நீங்கள் உடலுக்கு அப்பாற்பட்டவர்
ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் பிஜி தீவில் நிகழ்ந்த உரையாடல்.

சீடர்: பகவத் கீதை 15.7இல் கிருஷ்ணர் கூறுகிறார், “இந்தக் கட்டுண்ட உலகிலுள்ள அனைத்து ஜீவன்களும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தினால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடுமையாக சிரமப்படுகின்றனர்.”

ஸ்ரீல பிரபுபாதர்: ஜீவன் ஜடவுடல் என்னும் இயந்திரத்தை இயக்குவதற்காக மனதையும் புத்தியையும் பயன்படுத்துகிறான். இஃது ஒரு விமானி சூட்சுமமான மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி ஆகாய விமானத்தை ஓட்டுவதைப் போன்றதாகும். நாம் வாழும் ஜடவுடல் ஓர் இயந்திரம் என்பதைப் புரிந்துகொள்வதில் என்ன சிரமம்?

ப்ராமயன் ஸர்வ-பூதானி, ஜடவுலகிலுள்ள அனைத்து ஜீவன்களும் எந்த நோக்கமுமின்றி அலைகின்றன. விமானி விமானத்தை இங்குமங்கும் ஓட்டுவதைப் போல, ஜீவாத்மா தனது ஜடவுடலை இங்குமங்கும் சுற்றித் திரிவதற்குப் பயன்படுத்துகிறான். ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வ-ஸ்தா … அதோ கச்சந்தி தாமஸா, சில நேரங்களில் ஜீவாத்மா மேலே செல்கிறான், சில நேரங்களில் கீழே செல்கிறான். (பகவத் கீதை 14.18) விமானி மேலும் கீழும் செல்வதற்கு விமானத்தின் இறக்கைகளையும் பிற முக்கிய கருவிகளையும் பயன்படுத்துவதைப் போல, ஜீவாத்மாவும் மேலும் கீழும் செல்வதற்காக தனது கைகளையும் பிற அங்கங்களையும் பயன்படுத்துகிறான்.

எனவே, உடலிலுள்ள ஆத்மாவையும் விமானத்திலுள்ள விமானியையும் நாம் ஒன்றாகவே காண்கிறோம். விமானி (ஆத்மா) திறமைசாலியாக இல்லாவிடில், மரண நேரத்தில் அவன் தாழ்ந்த இடத்திற்கு கீழ்நோக்கிச் செல்கிறான். விமானி மூன்றாம் தரத்தைச் சார்ந்தவனாக இருந்தால், உயரே பறப்பதற்கு பதிலாக வானத்திலிருந்து திடீரென்று கீழே விழுந்து அனைத்தையும் அழித்து விடுகிறான்.

எனவே, அனைத்தும் விமானியைச் சார்ந்துள்ளது. இயந்திரம் முக்கியமல்ல. விமானிக்கு இயக்கத் தெரிந்திருந்தால் இயந்திரம் மேலும் கீழும் செல்ல முடியும். விமானிக்கு இயந்திரத்தை நேர்த்தியாகக் கையாள தெரியவில்லையெனில், அஃது உடனடியாக நொறுக்கப்படும். சில சமயங்களில் விமானப் பயணம் முடிந்தவுடன், “அபாயம் நீங்கியது” என்ற எண்ணத்தில், பயணிகளும் விமானிகளும் கைதட்டி மகிழ்வதை நான் கண்டிருக்கிறேன்.

எப்படியிருப்பினும் இந்த இயந்திரம் போன்ற உடலை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே நீங்கள் மேலுலகிற்குச் செல்வதா அல்லது கீழுலகிற்குச் செல்வதா என்பதை தீர்மானிக்க முடியும். மேலும், மத்யே திஷ்டந்தி ராஜஸா, மத்திய லோகங்களின் மீது நீங்கள் அளவற்ற பற்றுதல் கொண்டால், அடுத்த பிறவியிலும் அங்கேயே வசிக்கலாம்.

ஆத்மாவாகிய உயிர்வாழியே உடலினுள் உள்ள முக்கியமான விஷயம். உடலிலிருந்து வேறுபட்ட தனது உண்மையான அடையாளத்தை அறியாததால் அவன் சிரமப்படுகிறான். மன: ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தானி கர்ஷதி, கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.

சீடர்: தன்னுணர்வின் அறிவுப் பரிமாற்றத்திற்கு, பகவான் கிருஷ்ணர் அல்லது அவரது தூய பக்தர் என்னும் முறையான ஆசிரியரும், அதனைக் கேட்பதற்கு தகுதிபடைத்த முறையான சீடரும் அவசியம் என்று தாங்கள் அடிக்கடி கூறியுள்ளீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். வாழ்வின் உண்மையான முக்கிய விஷயத்தை அறிந்துகொள்ள ஒருவன் ஆர்வமுடன் இருந்தால் மட்டுமே இந்த தன்னுணர்வின் விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள முடியும். உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல் என விலங்கினைப் போன்று வாழ்பவனால் என்ன புரிந்துகொள்ள முடியும்? உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவதில் விலங்குகளுக்கு ஆர்வமில்லை. உணவும் உடலுறவும் கிடைத்தால் போதும் என்று வாழுதல் மிருக வாழ்க்கையாகும்.

மனித உடலைப் பெறும் ஆத்மா மனிதனின் தளத்திற்கு வர வேண்டும்; அதாவது, வாழ்வின் தன்மையை அறிவதற்கான வினாக்களை எழுப்ப வேண்டும். நவீன காலத்திலுள்ள விலங்கினைப் போன்ற மனிதனோ அத்தியாவசியமான வினாக்களில் ஆர்வம் செலுத்துவதில்லை. மாறாக, “பொருளாதார நிலையை எவ்வாறு உயர்த்துவது?” என்று அவன் வினவுகிறான். ஆனால், ஸநாதன கோஸ்வாமியோ மிகவுயர்ந்த செல்வந்தராக இருந்தபோதிலும் அதனைத் துறந்தார், தற்காலிக விஷயங்களில் ஆர்வமின்றி வினவினார், கே ஆமி கேன ஆமாய ஜாரே தாப த்ரய, “நான் யார்? எனது நிலை என்ன? நான் ஏன் இந்த ஜடச் சூழலில் துன்புற்றுக் கொண்டுள்ளேன்?” இதுவே மனித வாழ்க்கையாகும்.

சீடர்: அர்ஜினனும் பகவத் கீதையில் இதே போன்ற வினாக்களை எழுப்புவது உண்மையல்லவா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், கார்பண்ய-தோஷ. அர்ஜினன் கூறினான், “அன்புள்ள கிருஷ்ணரே, உண்மையான ஆன்மீகத் தன்னுணர்வைப் பெறுவதும் தங்களுக்கு சேவை செய்வதுமே எனது உண்மையான கடமைகள்; இருப்பினும், கருமித்தனமான பலவீனத்தால் நான் அவற்றைப் புறக்கணித்துவிட்டேன். புத்தியில்லாத உறவினர்கள் எனது நாட்டை அபகரிப்பதற்காக போர் தொடுத்துள்ளபோதிலும், நான் அவர்களுடைய உடல் சார்ந்த நலனையே எண்ணிக் கொண்டுள்ளேன். இஃது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

“எனது உணர்ச்சிகள் இளகியிருப்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே சமயத்தில், இந்த அயோக்கியர்கள் இப்போரினால் என்ன பயனை அடைவார்கள்? அவர்கள் அனைவரும் மடிய நேரிடலாம். எப்படியும் ஒருநாள் அவர்கள் மடியத்தான் போகிறார்கள். என்னால் என்ன செய்ய இயலும்? இருந்தும், அவர்களுடைய விதியைப் பற்றி நான் ஏன் குழப்பமடைகிறேன்? இஃது எனது குறைபாடு என்பதை அறிவேன். என்னால் மரணத்தையோ பிறப்பையோ தர இயலாது, வாழ்நாளை நீட்டிக்கவும் இயலாது. இவை எனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை. இருப்பினும், கவலையும் அச்சமும் அடைகிறேன். நான் இவர்களைக் கொன்றுவிட்டால், என்ன நடக்கும்? என்னதான் நடக்கும்?”

கிருஷ்ணர் கூறினார், “அர்ஜினா, நீ இவர்களைக் கொல்லலாம், கொல்லாமலும் விடலாம். ஆனால் இவர்கள் இன்றோ நாளையோ கொல்லப்படுவது உறுதி. கதாஸின் அகதாஸீம்ஷ் ச நானுஷோசந்தி பண்டிதா:, ஜடவுடல் இன்றோ நாளையோ அழிந்துவிடும் என்பதை கற்றறிந்த பண்டிதன் அறிவான். எனவே, இவ்வுடலைப் பற்றி கவலைப்படுவது ஏன்?”

உண்மையான கவலை உடலினுள் உள்ள நபருக்காக இருக்க வேண்டும், அவன் தான் செல்லுமிடம் ஸ்வர்க்கமா நரகமா என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டும். இன்றோ நாளையோ நூறாண்டுகளுக்குப் பிறகோ இந்த ஜடவுடல் நிச்சயம் அழிவுறும். எவரால் இதனைப் பாதுகாக்க இயலும்? எனவே, இந்த உடலின் உரிமையாளரைப் பற்றியே கவலைப்பட வேண்டும். அவன் எங்கே செல்கிறான்? அவனது அடுத்த நிலை என்ன?

சீடர்: மக்கள் “ஆத்மா உள்ளது” என்பதை நம்புவதாகக் கூறலாம்; ஆனால், உண்மையில் அவர்கள் உடல் சார்ந்த தாழ்ந்த நிலையிலேயே வாழ்கின்றனர். மறுபிறவி இல்லை என்பதுபோலவே அவர்கள் வாழ்கின்றனர். கடவுள் அல்லது ஏசு அல்லது முகமதுவை இதயத்தில் ஏற்றதால், தங்களது மறுபிறவியில் தானாக மேலுலகம் சென்று விடுவோம் என்று அவர்கள் எண்ணுகின்றனர். அன்றாட வாழ்வில், அவர்கள் கடவுளின் சட்டங்களை எல்லா இடத்திலும் உடைத்தெறிந்து, உடல் தேவைகளை நிறைவேற்றியபடி கீழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: எனவே, அவர்கள் அயோக்கியர்கள். அந்த அயோக்கியர்கள் பகவத் கீதையின் உபதேசங்களைக் கற்க வேண்டும். மக்கள் ஜடவுடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். தற்போதைய உடல் அழிந்தவுடன் எல்லாம் முடிந்து விடுவதாக நினைக்கின்றனர், உடலைத் தவிர வேறு எதனையும் அவர்கள் அறிவதில்லை. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. நீங்கள் இந்த உடலுக்கு அப்பாற்பட்டவர் என்பதை அறிவதே உண்மையான அறிவு. இதுவே அறிவின் ஆரம்பம். இதைத் தவிர வேறு எந்த அறிவும் அறிவல்ல.

அர்ஜினனுக்கு பகவான் கிருஷ்ணர் ஆத்ம தத்துவத்தைப் போதித்தல்