வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 18-19

சென்ற இதழில் பிருது மன்னரின் சிறப்பான ஆட்சியையும் பூமியின் மீதான கோபத்தில் அவர் அவளை விரட்டியதையும் அவள் செய்த சில பிரார்த்தனைகளையும் கண்டோம். இந்த இதழில், பூமி எவ்வாறு பிருது மன்னரை சமாதானப்படுத்தி எல்லா வளங்களையும் வழங்கினாள் என்பதையும் பிருது மன்னர் எவ்வாறு யாகம் செய்தார் என்பதையும் காணலாம்.

பிருது மன்னரை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் பூமிதேவி பின்வரும் பிரார்த்தனைகளை இதமான முறையில் முன்வைத்தாள்:

வணக்கத்திற்குரிய மன்னரே, சினத்தைத் தவிர்த்து கருணையுடன் நான் கூறுபவற்றைக் கேட்பீராக. மக்களின் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்குவதற்காக மாமுனிவர்கள் சில வழி முறைகளை வகுத்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றைப் பின்பற்றுபவர் மகிழ்ச்சியும் நன்மையும் பெறுவர், மனம்போன போக்கில் வாழ்வோரல்ல. பிரம்மதேவரால் முன்பு படைக்கப்பட்ட விதைகளும் மூலிகைகளும் தாவரங்களும் தானியங்களும் இந்நாளில் ஆன்மீக அறிவற்ற நாஸ்திகர்களால் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அவர்கள் என்னை ஒழுங்காகப் பேணுவதும் இல்லை. புலனுகர்ச்சிக்காக தானியங்களைப் பயன்படுத்தும் அத்திருடர்களை முந்தைய மன்னர்கள் தண்டிக்காமல் இருந்ததோடு என்னையும் தவறாகப் பயன்படுத்தினர். அதனால், நான் இந்த வளங்களையெல்லாம் எனக்குள் மறைத்து வைத்தேன்.

என்னுள் நீண்ட காலமாக புதைந்துவிட்ட இந்த தானிய விதைகளை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை சாஸ்திரபூர்வமாக ஆச்சாரியர்கள் கூறியுள்ள முறைப்படி தாங்கள் நிறைவேற்ற வேண்டும். இப்போது பசுவின் வடிவை ஏற்றுள்ள என்னிடமிருந்து எல்லா வளங்களையும் கறப்பதற்காக நீங்கள் தகுந்த பாத்திரத்தையும் கன்றுக்குட்டியையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், எனது மேற்பரப்பை சமதளமாக்க வேண்டும். அப்போது இந்த நிலப்பரப்பு விளைநிலங்களாக மாறும்.”

அனைவரின் தேவைகளும் பூர்த்தியடைதல்

பூமியின் இந்த மங்கலமான இன்மொழிகளைக் கேட்டு பிருது மன்னர் சாந்தமடைந்து அவற்றை ஏற்றுக் கொண்டார். பின், பூமியிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரதிநிதிகளை கன்றுகளின் வடிவில் அனுப்பி, தமக்குத் தேவையான உணவினை பாலாகக் கறந்து, தத்தமது பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டனர். அதன் விவரம் அட்டவணையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பலவகையான உணவுப் பொருட்களை போதுமான அளவிற்கு பூமி வழங்கியதைக் கண்டு, பிருது மன்னர் அவளிடம் மிகுந்த திருப்தி கொண்டு அவளை சொந்த மகளாக பாவித்து பாசத்தைக் காட்டினார்.

நகர நிர்மாணம்

அதன் பின்னர், பூமிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, பூமியின் மேற்பரப்பை மன்னர் சமதளமாக்கினார். குடிமக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள், வாழ்வாதாரங்கள் முதலியவற்றிற்கு வழிவகை செய்தார். பல்வேறு கிராமங்கள், குடியிருப்புகள், பட்டணங்கள், கோட்டைகள், கோசாலைகள், விருந்தினர் மாளிகைகள், சுரங்கங்கள், விவசாய நகரங்கள், மலைவாழ் குடியிருப்புகள் என பலவற்றை நிர்மாணித்தார்.

 

வளமிக்க யாகம்

(அத்தியாயம் 19) பிருது மன்னர் சரஸ்வதி நதி பாயக்கூடிய பிரம்மாவர்த்தம் எனும் இடத்தில் நூறு அஸ்வமேத யாகங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். யாகத்தில், பகவான் விஷ்ணு, பிரம்மதேவர், சிவபெருமான், முனிவர்கள், சாரணர்கள், கிம்புருஷர்கள், சித்தர்கள், அப்ஸரர்கள், கின்னரர்கள் என அனைத்து லோகவாசிகளும் பங்கேற்றனர். வேள்வி சிறப்பாக நடைபெற்றதால் நாட்டில் செல்வம் கொழித்தது. வற்றாத ஜீவ நதிகள், காலம் தவறாத மழை. கனி தரும் மரங்கள், கனிமங்கள் தரும் மலைகள், முத்து பவளங்களை வாரி வழங்கும் கடல்கள், அபரிமிதமான கால்நடைத் தீவனங்கள், பால் பொருட்கள் முதலியவை அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தன.

இவ்விதமாக, பிருது மன்னர் 99 யாகங்களை நிறைவேற்றினார். அவரது வளங்கள் உயர்வதைக் கண்டு, தேவேந்திரன் பொறாமை கொண்டு, அவற்றைத் தடுக்க முயன்றான்.

குதிரை திருடப்படுதல்

பிருது மன்னர் இறுதியாக நூறாவது அஸ்வமேத யாகத்தைச் செய்வதற்கு ஏற்பாடு செய்தபோது, இந்திரன் யார் கண்ணிலும் படாதவாறு துறவி வேடத்தில் வந்து யாகத்திற்கான குதிரையைத் திருடினான். இந்திரன் யாகக் குதிரையுடன் வானில் பறந்து கொண்டிருந்தபொழுது, அத்ரி முனிவர் பிருது மன்னரின் மைந்தனிடம் அதனைச் சுட்டிக்காட்டினார். உடனே இந்திரனைப் போருக்கு அழைத்த இளவரசன், இந்திரனுடைய துறவு தோற்றத்தைக் கண்டு முதலில் தயங்கினான். எனினும், அத்ரி முனிவரின் ஆலோசனைப்படி இளவரசன் மீண்டும் இந்திரனைத் தாக்க முற்பட்டான். அப்போது, இந்திரன் குதிரையை விட்டுவிட்டு மறைந்து போய்விட்டான். இதனால் பிருது மன்னரின் மகன் விஜிதாஸ்வன்” என போற்றப்பட்டான்.

தேவேந்திரன் தனது சக்தியால் வேள்விச் சாலையில் அடர்ந்த இருளை பரவச் செய்து மீண்டும் குதிரையைத் திருடிச் சென்றான். விஜிதாஸ்வன் மீண்டும் குதிரையைக் கைப்பற்றி வேள்விச் சாலைக்குக் கொண்டு வந்தான். இந்திரனின் போலித் துறவி வேடமானது நாஸ்திகத்தின் அடையாளமாகும்.

பிருதுவின் மைந்தனான விஜிதாஸ்வன் இந்திரனிடமிருந்து குதிரையைக் கைப்பற்றுதல்

இந்திரனுக்கு தண்டனை

இந்திரன் பலமுறை பல்வேறு துறவு வேடங்களைப் பூண்டு வேள்விக் குதிரையைத் திருடியதால், பிருது மன்னர் மிக்க சினம் கொண்டு இந்திரனைக் கொல்ல தீர்மானித்தார். உடனே, புரோகிதர்கள் மன்னரைத் தடுத்து, வேள்வியைத் தடை செய்ய முயன்றதால் தன் ஆற்றலின் பெரும் பகுதியை இழந்துவிட்ட இந்திரனை வேள்வித் தீயில் பலியிடுவோம் என்று கூறினர். அவர்கள் அதற்கான வேள்வியினைத் தொடங்கி மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினர். அப்போது அங்கே பிரம்மதேவர் தோன்றி அதனைத் தடுத்தார்.

யாகத்தை நிறுத்துதல்

பிரம்மதேவர் கூறினார், இந்திரன். முழுமுதற் கடவுளின் ஆற்றல் வாய்ந்த சேவகர். நீங்கள் தேவர்களை திருப்தி செய்ய யாகங்கள் செய்கிறீர்கள். பிருது மன்னரே, நீங்கள் தர்மத்தை நிலைநிறுத்த அவதரித்துள்ளீர். நீங்கள் இந்திரனை எதிர்ப்பதால் அவர் தர்மத்திற்குப் புறம்பாக பல விஷயங்களை உருவாக்க முயல்வார். எனவே, போலி மதங்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக, நீங்கள் உங்களது யாகங்களை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். வீடுபேற்றை விரும்புபவர், பலன்கருதும் செயல்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, யாகங்களை இத்துடன் நிறைவு செய்யுங்கள். நீங்களும் இந்திரனும் முழுமுதற் கடவுளின் அம்சங்களே. எனவே, சினத்தை தவிர்ப்பீராக. சினமானது ஒருவரை இருண்ட பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.”

இவ்வாறு உபதேசிக்கப்பட்டதும் பிருது மன்னர் பிரம்மதேவரை வணங்கி அவரது அறிவுரைகளை ஏற்றுக் கொண்டார். பின்னர், அவப்ருத ஸ்நானம் செய்து அந்தணர்களுக்கு தக்க சன்மானங்களை வழங்கி அவர்களிடமும் தேவர்களிடமும் நல்லாசிகளைப் பெற்றார். அனைவரும் மிக்க மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தனர்.