வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த  சுவாமி பிரபுபாதர்

யதா யதா ஹி தர்மஸ்ய

க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய

ததாத்மானம் ஷ்ருஜாம்யஹம்

எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ, அப்போதெல்லாம் பரத குலத் தோன்றலே, நான் அவதரிக்கின்றேன்.” (பகவத் கீதை 4.7)

தர்மமும் மதமும்

இது பகவத் கீதையின் மிக முக்கியமான ஸ்லோகங்களில் ஒன்று. தர்ம எனும் வடமொழிச் சொல் ஆங்கிலத்தில் பொதுவாக சுநடபைடைிே (மதம்) என்று மொழிபெயர்க்கப்படுகிறது. மதம் என்பதற்கு குறிப்பிட்ட வகையான நம்பிக்கை” என்று அகராதி விளக்கமளிக்கிறது. ஆனால் தர்ம என்பது உண்மையில் அத்தகு நம்பிக்கையைக் குறிப்பதல்ல.

நீங்கள் எனது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், நான் உங்களது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் அனைவரது மதமும் சரியானதே” என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். அவ்வாறு அனைவரது மதமும் சரியாக இருக்கும்பட்சத்தில், கிருஷ்ணர் இங்கு தோன்றி அதர்மத்தை அழிக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? இதனைப் புரிந்துகொள்ள முயலுங்கள். தர்மம் என்பது ஒருவரது விருப்பத்தைச் சார்ந்தது எனில், அதர்மம் என்பதற்கே இடமிருக்காது. உதாரணமாக, மிருக வதையினை தங்களது நம்பிக்கை அல்லது மதம் அனுமதிக்கிறது என்று சிலரும், அனுமதிக்கவில்லை என்று சிலரும் கூறலாம். இதில் யார் சரி என்பதை கிருஷ்ணர்தான் தீர்மானிக்க வேண்டும்.

அதாவது, தர்மத்தை உங்களால் உருவாக்க இயலாது, இது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உருவாக்கப்படும் சட்டமல்ல. கிருஷ்ணர் அந்த வகையான தர்மத்தைப் பற்றிக் கூறவில்லை. தர்மம் து சாக்ஷாத் பகவத் ப்ரணீதம், தர்மம் என்னும் சொல்லை, பரம புருஷரால் வழங்கப்படும் கட்டளைகள்” என்று பாகவதம் கூறுகின்றது.

நாட்டில் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படுகிறது, அவற்றை வீட்டிலிருந்து இயற்ற இயலாது. உதாரணமாக, சில நாடுகளில் வாகனத்தை வலதுபுறமாக ஓட்ட வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது, வேறு சில நாடுகளில் இடதுபுறம் என்று இருக்கின்றது. இடதுபுறமாக ஓட்டுவதா வலதுபுறமாக ஓட்டுவதா என்பது அந்நாட்டிலுள்ள சட்டத்தைப் பொறுத்தது. நீங்கள், எனது நாட்டில் இடதுபுறமாகதான் ஓட்டுவோம், எதற்காக இங்கு வலதுபுறமாக ஓட்ட வேண்டும்?” என்று கேட்க இயலாது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோலவே, கடவுள் எதைக் கூறுகிறாரோ அதுவே தர்மம்.

பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். (பகவத் கீதை 4.8) கிருஷ்ணரின் இப்பணி, நாட்டில் சட்டங்களை மதித்து நடப்பவர்களைக் காத்து, சட்டங்களை மீறுபவர்களைத் தண்டிக்கக்கூடிய அரசாங்கத்தின் பணியைப் போன்றதாகும்.

யாரிடம் சரணடைய வேண்டும்?

பேராசிரியர் கோடவ்ஸ்கியிடம் நான் உரையாடியபோது கூறினேன், உங்களுடைய கொள்கை கம்யூனிசம், என்னுடைய கொள்கை கிருஷ்ண உணர்வு. இவ்வாறாக, நாம் இருவருமே ஓர் அதிகாரியிடம் சரணடைந்துள்ளோம். நீங்கள் மார்க்ஸ், லெனின் முதலியோரிடம் சரணடைந்துள்ளீர்கள், நான் கிருஷ்ணரிடம் சரணடைந்துள்ளேன். அவ்வளவே.”

ஆகவே, சரணடைய வேண்டியது அனைவருக்கும் அவசியம். ஒருவன் சரியான நபரிடம் சரணடையும்போது, அனைத்தும் சிறப்பாகச் செல்கிறது; தவறான நபரிடம் சரணடையும்போது, அது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகின்றது. ஜீவேர ஸ்வரூப ஹய க்ரிஷ்ணேர நித்ய-தாஸ, நாம் அனைவரும் கிருஷ்ணரின் நித்திய சேவகர்கள்.” ஆகவே, நாம் சரணடைவதற்கான சரியான நபர் கிருஷ்ணரே என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்.

நாம் அனைவரும் சரணடைபவர்களாக இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக நாம் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. இது நமது நோயாகும். மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாதபோது, அவர்கள் பல்வேறு அயோக்கியர்களை கடவுளாக கற்பனை செய்கின்றனர். இஃது அதர்மமாகும். பகவான் கிருஷ்ணரிடம் சரணடைவதே தர்மம். ஆனால் மக்களோ கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு பதிலாக, பூனை, நாய், இது, அது என பலவற்றிடம் சரணடைகின்றனர். இந்த அதர்மத்தைச் சரி செய்வதற்காக கிருஷ்ணர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகிற்கு வந்தார்.

கிருஷ்ணர் பெயரளவிலான இந்து தர்மத்தை நிறுவுவதற்கு வரவில்லை. தர்மம் என்றால் பரம புருஷ பகவான் கிருஷ்ணரிடம் சரணடைவதே. தற்போது நாம் யாரிடம் சரணடைய வேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோம். அதுவே பிரச்சனை.

சரியான நபரிடம் சரணடையும்போது அனைத்தும் சிறப்பாக இருக்கும்; அத்தகைய நபரே கிருஷ்ணர்.

புலன்களுக்கு சேவை செய்தல்

நமது சரணாகதியை நாம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுகிறோம். ஒரு கட்சி வேண்டாம் என்று கூறி, வேறு கட்சியைத் தேர்ந்தெடுக்கிறோம். இவ்வாறு கட்சிகளை மாற்றுவதால் என்ன பயன்? புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் மாட்டிக்கொள்வதை போலுள்ளது நம் நிலைமை. கட்சிகளிடம் சரணடைவதால் அமைதியை அடைய இயலாது, கிருஷ்ணரிடம் சரணடையாதபட்சத்தில் நம்மால் எவ்வித அமைதியையும் அடைய இயலாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய

மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ:

அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ

மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

அனைத்து தர்மங்களையும் கைவிட்டு என் ஒருவனையே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே,”– என்று கிருஷ்ணர் கீதையில் (18.66) அறிவுறுத்துகிறார். ஸ்ரீமத் பாகவதத்திலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே, அதோக்ஷஜரிடம் (கிருஷ்ணரிடம்) சரணடைவதே முதல்தரமான தர்மம்.” அதோக்ஷஜ என்றால், உன்னதமானவர்” என்று பொருள், இது கிருஷ்ணரின் பெயர்களில் ஒன்று. நமது சரணாகதி, அஹைதுகீ அப்ரதிஹதா, எவ்வித உள்நோக்கமுமின்றி நிலையானதாக இருக்க வேண்டும்,” என்று பாகவதம் கூறுகிறது. இவ்வாறு கிருஷ்ணரிடம் நீங்கள் சரணடையும்போது, ஆத்மா, மனம், உடல் என அனைத்தும் திருப்தியடைகிறது. இதுவே கிருஷ்ண உணர்வாகும்.

இதுகுறித்து கற்றறிந்த பண்டிதர் ஒருவர் கூறுகிறார், காமாதீனாம் கதி ந கதிதா பாலிதா துர்னிதேஷா:. அதாவது, நாம் அனைவரும் காமம், கோபம், லோபம், மோஹம் முதலியவற்றிற்குதான் சேவை செய்கிறோம். இவையே நமது எஜமானர்களாக உள்ளன. சிலர் காமத்திற்குத் தொண்டு புரிகின்றனர், சிலரோ பேராசைக்குத் தொண்டு புரிகின்றனர். இவ்விதமாக, நாம் அனைவரும் நமது புலன்களுக்குதான் தொண்டு புரிகின்றோம், வேறு யாருக்குமில்லை. அலுவலகத்தில் நமது உயர் அதிகாரிக்கு அவர் தரும் பணத்திற்காக நாம் வேலை செய்கிறோம். அவர், நாளை முதல் உங்களுக்கு ஊதியமில்லை,” என்று கூறினால், சென்று வருகிறேன்,” என்று நாம், கூறி விடுவோம். ஆகவே, அங்கு நாம் செய்யும் சேவை பணத்திற்கானது. பணம் நமது புலன்களை திருப்தி செய்யும் என்பதற்காக, பணத்திற்கு நாம் சேவை செய்கிறோம். இவ்வாறாக, நாம் நமது புலன்களுக்கே சேவை செய்கிறோம்.

இவ்வாறு செய்வதை கிருஷ்ணர், தர்மஸ்ய க்லானி என்று கூறுகிறார். அதாவது, நமது புலன்களுக்கு நாம் சேவை செய்வது அதர்மமாகும். அதை விடுத்து கிருஷ்ணரது புலன்களுக்கு நாம் சேவை செய்யும்போது, அது தர்மமாகின்றது. கீதையின் ஆரம்பத்தில் அர்ஜுனன் தனது புலன்களுக்கு சேவை செய்வதை நியாயப்படுத்தினான்: கிருஷ்ணரே, எனது குரு துரோணாசாரியரைக் கொல்வதால் எனக்கு பாவம் வரும், நான் நரகத்திற்குச் செல்வேன் என்பதால், போரிட மாட்டேன்.” எதிரணியினைக் கொல்வதால் தான் துன்புறுவேன் என்று அவன் எண்ணினான். இவ்வாறாக, அவன் தனது புலன்களை திருப்தி செய்ய எண்ணினான்.

கிருஷ்ணருக்காகச் செயல்படுதல்

உன்னால் கொல்லப்படுபவர் உனது உறவினரா, குருவா, பாட்டனாரா என்பதை நீ பார்க்கத் தேவையில்லை, சத்திரியன் என்ற முறையில், போரிடுதல் உனது கடமை, எதிரணியில் இருப்பவர்களுடன் நீ போரிடத்தான் வேண்டும்,” என்று கிருஷ்ணர் அறிவுறுத்தினார்.

கிருஷ்ணர் தமது திருப்திக்காக அர்ஜுனனை போரில் ஈடுபடுமாறு கூற, அர்ஜுனனோ போரில் ஈடுபடாமல் இருப்பதே தனக்கு திருப்தியளிக்கும் என்று கூறினான். இஃது அவர்களிடையே நிகழ்ந்த வாத பிரதிவாதமாகும். பகவான் கிருஷ்ணர் பரம புருஷர் என்பதால், அவரை திருப்தி செய்ய வேண்டும் என்பதே கீதையின் உட்கருத்தாகும். அர்ஜுனன் அதற்கு மறுத்தபோது, கிருஷ்ணர் கூறினார், இந்த குருக்ஷேத்திர போர் என்னால் ஏற்படுத்தப்பட்டது. நீ வெறும் கருவி மாத்திரமே.”

பக்தர்களைக் காத்து அசுரர்களை வதைப்பதே கிருஷ்ணரது நோக்கமாகும். தர்மத்தின் வடிவமான யுதிஷ்டிரனை அரியணையில் அமர்த்தவும், அதர்மத்தின் வடிவமான துரியோதனனையும் அவனது சகாக்களையும் வதைப்பதற்காகவுமே கிருஷ்ணர் குருக்ஷேத்திர போரை ஏற்படுத்தினார். இதுவே கிருஷ்ணரது திட்டம். அர்ஜுனன் தமது பக்தனும் நண்பனுமாதலால், கிருஷ்ணர் அவனது உதவியை நாடினார். உண்மையில், கிருஷ்ணர் தாமே அனைத்தையும் செய்திருக்க இயலும். அவர் ஸர்வ சக்தி படைத்தவர். பக்தன் கிருஷ்ணரைப் போற்றுவதற்கு விரும்புவதைப்போல, கிருஷ்ணரும் தமது பக்தனான அர்ஜுனன் போற்றப்படுவதை விரும்பினார். ஆகவே, வெற்றிக்கான புகழை அர்ஜுனனுக்கு வழங்க கிருஷ்ணர் விரும்பினார்.

கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், அவரை திருப்தி செய்வதே தனது கடமை என்பது அர்ஜுனனுக்குத் தெரியும், இருப்பினும், கீதையில் அர்ஜுனன் நமது நன்மைக்காக, சராசரி மனிதனின் பாத்திரத்தை ஏற்றான்.

பகவத் கீதையின் தர்மம் (மதம்), இந்து தர்மமோ முஸ்லீம் தர்மமோ கிறிஸ்துவ தர்மமோ அல்ல. பரமனான பகவானுக்கும் அவரது சேவகனான உயிர்வாழிக்கும் இடையேயான உறவு பரிமாற்ற மாகும். இதுவே தர்மத்தின் சாரம். கிருஷ்ணரை ஏற்று அவரிடம் சரணடைவதே நமது தர்மமாகும்.

கிருஷ்ணர் கருணையே வடிவானவர்

நாம் அறியாமை என்னும் இருளில் இருப்பதால், நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. குடும்பம், சமூகம், இனம், அரசாங்கம் ஆகியவற்றிற்கு சேவை செய்தாலும், நாம் மகிழ்ச்சியைப் பெற முடியாது. ஏனெனில், இவை நமது தர்மமல்ல. இந்த சேவை மனப்பான்மையை கிருஷ்ணரது திருவடியை நோக்கி திருப்பும்போது மட்டுமே நாம் திருப்தியைப் பெறுவோம்.

காந்தி நாட்டிற்கு சேவை செய்தார்; இருப்பினும், அவரால் அனைவரையும் திருப்தி செய்ய இயலவில்லை. யாரோ ஒருவன் அவரைக் கொன்றுவிட்டான். குடும்பம், சமூகம், இனம் என யாருக்கு சேவை செய்தாலும், நம்மால் யாரையும் திருப்தி செய்ய இயலாது. நான் பூரண திருப்தியடைந்துவிட்டேன்,” என்று யாரும் கூற மாட்டார்கள்.

கிருஷ்ணர் மிகவும் கருணையானவர், நாம் அவருக்கு சிறிது சேவை செய்தாலும், அச்சேவையானது நமது வாழ்வை வெற்றியுடையதாக்கும். உதாரணமாக, கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபொழுது, அவரைக் கொல்வதற்கு பூதனை என்ற அரக்கி வந்தாள். அவள் தனது மார்பில் விஷத்தைத் தடவி கிருஷ்ணருக்குப் பாலூட்டி அவரைக் கொன்றுவிடலாம் என்று எண்ணினாள். ஆனால் கிருஷ்ணரோ, பாலோடு சேர்த்து அவளது உயிரையும் உறிஞ்சினார். இருப்பினும், கிருஷ்ணர் எண்ணினார், இவள் என்னைக் கொல்வதற்காக வந்தவள் என்றபோதிலும், நான் அருந்துவதற்கு பால் வழங்கியதால், எனக்குத் தாயாவாள். ஆகவே, நான் இவளுக்கு ஆன்மீக உலகில் தாயின் ஸ்தானத்தை வழங்குகிறேன்.” இவ்வாறாக, கிருஷ்ணர் மிகவும் கருணையானவர். நீங்கள் அவருக்கு எவ்விதத்தில் சேவை செய்தாலும்ஶீஅது தவறான எண்ணத்தில் இருந்தால்கூடஶீஅவர் அந்த சேவையை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறிருக்க, நாம் ஏன் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்?

கிருஷ்ணரை திருப்தி செய்வதே கடமை என்று எண்ணி அர்ஜுனன் போர் புரிதல்

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சமூக சேவை

கிருஷ்ணரது சேவையில் ஒருவன் ஈடுபடும்போது, குடும்பம், சமூகம், நாடு முதலியவற்றிற்கான சேவைகள் தாமாகவே நிறைவேற்றப்படுகின்றன. கிருஷ்ணரே அனைத்திற்கும் வேராக இருக்கின்றார். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றும்போது ஒட்டுமொத்த மரமும் ஊட்டம் பெறுவதைப் போல, கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆதிமூலம் என்பதால் அவருக்கு சேவை செய்வதன் மூலமாக மற்ற சேவைகள் அனைத்தும் தாமாகவே நிறைவேற்றப்படுகின்றன.

கிருஷ்ணருக்கு சேவை செய்வதே எங்களுடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும். இவ்வாறு கிருஷ்ணருக்கு சேவை செய்யும்பொழுதே நாங்கள் சமூக சேவையிலும் ஈடுபடுகிறோம். எவ்வாறெனில்? ஒருவன் கிருஷ்ண உணர்விற்கு வந்தவுடன் பாவச் செயல்களான முறையற்ற பாலுறவு, புலால் உண்ணுதல், சூதாட்டம், போதை வஸ்துக்கள் என அனைத்து தவறான விஷயங்களையும் கைவிடுகிறான். இதுவே சமுதாயத்திற்கான சிறந்த சமூக சேவையாகும். அமெரிக்க அரசாங்கம் எமது இயக்கத்தை வெகுவாகப் பாராட்டுகின்றது. ஏனெனில், எல்.எஸ்.டி, எனும் போதை வஸ்துவிற்கு அடிமையாகியிருந்த மக்கள், கிருஷ்ண பக்தியை ஏற்றதும் அதனைக் கைவிடுகின்றனர். இலட்சக்கணக்கான டாலர்களைச் செலவழித்தும்கூட அரசாங்கத்தினால் மக்களை இப்பழக்கத்திலிருந்து திருத்த முடியவில்லை. ஆனால், கிருஷ்ண பக்தி இயக்கமோ, மக்களுக்கு கிருஷ்ண உணர்வை வழங்கி அவர்களை திருத்துகின்றது, இதனை அமெரிக்க அரசாங்கம் கண்கூடாகக் காண்கின்றது.

ஆகவே, கிருஷ்ணருக்கு சேவை செய்தல் எனும் தர்மத்தை நீங்கள் ஏற்கும்பொழுது, உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றது. ஆகவே, கிருஷ்ண உணர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த கல்வியை மக்களுக்கு போதிப்பதற்காகவே கிருஷ்ணர் வருகிறார். கிருஷ்ணருக்கும் கிருஷ்ணரது உபதேசத்திற்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. கிருஷ்ணர் தற்போது இவ்வுலகில் இல்லை என்று நினைக்காதீர்கள், அவர் தமது உபதேசமான பகவத் கீதையில் இருக்கின்றார். அவரது உபதேசங்களை ஏற்று வாழ்வில் கடைப்பிடிக்கும்போது, நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இதுவே கிருஷ்ண உணர்வாகும்.