வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
அண்மையில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுடன் நூறு கோடிகளை வசூலித்துள்ளது. நீங்களும் அதனைப் பார்த்திருக்கலாம். ஆம், இராமாயணம்: அன்றும் இன்றும் என்றும் மக்களைக் கவரும் அற்புத காவியம். இராமாயணத்தைத் தழுவி எத்தனை எத்தனையோ காவியங்கள், தெருக்கூத்துகள், நாடகங்கள், கவிதைகள், வரைபடங்கள், மற்றும் திரைப்படங்களும் வந்துள்ளன. கலைஞர்கள் இவ்வாறு சுற்றிச்சுற்றி வருவதற்கு, இராமாயணம் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளதே காரணமாகும்.
இவர்களில் சிலர் (அல்லது பலர்) இராமாயணத்தின் தகவல்களை தங்களது மனதிற்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். அவ்வாறு இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாமா? இதைச் சற்று விவாதிக்கலாம்.
இராமாயணத்தைக் கட்டுக்கதையாக நினைத்தல்
நவீன கால மனிதன் இராமாயணத்தை அணுகும்போது, அவனது சிந்தனைக்கு அப்பாற்பட்ட பல்வேறு விஷயங்களை இராமாயணத்தில் காண்கிறான். பத்து தலை கொண்ட இராவணன், மலைபோன்ற உடலைக் கொண்ட கும்பகர்ணன், பேசக்கூடிய குரங்குகள், கழுகுகள், கரடிகள், தூண்களின்றி கடலில் அமைக்கப்படும் பாலம், மலையைத் தூக்கிக் கொண்டு பறக்கும் ஹனுமான் என பல அசாத்தியமான விஷயங்கள் அவனுக்கு ஐயத்தைக் கொடுக்கின்றன. அந்த ஐயத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மேற்கத்திய ஆய்வாளர்கள் பலர் இராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை Mythology என்று சொல்கின்றனர். அதாவது, ஆதாரமில்லாத, உலக நடைமுறையினால் விளக்கமுடியாத, பாரம்பரிய நம்பிக்கை அல்லது கற்பனை என்கின்றனர். சுருக்கமாகக் கூறினால், இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று கூறுகின்றனர்.
உண்மையில், இராமாயணம் அவர்கள் கூறுவதைப் போன்ற கட்டுக்கதை அன்று; இஃது இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மை வரலாற்றைக் கூறும் நூல். ஆயினும், நாத்திகர்களும் ஸநாதன எதிர்ப்பாளர்களும், கிணற்றுத் தவளையைப் போன்ற அறியாமையினால், இதனை ஒரு கட்டுக்கதையாகவே நினைக்கின்றனர்.
மிகைப்படுத்தப்பட்ட கதையா
கட்டுக்கதையாக நினைப்பவர்கள் பெரும்பாலும் இராமாயணத்தில் அவ்வளவு ஆர்வம்காட்ட மாட்டார்கள். அதே சமயத்தில், இராமாயணத்தின் மீது ஆர்வம் செலுத்தும் “இந்து” சமயத்தினரிடையே [மேற்கூறியவர்களின் பிரச்சாரத்தினால்] “இராமாயணத்தின் காட்சிகள் காவியத்திற்காக மிகைப்படுத்தப்பட்டுள்ளன,” என்னும் கருத்து மெள்ளமெள்ள பரவி வருகிறது. அதாவது, “இராமர் உண்மையே, ஆனால் இராமாயணம் முழுமையான உண்மையல்ல” என்று நினைக்கின்றனர்.
அதாவது, இராமாயணத்திலுள்ள அமானுஷ்யமான செயல்களை இவர்கள் நம்புவதில்லை, அவை காவியத்திற்காகப் புனையப்பட்டவை என்று நினைக்கின்றனர். பண்டிதரும் பேச்சாளருமாக இருக்கும் பெயரளவு வைஷ்ணவர் ஒருவர் அண்மையில், “ஹனுமான் முதலான வானரர்கள் [மனிதர்களைப் போன்று] மொழியைக் கொண்டு பேசியிருக்க வாய்ப்பில்லை, ஜாடை மொழியிலும்
வெற்று சத்தங்களைக் கொண்டும்தான் பேசியிருப்பார்கள்,” என்று கருத்து தெரிவித்திருந்தார். வானரர்கள் சாதாரண குரங்குகள் அல்லர் (பூவுலகிற்கு அப்பாற்பட்ட சரீரத்தைப் பெற்றவர்கள்) என்னும் அடிப்படை உண்மைகூட இவருக்குத் தெரியாதது வியப்பளித்தது. “சொல்லின் செல்வர்” என்று போற்றப்படும் ஹனுமானை (இன்றைய குரங்குகளைப் போல) பேசவியலாதவர் என்று நினைத்தல் பெரும் குற்றமாகும்.
இராமாயணத்தின் மீதான இத்தகு அவநம்பிக்கையின் காரணத்தினால், புனைவுகளை யார் புனைந்தால் என்ன என்று நினைக்கின்றனர். “வால்மீகியைப் போலவே நானும் எனது கற்பனை சக்திகளைக் கொண்டு இராமாயணத்தைப் புனைகிறேன்,” என்று எண்ணுகின்றனர்.
இவர்களின் இந்த அறியாமையே “இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாம்” என்ற எண்ணத்திற்கு வித்தாகிறது. இதனால், இராமாயண கதையில் பல மசாலாக்களைச் சேர்க்கின்றனர்; தங்களது கற்பனைத் திறனைக் கொண்டு திரைக்கதை எழுதுகின்றனர்; சொற்பொழிவாளர்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக எதைஎதையோ திரிக்கின்றனர்; வரைபடக் கலைஞர்கள், கிராஃபிக்ஸ் டிசைனர்கள் முதலியோர் தத்தமது சுவைக்கு ஏற்றபடி கதையையும் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் அமைக்கின்றனர். கொடுமை!
இராமாயணம் ஒரு வரலாறு
இராமாயணம் கட்டுக்கதை அன்று, மிகைப்படுத்தப்பட்ட காவியமும் அன்று; இஃது ஒரு வரலாறு, துல்லியமான வரலாறு, இந்த பாரத தேசத்தின் செம்மையான மன்னரும் முழுமுதற் கடவுளுமாகிய பகவான் ஸ்ரீ இராமரைப் பற்றிய வரலாறு. இராமாயணத்தை எழுதியவர் சாதாரண கவிஞர் கிடையாது, அவர் மாமுனிவர்களில் மிகச்சிறந்தவர். அவரது கடும் தவத்தின் பயனாக இராமாயணத்தை எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவர் நாரதரால் உபதேசிக்கப்பட்டவர், பிரம்மதேவரால் நேரடியாக ஆசிர்வதிக்கப்பட்டவர். ஆகவே, அவரது இராமாயணம் இதிஹாஸம் எனப்படுகிறது; “இவ்வாறு நிகழ்ந்தது” என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்.
இராமாயணம் நவீன காவியங்களைப் போன்று கற்பனைகளுடன் எழுதப்பட்டதன்று. இதன் எந்தவொரு ஸ்லோகமும் வார்த்தையும் எழுத்தும்கூட உண்மைக்குப் புறம்பானதல்ல.
பிரம்மதேவராலும் நாரதராலும் ஆசிர்வதிக்கப்பட்டு இராமாயணத்தை எழுதிய மாமுனிவர் வால்மீகி
அவர் பயன்படுத்தியுள்ள எல்லா அணிகளும் உவமைகளும்கூட 100% பொருத்தமானவை.
கல்வெட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆய்வாளர்களில் சிலர் இராமர் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறுகின்றனர். இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரை எந்த ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்க இயலும்? கல்வெட்டில் எழுதினால்கூட சில ஆயிரம் வருடங்கள்தான் தாக்குப் பிடிக்கும். கல்வெட்டைக் காட்டிலும் அழியாத பொக்கிஷம் “இராமாயணம்.” இராமர் சாக்ஷாத் பகவான் என்பதால், அவரது வரலாறு இலட்சக்கணக்கான ஆண்டுகளாக இராமாயணத்தின் மூலமாக வழிவழியாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆகவே, கல்வெட்டில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நம்பப்படுவதைப் போல, இராமாயணத்தின் ஒவ்வொரு வார்த்தையும் முழுமையாக ஏற்கப்பட வேண்டும்.
கட்டுக்கதையை மாற்றலாம், வரலாற்றை மாற்றலாமா?
ஒரு புனைகதையை மற்றொரு கலைஞர் வேறு வழியில் படைக்கும்போது, அவர் அதனை சற்று மாற்றியமைக்கலாம், தனது சுவைக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப மசாலாக்களைத் தூவலாம். ஆனால், வரலாற்றை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது.
உண்மையைச் சொன்னால், புனைகதையாகவே இருந்தால்கூட ஒருவரின் கதையை மற்றொருவர் கையாளும்போது, அந்தக் கதையை அவர் நினைத்தபடி மாற்றுவது சரியா, நியாயமா என்று கேட்டால், “இல்லை” என்று கூறுவர். பொன்னியின் செல்வன் என்ற பெயரில் எழுதப்பட்ட புனைகதையை திரைப்படமாகக் காட்டியதில், இயக்குநர் தன்னுடைய கற்பனையைச் சேர்த்து சில காட்சிகளை மாற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பல திரைப்படங்கள் ஒரு மொழியிலிருந்து வேறு மொழியில் ரீமேக் செய்யப்படும்போது, முதல் திரைப்படத்துடன் புதிய திரைப்படம் ஒத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏன்? அதுதான் தர்மம், நியாயம். Copyrights, legal rights, professional ethics என்று எத்தனையோ சொல்கிறோமே.
இவ்வாறிருக்கையில், இராமாயணம் என்னும் வரலாற்றைத் திரித்துக் கூறுதல் எந்த விதத்தில் நியாயம்? [ஒரு வாதத்திற்காக] ஒருவேளை நீங்கள் இதனைப் புனைகதை என்று நினைத்தால்கூட, வால்மீகிக்கு காப்புரிமை இல்லையா? கொஞ்சம்கூட professional ethics இருக்க வேண்டாமா? சிந்தித்துப் பாருங்கள்.
வரலாற்றில் படைப்பு சுதந்திரம்
எழுத்து வடிவில் இருப்பதைத் திரை வடிவில் கொண்டு வரும்போது, அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மறுக்கவில்லை. திரைக்குத் தேவையான எல்லாத் தகவல்களும் எழுத்தில் இருக்காது; எழுத்தில் இருக்கும் எல்லாத் தகவல்களையும் திரையில் காண்பிக்க இயலாது. ஆகவே, அதுபோன்ற இடங்களில் மட்டும், கலைஞர்கள் தங்களது படைப்பு சுதந்திரத்தைக் கொண்டு காட்சிகளை அமைக்கலாம். ஆனால், தெளிவாக இருக்கும் வரலாற்று உண்மைகளை மாற்றியமைத்தல் தவறு. அதிலும், தேவையின்றி மாற்றியமைத்தல் பெரிய தவறு.
அலாவுதீன் கில்ஜி தனது மாமனாரைக் கொன்றார் என்பதை காட்சிப்படுத்த விரும்புபவர், அதில் போதிய விவரம் இல்லாததால், வாள், கத்தி, கழுத்தை நெறித்தல் என ஏதேனும் ஒரு வழியில் அதனை காட்சிப்படுத்தலாம். ஆனால், கோட்சே காந்தியைக் கொன்றதை காட்சிப்படுத்த விரும்புபவர், கோட்சே கழுத்தை நெறித்துக் கொன்றார் என்று காட்டினால், அதனை சமுதாயம் ஏற்குமா? நிச்சயமாக இல்லை. ஏன்? ஏனெனில், காந்தி கொல்லப்பட்ட விதம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, இராமாயணம், மஹாபாரதம் முதலிய வரலாறுகளை [எப்போது நிகழ்ந்ததோ அப்போதே நன்கு பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறுகளை] காட்சிப்படுத்த விரும்புபவர்கள் தங்களது இஷ்டப்படி அவற்றை மாற்றவியலாது. எந்த இடத்தில் காட்சிக்குத் தேவையான தகவல்கள் இல்லையோ அங்கு மட்டும் தங்களது கற்பனையைப் பயன்படுத்தலாம். அந்த கற்பனையும் உண்மைக்கு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். அலாவுதீன் கில்ஜியின் கதையில் துப்பாக்கியைக் கொண்டுவர முடியுமா? அதுபோல, இராமாயணத்தில் புஷ்பக விமானத்தைப் பற்றிய விரிவான தகவல்கள் இருக்கும்போது, அந்த விமானத்தையே [ஒரு பறவையைப் போன்று] மாற்றியமைத்தல் சரியா?
வரலாற்றைப் படைக்கும்போது அங்கே படைப்பு சுதந்திரம் என்பது குறைவு. படைப்பாளிகள் இதனை உணர வேண்டியது அவசியம். படைப்புகள் இயன்ற வரை மூலத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும். இன்று புஷ்பக விமானத்தை மாற்றுவோர் நாளை ஹனுமானை ஒரு கரடியாகக்கூட காண்பிக்கலாம். இவ்விஷயத்தில் படைப்பு சுதந்திரத்திற்கு இடமில்லை.
பக்தியுடன் இராமாயணத்தை அணுகுதல்
கலைஞர்களில் பலர் இராமரின் மீதான அன்பினாலும் பக்தியினாலும் இராமாயணத்தைக் கொண்டு தங்களது கலைப்படைப்புகளை அரங்கேற்றுகின்றனர். ஆயினும், அவர்களில் சிலர் மக்களது பக்தி உணர்ச்சிகளைத் தங்களது தொழிலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு இராமாயணத்தைப் படைக்கின்றனர். இத்தகு தொழில் கலைஞர்கள் முந்தைய காலத்தில் குறைவாக இருந்தனர், நவீன காலத்திலோ உண்மையான பக்தியுடன் படைப்பவர்கள் குறைவாக உள்ளனர்.
ஆதிபுருஷ் குழுவினர் மட்டுமின்றி பாரதப் பண்பாட்டின் மீது ஆர்வமுள்ள பல்வேறு கலைஞர்கள் இதுபோன்ற படைப்புகளை உருவாக்குகின்றனர். ஆனால், இவர்களின் அறிவு நவீன விஞ்ஞான எண்ணத்தினாலும் சினிமாத்தனத்தினாலும் குழப்பமடைந்துள்ளது. ஆகவே, பக்தியுடன் தயாரிப்பவர்கள்கூட தங்களது பக்தியையும் சொல்வழி இராமாயண அறிவையும் நம்பியிருக்காமல், இராமாயணத்தை முறையாகப் படித்து, காட்சிகளைப் பரிசோதித்து அமைத்தல் அவசியமாகிறது. அவர்கள் ஒருவேளை வேண்டுமென்றே காட்சிகளை மாற்றியமைத்தால், அது மிகப்பெரிய குற்றமாகும்.
இராமாயணத்தில் என்ன இல்லை
வால்மீகி இராமாயணம் ஒரு விரிவான இதிகாசம், மொத்தம் 24,000 ஸ்லோகங்களைக் கொண்டது, இதிலுள்ள எல்லா விவரங்களையும் யாராலும் காட்சிப்படுத்த முடியாது; அது சாத்தியமற்ற செயல் என்றும் கூறலாம். வால்மீகி எந்தவொரு விவரத்திற்கும் பஞ்சம் வைக்கவில்லை. ஆகவே, இங்கு கற்பனைக்கு என்ன அவசியம்?
வெளியே சென்று எதையும் தேட வேண்டிய எந்தவொரு தேவையும் இராமாயணத்திற்கு இல்லை. காதல், சகோதர பாசம், பிள்ளைப் பாசம், நட்பு, சேவகம், வீரம், அவலம், அச்சம் உட்பட எல்லாச் சுவைகளும் (நவரஸங்களும்) இராமாயணத்தில் பொதிந்து கிடக்கின்றன. இங்கே எந்தச் சுவை இல்லை, எந்த உணர்ச்சிதான் இல்லை? அதுமட்டுமின்றி, கலைஞர்களின் படைப்புகளுக்குத் தேவையான உவமைகள், கவிதைகள், மனதை உருக்கும் வசனங்கள், அனல் தெறிக்கும் கோபாவேச வசனங்கள் என எல்லாமே இராமாயணத்தில் இருக்கின்றனவே.
இருப்பதை காட்சிப்படுத்துவதே இயலாது என்னும்பட்சத்தில், 24,000 ஸ்லோகங்களில் இல்லாத ஒன்றைச் சொருகுவதற்கு என்ன அவசியம்?
இராமாயணத்தின் அவசியம்
இவை அனைத்திற்கும் மூல காரணம் என்னவெனில், மக்கள் ஏதேதோ விஷயங்களைப் படிக்கின்றனரே தவிர இராமாயணத்தைப் படிப்பதில்லை. பகவான் ஸ்ரீ இராமரின் உன்னதமான வரலாறு நமக்கு எல்லா இன்பத்தையும் வழங்கக்கூடியது. முன்னரே கூறியதுபோல, இராமாயணத்தில் நவரஸங்களும் புதைந்து
கிடக்கின்றன. அதே சமயத்தில், இராமாயணத்தின் நவரஸங்களுக்கும் லெளகிகச் சுவைகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. இராமாயணம் நம்மை உயர்த்தக்கூடியது, லௌகிகச் சுவை நம்மைத் தாழ்த்தக்கூடியது.
காவியம், சொற்பொழிவு, பட்டிமன்றம், தெருக்கூத்து, நாடகம், திரைப்படம் முதலியவற்றால் நாம் கவரப்படுகிறோம். நவரஸங்களைச் சுவைப்பதற்கான நமது விருப்பம் இயல்பானது. ஏனெனில், எல்லாச் சுவைகளின் இருப்பிடமாகிய அந்த இராமரது அம்சங்களாகிய நாம் அந்தச் சுவைகளை பகவானின் தொண்டில் சுவைக்க வேண்டியவர்கள். அவற்றை எப்போது லௌகிகத்தில் சுவைக்காமல், இராமாயணம், மஹாபாரதம், பாகவதம் முதலிய பகவத் விஷயங்களில் சுவைக்
கின்றோமோ, அப்போது நாம் பக்குவமடைவோம்; இறப்பிற்குப் பின்னர், மீண்டும் இப்பூவுலகிற்குத் திரும்பிவர மாட்டோம்.
இதனால்தான், தொன்றுதொட்டு இராமாயண விஷயங்கள் பட்டிதொட்டியெங்கும் கோயில்களில் பேசப்பட்டு வந்தன, நாடகங்களாக அரங்கேற்றப்பட்டு வந்தன, பாட்டிகளால் இரவுநேர கதைகளாக உரைக்கப்பட்டு வந்தன. பாட்டி கதைகள் அகன்று பார்ட்டி கதைகள் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையிலும், இராமாயணத்தின் மீதான மக்களின் கவர்ச்சி அகலவில்லை. அதனால்தான், அவை திரைப்படங்களாக வருகின்றன. அவற்றை நிச்சயம் நாம் வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம்.
இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பாரத வரலாற்றில் எத்தனையோ இதர காவியங்களும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. ஆகவே, இராமாயணத்தின் ஒவ்வொரு பகுதியை வைத்தும் பல்வேறு திரைப்படங்களை பிரம்மாண்டமாக உருவாக்கலாம். இவற்றிற்கு அன்றும் இன்றும் என்றும் மக்களிடையே வரவேற்பு இருக்கும்.
அதே நேரத்தில், 500 கோடி செலவிட்டு VFX முதலிய தொழில்நுட்ப விஷயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தும் அவர்கள், கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி இராமாயணத்தை முறையாகவும் முழுமையாகவும் படித்துவிட்டு திரைப்படங்களை எடுத்தால், அவை மேலும் சிறப்பாக அமையும். பணமே வாங்காமல், இராமாயண கதையை சேவையாக எடுத்துரைக்கும் ஆயிரக்கணக்கான இராமாயண பண்டிதர்கள் இன்றும் இருக்கிறார்களே! அவர்களுடன் ஏன் ஆலோசிக்கக் கூடாது?
முறையாக இராமாயணம் கற்போம்
ஆன்மீக அன்பர்கள் ஒவ்வொருவரும் முறையாக இராமாயணம் கற்க வேண்டும். அப்போதுதான், எது சரி, எது தவறு என்பதை வேறுபடுத்த இயலும். சொல்வழி இராமாயணம் ஒருபுறம் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அவற்றிலும் பலர் கலப்படங்களைக் கலப்பதால், சரியான மூலத்திலிருந்து இராமாயணத்தை அணுகுங்கள். நேரமும் ஆர்வமும் இருப்பின், முழுமையான இராமாயணத்தைப் படியுங்கள். அதில் சிரமம் இருக்குமெனில், குறைந்தபட்சம் (எவ்வித கலப்படமும் இல்லாமல் எழுதப்பட்டு) இஸ்கானில் கிடைக்கக்கூடிய வால்மீகி இராமாயணத்தின் சுருக்கத்தை வாங்கிப் படியுங்கள்.
நாம் முறையாகக் கற்றுக் கொண்டால்தான், அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்ட முடியும். இராமாயணம் கற்போம்! பகவான் ஸ்ரீ இராமரைப் போற்றிப் புகழ்வோம்!
Hare Krishna!