கிருஷ்ண உணர்வு இல்லையேல் மகிழ்ச்சி இல்லை

இன்றைய மனித சமுதாயத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்: மகிழ்ச்சி. மனித சமுதாயம் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியடையவே விரும்புகின்றன, ஆனால் மகிழ்ச்சி நமக்கு உண்மையாகவே கிடைக்கின்றதா? அதனை எவ்வாறு அடைவது? அதனை அடைவதற்கு நம்முடைய முயற்சிகள்தான் என்ன என்பதைச் சற்று காண்போம்.

வழங்கியவர்: திரு. ஸத்ய நாராயண தாஸ்

மனித சமுதாயத்தின் இன்றைய நிலை

ஒரு சராசரி மனிதனிடம், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” என கேட்டால், அதற்கு நிச்சயம், இல்லை” என்றுதான் பதில் வரும். இன்றைய நவீன மனித நாகரிகம் தன்னுடைய ஆனந்தத்தை அதிகப்படுத்துவதற்குப் பலவித முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது. அத்தகைய நவீன முன்னேற்றங்கள், பொருளாதார முன்னேற்றம், ஆடை ஆபரணங்கள் சேகரித்தல், வங்கியில் சேமித்தல், நிலம், வாகன வசதிகள் என்று நீண்ட பட்டியலை நாம் போட முடியும். உண்மையில் இந்த வசதிகளால் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா? சற்று நிதான நிலையில் யோசித்தால், உண்மையை நன்கு அறிய முடியும்.

பாமரன் முதல் பெரிய கோடீஸ்வரன் வரை யாருமே மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றவில்லை. ஏனெனில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், இந்த பௌதிக உலகத்தை இரண்டு வார்த்தைகளில் வர்ணிக்கின்றார்: துன்பமயமான இடம் (து:காலயம்), தற்காலிகமான இடம் (அஷாஸ்வதம்).

பண்பாட்டின் சீரழிவு

துன்பகரமான இடம் என்றபோதிலும், பாரத திருநாட்டில் தொன்றுதொட்டு இருந்துவந்த பண்பாடும் பழக்கவழக்கமும் மக்களைப் பெருந் துயரங்களிலிருந்து பாதுகாத்து வந்தது. ஆனால் 2.2.1835இல் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் லார்டு மெக்காலே பேசியதைச் சற்று கவனியுங்கள்: நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன், அங்கு ஒரு பிச்சைக்காரனையோ திருடனையோ பார்க்க முடியவில்லை, செல்வம் அங்கே கொட்டிக் கிடக்கிறது. உயர்ந்த நீதி நெறிகளும் ஒழுக்கம் நிறைந்த மக்களும் காணப்படுகின்றனர். நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என நினைக்கிறேன். அவர்கள் ஆன்மீகம், பண்பாடு என்னும் பாரம்பரியம் உள்ளவர்கள், அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, அவர்களது புராதன வேதக் கல்வி முறையையும் பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன்மொழிகிறேன். அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என்று இந்தியர்கள் கருதத் தொடங்கிவிட்டால், அவர்கள் தங்கள் சுயமரியாதையைக் கொஞ்சம்கொஞ்சமாக இழந்து விடுவார்கள், தங்கள் நாட்டையும் வேத பண்பாட்டையும் மறந்து விடுவார்கள். அதன் பிறகு, நாம் விரும்புகிறபடி நடப்பார்கள், அந்நாடு நமது ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும்.”

மெக்காலே திட்டமிட்டபடியே ஆங்கிலேயர்கள் பல்வேறு சூழ்ச்சிகளின் மூலமாகவும் ஆங்கிலக் கல்வி முறையின் மூலமாகவும் பாரதப் பண்பாட்டினை பெருமளவில் சிதைத்துவிட்டனர். இன்றைய சமுதாயத்தில் அனைவரும் அதிக கல்வி கற்பதில் ஆர்வமுள்ள நபர்களாக உள்ளனர்; ஆனால் அத்தகு கல்வியினால் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறதா? இதைப் பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு பெற்றோர்களும் தன்னுடைய பிள்ளைகள் பெரிய டாக்டர், பொறியியல் வல்லுனர், விஞ்ஞானி, கணிப்பொறியாளர், அறிவியல் வல்லுனர் என பெரிய ஆளாக வர வேண்டும் என்று விரும்புகின்றனர்; ஆனால் இத்தகைய பெரிய மனிதர்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்களா?

 

இந்திய பண்பாட்டினை சீரழித்தால் மட்டுமே ஆங்கில ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்ட முடியும் என்று எடுத்துரைத்த மெக்காலே

மகிழ்ச்சியின் தேடல்

நாம் எப்போதும் ஒரு தவறான மனக்கணக்கைப் போடுகின்றோம்: நிறைய செல்வம் வந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், மிகவும் அழகாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன், மிகவும் புகழுடைய நபராக மாறினால் மகிழ்ச்சியாக இருப்பேன், மிகச்சிறந்த அறிவாளியாக மாறினால் மகிழ்ச்சியாக இருப்பேன், மிகச்சிறந்த பலசாலியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்…” இதுபோன்ற பலவித திட்டங்களைத் தீட்டுவது இன்றைய மனித சமுதாயத்தின் இயல்பு. ஆனால் அத்தகு வசதிகளுடன் வாழ்பவரிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா என்று. நிச்சயம் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

ஒரு சராசரி மனிதன் காலையில் எழுந்தவுடன் அவனுடைய அன்றாட கடமைகள் தொடங்குகின்றன, இரவு தூங்கும் நேரம் வரை அவன் வேலை செய்கிறான், சில நேரங்களில் உறங்காமல் இருபத்துநான்கு மணி நேரமும்கூட உழைக்க தயாராக உள்ளான். ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமாகி அஸ்தமனம் ஆகும்போது, நம்முடைய ஆயுள் குறைந்து கொண்டே போகின்றது, இந்த உண்மையை உணராமல் இன்றைய மனித வர்க்கம் செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மரணம் நம்மை நோக்கி அருகில் வருகிறது என்பதை உணராமல், வருடந்தோறும் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர், என்னே அறியாமை!

குழந்தையாகப் பிறந்தோம், சில வருடங்களில் (முன்பெல்லாம் ஆறு வயது, இப்போதெல்லாம் 2/3 வயது) பள்ளிக்கு அனுப்பப்பட்டோம், பின்பு கல்லூரி, அதன்பின் வேலை, திருமணம், குழந்தைகளைப் பெற்றெடுத்தல், அவர்களைப் பராமரித்தல், அவர்களின் கல்வி, அவர்களின் திருமணம், வயோதிகம், மருத்துவச் செலவுகள், வேலையிலிருந்து ஓய்வு, சில வருடங்களில் மரணம்ஶீஇதுவே ஒவ்வொருவரின் வாழ்க்கையாக மாறிவிட்டது. நாம் அனைவரும் செய்த விஷயங்களையே திரும்பத்திரும்ப செய்து கொண்டிருக்கின்றோம் (புன: புன: சர்வித சர்வணானாம்). அனைவரும் இதையே செய்கிறார்கள், ஆனால் மகிழ்ச்சியை அடைந்தார்களா? இல்லை. ஆனால் ஏன் உங்களுடைய பிள்ளைகளையும் அதே விஷயங்களை செய்ய தூண்டுகிறீர்கள்? மாற்று வழி உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதும் மாற்று வழியை நீங்கள் தேடவில்லை என்பதுமே பதில்.

மகிழ்ச்சியைத் தேடுகிறோம், கிடைப்பதோ துன்பம். அவற்றிலும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்கு துன்பங்கள் அனைவரையும் அணுகுகின்றது. நோய் வராமல் இருப்பவர் உளரோ? முதுமையை வென்றவர் உண்டோ? மரணத்தை வென்றவர் யாரேனும் உண்டோ? நிச்சயமாக இல்லை. பெரிய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், அறிவில் சிறந்தவர்கள், புகழ்பெற்ற நபர்கள். கோடீஸ்வரர்கள், பாமரர்கள் யாரும் இந்த நான்கு துன்பங்களிலிருந்து தப்பித்தல் சாத்தியம் இல்லை. துன்பங்கள் விலகினால் தவிர மகிழ்ச்சி என்பதற்கு வாய்ப்பில்லை. துன்பங்கள் நம்மைவிட்டு விலகுமா, அதற்கு வழி உண்டா? நிச்சயம் உண்டு!

பிறப்பு, பள்ளி, கல்லூரி, திருமணம், குழந்தைகள், வயோதிகம், ஓய்வு, மரணம் என்று அனைவரும் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.

தீர்வை நல்கும் கிருஷ்ண உணர்வு

மஹாபாரதத்தில், குருக்ஷேத்திர போர்க்களத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் போர் புரிய தயாராக இருந்த சமயத்தில், அர்ஜுனன் தன்னுடைய எதிர்தரப்பு சேனைகளின் மீது பாசத்தைப் பொழிந்து, நான் போர் புரிய மாட்டேன்,” என்று தன்னுடைய காண்டீபத்தைக் (வில்லைக்) கீழே போட்டான். அத்தகைய மிகமிக துன்பகரமான நிலையில் அர்ஜுனனிடம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டதே வேதங்களின் சாரமான ஸ்ரீமத் பகவத் கீதை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச்சிறந்த நண்பனும் பக்தனுமான அர்ஜுனன் உண்மையில் துன்பமடைவதற்கு வாய்ப்பில்லை; ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் மூலமாக ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் ஸ்ரீமத் பகவத் கீதையை அருளினார், அதற்காக அவனை ஒரு கருவியாக உபயோகித்தார்

இருப்பினும், அர்ஜுனனின் சூழ்நிலையும் நம் ஒவ்வொருவரின் சூழ்நிலையும் ஏறக்குறைய ஒன்றுதான்: துன்பம். உண்மையில் சொல்லப் போனால், நம்முடைய துன்பம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டதைப் போல கொடுமையானதல்ல; அர்ஜுனன் தனது குரு மற்றும் உறவினர்களைக் கொல்ல வேண்டியிருந்தது. அந்த அளவு துன்பங்கள் நமக்கு நிச்சயமாக வரவில்லை. இன்று நாம் சந்திக்கும் துன்பங்கள், பொருளாதாரப் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை. உணவு பிரச்சனை போன்றவையே; அர்ஜுனனுக்கு நேர்ந்த துன்பம் போல் நமக்கு இதுவரை நேர்ந்ததில்லை. அர்ஜுனனையே விடுவித்த கீதை நம்மை விடுவிக்காதா?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம், நீ ஒரு சத்திரியன், உன்னுடைய கடமை போர் புரிவது என்பதால், அதனை நீ கட்டாயமாக செய்தாக வேண்டும்,” என்று அறிவுறுத்தினார். இருப்பினும், அவர் வெறுமனே போர் புரிய வேண்டும் என்று கூறவில்லை; என்னை நினைத்துப் போர் புரிந்தால், நீ எந்தவித பாவ விளைவுகளுக்கும் ஆளாக மாட்டாய்,” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் அறிவுறுத்தியுள்ளார். கர்ம யோகம், ஞான யோகம், தியான யோகம் போன்ற எல்லா வகையான யோகங்களையும் விளக்கி விட்டு, இறுதியில் பகவத் கீதையின் மொத்த சாரமாக, எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே” என்று கிருஷ்ணர் (பகவத் கீதை 18.66) கூறுகிறார். இஃது அர்ஜுனன் மூலமாக மொத்த மனித சமுதாயத்திற்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இட்ட கட்டளையாகும்.

உண்மையில், இந்த பௌதிக உலகத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, மகிழ்ச்சியாக இருப்பதாக நாம் கற்பனையில் வாழலாம், நம்முடைய உண்மையான மகிழ்ச்சி கிருஷ்ண உணர்வில் உள்ளது. நாம் நம்முடைய பாதையை மாற்ற வேண்டிய அவசியமில்லை, நாம் எந்த நிலையில் இருந்தாலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தை மேற்கொண்டால் நமக்கு உண்மையான ஆன்மீக ஆனந்தம் கிடைப்பது உறுதி. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தனாகி. எப்போதும் அவரைப் பற்றி நினைத்து, அவருக்காகவே செயல்பட வேண்டும்ஶீஇதுவே ஞானத்தின் மிகமிக இரகசியமான பகுதியாகும்.

கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்வது மிகவும் சுலபமானதாகும். இதற்கு பெரிய படிப்போ அந்தஸ்தோ உயர்குடி பிறப்போ தேவையில்லை, ஒரு முக்கியமான தகுதி மட்டும் தேவை: கிருஷ்ண உணர்வை அடைய வேண்டும் என்னும் தீவிர விருப்பம். கிருஷ்ண உணர்வு என்றால் நம்முடைய எண்ணங்களை பகவானின் தாமரைப் பாதங்களில் பதிய வைப்பது என்பது பொருளாகும். நாம் எந்தச் செயலைச் செய்தாலும் நமது உணர்வு கிருஷ்ணரில் இருக்கும்படி நாம் வாழ வேண்டும்; உதாரணமாக, ஒரு தாய் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தாலும், அவளது முழு கவனமும் தன்னுடைய குழந்தையின் மீதே இருக்கும். அதுபோல, பக்தன் தனது பல்வேறு கடமைகளில் ஈடுபட்டிருந்தாலும், அவன் கிருஷ்ணரின் மீது கவனம் செலுத்துபவனாக இருக்க முடியும்.

கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதற்கு, பகவானுடைய பக்தித் தொண்டிற்குச் சாதகமான கொள்கைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய கடமைகளையும் செயல்களையும் கிருஷ்ண உணர்விற்கு சாதகமான விதத்தில் சற்று அனுசரித்துக்கொள்ள வேண்டும்; நமது வீட்டின் சூழ்நிலை, நாம் செய்யும் செயல்கள், நாம் உண்ணும் உணவு என அனைத்தையும் கிருஷ்ணரை நினைவுபடுத்தும் வகையில் மாற்றியமைத்தல் மிகுந்த நன்மையைத் தரும். கிருஷ்ண பக்தர்களுடன் நெருங்கிய சங்கத்தினை எடுத்துக்கொள்ள வேண்டும்; கிருஷ்ண பக்தி என்பது பக்தர்களின் மூலமாக அடையப்படக்கூடியது என்பதால், இதில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். பக்தியில் அனுபவம் பெற்றவர்களின் அறிவுரைப்படி, நாம் நமது வாழ்க்கையில் கிருஷ்ணரை மையப்படுத்த வேண்டும். அவ்வாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நம்முடைய வாழ்க்கையில் சேர்ப்பதன் மூலமாக, நமக்கு உண்மையான ஆன்மீக ஆனந்தம் கிடைக்கும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கலி யுக அவதாரமான சைதன்ய மஹாபிரபு, நம்மைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிப்பதற்காக ஓர் அரிய வரப் பிரசாதத்தை வழங்கியுள்ளார். அவருடைய கருணை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கின்றது. எல்லா வேத சாஸ்திரங்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாம உச்சாடனத்தை ஏற்றுக்கொள்கின்றன. சண்டையும் சச்சரவும் நிறைந்த கலி யுகத்தில், ஹரியின் திருநாமத்தைச் சொல்வதைத் தவிர, ஹரியின் திருநாமத்தைச் சொல்வதைத் தவிர, ஹரியின் திருநாமத்தைச் சொல்வதைத் தவிர, வேறு கதியில்லை, வேறு கதியில்லை, வேறு கதியில்லை என்று பிருஹன் நாரதீய புராணம் தெளிவாகக் கூறுகின்றது.

இப்படிப்பட்ட மிகவுயர்ந்த திருநாமத்தினை சொல்வதற்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், வெவ்வேறு மதத்தினர் என அனைத்து ஜீவராசிகளும் இதனை உச்சாடனம் செய்ய முடியும். இதற்கு எவ்வித தடையும் இல்லை; ஒரே தடை, இதில் ஆர்வமின்றி இருக்கும் நமது மனம் மட்டுமே. நம்முடைய தற்போதைய ஆர்வம் உடலைச் சார்ந்த விஷயங்களின் மீது உள்ளது, ஆனால் நாம் இந்த உடல் அல்ல, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய அம்சங்கள் என்பதை உணரும்போது, படிப்படியாக கிருஷ்ணரின் மீதான நமது ஆர்வத்தினை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை எளிமையான முறையில் உச்சாடனம் செய்ய மக்களை நாங்கள் அழைக்கும்போது, இதன் எளிமையினை சிலர் மலிவாக நினைத்துக்கொள்கிறார்கள். மஹா மந்திர உச்சாடனம் சாதாரண மக்களுக்கு என்று எண்ணி, கடினமான யோக மார்க்கம், தியான மார்க்கம், உடலை வருத்தக்கூடிய தவம் புரிதல் போன்றவற்றில் பெரிய அளவில் பணத்தை விரயம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல தவறான போலி ஆன்மீகவாதிகள் தினந்தோறும் தோன்றுகிறார்கள். இன்றைய பாரத நாட்டில் ஆன்மீகம் ஒரு தொழிலாக மாறிவிட்டதை காணும்போது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.

மக்கள் சாஸ்திரங்களின் வாயிலாக ஆன்மீகத்தைப் பயில வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று அவருடைய தாமரைப் பாதங்களை அடையக்கூடிய பக்தி யோகத்தை, குறிப்பாக, சைதன்ய மஹாபிரபு போதித்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலமாக யார் வேண்டுமானாலும் கிருஷ்ண உணர்வை எளிதில் பெற முடியும். இதன் மூலமாக பகவானுடைய ஆன்மீகத் திருநாட்டை அடைந்து, முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த தற்காலிக உலகில் மீண்டும் வருவதைத் தடுக்கலாம்.

எனவே, கவலைகளை நன்முறையில் தீர்க்க விரும்புவோர் அர்ஜுனனைப் போல் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும். இதுவே கிருஷ்ண உணர்விற்கான வழியாகும். பெறற்கரிய மனித வாழ்வை கிருஷ்ண உணர்வை விருத்தி செய்வதில் பயன்படுத்தி உண்மையான மகிழ்ச்சியை அடைவோம்.

கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் ஏதுமின்றி, அனைவரும் பங்கு கொண்டு மகிழ்ச்சியடையலாம்.

2017-01-24T13:00:02+00:00July, 2014|பொது|0 Comments

About the Author:

mm
திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment