ஸ்ரீ ஜகந்நாத புரியில் ரத யாத்திரைக்கு முந்தைய நாள் குண்டிசா-மார்ஜனம் என்னும் திருவிழா அனுசரிக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீ ஜகந்நாதரின் திருக்கோயிலிலிருந்து இரண்டு மைல் தொலைவில் குண்டிசா கோயில் உள்ளது. ரத யாத்திரையின்போது, ஸ்ரீ ஜகந்நாதர் ரதத்தில் பயணித்து குண்டிசா கோயிலைச் சென்றடைவார். அங்கு அவர் ஒரு வார காலம் தங்கியிருப்பார், அதன் பின்னர் மீண்டும் திரும்பி வருவார். அந்த ஒரு வார காலம் குண்டிசாவில் பல விதமான திருவிழாக்கள் நடைபெறும்.
கிருஷ்ணரைப் பிரிந்த விருந்தாவனவாசிகள்
கிருஷ்ணர் மதுராவில் அவதரித்தார், பிறகு உடனடியாக தந்தை வசுதேவரால் அவரது நண்பரின் வீட்டிற்கு (விருந்தாவனத்திற்கு) கொண்டு செல்லப்பட்டார். பகவான் கிருஷ்ணர் கம்சனால் மதுராவிற்கு அழைக்கப்பட்டபோது, அவர் வசுதேவரின் மகன் என்று மக்களுக்கு பொதுவாகத் தெரியாது. கிருஷ்ணர் வசுதேவரின் மகன் என்பதை அறிந்த கம்சன், மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்து கிருஷ்ணரை அழைத்தான். இதை நீங்கள், கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்னும் நமது புத்தகத்தில் படிக்கலாம்.
கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்ற பின்னர், மீண்டும் விருந்தாவனத்திற்குத் திரும்பவில்லை. அப்போது அன்னை யசோதை, கோபர்கள், கோபியர்கள் என அனைவரும் தங்களது உயிர்மூச்சை இழந்து, எந்நேரமும் கண்ணீரும் கம்பலையுமாக இருந்தனர். ஒருமுறை அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, கிருஷ்ணர் உத்தவரின் மூலமாக, “நான் விரைவில் எனது கடமைகளை நிறைவேற்றிவிட்டு விருந்தாவனத்திற்கு வருவேன்,” என்று செய்தி அனுப்பினார். அதன் பின்னர், ஒருமுறை கிருஷ்ணர் தம்முடைய அண்ணன், தங்கை, தந்தை முதலியோருடன் குருக்ஷேத்திரத்திற்கு வந்தார். அப்போது விருந்தாவனவாசிகளுக்கு அவரைக் காண வாய்ப்பு கிட்டியது, அவர்களும் குருக்ஷேத்திரத்திற்குச் சென்றனர்.
அங்கே கிருஷ்ணர் அரச உடையணிந்து மாவீரராக ரதத்தில் இருந்தார். கிருஷ்ணரை அவர்கள் அவ்வாறு பார்த்தபோது, “நமது நண்பனும் இடையர்குலச் சிறுவனுமான கிருஷ்ணன், தேரில் ஒரு போர்வீரனைப் போல அமர்ந்துள்ளானே!” என்று ஆச்சரியமடைந்தனர்.
கிருஷ்ணரே ஜகந்நாதர்
அந்த கிருஷ்ணர்தான் ஜகந்நாதர். ஜகத் என்றால் “உலகம்” என்றும், நாத என்றால் “தலைவர்” அல்லது “உரிமையாளர்” என்றும் பொருள்படும். கிருஷ்ணர் பகவத் கீதையில் (5.29) கூறுகிறார், போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக மஹேஷ்வரம், “நானே அனைத்து கிரகங்களுக்கும் உரிமையாளன்.” எனவே, கிருஷ்ணரே ஜகந்நாதர். ஜகந்நாதர் என்றால் “அனைத்து உலகங்களின் உரிமையாளர்” என்று பொருள். விருந்தாவன
வாசிகளின் வாழ்க்கையே கிருஷ்ணர் என்பதால், அவர்கள் கிருஷ்ணரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அவர்களுக்கு கிருஷ்ணரைத் தவிர வேறெதுவும் தெரியாது.
ரத யாத்திரையின் உட்பொருள்
குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரைக் கண்டபோது, ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரிடம் வேண்டினாள், “அன்புள்ள கிருஷ்ணரே, தாங்கள் அதே கிருஷ்ணர், நானும் அதே ராதாராணி. நாம் இருவரும் தற்போது மீண்டும் சந்திக்கின்றோம், ஆனால் நாம் சந்திக்கும் இடம் மட்டும் வேறுபட்டுள்ளது. இப்போது நீங்கள் ரதங்கள், படைவீரர்கள், மந்திரிகள், உதவியாளர்கள் என பலரால் சூழப்பட்டு மாமன்னரைப் போல உள்ளீர்கள். விருந்தாவனத்திலோ நீங்கள் இடையர்குலச் சிறுவனாக இருந்தபோது, நாம் காடுகளிலும் புதர்களிலும் இயல்பாக சந்திப்போம். ஆகவே, உங்களை அங்கே அழைத்துச் செல்ல நான் விரும்புகிறேன். அதுவே எனக்கு ஆனந்தமளிக்கும்.”
[அதன்படி, கிருஷ்ணர் (ஜகந்நாதர்) தமது அண்ணன் பலராமருடனும் தங்கை சுபத்திரையுடனும் புரி கோயிலிலிருந்து விருந்தாவனத்திற்கு (குண்டிசா கோயிலுக்கு) பயணிப்பதே ரத யாத்திரையின் உட்பொருளாகும்.]
ராதையின் இந்த உணர்வுநிலையைத்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் வெளிப்படுத்தினார். அவர் வழங்கிய கிருஷ்ண தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள். இஃது ஓர் ஈடு இணையற்ற தத்துவம், ஈடு இணையற்ற பண்பாடு. யாரெல்லாம் புண்ணியம் செய்தவர்களோ, அவர்கள் அனைவரும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை வெற்றியடைகிறது. அதில் எந்த ஐயமும் வேண்டாம்.
ஆயிரக்கணக்கான பானைகளில் நீரை நிரப்பி சூரிய ஒளியில் வைத்தோமெனில், நீரில் ஆயிரக்கணக்கான சூரியன்கள் பிரதிபலிப்பதைக் காணலாம். இருப்பினும், சூரியன் ஒன்றே. அதுபோல, கடவுள் ஒருவரே அவர் தம்மை பல்வேறு ரூபங்களில் விரிவடையச் செய்கின்றார்.
ராதா-கிருஷ்ணரின் காதல் விவகாரங்கள்
இங்கே நீங்கள் ராதா-கிருஷ்ணரின் தத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ராதா க்ருஷ்ண-ப்ரணய-விக்ருதிர், ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான காதல் எத்தகையது? அஃது இந்த பௌதிக உலகிலுள்ள ஓர் இளம்பெண்ணிற்கும் இளைஞனுக்கும் இடையில் நிகழும் காதலைப் போன்றதன்று. நிச்சயமாக இல்லை. அஃது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் தம்முடைய ஹ்லாதினி சக்தியுடன் [ஆனந்த சக்தியுடன்] நிகழ்த்தும் லீலையாகும். இந்த பௌதிக உலகில் ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று மூன்று குணங்கள் உள்ளதுபோல, ஆன்மீக உலகில் ஸம்வித், ஸந்தினி, ஹ்லாதினி என்று மூன்று சக்திகள் உள்ளன.
ராதை அந்த ஹ்லாதினி சக்தியின் உருவமாவாள். இவற்றைப் பற்றியும் ராதா-கிருஷ்ணருக்கு இடையிலான காதலைப் பற்றியும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி தத்துவரீதியாக பாண்டித்துவத்துடன் விளக்கியுள்ளார். அவர் கூறும் முதல் விஷயம், கிருஷ்ணர் பர-பிரம்மன் என்பதாகும். பர-பிரம்மனாகிய கிருஷ்ணருக்கும் கோபியர்களுக்கும் இடையிலான அன்புப் பரிமாற்றம் எவ்வாறு பௌதிக உலகின் காதலாக இருக்க முடியும்? இதுவே ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் கேள்வியாகும்.
ஜீவ கோஸ்வாமி மேலும் வினவுகிறார், “பர-பிரம்மனை உணர விரும்புவோர் பௌதிக சுகங்கள் அனைத்தையும் துறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், அந்த பர-பிரம்மன் எவ்வாறு பௌதிகமான இன்பம் ஒன்றினை அனுபவிக்க முடியும்?” பர-பிரம்மனை உணர்வதற்கு பௌதிகமான அனைத்தையும் துறக்க வேண்டும் என்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம்.
சங்கர ஸம்பிரதாயத்தில், கடுமையான தவத்துடன்கூடிய துறவு வாழ்விற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவர் சந்நியாசம் ஏற்காவிடில், அவர் ஆன்மீக கலாச்சாரத்தில் முன்னேற தகுதியற்றவர் என்று சங்கராசாரியர் கருதுவார், “முதலில் சந்நியாசத்தை எடு. அதன் பிறகு பர-பிரம்மனைப் பற்றிப் பேசு.”
இந்த உலகம் பொய்யானதா?
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வைஷ்ணவ ஸம்பிரதாயத்தைச் சார்ந்த எங்களது வழிமுறை சங்கர வழிமுறையிலிருந்து வேறுபட்டதாகும். இந்த பௌதிக உலகுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை; இருப்பினும், இதனை எவ்வாறு சிறந்த முறையில் உபயோகிப்பது என்பதை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸம்பிரதாயம் கற்பிக்கிறது. இதுதான் சங்கர ஸம்பிரதாயத்திற்கும் வைஷ்ணவ ஸம்பிரதாயத்திற்கும் உள்ள வேறுபாடாகும்.
இந்த பௌதிக உலகம் பொய்யானது என்று சங்கரரின் கொள்கை கூறுகின்றது. வைஷ்ணவ தத்துவ அறிஞர்களோ, இந்த உலகம் பூரண உண்மையிலிருந்து வெளிப்பட்டது என்பதால், இது பொய்யானது இல்லை என்று கூறுகின்றனர். இஃது எவ்வாறு பொய்யாக இருக்க முடியும்? இதற்கென்று முறையான உபயோகம் உள்ளது. இதன் முறையான உபயோகத்தை அறியாதவனுக்குத்தான் இந்த உலகம் பொய்யானது.
ஆனால், இந்த பௌதிக உலகத்தின் மகத்துவம் யாருக்குத் தெரியுமோ, அவன் எல்லாவற்றிலும் பர-பிரம்மனின் தொடர்பைக் காண்பான், ஹரி-ஸம்பந்தி-வஸ்துன:. மேலும், ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் என்பதால், பரம புருஷருடன் எல்லாவற்றிற்கும் தொடர்பு உள்ளது. இதுவே எங்களது தத்துவம். ஆகையால், இந்த ஒலிப்பெருக்கி, மைக் போன்றவற்றை எல்லாம் நாங்கள் பொய் என்று கூற மாட்டோம். இவை ஏன் பொய்யாக இருக்க வேண்டும்? இவை கிருஷ்ணரின் சக்தியிலிருந்து உருவாக்கப்பட்டவை.
இரும்பு, மரம் என எல்லா ஜடப் பொருட்களும் கிருஷ்ணரின் சக்தியிலிருந்து உருவானவையே. பர-பிரம்மனாகிய கிருஷ்ணர் உண்மையானவர் என்பதால் அவருடைய சக்தியும் உண்மையானதுதான். அந்த சக்தியின் மூலம் உருவான அனைத்தும் உண்மையானவையே. அதே சமயத்தில், சக்தியை சக்திமானுக்காகப் பயன்படுத்துவதுபோல, கிருஷ்ணரின் சக்தியைக் கொண்டு உருவாக்கப்பட்டவை அனைத்தையும் கிருஷ்ணருக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதான் எங்களது தத்துவம்.
உலகைத் துறக்க முடியுமா?
ஆதலால், கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அவை கிருஷ்ணரின் சேவைக்காக மட்டுமே ஏற்கப்படுகின்றன. எதுவும் எங்களுடைய புலன் திருப்திக்காகக் கிடையாது. “இந்த உலகம் பொய்யானது, இதைத் துறந்துவிடுங்கள்” என்று நாங்கள் கூற மாட்டோம். ஏன்? நமது ஆச்சாரியரான ரூப கோஸ்வாமி கூறுகிறார்,
அனாஸக்தஸ்ய விஷயான்
யதார்ஹம் உபயுஞ்ஜத:
நிர்பந்த: க்ருஷ்ண-ஸம்பந்தே
யுக்தம் வைராக்யம் உச்யதே
நீங்கள் கிருஷ்ணருடைய சொத்துகள்மீது பற்றுதல் கொண்டிருக்கக் கூடாது. கர்மிகள்தான் அவ்வாறு பற்றுதல் கொண்டிருப்பார்கள். அவர்கள் கிருஷ்ணரின் சொத்துகளைத் திருடி சட்டத்திற்குப் புறம்பாக அனுபவிக்கின்றனர். மேலும், ஞானி என்று கூறிக்கொள்பவர்கள் அறியாமையின் காரணமாக கிருஷ்ணரின் சொத்துகளைத் துறக்கின்றனர். அவர்கள் ஞானத்திலும் துறவிலும் உயர்ந்த நிலையில் இருப்பதாக கர்வம்கொள்கின்றனர். அவர்களிடம் “நீங்கள் எதை நிராகரிக்கிறீர்கள்?” என்று யாரேனும் வினவினால், “இந்த உலகத்தை நிராகரிக்கிறோம்” என்று அவர்கள் கூறுவர். இருக்கட்டும், “இந்த உலகம் எப்பொழுது உங்களுக்குச் சொந்தமாக மாறியது? இதை நீங்கள் துறப்பதற்கு?”
உங்களுக்குச் சொந்தமான பொருளை மட்டுமே உங்களால் துறக்க இயலும். ஆனால், எதுவுமே உங்களுக்குச் சொந்தமில்லை என்னும்போது, எதை நீங்கள் துறக்க முடியும்? இந்த பூமிக்கு வந்தபோது வெறுங்கையுடன்தான் வந்தீர்கள், இங்கே சில காலம் வாழ்ந்துவிட்டுச் செல்லப் போகிறீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் எதற்கும் உரிமையாளர் இல்லை, போகும்போதும் எதற்கும் உரிமையாளர் இல்லை. அப்படியெனில், உங்களுடைய துறவிற்கு என்ன அர்த்தம்? இதுவே அவர்களின் குறைபாடு.
ஆகவே, நாம் எதையும் துறக்கத் தேவையில்லை. நாம் நினைப்பவை, பார்ப்பவை என அனைத்தும் நமக்கு கிருஷ்ணராலேயே அளிக்கப்பட்டவையே. எதுவும் எனக்குச் சொந்தமானதல்ல; அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானவை. எனது உடல்கூட கிருஷ்ணருடையதே. எனது புத்தியும் கிருஷ்ணருடையதே. எனது எண்ணம், எனது பேச்சு, என்னால் உருவாக்கப்படுபவை என அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானவையே. இதுவே கிருஷ்ண தத்துவம். இதுவே உண்மை.
ஹரே கிருஷ்ண இயக்கம் புதியதல்ல
கிருஷ்ண பக்தி இயக்கத்தின் இந்த தத்துவத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பாக போதித்தார். இந்த இயக்கம் நிச்சயமாக புதிய இயக்கம் அன்று. பகவத் கீதையின் மூலமாக, இஃது ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதைப் புரிந்துகொள்ளலாம், ஐம்பது இலட்சம் ஆண்டுகள் பழமையானது என்பதையும் புரிந்துகொள்ளலாம். ஆயினும், இந்த நவீன காலத்தில், இந்த கிருஷ்ண பக்தி இயக்கமானது, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் ஹரே கிருஷ்ண இயக்கமாக ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. மேலும், ஜகந்நாதரின் ரத யாத்திரை இந்த இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஆதலால், நாங்கள் இந்த ரத யாத்திரையினை இங்கேயும் அறிமுகப்படுத்தி உள்ளோம், இளைஞர்களும் யுவதிகளும் இதை மிகவும் அருமையான முறையில் எடுத்துக் கொண்டுள்ளனர். இனி வரும் காலங்களில், இஃது இன்னும் சிறப்பாக நடைபெறும்.
ராதாராணி எவ்வாறு கிருஷ்ணரை விருந்தாவனத்திற்கு அழைப்பாரோ, அதே மனோபாவத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஜகந்நாதரை குண்டிசாவிற்கு அழைக்கின்றார். ஆகவே, ரதத்திற்கு முன்னால் செல்லும்பொழுது, “நான் கிருஷ்ணரை விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்கிறேன்,” என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நினைத்துக்கொள்வார். அந்த பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார்.
குண்டிசா-மார்ஜனம்
இந்தத் திருவிழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அப்போது சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரேயான ஸ்ரீ ஜகந்நாதர் குண்டிசாவிற்குச் செல்கிறார். ரத யாத்திரைக்கு முந்தைய நாள் குண்டிசா-மார்ஜன தினமாகும். இன்றைய தினத்தில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தம்முடைய நூற்றுக்கணக்கான உதவியாளர்களுடன் இணைந்து, [ஜகந்நாதரின் வருகைக்கு தயார் செய்யும் விதமாக] குண்டிசா கோயில் முழுவதையும் தாமே கழுவி சுத்தம் செய்வார். அக்காலத்தில் குழாயில் தண்ணீர் பெறுவதற்கான சாதனங்கள் இல்லை. மக்கள் பெரியபெரிய மண்பானைகளில் தண்ணீர் கொண்டு வருவார்கள். ஸ்ரீ ஜகந்நாத புரியின் மன்னரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மாபெரும் பக்தருமான மஹாராஜா பிரதாபருத்ரர், “மஹாபிரபு எப்போது என்ன கேட்டாலும், அதை உடனே வழங்க வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, குண்டிசா-மார்ஜன நாளில், மஹாபிரபு நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் குண்டிசா கோயிலை சுத்தம் செய்யத் தொடங்குவார். அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வரப்படும். நீங்கள் எப்போதாவது ஜகந்நாத புரிக்குச் சென்றால், அந்த குளத்தைப் பார்க்கலாம். அங்கிருந்து நூற்றுக்கணக்கான மண்பானைகளில் தண்ணீர் எடுத்துவரப்படும். முதலில் துப்பரவு பணி நடைபெறும், எந்த பக்தர் அதிக குப்பைகளைச் சேகரிக்கிறார் என்பதை மஹாபிரபு கவனிப்பார். “இந்தத் துப்பரவு பணியில் ஈடுபட்டு எவ்வளவு குப்பைகளைச் சேகரிக்கிறீர்கள் என்பதைக் கொண்டு, நீங்கள் எவ்வளவு தீவிரமாக உழைத்திருக்கிறீர்கள் என்பதைக் கணிப்பேன்,” என்று கூறுவார். முதலில் ஒருமுறை தூய்மைப்படுத்திய பின்னர், அடுத்து இரண்டாவது முறையும் கூட்டி துப்பரவு செய்து, சிறிய தூசித் துரும்புகூட இல்லாதபடி நேர்த்தியாக சுத்தம் செய்திருக்க வேண்டும். இதுதான் அவரின் உத்தரவு.
ஜகந்நாதரின் ரத யாத்திரையில் கலந்துகொள்வதன் பலன் வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது, ரதே ச வாமனம் த்ருஷ்ட்வா புனர் ஜன்ம ந வித்யதே. ஜகந்நாதர் ரதத்தில் பவனிவருவதைப் பார்த்து, ரதத்திற்கு முன்பாக நிகழும் ஹரே கிருஷ்ண மந்திர கீர்த்தனத்தில் கலந்து கொண்டால், அடுத்த பிறவியில் நீங்கள் மீண்டும் இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வீர்.