வேண்டுவன வேண்டாமை வேண்டும்

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

இறைவன்–எல்லாம் வல்லவர்; எதையும் வழங்கும் வல்லமை படைத்த அவரிடம் நாம் வேண்டுவது என்னவாக இருக்க வேண்டும்? அதை எப்படி வேண்ட வேண்டும்? தூய பக்தர்களின் பிரார்த்தனைகளின் மூலமாக அதனை அறிந்துகொள்ள முயல்வோம்.

வழங்கியவர்: கீத கோவிந்த தாஸி

பொன் பொருள் வேண்டுவோர்

“செல்வம் கொடுங்கள், பலம் கொடுங்கள், புகழ் கொடுங்கள், நல்ல மனைவி கொடுங்கள்,” தனம் தேஹி ரூபம் தேஹி ரூபவதி பார்யம் தேஹி–இதுவே, அம்மன், துர்கை, காளி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் தேவியை அணுகுவோரின் பிரபலமான பிரார்த்தனையாகும். தமிழில் எளிமையாகக் கூறினால், “பொன்னோடும் பொருளோடும் வைப்பாய் என்னை,” என்று வேண்டுகின்றனர்.

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், கோலம் செய் துங்கக் கரிமுகத்து தூமணியே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா,” என்னும் பிரார்த்தனை பிள்ளையாரை வணங்கச் செல்வோர் முன்வைக்கும் பிரபலமான ஒன்றாகும். இப்பிரார்த்தனையின் மூலம் மக்கள் அவரிடம் பௌதிகக் கல்வியைக் கேட்கின்றனர்.

ஓம் ஜெய ஜகதீஷ ஹரே என்னும் பிரபலமான வட இந்தியப் பாடலைப் பாடுவோர், ஒரு பெரிய பட்டியலைப் போட்டு, “இவற்றையெல்லாம் கொடுத்து விடுங்கள்” என்று வேண்டுகின்றனர்.

திருப்பதி உண்டியலில் நூறு ரூபாய் போட்டுவிட்டு அதனை பல இலட்சமாக மாற்றிக் கொடுங்கள் என்று கேட்பவர்கள் ஏராளம். நான் தங்களுக்கு நெய் தருகிறேன், முடி தருகிறேன், பொருள் தருகிறேன்; பதிலுக்கு என்னை எல்லா வளமுடன் வாழவை என்று பிரார்த்திக்கின்றனர்; இது ஒரு மறைமுகமான வியாபாரமே.

“பரலோகத்தில் வாழும் பிதாவே, அன்றாட உணவை எங்களுக்கு அளித்தருளும்,” என்று கிருஸ்துவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

தேவர்கள்கூட, அண்டாதி பதியே நமஹ என்றும், அசுர ஸத்ருவே நமஹ என்றும் பகவானைப் புகழ்ந்து, அதன் மூலமாக அசுரர்களின் தொல்லைகளிலிருந்து அவர் தம்மை விடுவிக்க வேண்டும் என்று வேண்டு கின்றனர்.

இத்தகைய பிரார்த்தனைகள் அவசியமா?

எத்தனை எத்தனையோ பாடல்கள், பிரார்த்தனைகள்; அவற்றில் பெரும் பாலானவை ஏதாவது ஒன்றை பெறுவதற்காகவே உள்ளன. டன் கணக்கில் சாப்பிடும் காட்டு யானைகள் முதல், சின்னஞ்சிறு எறும்புகள் வரை அனைவரையும் இறைவன் பராமரித்து வருகிறார்; கேட்காமலேயே உணவு, உடை, இருப்பிடம், என அனைத்து வசதிகளையும் வழங்கும் பகவானிடத்தில், ஏதேனும் பௌதிக நன்மையை வேண்டி பிரார்த்தனை செய்தல் முறையானதா? தன் மக்களுக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கும் மன்னனிடம் சென்று, ஒரு பிடி மண் கொடுங்கள் என்று கேட்பது அவ்வளவு புத்திசாலித்தனமா?

பொன், பொருள், புகழ், பதவி, அழகு, ஆரோக்கியம் என பலவற்றை வேண்டி செய்யப்படும் பிரார்த்தனைகளே பக்தி என்று மக்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். இத்தகு அறியாமையின் காரணத்தால், நோய் தீர்க்கும் ஜெப கூட்டங்களும் அருள் வழங்கும் போலி சாமியார்களும் அதிகரித்துக் கொண்டுள்ளனர்–அங்கு செல்லும் கூட்டமும் அதிகரிக்கின்றது.

மக்களின் அறியாமையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, நிறைய பத்திரிகைகள் தற்போது பக்தி இணைப்பிதழ், பக்திப் பக்கம், ஜோதிடம், பரிகாரங்கள் என பல விஷயங்களைப் பெருக்கிக் கொண்டுள்ளன.

தொடர்கதை, சிறுகதை, நாவல்–இவற்றை யார் வேண்டுமானாலும் எழுதலாம்; எழுதும் எழுத்தாளருக்கு கற்பனை ஓட்டங்களும் உலக அனுபவங்களுமே தேவை. ஆனால் பக்தி சம்மந்தப்பட்ட விஷயங்களை யார் வேண்டுமானாலும் எழுத முடியாது. குரு, ஸாது, மற்றும் சாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டே ஆன்மீக விஷயங்கள் எழுதப்பட வேண்டும்.

வேத சாஸ்திரங்கள் முழுமுதற் கடவுள் யார் என்பதையும் அவரிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் நமக்குத் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றன. இருப்பினும் அவற்றைப் புரிந்துகொள்வது சாதாரண மனிதர்களுக்கு எளிதல்ல என்பதால், ஆச்சாரியர்களின் விளக்கங்களைக் கொண்டு சாஸ்திரங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முறையான குரு சீடப் பரம்பரையில் வந்தவரும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியருமான ஸ்ரீல பிரபுபாதர், தனது புத்தகங்களின் மூல மாகவும் உரைகளின் மூலமாகவும் பக்தியைப் பற்றிய தெளிவான கருத்துகளை நமக்கு வழங்கியுள்ளார்.

முறையான ஆன்மீக விஷயங்களை எழுதுவோர் எவரும் பௌதிக இன்பத்தை நாடும்படி மக்களை அறிவுறுத்த மாட்டார்கள். வேத சாஸ்திரங்கள் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எதையும் எதிர்பார்க்காமல் கைங்கரியம் செய்யும்படி நம்மை அறிவுறுத்துகின்றன–முறையான குரு சீடப் பரம்பரையில் வருவோர் அவ்வாறே மக்களை வழிநடத்துவர்.

யாரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

பெரும்பாலான மனிதர்கள் பௌதிக ஆசையில் மூழ்கியிருப்பதால், அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு தேவர்களை அணுகுகின்றனர். உதாரணமாக, தடைகளை நீக்க விரும்புவோர் பிள்ளையாரையும், வெற்றியை விரும்புவோர் முருகனையும், உடல் ஆரோக்கியத்தை விரும்புவோர் சூரியனையும், நல்ல கணவனை விரும்புவோர் அம்மனையும், நல்ல மனைவியை விரும்புவோர் சிவபெருமானையும் வழிபடுவதை நாம் அன்றாட வாழ்வில் காணலாம்.

இருப்பினும், தேவர்கள் அனைவருக்கும் ஆதி மூலமாக விளங்கும் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவதே சாலச் சிறந்தது என்றும், அவரால் மட்டுமே முக்தியை வழங்க முடியும் என்றும் சாஸ்திரங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இதனை பகவத் தரிசனத்தில் நாம் முன்னரே விளக்கியுள்ளோம்)

தேவர்களால் வழங்கப்படும் நன்மைகள் யாவும் உண்மையில் தம்மால் வழங்கப்படுபவையே என்றும், தேவர்களை வழிபடுதல் புத்திசாலித்தனமல்ல என்றும் கிருஷ்ணர் கீதையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஞானத்தில் முதிர்ச்சி பெற்ற நபர்கள் முழுமுதற் கடவுளை மட்டுமே வழிபடுவர் என்பதையும் அத்தகைய வழிபாடு எந்தவொரு பௌதிக நன்மையையும் எதிர்பார்த்தது அல்ல என்பதையும் நாம் பல்வேறு இடங்களில் காண்கிறோம்.

என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்?

“அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் தேவைதானே? அதனைக் கடவுளிடம் கேட்பதில் தவறு என்ன?” என்று ஒருவர் வினவலாம். உடல் ஆரோக்கியம் இல்லையெனில் இறைவனுக்கு எவ்வாறு தொண்டு செய்ய முடியும்?” என்றும் கேட்கலாம். ஒருவிதத்தில் பார்த்தால், அத்தகைய பிரார்த்தனைகள் ஏற்கத்தக்கவை–அதாவது, கடவுளை வழிபடாமல் நாத்திகராக இருப்பவர்களைக் காட்டிலும், பௌதிக நன்மையைப் பெறுவதற்காக அவரை வழிபடும் ஆத்திகன் நிச்சயம் சிறந்தவனே. இருப்பினும், இறுதி நன்மையை அடைய விரும்புவோர், முழுமுதற் கடவுளிடமிருந்து எந்த பௌதிக நன்மையையும் வேண்டக் கூடாது.

கிருஷ்ணரின் மீது அன்பு செலுத்துவதே நமது இயற்கையான நிலை. நாம் அவர்மீது அன்பு செலுத்தினால், அவர் தம்மையே நம்மிடம் ஒப்படைத்துவிடுவார். கிருஷ்ணரே நமக்குக் கிடைத்துவிடும்பட்சத்தில், இவ்வுலகின் அற்ப சுகங்களுக்கு ஆசைப்படலாமா? கிருஷ்ணரை நாம் அடைந்துவிட்டால், மற்றவை அனைத்தும் தாமாகவே அடையப்பட்டுவிடும். முதுகலைப் பட்டத்தைப் பெற்றவர், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் என்றுதானே அர்த்தம்!

தூய்மையான பக்தரான ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்வை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவரிடம் பொருளோ பணமோ புகழோ உடல் ஆரோக்கியமோ இல்லாதபட்சத்திலும் தொடர்ந்து பக்தித் தொண்டை மேற்கொண்டார், தனது குருவின் ஆணைப்படி பிரசாரத்தில் ஈடுபட்டார்; காலப்போக்கில் அவர் உலகமெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கினார், கோவில்களை கட்டினார், பல்வேறு ஆன்மீக நூல்களை எழுதினார்–இதுவரை யாருமே சாதிக்காததை பக்தி மார்கத்தில் சாதித்துக் காட்டினார். தம்மிடமிருந்து எதையும் விரும்பாமல் தமக்குத் தொண்டு செய்யும் பக்தர்களுக்கு, அத்தகைய தொண்டிற்குத் தேவையான அனைத்தையும் பகவானே தருகிறார் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாம் நமது உண்மையான நன்மையை விரும்பினால், உயர்ந்த பக்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவர்களைப் போன்று பிரார்த்தனை செய்ய வேண்டும்; அப்போது நாமும் கிருஷ்ணரின் மீதான தூய அன்பினைப் பெற முடியும்.

 

தூய பக்தர்களின் பிரார்த்தனைகள்–சில உதாரணங்கள்

பிரஹலாதர்: தன் தந்தை ஹிரண்யகசிபுவால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தபோதிலும், மாறாத பக்தி கொண்டிருந்த பிரஹலாத மகாராஜர் எல்லா இன்னல்களிலிருந்தும் காப்பாற்றப்பட்டார். ஐந்தே வயதான தனது பக்தனுக்காக அவர் ஓர் அற்புத அவதாரமே எடுத்தார். நரசிம்மர் தனது தூய பக்தனான பிரஹலாதரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டதற்கு, வரம் வேண்டி பக்தி செய்வதற்கு தான் ஒரு வியாபாரி அல்ல என்று பணிவுடன் எடுத்துரைத்த பிரஹலாதர், அவ்வாறு ஏதேனும் வரமளிக்க விரும்பினால், தனது இதயத்தில் துளியும் பௌதிக ஆசைகள் இல்லாமல் இருக்கும்படி வரமளிக்க வேண்டினார். மேலும், பகவானை அறியாமல் இவ்வுலகில் சுற்றித் திரியும் அனைத்து மூடர்களையும் அவரது திருவடி சேவைக்கு கொண்டு வர அவர் விரும்பினார்–வேறு விதமாகக் கூறினால், அவர் தனது சொந்த முக்தியில்கூட ஆர்வம் காட்டவில்லை.

குந்திதேவி: தனது வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த குந்திதேவி, அத்துன்பங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று வேண்டுகிறார்; ஏனெனில், அத்துன்பங்கள் இருந்தபோது, அவரால் பகவானை மீண்டும் மீண்டும் தரிசிக்க முடிந்ததே. மேலும், பௌதிக வாழ்வில் ஆர்வமற்றவர்களால் (சலிப்படைந்தவர்களால்) மட்டுமே பகவானை அடைய முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். செல்வம், உயர்குடி, கல்வி, அழகு போன்றவற்றைப் பெற முயற்சி செய்பவர்களால் உண்மையான உணர்வுடன் கிருஷ்ணரை நெருங்கவே முடியாது என்று கூறி, பௌதிக விஷயங்களை அடைய நினைப்பதும் பக்தியும் வெவ்வேறு என தெளிவுபடுத்துகிறார்.

குலசேகர ஆழ்வார்: மன்னராக இருந்து அதன் பின்னர் தனது அரச பதவியைத் துறந்து வாழ்ந்த குலசேகர ஆழ்வார், தனது முகுந்த மாலை ஸ்தோத்திரத்தில் (5), “எனதருமை பகவானே! எனக்கு பௌதிக அறக் கொள்கைகளில் ஆர்வம் இல்லை, செல்வம் சேகரிப்பதற்கோ இந்திரிய சுகங்களை அனுபவிப்பதற்கோ ஆர்வம் இல்லை. என் கர்ம வினைப் பயனால் எனக்கு வந்து சேர வேண்டியவை அனைத்தும் தானாக வரும். தங்களின் தாமரைப் பாதங்களுக்கு பிறவிதோறும் மாறாத தொண்டு புரிதல் என்னும் மிகவுயர்ந்த வரத்தை மட்டுமே நான் வேண்டுகிறேன்,” என்று கூறுகிறார். இவ்வாறு பாடுவதன் மூலம் மிகவுயர்ந்த வரம் என்ன என்பதை நமக்கு அவர் போதிக்கின்றார்.

பக்திவினோத தாகூர்: கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் மிகச்சிறந்த ஆச்சாரியர்களில் ஒருவரான பக்திவினோத தாகூர், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் பக்தனாக வாழ வேண்டும் என்று வேண்டுகிறார். கீட ஜன்ம ஹௌ ஜதா துவா தாஸ், பஹீர்-முக ப்ரஹ்ம-ஜன்மே நாஹி ஆஷ். பக்தனாக பிறக்க நேரிட்டால், புழுவின் உடலில் பிறவியெடுத்தாலும் பரவாயில்லை என்றும், பக்தனாக இல்லாவிடில் பிரம்மாவின் பிறவியும் தனக்கு வேண்டாம் என்றும் அவர் வேண்டுகின்றார்.

சைதன்ய மஹாபிரபு: பக்தியை எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக அவதரித்த பகவான் சைதன்ய மஹாபிரபு, உயர் மதிப்புடைய தனது பிரபலமான சிக்ஷாஷ்டகத்தில் பின்வருமாறு வேண்டுகிறார்:

ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம்

கவிதாம் வா ஜகத் ஈஷ காமயே

மம ஜன்மனி ஜன்மனீஷ்வரே

பவதாத் பக்திர் அஹைதுகீ த்வயி

“எல்லாம் வல்ல பெருமானே, பொருள் வேண்டேன், என்னைப் பின்பற்றுவோரும் வேண்டேன், அழகிய பெண்களும் வேண்டேன்; ஒவ்வொரு பிறவியிலும் உமக்குக் களங்கமற்ற பக்தித் தொண்டாற்ற வேண்டும் என்பதை மட்டுமே யான் வேண்டுகிறேன்.”

அவர் மேலும் கூறுகிறார்:

ஆஷ்லிஷ்ய வா பாத ரதாம் பினஷ்டு மாம்

அதர்ஷனாம் மர்ம ஹதாம் கரோது வா

யதா ததா வா விததாது லம்படோ

மத் ப்ராண நாதஸ் து ஸ ஏவ நாபர:

“கிருஷ்ணர் என்னை முரட்டுத் தனமாக நடத்தினாலும், அணைத்துக் கொண்டாலும், என்முன் தோன்றாது என் இதயத்தை நோகச் செய்தாலும், அவரே என் பிரபுவாவார். அவரைத் தவிர வேறு யாரையும் நான் என் இறைவனாக அறியேன். என்னிடம் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்துகொள்ள அவருக்கு பூரண உரிமை உண்டு. எல்லா சூழ்நிலையிலும் அவரே எனது பிராண நாதர், இதில் எந்த நிபந்தனையும் இல்லை.” 

 

இறுதி விளக்கம்

சிறிதளவு பக்தி செய்துவிட்டு, அதற்குப் பலனாக பகவான் தனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர். தாங்கள் வேண்டியது கிடைக்கவில்லையெனில், வழக்கமாகச் செல்லும் கோவிலுக்குப் போகாமல் வேறு கோவிலுக்குச் செல்லுதல், நாத்திகம் பேசுதல், மதம் மாறுதல் போன்றவை அனைத்தும் இன்றைய உலகில் சாதாரணமாக நடப்பவை. ஆனால் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள், பணம், பொருள், தேவலோக வாழ்வு, புகழ், கல்வி, ஆரோக்கியம், யோக சக்திகள் போன்றவை மட்டுமின்றி, முக்தியையும் வேண்டுவதில்லை. கிருஷ்ணரே வரம் பெற்றுக் கொள்ளும்படி கேட்டாலும் அப்பக்தர்கள் பௌதிக நன்மைகளை வேண்டுவதில்லை. ஸ்ரீ ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், வரதராஜ பெருமாளிடம் கண்களைத் தரும்படி வேண்டுகோள் விடுக்க மறுத்ததை இங்கு நினைவுகூர்வோம். (பார்க்க, பக்கம் 11)

“எனதென்றுஞு ஏதுமில்லை, எல்லாம் உன் அடைக்கலமே” என்று பகவானை சரணடைந்து, பக்தித் தொண்டை மட்டும் வேண்டுவதே மிகச்சிறந்த பிரார்த்தனையாகும். எனவே, பக்தர்கள், உலகாய பொருட்களை வேண்டுவதை வேண்டாமல் இருக்க வேண்டும். உயர்ந்த பக்தர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்று பிரார்த்திக்க வேண்டும்.

ஆழ்வார்களின் பிரார்த்தனைகளில் சில

பச்சை மா மலை போல் மேனி, பவளவாய், கமலச் செங்கண்

அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்

இச் சுவை தவிர, யான் போய் இந்திர-லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே!

“திருவரங்கனே, பச்சை நிற மலை போன்ற திருமேனியும், பவள வாயும், செந்தாமரை போன்ற சிவந்த கண்களும் பெற்றவனே! தேவர்களின் தலைவனே! இடையர் குலத்தின் கொழுந்தே! உலகில் உம் பெயர் சொல்வதால் உண்டாகும் சுவையை விட்டு, வானுலகை ஆளுகின்ற பேறு கிடைப்பதாக இருந்தாலும், அதனை நான் விரும்ப மாட்டேன்.”

–(தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருமாலை, நாலாயிர திவ்ய பிரபந்தம், 873)

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி-அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே

“கார்முகிலின் வண்ணனை, ஆயர்பாடிக் கண்ணனாய் வந்து கள்ளத்தில் வெண்ணெய் உண்டவனை, என் உள்ளம் கவர் கள்வனை உலகின் முதல்வனை – அழகிய திருவரங்கத்திலுள்ள ஆரா அமுதனைக் கண்ட கண்கள் மற்ற எவற்றையும் காண ஆசைப்படாது.”

–(திருப்பாணாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம், 936)

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உமக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நங்காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

“எத்தனை பிறவிகள் எடுத்தாலும், உம்மோடு உறவு கொண்டவர்களாகவே இருப்போம். உமக்கு மட்டுமே அடிமையாயிருக்கக் கடவோம், அதைத் தவிர மற்ற விருப்பங்களை தவிர்த்தருள வேண்டும்.”

–(ஆண்டாள், திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தம், 502)

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives