யோகம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

கிருஷ்ணருடன் இழந்த தொடர்பை மீண்டும் நிலைநாட்டுவதே

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

யோக வழிமுறைகளைப் பற்றி நாம் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். யோக வழிமுறைகள் பகவத் கீதையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் பகவத் கீதையில் குறிப்பிடப்படும் யோக வழிமுறைகள் நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே உள்ளன. யோக வழிமுறைகளின் குறிக்கோள்கள் மூன்று: புலன்களைக் கட்டுப்படுத்துதல், செயல்களைத் தூய்மையாக்குதல், மற்றும் நம்மை கிருஷ்ணருடனான பரஸ்பர உறவில் இணைத்தல்.

பரம்பொருள் மூன்று நிலைகளில் உணரப்படுகிறது: உருவமற்ற பிரம்மன், இதயத்திலிருக்கும் பரமாத்மா, மற்றும் இறுதியாக புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அல்லது பகவான். ஆராய்ச்சியின் இறுதியில், பரம பூரண உண்மை என்பது ஒரு தனிப்பட்ட நபரே ஆவார். அதே சமயத்தில், எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் அணுக்களுக்குள்ளும் வீற்றிருக்கும் பரமாத்மாவாகவும், பிரம்மஜோதி அல்லது எங்கும் பரவியிருக்கும் ஆன்மீக பிரகாசமாகவும் இருப்பவர் அவரே. புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பதால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா ஐஸ்வர்யங்களையும் பூரணமாகக் கொண்டுள்ளார்; இருப்பினும், அதே சமயத்தில் பற்றற்ற தன்மையும் அவரிடம் பூரணமாக விளங்குகின்றது. இந்த ஜடவுலகில், யாரிடம் அதிகமான செல்வங்கள் இருக்கின்றதோ அவர் அதனைக் கைவிட விரும்புவதில்லை என்பதைக் காண்கிறோம், ஆனால் கிருஷ்ணர் அவ்வாறு அல்ல. அவரால் எல்லாவற்றையும் துறக்க முடியும், அவ்வாறு துறந்தும் தன்னில் பூரணமாக இருக்க முடியும்.

உண்மையான சந்நியாசி

அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் கீழ் நாம் பகவத் கீதையைப் பயிலும்போது, அவர் தன்னுடைய சொந்தக் கருத்துகளைக் கூறுவதாக நாம் எண்ணக் கூடாது. பேசுபவர் அவர் அல்ல, அவர் ஒரு கருவி மட்டுமே. பேசுபவர் உண்மையில் உள்ளும் புறமும் இருக்கும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளே. யோக வழிமுறையைக் குறித்த தனது உரையாடலின் தொடக்கத்தில், பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

அனாஷ்ரித: கர்மபலம்கார்யம் கர்ம கரோதி :

ஸந்ந்யாஸீ யோகி சந நிரக்னிர் சாக்ரிய:

“செயலின் பலன்களில் பற்றற்று, கடமைக்காகச் செயலாற்றுபவனே சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறானே தவிர, வேள்வி நெருப்பை மூட்டாதவனும் செயலற்றவனுமல்ல.” (பகவத் கீதை 6.1) ஒவ்வொருவரும் உழைக்கின்றனர், ஏதாவது பலனை எதிர்பார்க்கின்றனர். எந்த பலனையும் எதிர்பார்க்கக் கூடாது என்றால், உழைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். வேலை புரிபவர் அதற்கான ஊதியத்தை எப்போதும் உரிமையுடன் எதிர்பார்க்கின்றார். ஆனால் இங்கோ, தனது செயல்களின் பலனை எதிர்பார்க்காமல் கடமையின் காரணமாக மட்டுமே உழைக்க வேண்டும் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். இவ்வழியில் ஒருவர் உழைத்தால், அவரே உண்மையான சந்நியாசி; அவர் துறவு வாழ்வில் இருப்பவராகிறார்.

வேதப் பண்பாட்டில் வாழ்க்கையானது நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது: பிரம்மசாரி, கிருஹஸ்தர், வானபிரஸ்தர், மற்றும் சந்நியாசி. ஆன்மீக ஞானத்தைப் பெறுவதற்கான பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தும் மாணவ பருவம் பிரம்மசரியம் எனப்படுகிறது. கிருஹஸ்தம் என்பது திருமணம் புரிந்த இல்லற நிலையைக் குறிக்கின்றது. அதன் பின்னர், சுமார் ஐம்பது வயதை அடைந்த பின்னர், வானபிரஸ்த நிலையை ஒருவர் மேற்கொள்ளலாம். அந்த நிலையில், அவர் தனது வீட்டையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு மனைவியுடன் புனித ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்கின்றார். இறுதியாக, தனது மனைவி, மக்கள் எல்லோரையும் துறந்து தனிமையில் கிருஷ்ண உணர்வை வளர்க்கின்றார். அந்த நிலையில் அவர் சந்நியாசி அல்லது துறவி என குறிப்பிடப்படுகின்றார். இருப்பினும், துறவு மேற்கொள்வது மட்டுமே சந்நியாசியின் அறிகுறி அல்ல என்று கிருஷ்ணர் தெரிவிக்கின்றார். துறவுடன் இணைந்து அவருக்கும் கடமைகள் இருந்தாக வேண்டும். மனைவி மக்களை எல்லாம் துறந்து, துறவறம் மேற்கொண்டவருக்கு என்ன கடமைகள் இருக்க முடியும்? மிகவும் பொறுப்பான கடமை ஒன்று அவருக்கு இருக்கின்றது: கிருஷ்ணருக்காக உழைப்பதே அது. அதுவே வாழ்க்கையின் இதர கட்டங்களில் இருப்பவர்களுக்கும் உண்மையான கடமையாகும்.

இருவித கடமைகள்

எல்லோருடைய வாழ்விலும் இருவித கடமைகள் இருக்கின்றன: ஒன்று, நிலையில்லா பந்தங்களுக்காக உழைப்பது; மற்றொன்று ஸத் அல்லது நிலையான உண்மைக்காக உழைப்பது. நிலையான உண்மைக்காக உழைப்பவரே சந்நியாசி எனப்படுகிறார். நாம் நிலையில்லா பந்தங்களுக்கு உழைக்கும்போது மாயையின் ஆதிக்கத்திற்கு உட்படுகின்றோம். இருப்பினும், இரண்டு நிலையிலும் சேவை செய்வதற்கு நாம் வலியுறுத்தப்படுகிறோம் என்பதை நன்றாக உணர வேண்டும். சேவை புரிவதே ஆத்மாவின் இயற்கையான நிலையாகும், எஜமானனாக விளங்குவது அல்ல. குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும்போது, மனைவி, மக்கள், வீடு, வாசல் போன்றவற்றிற்கு நாம் நம்மை எஜமானராக நினைக்கலாம். ஆனால் அது பொய்யாகும். உண்மையில், மனைவி, மக்கள், வியாபாரம் என எல்லாவற்றிற்கும் நாம் சேவகனாக இருக்கிறோம்.

ஜனாதிபதி நாட்டின் ஜனங்களுக்கு அதிபர் என கூறப்படுகின்றார். ஆனால் உண்மையில் அவர் தேசத்தின் சேவகரே. மாயையின் சேவகன், அல்லது கடவுளின் சேவகன்–எப்படிப் பார்த்தாலும் நமது நிலை எப்போதும் சேவை செய்வதேயாகும். மாயையின் சேவகனாக நாம் இருந்தால், நமது வாழ்க்கை வீணாக்கப்படுகின்றது. தான் மற்றவர்களுக்காக உழைக்கின்றேன் என்பதை எவரும் உணர்வதில்லை, தனக்காக உழைக்கின்றோம் என்றே கருதுகின்றனர். இத்தகைய உழைப்பினால் நமக்கு கிட்டும் பலன்கள் எல்லாம் நிரந்தரமற்றவை, மேலும், மாயா சக்திக்கு உட்பட்டவை. அவை நம்மை நிலையில்லா கடமைகளுக்கும் புலன்களுக்காக உழைக்கவும் பந்தப்படுத்துகின்றன. நம்முடைய ஆன்மீக நிலைக்கு (உண்மையான அறிவைப் பெறுவதன் மூலம்) விழித்தெழும்போது ஸத் அல்லது நிலைத்த உண்மைக்கு சேவகம் புரிவோம். எல்லா சூழ்நிலைகளிலும் நமது நிலை சேவகம் புரிவதே என்பதை உண்மை ஞானத்தைப் பெற்றவர் உணர்கின்றார். எஜமானன் ஆவது முடியாத காரியம் என்பதால், ஸத் அல்லது உண்மைக்கு உழைப்பதே நிலையில்லா அஸத்திற்கு உழைப்பதைவிட என்றும் சிறந்ததாகும். இதை உணரும்போது, ஒருவர் ஆன்மீக ஞானத்தின் சிகரத்தை எய்துகின்றார். இதை உணர்ந்த நிலையே சந்நியாஸம் எனப்படுகின்றது. ஆகவே சந்நியாஸம் என்பது அனுபவ பூர்வமான அறிவைப் பொறுத்த விஷயம், வெறும் சமுதாயப் பிரிவு அல்ல.

எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் நமது உண்மையான நிலை சேவை செய்வதேயாகும்.

உண்மையான அன்பு

கிருஷ்ணருக்காக உழைப்பது நம் எல்லோருடைய கடமையாகும். இதனை உண்மை என்று உணர்ந்தவர் மஹாத்மாவாகின்றார். கோடானு கோடி ஜன்மங்களுக்குப் பிறகு, இந்த உண்மையை உணரும்போது, அவன் தன்னிடம் சரணடைவதாக பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார். வாஸுதேவம் ஸர்வம் இதி. உண்மையிலேயே அறிவாளி என்பவர், வாஸுதேவரே (கிருஷ்ணர்) எல்லாம் என உணருகின்றார். அத்தகைய மஹாத்மாவைக் காண்பது மிகவும் அரிது என கிருஷ்ணர் கூறுகின்றார். அஃது ஏன்? வாழ்க்கையின் குறிக்கோள் கிருஷ்ணரிடம் சரணடைவதே என ஒருவர் உணருவாராயின், பின் ஏன் அவர் தயங்க வேண்டும்? உடனே சரணடையலாமே? பல பிறவிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? உண்மையாக ஒருவர் கிருஷ்ணரிடம் சரணடைவாராயின் அவர் உண்மையான சந்நியாசியாகின்றார். தன்னிடம் சரணடைய கிருஷ்ணர் எவரையும் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை. ஆன்மீகமான அன்பின் விளைவாகவே சரணாகதி நிகழ்கின்றது, வற்புறுத்தல் சிறிதளவு இருந்தால்கூட அங்கே உண்மையான அன்பு என்ற பேச்சுக்கு இடமே இல்லை. தாய் தன் குழந்தையை ஏதேனும் இலாபத்தைக் கருதி நேசிப்பதில்லை, அவளது நேசம் யாருடைய வற்புறுத்தலாலும் உண்டாவதில்லை.

அதே போன்று நாம் புருஷோத்தமரான இறைவனையும் பல விதங்களில் நேசிக்கலாம். நமது எஜமானராக, நண்பராக, குழந்தையாக, அல்லது கணவராக அவரிடம் அன்பு கொள்ளலாம். இந்த ஐந்து வகையான உறவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலமாக நாம் எல்லோரும் இறைவனுடன் நிரந்தரமாக உறவு கொண்டுள்ளோம். உண்மையான ஆன்மீக நிலையின் ஞானத்தை நாம் பெறும்போது நமக்கும் இறைவனுக்கும் என்ன உறவு இருக்கின்றது என்பதை உணருகின்றோம். அந்த நிலையே ஸ்வரூப சித்தி அல்லது பிரம்மநிலை எனப்படுகிறது.

இறைவனுடனான நமது உறவு

நம் ஒவ்வொருவருக்கும் இறைவனோடு ஒரு நிரந்தர உறவு உள்ளது. எஜமானர்-சேவகன், நண்பர்-நண்பன், குழந்தை-பெற்றோர், கணவன்-மனைவி, காதலன்-காதலி என ஏதாவதொரு வகையில் நமக்கும் இறைவனுக்குமான உறவு நிரந்தரமாக உள்ளது. அந்த உறவை மீண்டும் விழித்தெழச் செய்வதே யோகம் அல்லது ஆன்மீக ஞானத்தைப் பெறுவதாகும். தற்போதைய நிலையில், நமக்கும் புருஷோத்தமருக்கும் இடையிலான உறவுகள் திரிபடைந்த நிலையில் இந்த ஜடவுலகில் காணப்படுகின்றன. உதாரணமாக, இந்த ஜடவுலகில் எஜமானருக்கும் சேவகனுக்குமான உறவு பணத்தை ஒட்டியோ சூழ்நிலைகளின் கட்டாயத்தின் பேரிலோதான் அமைகின்றது. அன்பின் காரணமாக சேவை செய்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. திரிபடைந்த நிலையில் எஜமானருக்கும் சேவகனுக்கும் உள்ள உறவு, எஜமானர் சேவகனுக்கு ஊதியம் அளிக்கும்வரையே நீடிக்கின்றது. ஊதியம் நிறுத்தப்படுமாயின் உடனே சேவகமும் நிறுத்தப்படுகிறது. அதுபோலவே இந்த ஜடவுலகில் நண்பர்கள் இருக்கலாம், ஆனால் சற்றேனும் வேறுபாடு தோன்றுமாயின் நட்பு முறிகின்றது, நண்பர்கள் எதிரிகளாகின்றனர். பெற்றோருக்கும் மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றுமாயின் மகன் உடனே வீட்டை விட்டு வெளியேறுகின்றான், உறவும் துண்டிக்கப்படுகின்றது. கணவன் மனைவி நிலையும் அப்படித்தான் உள்ளது, சிறிய கருத்துவேறுபாடு தோன்றினாலும் விளைவு விவாகரத்தே.

ஜட உலகில் காணப்படும் எந்த உறவும் உண்மையானதோ நிலையானதோ அல்ல. நிரந்தரமற்ற இந்த உறவுகள் எல்லாம் நமக்கும் புருஷோத்தமருக்கும் இடையே உள்ள நிரந்தரமான உறவுகளின் திரிபடைந்த பிம்பங்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்ணாடியில் தோன்றும் ஒரு பொருளின் பிம்பம் உண்மையல்ல. பார்ப்பதற்கு பிம்பம் உண்மைபோல் தோன்றினாலும், அதைத் தொடுவதற்கு நாம் கையை நீட்டுவோமாயின், தட்டுப்படுவது கண்ணாடியே. ஆக இவ்வுலகில் நண்பர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், எஜமானன், சேவகர்கள், கணவன், மனைவி, அல்லது காதலி என நமக்கிருக்கும் எல்லா உறவுகளும், இறைவனுக்கும் ஜீவாத்மாக்களாகிய நமக்கும் உள்ள உண்மையான உறவுகளின் திரிபடைந்த பிம்பமே என்று புரிந்து கொள்ளும் நிலைக்கு நாம் உயர வேண்டும். அவ்வாறு உயரும்போது நமது அறிவு பூரணமாகின்றது. அப்போதுதான் நாம் உண்மையில் கிருஷ்ணருக்கு பணிவிடை புரிய வேண்டியவர்கள், நமக்கும் அவருக்கும் இடையில் நிரந்தரமான அன்புமிக்க உறவு இருக்கின்றது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணருடன் ஐந்து வகையான உறவுகளினால் தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

பலி மஹாராஜரின் உதாரணம்

இவ்வாறாக இறைவன்மீது அன்பான உறவு விளையும்போது ஊதியம் என்ற பேச்சு எழுவதில்லை, ஆனாலும் ஊதியம் இருக்கின்றது. அந்த ஊதியம் இவ்வுலகில் பணிபுரிவதன் மூலம் பெறக்கூடிய ஊதியமெல்லாவற்றையும் விட அதிகமானது. ஸ்ரீ கிருஷ்ணர் அளிக்கும் ஊதியத்திற்கு அளவேயில்லை. பலி மஹாராஜரின் வாழ்க்கை இதனைச் சித்தரிக்கின்றது. பலி மஹாராஜர் பல லோகங்களை வென்று பலம் வாய்ந்த மன்னராக விளங்கினார். அசுர வேந்தனாகிய பலி மஹாராஜரின் ஆட்சிக்கு தேவலோகங்களும் உட்படுத்தப்பட்டதால், அங்கே வாழ்ந்த தேவர்கள், தம்மைக் காப்பாற்றும்படியாக இறைவனிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்க இறைவனும் ஒரு குள்ளமான பிராமணச் சிறுவனின் உருவை எடுத்து பலி மஹாராஜரிடம் சென்றார். “எனதருமை ராஜனே, உன்னிடம் யாசகம் வேண்டி வந்திருக்கின்றேன். பெரிய சாம்ராஜ்யத்திற்கு அதிபதியான தாங்கள் பிராமணர்களுக்கு தானம் கொடுப்பதில் மிகவும் புகழ் பெற்றுள்ளீர்கள். என்னுடைய ஒரு வேண்டுகோளைப் பூர்த்தி செய்ய முடியுமா?” என அவரிடம் கேட்டார்.

“உமக்குத் தேவையானதை அளிப்பேன்,” என்று பலி மஹாராஜரும் பதிலுரைத்தார்.

“எனது மூன்று அடிகளால் அளக்கப்படும் நிலம் மட்டுமே எனக்குத் தேவை,” என சிறுவனின் வடிவிலிருந்த பகவான் கூறினார்.

“அவ்வளவுதானா! அச்சிறிய நிலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?” என அரசர் வினவினார்.

“சிறியதாயினும் எனக்குத் தேவையானது அவ்வளவே” எனக் கூறி சிறுவன் புன்னகை புரிந்தான்.

மன்னரும் ஒப்புக் கொள்ள குள்ள பிராமணச் சிறுவனின் வடிவிலிருந்த இறைவனோ இரண்டே அடிகளை எடுத்து வைத்தார். அந்த இரண்டு அடிகளில் பிரபஞ்சம் முழுவதும் அளக்கப்பட்டது. “மூன்றாவது அடியை எங்கு வைப்பது?” என இறைவன் பலி மஹாராஜரைக் கேட்க, மன்னரும் முழுமுதற் கடவுள் தனக்கு விசேஷ கருணையை அளிக்க வந்துள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார். “பிரபுவே, எல்லாவற்றையும் இழந்துவிட்டேன், தற்போது என் வசமிருப்பது என் சிரம் மட்டுமே, தயவுசெய்து மூன்றாவது அடியை என் சிரம் மேல் வைப்பீராக,” என்றார்.

இரண்டு அடிகளில் உலகை அளந்த வாமனருக்கு பலி மஹாராஜர் தன்னையே கொடுத்தார்.

யோகத்தின் பக்குவநிலை

பலி மஹாராஜரின் பதிலால் பெரும் மகிழ்ச்சியடைந்த பகவானும் வேண்டியதைக் கேட்கும்படி கூறினார். “பிரபுவே, உம்மிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. நீரல்லவா என்னிடமிருந்து ஒன்று கேட்டீர். என்னிடம் இருக்கும் அனைத்தையும் உமக்கு இப்போது அளித்து விட்டேன்” என அசுர மன்னர் பதிலுரைத்தார். “உண்மையே” என்ற இறைவனும், “நானும் என் பங்கிற்கு உனக்கு ஒன்றைக் கொடுக்க விரும்புகின்றேன். இன்று முதல் என்றும் உனது ராஜ சபையில் உனது வாயிற் காப்பாளனாக இருப்பேன்,” என்று உறுதி கூறினார். இவ்வாறு இறைவனே பலி மஹாராஜரின் வாயிற் காப்பாளனாக மாறினார். இதன் மூலமாக தான் யாசித்துப் பெற்றதை அவர் திருப்பிச் செலுத்தினார். இறைவனுக்கு நாம் எதையாவது அளித்தால், அது கோடிக்கணக்கான மடங்கில் நமக்குத் திருப்பித் தரப்படும். ஆனால் அதனை நாம் எதிர்பார்க்கக் கூடாது. இறைவன் தன்னுடைய சேவகனின் சேவைக்கு ஈடு செய்யவே ஆவலாக இருக்கின்றார். அவருக்கு சேவை புரிவதே தனது உண்மையான கடமை என்பதை உணர்ந்தவரின் அறிவு பரிபூரணமானது. அவரே யோகத்தின் பக்குவநிலையை அடைந்தவர்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives