எத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் இருக்க “ஏன் இஸ்கான்?”

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ சுவாமி

உலகெங்கிலும் ஆன்மீக வாழ்விற்கான ஆர்வம் மக்களிடையே மீண்டும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். உயர்ந்த விஷயங்களைக் கற்றுத் தருவதாகக் கூறும் அமைப்புகளுக்கு மக்களிடையே பெரும் தேவை உள்ளது. தங்களையே அவதாரங்களாகக் கூறிக்கொள்வோர், குருமார்கள், இறை தூதுவர்கள், யோகிகள் என பலரும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

 

எந்த ஆன்மீக இயக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? நமக்கு உகந்த பாதை எது? ஏமாற்றப்படாமல் தப்பிப்பது எப்படி? ஒவ்வொரு குழுவினரும் தாங்களே சிறந்தவர்கள் என்று பறைசாற்றுகின்றனர். அதனை எவ்வாறு நாம் சரியாகத் தெரிந்துகொள்வது? உண்மையானவர்களை போலிகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது?

 

இந்தக் கட்டுரை இஸ்கான் (ISKCON, International Society for Krishna Consciousness) இயக்கத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. எங்களுடைய கூற்றுகள் சிறியவை அல்ல: கிருஷ்ண உணர்வே அனைவருக்கும் உகந்த ஒரே பாதை; கிருஷ்ண உணர்வைத் தவிர இதர பாதைகள் எதுவும் யாருக்கும் உண்மையில் உதவா, அவை ஏறக்குறைய உபயோகமற்றவை; கிருஷ்ண உணர்வு முழுமையானது, உண்மையானது, பக்குவமானது, தூய்மையானது, இயற்கையானது மற்றும் அங்கீகாரம் பெற்றது என்று நாங்கள் அறிவிக்கின்றோம்.எங்களுடைய கூற்றுகளைப் பரிசீலனை செய்யலாமே.

ஆன்மீக வாழ்க்கை உலக மகிழ்ச்சிக்காக அல்ல

ஆன்மீக வாழ்வு என்று கூறும்போது, “ஆன்மீகம்” என்பதன் பொருளை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஆன்மீகம் என்றால் நாம் காணும் ஜடவுலகத்திற்கு அப்பாற்பட்ட வேறுபட்ட ஒன்றாகும். கிருஷ்ணர், புத்தர், இயேசு, நபிகள், சங்கராசாரியர், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், சைதன்ய மஹாபிரபு மற்றும் இதர அனைத்து உண்மையான மத போதகர்களும் இந்த ஜடவுலகத்தின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இங்குள்ளவை அனைத்தும் தற்காலிகமானவை, இவற்றினால் நமக்கு பூரண மகிழ்ச்சியை வழங்க இயலாது. இந்த ஜடவுலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான முயற்சி, நாய் வாலை நிமிர்த்த முயற்சிப்பதைப் போன்றதாகும். நாம் மீண்டும்மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருக்கலாம், ஆனால் விரும்புவதை அடைய மாட்டோம். உண்மையான மகிழ்ச்சி என்பது வாழ்வின் வேறுபட்ட தளத்தில் (ஆன்மீகத் தளத்தில்) அடையப்பட வேண்டியதாகும். ஆன்மீக வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் செல்வதாகும்.

ஏதேனும் ஓர் ஆன்மீகப் பாதை ஜடவுலக இன்பத்தினை தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தால், அந்த பாதை உண்மையான ஆன்மீகப் பாதையல்ல.

சமூக சேவை ஆன்மீகப் பணி அல்ல

ஏழைகளையும் நோயாளிகளையும் உயர்த்து வதற்கான சமூக சேவைகள் நிச்சயம் நல்ல செயல்களே, சமுதாயத்திற்குத் தேவையானவையே. அதற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் நிச்சயம் மற்ற மக்களைக் காட்டிலும் சிறந்தவர்களே. ஆயினும், அத்தகைய பௌதிக சமூக நலப் பணிகளை “ஆன்மீகம்” என்று கருதுதல் தவறு, மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் திறப்பதைத் தவிர உயர்ந்த ஆன்மீகப் பணி ஏதுமில்லை என்று நினைப்பதும் தவறு. சமூக சேவை ஒருபோதும் ஆன்மீகப் பணியாகாது என்பதே உண்மை.

 

அத்தகு சமூகப் பணிகள் உண்மையில் யாருக்கும் நன்மையளிக்கமாட்டா. நாம் இலட்சக்கணக்கான மருத்துவ மனைகளைத் திறந்தாலும், நோயின் வலி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். மருத்துவமனைகள் இருப்பதனால் குணமடைந்து விடுவர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படியே குணமடைந்தாலும் அவர்கள் ஒருநாள் மரணமடைந்தே ஆக வேண்டும். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் பிறந்து துன்பப்பட வேண்டும். இதில் நாம் எப்படி அடுத்தவருக்கு உதவ முடியும்?

 

கொல்கத்தாவின் ஏழைகளுக்கு உதவும் தனது முயற்சியினால் பிரபலமடைந்த கிறிஸ்துவ பெண்மணியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அத்தகு முயற்சிகள் உலகமெங்கும் பாராட்டப்படலாம், ஆனால் அப்பணிகளின் உண்மையான விளைவு என்ன? கையளவிலான மக்கள் காப்பகங்களில் இருந்தனர், ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்கத்தாவின் வீதிகளில் இன்றும் உறங்கி வருகின்றனர். காப்பகங்களில் இருப்பவர்கள்கூட பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும்.

அனைத்து உண்மையான மத போதகர்களும் இந்த ஜடவுலகத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்றே உபதேசித்துள்ளனர்.

அனைத்து உண்மையான மத போதகர்களும் இந்த ஜடவுலகத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்றே உபதேசித்துள்ளனர்.

ஆன்மீக இயக்கம் ஆன்மீகத்திற்காகவே

மீண்டும்மீண்டும் பிறப்பு இறப்பை வழங்கக்கூடிய இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தல் வெறும் மாயையாகும் (அறியாமையாகும்). அத்தகு மகிழ்ச்சி, கடந்த காலத்தில் கிடைக்கவில்லை, நிகழ்காலத்தில் கிடைப்பதில்லை, வருங்காலத்திலும் கிடைக்கப் போவதில்லை. பிறப்பு இறப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கான அறிவினை மக்களுக்கு வழங்குவதே மிகவுயர்ந்த சமூகப் பணியாகும், அதனால் மக்கள் மிகவுயர்ந்த இன்பத்தினை நித்தியமாக அடைய முடியும். இஸ்கான் அதைச் செய்து வருகிறது.

 

மரணத்தின் இடமாகிய இந்த உலகில் அனுபவிப்ப தற்கான முயற்சி பயனற்றது என்பதை கிருஷ்ண பக்தர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த உண்மையில் நமது கவனத்தை எவ்வாறு ஒருமுகப்படுத்துவது என்பதை அவர்கள் கற்றுத் தருகின்றனர். உண்மையான ஆன்மீக இயக்கத்தை அறிவதற்கு இதுவே முதல் சோதனையாகும்.

 

ஜடவுலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான முயற்சியைக் கண்டிக்காத ஆன்மீக இயக்கங்கள் உண்மையில் ஆன்மீகமானவை அல்ல. பௌதிக இன்பத்தில் நாட்டம் கொண்டிருப்பவர்கள் பௌதிக வாதிகளே. இந்தச் சோதனையின் அடிப்படையில், உண்மையைத் தேடும் புத்திசாலி நபரால், ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்பவர்களில் பெரும்பாலான நபர்கள் உண்மையில் ஆன்மீகவாதிகளின் போர்வையில் இருக்கக்கூடிய பௌதிகவாதிகளே என்பதை உடனடியாக அறிய முடியும்.

அதிகாரபூர்வமான பதில் வேண்டும்

ஆன்மீக வாழ்க்கை என்பது நேர்மையான கேள்விகளுடன் தொடங்குகிறது. “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? மரணத்திற்குப் பின்னால் என்ன நிகழும்? வாழ்க்கையின் அர்த்தம் என்ன? கடவுள் யார்? கடவுளுக்கும் நமக்கும் என்ன உறவு?” இந்தக் கேள்விகள் இல்லாத வாழ்க்கை மேலோட்டமானதாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும்.

 

இந்தக் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் ஆன்மீக இயக்கத்திடமிருந்து வர வேண்டும். அந்த பதில்கள் மேலோட்டமானதாக, வெறித்தனம் கொண்டதாக, “நாங்கள் சொல்கிறோம் நீங்கள் நம்புங்கள்” என்பதாக இருக்கக் கூடாது. அவை கற்பனை அல்லது குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் இருக்கக் கூடாது. நமது தேடலுக்கு அதிகாரபூர்வமான பதிலே நமக்குத் தேவை.

 

ஆன்மீக அறிவில் மாபெரும் அதிகாரியாக இருப்பவர் கடவுளே. எந்தவொரு தத்துவம் அல்லது மத உபதேசமும், ஏதேனும் ஒரு பக்குவமற்ற மனிதரால், வரலாற்றில்ஏதேனும் ஒரு காலத்தில் தோற்றுவிக்கப்பட்டிருந்தால், அதனை அதிகாரபூர்வமாகக் கருத இயலாது.

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களுக்கு இந்த உலகில் ஈடு இணை ஏதுமில்லை. அந்த புத்தகங்களே இஸ்கானின் அதிகாரத்திற்கு அடிப்படையாகும்.

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களுக்கு இந்த உலகில் ஈடு இணை ஏதுமில்லை. அந்த புத்தகங்களே இஸ்கானின் அதிகாரத்திற்கு அடிப்படையாகும்.

 

ஆன்மீக அறிவு மாற்றமில்லாதது

உண்மையான மதம் என்பது ஸநாதன தர்மமாகும். அதாவது, கடவுளை நோக்கிய உயிர்வாழிகளின் நித்தியமான கடமையே உண்மையான மதம். கடவுள் மாற்றமற்றவர், எனவே, உண்மையான மதமும் மாற்றமற்றதாக இருக்க வேண்டும், சாதாரண மனிதர் களின் சூழ்நிலைகளுக்கேற்ப மாறக் கூடாது. எனவே, நித்தியமானதாக, மாற்றமில்லாததாக, நினைவிற்கெட்டாத காலம் தொட்டு இருந்து வருவதாக இருப்பதே உண்மையான மதமாகும். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவை உண்மையான மதங்களாக இருக்க முடியாது. உண்மையான மதம் கடவுளால் வழங்கப்பட்டதாகும்.

 

கடவுள் தன்னை மத நூல்களின் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார் என்பது அனைவராலும் ஏற்கப்படுகின்ற கருத்தாகும். உலகிலுள்ள மதங்களுக்கு மத்தியில் வேத சாஸ்திரங்கள் மிகவும் பழமையானவை, விரிவானவை, தெளிவானவை, விஞ்ஞான பூர்வமானவை, பக்குவமானவை–இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. வேத சாஸ்திரங்கள் கடவுளையும் அவருடைய படைப்பையும் பற்றி தெளிவாக உரைக்கின்றன. கடவுள் யார் என்பதையும் அவருடனான நமது உறவையும் அந்த உறவினை எவ்வாறு மீண்டும் நிலைநாட்டுவது என்பதையும் தெளிவாக உரைக்கின்றன. மேலும், பிரபஞ்சத்தைப் பற்றிய முழு அறிவையும், கடவுள் படைத்து காத்து அழிப்பது ஏன், அதை அவர் எவ்வாறு செய்கிறார் என்பதையும், கடவுளை ஏன் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் முழுமையாக உரைக்கின்றன.

குரு சீடப் பரம்பரையின் அவசியம்

எல்லா சாஸ்திரங்களும் உண்மையைக் கண்ட அறிஞர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம உண்மை என்று தீர்ப்பளித்துள்ளனர். அவர் இந்த உலகிற்கு அப்பாற்பட்டவர், கற்பனை செய்யப்பட முடியாதவர், எல்லாவற்றிலும் இறைவனாகத் திகழும் முழுமுதற் கடவுள். கிருஷ்ணர் தன்னை குரு சீடப் பரம்பரையின் மூலமாக வெளிப்படுத்துகிறார். அவர் சில விசேஷமான பக்தர்களுக்கு சக்தியளித்து சாஸ்திரச் செய்திகளை பிரச்சாரம் செய்ய வைக்கிறார். இந்த விசேஷ பக்தர்கள் மாபெரும் ஆச்சாரியர்களாவர், அவர்கள் தங்களது செல்வாக்கின் மூலமாக மனித சமுதாயத்தின் ஆன்மீக வாழ்விற்குப் பல்வேறு தலைமுறைகளாக வழிகாட்டுகின்றனர். அந்த ஆச்சாரியர்கள் தங்களுடைய சீடர்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றனர், அவருடைய சீடர்களில் உயர்ந்த பக்குவநிலையினை அடைந்தவர் காலப்போக்கில் தனது சொந்த சீடர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். இவ்வாறாக, குரு சீடப் பரம்பரையின் மூலமாக வேதங்களில் கொடுக்கப்பட்டுள்ள பரம உண்மையைப் பற்றிய அறிவு, அப்படியே உள்ளது உள்ளபடி, மாற்றமின்றி வழங்கப்படுகிறது.

 

இந்த குரு சீடப் பரம்பரை கடவுளிடமிருந்து நேரடியாக வருகிறது. ஆதியில் கிருஷ்ணர் ஞானத்தை பிரம்மாவிற்கு வழங்கினார், பிரம்மா அதனை நாரதருக்கு வழங்க, பரம்பரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், அந்த பரம்பரையில் வந்த ஒரு பக்குவமான குரு ஆவார்.

குரு, சாது, சாஸ்திரம் என்னும் மூன்று குறையில்லா அடித்தளங்களைக் கொண்டு இஸ்கான் செயல்படுகிறது.

- கிருஷ்ண பக்தர்கள் அதிகாலையிலிருந்து மகிழ்ச்சியுடன் பக்தியில் ஈடுபடுகின்றனர்

கிருஷ்ண பக்தர்கள் அதிகாலையிலிருந்து மகிழ்ச்சியுடன் பக்தியில் ஈடுபடுகின்றனர்

ஸ்ரீல பிரபுபாதரின் நூல்கள்

சாஸ்திரம் என்பது கடவுளின் வாக்காகும், சாது அல்லது குரு என்பவர் சாஸ்திர ஞானத்தை அறிந்து உணர்ந்து மாற்றமின்றி மற்றவர்களுக்கு வழங்குப வராவார். உண்மையான சாதுக்கள் சாஸ்திரங்களில் உள்ள பக்குவமான வாழ்வினை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடைய குணங்களும் நடத்தைகளும் பக்குவ மானவையாக உள்ளன. நடுநிலையில் இருப்பவர்கள், அத்தகு மாபெரும் ஆச்சாரியர்களின் வாழ்க்கையினை யோசித்துப் பார்த்தால், சாதாரண பௌதிக மக்களைக் காட்டிலும் அவர்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளனர் என்பதை உடனடியாக அறிந்துகொள்ளலாம்.

 

தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அத்தகைய ஆச்சாரியர்களில் ஒருவராவார். அவர்இந்த நவீன காலத்தில் ஹரே கிருஷ்ண இயக்கத்தினை சாஸ்திரங்களின் அடிப்படையில் ஸ்தாபித்தார். அவர் 60க்கும் மேற்பட்ட முக்கியமான வேத இலக்கியங்களை வழங்கியுள்ளார். அவற்றில் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, சைதன்ய சரிதாம்ருதம், பக்தி ரஸாம்ருத சிந்து, ஈஷோபநிஷத் போன்றவை முக்கியமானவை. எல்லா நிறுவனங்களிலும் புத்தகங்கள் உள்ளன, ஆனால் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் தெய்வீக அறிவினால் உருவாக்கப்பட்டவை என்பதை அனைவராலும் அங்கீகரிக்க முடியும். ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களுக்கு இந்த உலகில் ஈடு இணை ஏதுமில்லை. அந்தப் புத்தகங்களே இஸ்கானின் அதிகாரத்திற்கு அடிப்படையாகும்.

புத்தகங்களின்படி நடப்பவர்கள்

ஸ்ரீல பிரபுபாதர் புத்தகங்களை மட்டும் வழங்கி யிருந்தால்கூட, அஃது உலகின் ஆன்மீகத் தேடுதலுக்கு ஒரு முக்கியமான படைப்பாக இருந்திருக்கும். இருப்பினும், புத்தகங்களில் உள்ள உண்மைகளை நடை முறையில் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கும் ஆசிரியர்கள் இல்லாவிடில், புத்தகங்கள் பண்டிதர்களை மட்டுமே தோற்றுவிக்கும், சாதுக்களை அல்ல. எனவே, ஸ்ரீல பிரபுபாதர் புத்தகத்துடன் நிற்க வில்லை, உலகெங்கிலும் ஓய்வின்றி பயணம் செய்து சாஸ்திரங்களில் இருப்பதுபோலவே சீடர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.

தத்துவமில்லா இயக்கங்கள் வேண்டாம்

இவ்வாறாக, குரு, சாது, சாஸ்திரம் என்னும் பக்குவமான முக்கோணத்தினால் இஸ்கான் ஆசிர்வதிக்கப் பட்டுள்ளது. இஸ்கான் கிருஷ்ண உணர்வினை வழங்கும் உண்மையான இயக்கமாகும், இது கிருஷ்ணரின் செய்தி யினை மாற்றாமல் தக்கவைக்கிறது. மறுபுறம், வலுவான ஆதாரமின்றி செயல்படும் இயக்கங்கள் நிச்சயமாக முழுமையின்றியும் பக்குவமின்றியும் மக்களுக்கு வழிகாட்டத் தெரியாமலும் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை.

 

“எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது, நான் அதனை சரியென்று நினைக்கின்றேன்,” என்பதன் அடிப்படையில் செயல்படுவது மனிதத் தன்மையல்ல. மனிதன் தன்னுடைய புத்தியை உபயோகித்து தத்துவங்களை உணர்தல் அவசியம். தத்துவங்கள் இல்லாத மனிதன் மிருகத்திற்கு சமமானவன். தத்துவமில்லா மதங்கள் வெறும் மனயெழுச்சியாக அல்லது மதவெறியாகவே இருக்கும்.

கிருஷ்ண பக்தர்கள் தங்களின் எல்லாத் திறன்களையும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்த முடியும்.

கிருஷ்ண பக்தர்கள் தங்களின் எல்லாத் திறன்களையும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்த முடியும்.

நிலவும் நட்சத்திரங்களும்

சில அமைப்புகள் இஸ்கானைக் காட்டிலும் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம், அஃது ஒரு பொருட்டல்ல. இஸ்கானின் கொள்கைகள் உறுதி யானவை, ஆத்மாவின் நன்மைக்கானவை. கடவுளை உண்மையாகத் தேடுபவர்கள் மட்டுமே இங்கே தங்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இஸ்கானின் கோட்பாடுகள் அமைந்துள்ளன. அத்தகைய உண்மையான பக்தர்கள் இலட்சக்கணக்கான போலியான நபர்களைக் காட்டிலும் பயனுள்ளவர்கள். அதிக மக்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக உயர்ந்த தரத்தினை இஸ்கான் விட்டுக் கொடுப்பதில்லை. ஒரு பவுன் தங்கம் கிலோ கணக்கிலான இரும்பைக் காட்டிலும் மதிப்புமிக்கது, ஒரு நிலவு இலட்சக்கணக்கான நட்சத்திரங்களைவிட பிரகாசமானது.

 

இஸ்கானின் உறுப்பினர்கள் நிலவுகளைப் போல வாழ்ந்து மனித சமுதாயத்திற்குக் குளுமையான ஒளியினை வழங்கும்படி வலியுறுத்தப்படுகின்றனர். பல்வேறு மத போதகர்கள் நளினமாகப் பேசும்போதிலும், தங்களது தீய நடத்தைகளினால் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அத்தகு பாவகரமான கபடதாரிகளால் பல்வேறு அப்பாவி மக்கள் கடவுளின் மீதான நம்பிக்கையைக்கூட இழக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, இஸ்கான் பக்தர்கள் தத்துவத்திலும் அறிவிலும் மட்டுமின்றி சீரான நடத்தையிலும் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.

ஆனந்தமான வாழ்க்கை

கிருஷ்ண பக்தியின் இன்பம் அறியாமையில் உள்ள மக்களின் இன்பத்திலிருந்து வேறுபட்டது. கிருஷ்ண பக்தர்கள் பாடி ஆடும்போது, அவர்கள் அதனைக் கடவுளின் மீதான அன்பின் மகிழ்ச்சியினால் செய்கின்றனர். இங்கே மகிழ்ச்சியின்மை என்ற கேள்விக்கே இடமில்லை. பக்தர்கள் கிருஷ்ணருக்காக அனைத்தையும் தியாகம் செய்து உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். இல்லையெனில், அவர்கள் ஏன் ஆடுகிறார்கள்? மகிழ்ச்சியற்ற மக்கள் ஆடுவதில்லையே. பக்தர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, கீர்த்தனம், நடனம், விருந்து என தினமும் அவர்களுக்குத் திருவிழாதான். சில நேரங்களில் பக்தர் அல்லாதவர்கள் பக்தர்களுடைய வாழ்க்கை மிகவும் கடினமானது என்று நினைக்கின்றனர். ஆனால் பக்தர்கள் இவற்றைக் கடினமாக உணர்வதில்லை, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்.

 

கிருஷ்ண உணர்வில் மேலும் பல செயல்களும் உள்ளன. உண்மையில், நாம் செய்யும் எல்லா செயல்களையும் கிருஷ்ணருக்காக செய்ய முடியும். உதாரணமாக, நாங்கள் கிருஷ்ணருக்காக தினமும் சமைக்கின்றோம். கிருஷ்ணருக்கு சமைக்கப்பட்ட உணவை அவருக்கு அர்ப்பணித்துவிட்டு பிரசாதமாக ஏற்கும்போது, அஃது எங்களைத் தூய்மைப்படுத்தி எங்களுடைய ஆன்மீக வாழ்விற்கு வலுவூட்டுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான பணியினை கிருஷ்ணரின் தொண்டில் எடுத்துக்கொள்ள முடியும்.

ஓவியங்களை வரைய விரும்புவோர் கிருஷ்ணருக்காக வரையலாம், இசையை விரும்புவோர் பக்தியை வளர்க்கும் பாரம்பரிய இசைக் கருவிகளைக் கற்கலாம், பயணம் செய்ய விரும்புவோர் உலகெங்கிலும் பயணம் செய்து கிருஷ்ண பக்தியினை பிரச்சாரம் செய்யலாம், அறிஞர்களாக இருக்க விரும்புவோர் பல்வேறு தெய்வீக நூல்களைக் கற்கலாம், அமைதியான குடும்பத்தை விரும்புவோர் தங்களது குடும்பத்தினர்களை கிருஷ்ண உணர்வுக்குக் கொண்டு வரலாம். நம்முடைய எல்லா விருப்பங்களையும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தலாம். காமத்தைக்கூட கிருஷ்ண உணர்வுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு உபயோகிக்கலாம். கிருஷ்ண உணர்வு எல்லாவிதத்திலும் பக்குவமானதும் முழுமையானதும் ஆகும். ஏனெனில், இது பக்குவமான முழுமையான பரமபுருஷ பகவான் கிருஷ்ணரை அடிப்படையாகக் கொண்டது.

 

இன்றைய குழப்பமான உலகத்திற்கு கிருஷ்ண பக்தி இயக்கம் எளிமையான மாற்று வழியினைப் பரிந்துரைக்கின்றது. அனுபவம் வாய்ந்த கிருஷ்ண பக்தர்களின் வழிகாட்டுதலை ஏற்பதற்கு மனித சமுதாயம் ஒப்புக் கொண்டால், இதன் எல்லாப் பிரச்சனைகளும்–சமுதாயம், பொருளாதாரம், உடல், மனம், காலநிலை, சுற்றுப்புறச் சூழல், கல்வி என அனைத்தும் தீர்ந்துவிடும். கடவுளை மையமாகக் கொண்ட அமைதியான சமுதாயத்தை உலக மக்களிடம் நிலைநாட்ட முடியும் என்று இஸ்கான் நம்புகிறது.

அனுபவத்தில் அறிவீர்

இஸ்கானைப் பற்றிய பல்வேறு தகவல்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன, தத்துவங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றை விரிவாக அறிய ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களைப் படியுங்கள். உணவைப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் உண்ணாமல் அதனை உணர இயலாது. எனவே, கிருஷ்ண உணர்வின் அனுபவத்தைப் பெறுவதற்கு அனைவரும் இஸ்கான் நிலையங்களுக்கு வந்து பக்தர்களைச் சந்திக்கும்படி அழைக்கப்படுகின்றனர்.

 

இயக்கத்தின் மிகவுயர்ந்த தரத்திற்கு அனைவரும் உடனடியாக வருவர் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, அது சாத்தியமும் இல்லை. கிருஷ்ண உணர்வு என்னும் பொக்கிஷம் கோடிக்கணக்கான பிரச்சனைகளைத் தாண்டிய நன்மையை நமக்கு வழங்குகிறது. இஸ்கானில் உள்ள கிருஷ்ண பக்தர்கள் இந்த பொக்கிஷத்தினை மற்றவர் களுக்கும் வழங்குவதற்கான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனால் இயக்கமும் விரைவாக வளர்ந்து வருகிறது.

 

எனவே, ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, பணம், நாடு, கல்வி என எந்த பேதமும் இன்றி, அனைத்து மக்களையும் இஸ்கான் வரவேற்கின்றது. ஆன்மீக வாழ்வில் உண்மையாகவும் தீவிரமாகவும் இருப்பவர்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினைச் சோதித்துப் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள், நிச்சயமாக வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை அடைவீர்கள். முன்வாருங்கள், உங்களுடைய வாழ்வை கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பதைப் பற்றி வினவுங்கள்.

இழப்பதற்கு ஏதுமில்லை, அடைவதற்கு பொக்கிஷம் உள்ளது.

2016-12-09T19:10:42+00:00July, 2016|தத்துவம்|0 Comments

About the Author:

mm
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

Leave A Comment