று மனம் வருந்தி, அவர்களை பௌதிக மனப்பான்மையிலிருந்து முற்றிலுமாக விடுவித்து விட முடிவு செய்தார். அதன்படி, அம்மக்களை அணுகிய நாரதர் அவர்களிடம் வாழ்வின் மிகவுயர்ந்த நோக்கத்தை எடுத்துரைத்து சாதாரண கர்மிகளைப் போன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அவரது அறிவுரையை ஏற்ற அவர்கள் துறவற பாதையைப் பின்பற்றினர், தக்ஷனிடம் திரும்பி வரவேயில்லை.

தனது மகன்களின் இழப்பினால் மிகவும் வருந்திய பிரஜாபதி தக்ஷன் மீண்டும் ஆயிரம் மகன்களைப் பெற்றெடுத்தார். அம்மகன்கள் ஸவலாஷ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களும் குழந்தைகளைப் பெறுவதற்காக தவங்களில் ஈடுபட்டனர். ஆனால் நாரதர் அவர்களையும் சந்தித்து துறவிகளாக மாற்றி குழந்தைகளைப் பெற்றெடுப்பதிலிருந்து தடுத்தார். தனது முயற்சிகள்  இரு முறை தோல்வியுற்றதை எண்ணி கடும் கோபமுற்ற தக்ஷன் நாரதருக்கு சாபமிட்டார், இனிமேல் உம்மால் எங்கும் நீண்ட நாள் தங்க முடியாது.”

பூரண ஆன்மீக தகுதிகளைப் பெற்றிருந்த நாரதர் தக்ஷனின் சாபத்தைப் பொறுத்துக் கொண்டார். அவர் அச்சாபத்தினை நல்வழியில் உபயோகிக்கத் தொடங் கினார். ஓரிடத்தில் தங்கி பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் பல இடங்களுக்குப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தல் சாலச் சிறந்தது என்று எண்ணிய நாரதர், அன்றிலிருந்து இன்று வரை மூவுலகத்திலுள்ள எல்லா இடங்களுக்கும் ஓயாமல் பயணம் செய்து மக்களுக்கு கிருஷ்ண பக்தியை வழங்கி பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவித்து வருகிறார்.

ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம் ஆறாவது ஸ்கந்தம், அத்தியாயம் ஐந்து

 

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment