செய்யும் தொழிலே தெய்வமா?

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்

மங்காத புகழ், வற்றாத செல்வம், இணையில்லா இன்பம்ஶீஇவையே நாம் விரும்புபவை. இவை நம்மிடம் இருந்தால், உறவினர்கள், நண்பர்கள் என யாரும் நம்மை விட்டு நீங்கார்; இவை இல்லாவிடில், யாரும் நம்மிடம் தங்கார். எனவே, இவற்றைப் பெற நாம் செய்யும் வேலை (அல்லது தொழில்) மிகவும் முக்கியமானது என்பதால், அந்த தொழிலே நமக்கு தெய்வமாகும்.” இதுவே பலரின் நம்பிக்கை. இதைச் சற்று ஆராய்வோம்.

 

தொழில் முக்கியமா, இன்பம் முக்கியமா?

செய்யும் தொழிலே தெய்வம்” என்று நம்புவோரின் மாத சம்பளத்தை அவர்களின் முதலாளி கொடுக்காவிடில், அவர்கள் என்ன செய்வார்கள்? தெய்வத்தை விட்டுச் செல்லக் கூடாது என்று தொடர்ந்து வேலை செய்வார்களா? நிச்சயம் இல்லை. திறன் வாய்ந்தவர்களாக இருந்தால், தற்போதைய வேலையை உடனே விட்டுவிட்டு வேறு வேலை தேடத் தொடங்குவார்கள். அப்படியெனில், தொழிலே தெய்வம் என்ற அவர்களின் நம்பிக் கை எங்கே சென்றது? அந்த நம்பிக்கையின் பொருள் என்ன?

மக்களின் ஒரே தேவை: இன்பம். இன்பத்தை வழங்குபவர் யாராக இருந்தாலும் அவரே இறைவன், எதுவாக இருந்தாலும் அதுவே இறைவன். அவ்வளவுதான். நான் செய்யும் தொழில் எனக்கு இன்பத்தை வழங்கினால், அஃது எனக்கு தெய்வம்.”–இதுவே மக்களின் உண்மையான எண்ணம்.

முதலாளிகளின் வாக்கியம்

முதலாளிகள் இன்பம் அனுபவிக்க வேண்டுமெனில், தொழிலாளிகள் தங்கள் பணியை எந்தவொரு கேள்வியும் கேட்காமல் சிறப்பான முறையில் மனமாற செய்ய வேண்டும். அவ்வாறு அவர்களை செய்ய வைப்பதற்கான ஒரு வாக்கியம்: செய்யும் தொழிலே தெய்வம். தொழிற்சாலைக்கு சென்று பணிபுரிய மறுத்த மக்களிடம், இந்தியாவின் பெருந் தலைவர் ஒருவர், தொழிற்சாலைகளே நவீன இந்தியாவின் கோவில்கள், இங்குள்ள இயந்திரங்களே நமது கடவுள்கள்,” என்றார்.

இயற்கையாகவே கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கடவுளிடமிருந்து திசைதிருப்பும் முயற்சியே இது. கடவுளைக் காட்டி வேலை வாங்கும் முதலாளிகளின் சாமர்த்தியமே இது. இட்ட பணியினை தெய்வமாக ஏற்று மக்கள் பணிபுரிந்தால், முதலாளிகள் அல்லது தலைவர்களுக்கு அதிக இலாபம் கிட்டும். அதனால் அவர்கள் நிச்சயம் இன்பமாக வாழலாம். அத்தகு இன்பமளிக்கும் தொழிலை முதலாளிகள் உண்மையிலேயே தெய்வமாக எண்ணுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

 

விதிக்கப்பட்ட கடமை என்றால் என்னவென்றே தெரியாமல், ஏதொவொரு தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு, அதுவே தெய்வம் என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

சாதாரண மக்களின் நிலை

சாதாரண மக்கள் தங்களது தொழிலை தெய்வமாக எண்ணுவது கிடையாது. அப்படி நினைத்தால், யாரும் தங்களுடைய வேலையை மாற்ற மாட்டார்கள், எந்த வேலையைச் செய்கிறார்களோ இறுதிவரை அதே வேலையைச் செய்வதில் திருப்தியுடன் இருப்பர். ஆனால் யாரும் உளமாற தங்களது தொழிலை தெய்வமாக எண்ணுவதில்லை என்பதே உண்மை. முன்னரே கூறியபடி, சம்பளம் கிடைக்காவிடில், தங்களது தெய்வத்தை ஒதுக்கிவிட்டு அடுத்த தெய்வத்தை நோக்கி பெரும்பாலான மக்கள் சென்றுவிடுவர். வியாபாரம் சரியில்லாவிடில், அடுத்த வியாபாரத்திற்கு மாறிடுவர். விரும்பும் இன்பத்தை விரைவாக தரக்கூடிய தொழிலையே அனைவரும் விரும்புகின்றனர்.

அதாவது, இவர்களின் தெய்வம் புலனின்பமே, தொழில்கள் அல்ல. தான் செய்யும் வேலையினால் ஒருவனுக்கு போதிய வசதிகள் கிடைக்காவிடில், அவனின் சுற்றம், குடும்பம் என அனைவரும் அவனை ஏளனம் செய்வர். அப்போது அவன் தனது இயலாமையை எண்ணி வருந்துகின்றான், தெய்வமான தனது தொழிலினை இகழ்கின்றான்.

நவீன உலகில், எவ்வளவு பணம் இருந்தாலும் போதாது என்பதால், பெரும்பாலான மக்களுக்கு தங்கள் தொழிலில் வரும் வருமானம் போதவில்லை. எனவே, தங்கள் தெய்வமான தொழிலில் ஏமாற்றுகின்றனர், லஞ்சம் வாங்குகின்றனர், திருடுகின்றனர், என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கின்றனர். தொழில் என்னும் தெய்வத்தினால் இவர்களை திருப்தி செய்ய முடியவில்லையோ!

தெய்வம் இன்பம் தருவதற்காகவா?

இன்பம் தருவதே தெய்வத்தின் வேலை என்று இவர்கள் எண்ணுகின்றனர். என்னே அறியாமை! கடவுள் நமது விருப்பத்தின்படி செயல்பட வேண்டும் என்று நினைப்பது சரியா? இறைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது முறையா?

ஆயினும், பெரும்பாலான மக்கள் இறைவனை அப்படித்தான் அணுகுகின்றனர். இறைவன் என் எதிரிகளை ஒழிக்க வேண்டும், என்னை நோயின்றி வளமாக வைத்திட வேண்டும்,” என்ற எண்ணம் கொண்டோர் ஏராளம். அவர்களுக்கு இன்பமே குறிக்கோள். எங்கு கிடைத்தாலும், அதை ஏற்றுக்கொள்வர், கொடுப்பவரைக் கடவுளாகவும் புகழ்வர். அரசியல்வாதிகள் கடவுளாவதும், நடிகர் நடிகைகள் கடவுளாவதும், கிரிக்கெட் வீரர்கள் கடவுளாவதும் மட்டுமின்றி, பல்வேறு போலிச் சாமியார்கள் கடவுளாவதும் இதனால்தான்.

சொந்த இன்பத்திற்காக வேலை செய்துவிட்டு, செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறுதல் துளியும் அர்த்தமற்ற ஒன்று என்பதை வாசகர்கள் தற்போது புரிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

கடமையைச் செய்தல் கடவுளாகுமே

சரி, இன்பத்திற்காக வேண்டாம். எந்த ஏமாற்றுத்தனமும் இன்றி, இஃது என் கடமை” என்று கடமைக்காக தொழில் செய் தால், அத்தகு தொழில் கடவுளாகுமே என்று சிலர் கூறலாம்.

ஒவ்வொருவரும் தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்பவர்கள் பரத்தை அடைவார்கள் என்றும் கீதையில் கூறப்பட்டுள்ளதை அவர்கள் மேற்கோள் காட்டுவர். அவரவருக்கு இருக்கும் தொழிலையே செய்ய வேண்டும், அடுத்தவர் தொழிலை எக்காரணம் கொண்டும் செய்ய முற்படக் கூடாது என்று கிருஷ்ணர் அறிவுறுத்துவதால், ஒவ்வொருவரும் அவரவரது தொழிலைக் கடவுளாக ஏற்று முறையாகச் செயல்படுவதில் என்ன தவறு? கீதையின் பல பகுதிகளில், கடமையைச் செய்யும்படி கிருஷ்ணர் வலியுறுத்தியுள்ளாரே என்றெல்லாம் வாதங்கள் வைக்கப்படலாம்.

விதிக்கப்பட்ட கடமைகள் என்றால் என்ன?

விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதைப் பற்றி கிருஷ்ணர் கீதையில் பல இடங்களில் வலியுறுத்துவது உண்மையே. வாதத்திற்கு பதிலுரைப்பதற்கு முன்பாக, விதிக்கப்பட்ட கடமைகள் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

வேத வழக்கத்தின்படி, மனித சமுதாயம் அவர்களது குணம் மற்றும் தொழிலை (கவனிக்கவும்: பிறப்பை அல்ல) அடிப்படையாகக் கொண்டு, புத்திசாலிப் பிரிவினர் (பிராமணர்), நிர்வாகப் பிரிவினர் (சத்திரியர்), வியாபாரம் செய்வோர் (வைசியர்), உடலால் உழைப்போர் (சூத்திரர்) என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் என்று சில குறிப்பிட்ட கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன (பார்க்க, பகவத் கீதை 18.42-44). அத்தகு கடமைகளை நிறைவேற்றுவதை கிருஷ்ணர் வலியுறுத்துகிறார். இந்த நான்கு பிரிவுகள் ஆன்மீக வாழ்விற்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய சமுதாயத்திலும் இப்பிரிவுகள் உள்ளன, ஆனால் அவை முறையானவை அல்ல. உதாரணமாக, வியாபாரம் செய்பவர்கள் உள்ளனர்; ஆனால் அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களும் வழிமுறைகளும் சாஸ்திரங்களால் பரிந்துரைக்கப்படுபவை அல்ல. தொழிற்சாலைகளில் தயாரிக்கப் படும் பொருட்களை வியாபாரம் செய்வோர், ஒரு விதத்தில் வைசியர் என்றபோதிலும், முறையான வைசியர் அல்ல.

இவ்வாறாக, இன்றைய மக்களுக்கு விதிக்கப்பட்ட கடமை என்றாலே என்னவென்று தெரியாது. ஏதோவொரு தொழிற்சாலை, கடை, அலுவலகம் என்று வேலை/தொழில் செய்துவிட்டு, அதுவே தெய்வம் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

தொழிலைச் செய்வது மட்டும் கடமையா?

இது மட்டுமின்றி, விதிக்கப்பட்ட கடமை என்பது வெறும் தொழிலைச் செய்வது மட்டுமல்ல. விதிக்கப்பட்ட கடமையின் ஒரு பகுதி, அன்றாடம் தவறாது பகவான் விஷ்ணுவை வழிபடுவதாகும். மேலும், இதர பல ஆன்மீகக் கடமைகளும் கர்ம யோகத்தின் பகுதிகளாக அமைகின்றன. விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய விழைவோர் ஆன்மீகக் கடமைகளை ஆற்றாவிடில், அவர்கள் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை என்றே பொருள். தொழிற் கடமையைச் செய்து விட்டால்போதும், கடவுளை வழிபட வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவது முற்றிலும் தவறு.

கர்ம யோகத்தில் கர்மமே கடவுளா?

வேத விதிகளின்படி தனது தொழிற் கடமையையும் ஆன்மீகக் கடமையையும் ஒருவர் முறையாகச் செய்வதாக எடுத்துக்கொள்வோம். அப்போதுகூட அவரது கர்மம் (தொழில்) என்றும் தெய்வமாக முடியாது. தொழில் வேறு, தெய்வம் வேறு.

தெய்வம் என்பவர் எல்லாவற்றையும் படைத்து, பராமரித்து, இறுதியில் அழிப்பவராவார். ஸ்ரீ கிருஷ்ணரே அந்த தெய்வம், முழுமுதற் கடவுள். நாம் செய்யும் தொழில் கிருஷ்ணர் அல்ல, வெறும் தொழில். தொழிலையும் தெய்வத்தையும் சமமாக நினைப்பது மிகப்பெரிய அபராதம். இதனை அறியாமை என்பதா, மூடத்தனம் என்பதா, அல்லது அயோக்கியத்தனம் என்பதா?

கர்ம யோகம் இன்றைக்கு சாத்தியமா?

தொழில் தெய்வமல்ல என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது. நமது உண்மையான தொழில் என்ன என்பதையும் உண்மையான தெய்வம் யார் என்பதையும் அறிதல் அவசியம்.

முறையான கர்ம யோகத்தைப் பயிற்சி செய்ய வர்ணாஷ்ரமம் அவசியம் என்பதை முன்னரே கண்டோம். தற்போதைய சூழலில் அஃது இல்லை என்பதால், கர்ம யோகத்தைப் பயிற்சி செய்வது அசாத்தியமே. ஏதோ ஒரு வேலையை செய்துவிட்டு, அதையே தெய்வம் என்று நினைத்துக் கொண்டு வாழ்வதைவிட, கலி யுகத்திற்கு உகந்த யோகமான பக்தி யோகத்தைப் பயிற்சி செய்வதே சிறந்ததாகும். பக்தி யோகமானது கர்ம யோகம் மட்டுமின்றி, ஞான யோகம், தியான யோகம் என எல்லா யோகங்களைக் காட்டிலும் சிறந்ததாகும் (பகவத் கீதை 6.47). இதுவே நமது இயற்கையான நிலை.

நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீக ஆத்மாக்களாகிய நம் அனைவரின் இயற்கை நிலை தெய்வத்திற்கு (கிருஷ்ணருக்கு) நேரடியாகத் தொண்டு செய்வதே. அத்தகைய நேரடித் தொண்டு பக்தி யோகம் எனப்படுகிறது. அதனை விடுத்து, ஜடவுலகின் தேவையற்ற காரியங்களில் இன்பமடைய முயற்சிக்கின்றோம். கிருஷ்ணரின் மீதான தூய பக்தித் தொண்டு மட்டுமே ஆத்மாவிற்கு உண்மையான திருப்தியை வழங்கக்கூடும், வேறெந்த செயலும் உண்மையான ஆனந்தத்தினை வழங்க முடியாது.

இன்பத்தை வேண்டி பல்வேறு தொழில்களைச் செய்கின்ற நாம், தொழில்களை தெய்வங்களாக எண்ணி காலத்தினை வீணாக்குகின்ற நாம், உண்மையாக செய்ய வேண்டிய தொழில் பக்தித் தொண்டு மட்டுமே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பிறவிதோறும் அரைத்தவற்றையே மீண்டும் அரைத்திடாது இனியுள்ள காலங்களையாவது நன்முறையில் பக்தித் தொண்டில் ஈடுபடுத்தி உண்மையான ஆனந்தத்தினை அடைவோமாக.

 

பாகவதத்திலிருந்து சில ஸ்லோகங்கள்

சாஸ்திரங்களிலேயே மிகவுயர்ந்த பாகவத புராணத்தின் பின்வரும் ஸ்லோகங்கள் இவ்விஷயத்தில் மிகவும் பயனுள்ளவையாக அமையும்.

ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே

அஹைதுக்யப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி

புலன்களுக்கு அப்பாற்பட்ட புருஷரின் மீதான பக்தித் தொண்டை எதனால் அடைய முடியுமோ, அதுவே மனித சமுதாயத்திற்கான மிகவுயர்ந்த தொழிலாகும் (தர்மமாகும்). ஆத்மாவை முற்றிலும் திருப்திபடுத்துவதற்கு, இத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் இல்லாமல், இடையறாது செய்யப்படுதல் அவசியம்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6)  

கிருஷ்ணரின் மீதான தூய பக்தித் தொண்டில் ஈடுபடுவதே நமது உண்மையான தொழில். வேறு விதமாகக் கூறினால், நாம் செய்யும் அனைத்து காரியங்களும் கிருஷ்ண பக்தியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும், ஜடப் பலன்களுக்காக இருக்கக் கூடாது.

அச்செயல்கள் கிருஷ்ணரின் மீதான பற்றுதலை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். பக்தித் தொண்டினால் அப்பற்றுதல் வளர்வதோடு மட்டுமின்றி, களங்கமற்ற ஞானமும் உலக வாழ்வின் மீதான பற்றின்மையும் தானாக அடையப் பெறுகின்றது. (ஸ்ரீமத் பாகவதம் 1.2.7) ஞானிகளும் யோகிகளும் கடுந்தவங்களின் மூலமாக, ஜடவுலகப் பற்றுதல்களைக் கைவிட முயல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கிருஷ்ணரின் மீது பற்றுதல் இல்லாததால், அவர்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், அன்னதான சத்திரங்கள் என மீண்டும் ஜடவுலகச் செயல்களுக்குத் திரும்புவதை நம் வாழ்வில் தெளிவாகக் காண்கிறோம்.

பசித்தவன் உணவின் ஒவ்வொரு கவளம் உண்ணும் போதும், பசி நீங்குவதையும் உணவின் சுவையினால் ஓர் ஆனந்தத்தை அடைவதையும் ஒரே சமயத்தில் உணர்வது போன்று, பக்தியில் ஈடுபடுவோர், ஞானத்தையும் துறவையும் தானாகப் பெறுகின்றனர். அவர்களுடைய நேரம் துளியளவும் விரயமாவதில்லை, மற்றவர்களுடைய நேரம் முற்றிலும் விரயமே.

தர்ம ஸ்வனுஷ்டித: பும்ஸாம் விஷ்வக்ஸேன-கதாஸுய:

நோத்பாதயேத் யதி ரதிம் ஷ்ரம ஏவ ஹி கேவலம்

மனிதர்கள் தங்களது சொந்த நிலைக்கு ஏற்றவாறு செய்யும் தொழில்கள், பரம புருஷ பகவானைப் பற்றிய செய்திகளின் மீதான பற்றுதலைத் தூண்டவில்லை என்றால், அவை யனைத்தும் பயனற்ற உழைப்பேயாகும்.” (பாகவதம் 1.2.8) 

நவீன உலகின் பெரும்பாலான மக்களால் செய்யப்படும் தொழில்கள் துளியும் கிருஷ்ண பக்தியுடன் தொடர்புடையதாக இல்லை. இவையனைத்தையும் பயனற்ற உழைப்பாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. அத்தகு பயனற்ற கால விரயத்தினை சிலர் தெய்வம் என்று நம்பிக் கொண்டுள்ளது நிச்சயம் விநோதமானதே.

ஸ்ரீல பிரபுபாதரின் தர்மம், தெய்வீக நிலையை அடைவதற்கான வழி என்னும் புத்தகத்தினை கவனத்துடன் படிக்க வேண்டுகிறேன். யாம் இங்கு கூறிய விஷயங்களை ஸ்ரீல பிரபுபாதர் அங்கே மிகவும் ஆழமாக விவாதித்துள்ளார்.

மனிதர்கள் செய்யும் தொழில்கள் கிருஷ்ணரை நோக்கி இருக்க வேண்டும்; இல்லையேல் அவையனைத்தும் பயனற்ற உழைப்பே.

தெய்வீகமான தொழில்

இதுதான் முடிவுரை: நமது செயல்கள் கிருஷ்ணரின் மீதான பக்தித் தொண்டினை வளர்க்கும்படி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செயல்கள் தெய்வீகமான செயல்கள் எனப்படுகின்றன. கிருஷ்ணருடன் தொடர்புடையவை அனைத்தும் தெய்வீகமானவை. அவருடைய திருநாமம் தெய்வீகமானது, அவருடைய திருவுருவம் தெய்வீகமானது, அவரது திருத்தன்மைகள் தெய்வீகமானவை, அவருடைய திருவிளையாடல்கள் (லீலைகள்) தெய்வீகமானவை, அவருக்காக மற்றவர்கள் செய்யும் திருத்தொண்டும் (பக்தியும்) தெய்வீகமானது; ஏனெனில், கிருஷ்ணரே தெய்வம்.

இதை விடுத்து புலனின்பத்திற்காக செய்யப்படும் அனைத்து செயல்களும் அறியாமையால் செய்யப்படுபவையே. அவற்றால் ஊசி முனையளவும் நமக்கு உண்மையான பலன் இல்லை. அச்செயல்கள் ஒருபோதும் தெய்வமாகவோ தெய்வீகமாகவோ கருதப்படக் கூடாது, கருதப்பட முடியாது. செய்யும் தொழிலே தெய்வம் எனக் கூறுவது அறியாமை, கூறுவோர் அறியாதோர், ஆமோதிப்பவரும் அறியாதோர். அறியாமையில் இருப்பது இன்பமல்ல, உண்மை ஞானத்தைப் பெற்று பக்தித் தொண்டில் ஈடுபடுவதே இன்பம்.

 

 

2017-02-06T12:36:52+00:00October, 2012|ஞான வாள்|1 Comment

About the Author:

திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

One Comment

  1. Kumaresan June 18, 2018 at 12:39 pm - Reply

    Hare Krishna thank you Prabhu ji

Leave A Comment