தியானத்தினால் ஏமாறும் மக்கள்
தியானம் என்ற பெயரில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பதுகுறித்து, ஸ்ரீல பிரபுபாதர் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது திரு. ஃபையில் என்பவருடன் நிகழ்ந்த பேட்டியின் ஒரு பகுதி.
திரு. ஃபையில்: தியானம் மக்களுக்கு உபயோகமாக உள்ளதா?
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் உண்மையான தியான முறையைப் பற்றி அறியாதவர்கள். அவர்களது தியானம் போலியானது, ஏமாற்றுவதற்கான மற்றொரு திட்டம். ஸ்வாமிகள், யோகிகள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் வகுத்துள்ள திட்டம். தியானம் மக்களுக்குப் பயன்படுகிறதா என்று நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். தியானம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
திரு. ஃபையில்: மனதை அமைதிப்படுத்துவது, எண்ணத்தை மத்தியில் நிறுத்தி அங்குமிங்கும் அலையவிடாதபடி செய்வது.
ஸ்ரீல பிரபுபாதர்: மத்தியில் என்றால் என்ன?
திரு. ஃபையில்: அதைப் பற்றி எனக்குத் தெரியாது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆக, எல்லாரும் தியானத்தைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் தியானம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இந்தப் பொய்யர்கள் “தியானம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தியானத்திற்கான சரியான பொருள் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் போலியான பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.
திரு. ஃபையில்: மக்கள் சரியாக சிந்திக்க தியானம் மிகவும் உதவுகிறதல்லவா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, உண்மையான தியானம் கடவுள் உணர்வில் மனதைத் திளைக்கச் செய்கிறது. ஆனால் கடவுள் என்றால் என்னவென்று அறியாமல் எப்படி தியானம் செய்வீர்கள்? அது மட்டுமின்றி இந்த யுகத்தில் மக்களின் மனம் பெரிதும் சஞ்சலத்திற்கு உட்பட்டிருப்பதால், அதை ஒருமுகப்படுத்துவது இயலாத காரியம். தியானம் என்று இவர்கள் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். தியானம் என்ற பெயரில் அவர்கள் நன்றாகத் தூங்கிக் குறட்டை விடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இறையுணர்வு அல்லது “தன்னுணர்வு” என்ற பெயரில் பல எத்தர்கள் அதிகாரபூர்வமான வேத நூல்களோடு சம்பந்தப்படாததும், முறைப்படியான விதிகளுக்கு உட்படாததுமான தியான முறைகளை மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இஃது அவர்கள் கையாளும் ஏமாற்றுவித்தை.
திரு. ஃபையில்: ஒளஸ் பென்ஸ்கி, குர்த்ஜியஃப் போன்ற மற்ற போதகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் கடந்த காலத்தில் உங்கள் கருத்துகளையொட்டிய செய்தியை மேல்நாட்டில் பரப்பினார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களின் போதனைகளை ஆராய்ந்து பார்த்துதான் அவற்றின் தரம், வேதக் கோட்பாடுகளின்படி உள்ளதா என்பதை அறிய முடியும். கடவுள் விஞ்ஞானமும், மருத்துவ விஞ்ஞானம் அல்லது மற்ற விஞ்ஞானத்தைப் போன்றதே. அது வெவ்வேறு மனிதர்களால் விவரிக்கப்பட்டுள்ளது என்பதால் வேறானதாகி விடாது. எப்போதும் இரண்டும்இரண்டும் நான்குதான்; ஐந்தோ மூன்றோ ஆகாது. விஞ்ஞானமும் அப்படிப்பட்டதே.
திரு. ஃபையில்: மற்றவர்களும் உண்மையான கடவுள் உணர்வு முறையைக் கற்பித்திருக்கக்
கூடுமென்று எண்ணுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களின் போதனைகளை நான் விவரமாக ஆராயாமல் எதுவும் கூறுவது கடினம். ஏமாற்றுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
திரு. ஃபையில்: வெறும் பணத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு எந்த நியமங்களும் இல்லை. எனவே, நாங்கள் பகவத் கீதையை அதன் உண்மையுருவில் வழங்குகிறோம். எங்கள் சொந்த முறையில் அதற்கு விளக்கம் தருவதில்லை. இதுவே முறையான வழிமுறையாகும்.
திரு. ஃபையில்: ஆம், எதையும் அலங்கரிக்க முயற்சித்தால் இறுதியில் அஃது உருமாறுவதைத் தவிர்க்க முடியாது.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வு முறை ஒன்றும் புதியதல்ல. அது மிகவும் புராதனமானது. ஒரே சீரானது. இதை மாற்ற இயலாது, மாற்ற முயன்றால் வீரியம் குன்றிவிடும். இதன் வீரியம் மின்சாரத்தைப் போன்றது. மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முறையாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் மனம்போனபோக்கில் மின் இயக்கி (ஜெனரேட்டர்) இயந்திரங்களை தயாரித்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலாது. அதுபோலவே, கிருஷ்ண உணர்வைப் பெறுவதற்கு, அதிகாரபூர்வமானவர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளின்படி நடந்தால், பயனடையலாம். ஆனால் இன்றைய மனிதன் எதையும் தன் மனம்போனபோக்கில் செய்ய விரும்புகிறான். இஃது அவனைப் பீடித்துள்ள நோய். முறையாக வகுக்கப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்ற யாரும் விரும்புவதில்லை. எனவே, எல்லாரும் ஆன்மீக மற்றும் லௌகீக விஷயங்கள் என இரண்டிலும் தோல்வியடைகிறார்கள்.
திரு. ஃபையில்: கிருஷ்ண பக்தி இயக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறதா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், மிக நன்றாக வளர்ந்து வருகிறது. எங்களது புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகின்றன. இஃது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நாங்கள் சுமார் ஐம்பது புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். நூல் நிலைய அதிகாரிகளும் கல்லூரிப் பேராசிரியர்களும் அவற்றை மிகவும் பாராட்டுகின்றனர். அதற்கு காரணம், எங்களது வெளியீட்டிற்கு முன்பு இதுபோன்ற ஓர் இலக்கியம் எதுவும் இருந்ததில்லை. அவை இவ்வுலகிற்குப் புதியதொரு வரப்பிரசாதமாகும்.
திரு. ஃபையில்: கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் உள்ளவர்கள் தலைமுடியை மழித்து காவி உடைகளை அணிய வேண்டும் போலிருக்கிறது. குடும்ப வாழ்விலிருக்கும் சராசரி மனிதன் கிருஷ்ண உணர்வை எப்படி அடைவது?
ஸ்ரீல பிரபுபாதர்: மழித்த தலையும், காவி உடையும் அவசியத் தேவையில்லை. எனினும், அவை நல்லதொரு மனநிலையை உருவாக்குகின்றன. இஃது இராணுவத்திலிருப்பவன் அதற்கான சீருடையை அணியும்போது அவனுக்கு உற்சாகம் கிடைப்பதைப் போன்றதாகும். இதனால் அவன் நன்கு செயல்படுகிறான். ஆனால், அவை அத்தியாவசியம் என்பதல்ல. சீருடையில் இல்லாதபோது அவனால் போர் செய்ய முடியாது என்பதில்லை அல்லவா? அதுபோலவே, கடவுள் உணர்வை எதனாலும் தடுத்து நிறுத்த இயலாது. அஃது எந்தச் சூழ்நிலையிலும் ஏற்படலாம். ஆனால் சில சூழ்நிலைகள் அதற்கு உதவியாயிருக்கின்றன. எனவே, இப்படி வாழ வேண்டும், இப்படி உடுத்த வேண்டும், இப்படி உண்ண வேண்டும், என்றெல்லாம் வகுத்திருக்கிறோம். அதன்படி நடந்தால் கிருஷ்ண உணர்வைப் பெறுவதில் உதவியாயிருக்கும், ஆனால் அவை அத்தியாவசியமல்ல.
திரு. ஃபையில்: அப்படியானால், அன்றாட வாழ்க்கையைக் கவனித்துக் கொண்டே ஒருவன் கிருஷ்ண உணர்வு மாணவனாக இருக்க முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: முடியும்.
திரு. ஃபையில்: காலம்காலமாகத் தோன்றியுள்ள சிறந்த யோகிகளெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆன்மீகப் பொறியைக் கண்டிருக்கிறார்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: “யோகிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
திரு. ஃபையில்: இஃது உண்மையின் மற்றொரு நிலையை உணர்ந்த மக்களுக்கு அளிக்கப்படும் பெயராகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் “யோகிகள்” எனும் வார்த்தையை உபயோகிப்பதில்லை. நாங்கள் உண்மையெனக் கருதும் கடவுள் உணர்வு, நாம் ஆன்மீகத் தளத்தை அடையும்போது ஏற்படுகிறது. உடலைச் சார்ந்து வாழும் வரை, புலனின்பமே நமது சிந்தனையாக இருக்கிறது; ஏனெனில், இந்த உடல் புலன்களால் ஆனது. உடல் தளத்திலிருந்து முன்னேறி, செயல்களுக்கான மையம் மனம் என நாம் கருதும்போது, இறுதியாக உணரப்பட வேண்டியது மனம் என எண்ணுகிறோம். அது மனதின் தளம். மனதின் தளத்திலிருந்து, புத்திக்கும், புத்தியின் தளத்திலிருந்து திவ்யமான தளத்திற்கும் உயரலாம். இறுதியில் அதிலிருந்து உயர்ந்து, பக்குவமான ஆன்மீகத் தளத்தை அடையலாம். இவை இறையுணர்வை அடைவதற்கான பல நிலைகள். எனினும், இந்த யுகத்தில் மக்கள் தம் நிலையில் மிகவும் இழிந்தவர்களாக இருப்பதால், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று இறைவனின் திருநாமங்களை உச்சாடனம் செய்வதால், நேரடியாக ஆன்மீகத் தளத்தை அடையலாமென்ற சிறப்பான ஆலோசனையை சாஸ்திரங்கள் வழங்குகின்றன. அதை நாம் ஆன்மீகத் தளத்தில் பயிற்சி செய்யும்போது உடனடியாக நமது ஆன்மீக நிலையை உணரலாம். அதன்பின் இறையுணர்வைப் பெறுவதில் வெகுவிரைவில் வெற்றி கிட்டுகிறது.
திரு. ஃபையில்: ஆன்மீகப் பொறியை அறிவதே முதல்படியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உடலுக்குள் ஆத்மா இருப்பதை அறிவது முதல்படி. இந்த எளிய உண்மையை அறியாமல், ஆன்மீக முன்னேற்றம் என்பது சாத்தியமல்ல.
திரு. ஃபையில்: இதனை அறிவுபூர்வமாகப் புரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆரம்ப நிலையில் அப்படி செய்யலாம். இரண்டு விதமான அறிவு உண்டு. ஒன்று, ஏட்டளவிலானது. மற்றொன்று நடைமுறையிலானது. முதலாவதாக ஒருவர் ஆன்மீக விஞ்ஞானத்தை ஏட்டளவில் கற்க வேண்டும். பின்னர் ஆன்மீகத் தளத்தில் செயல்படும்போது நடைமுறையிலான அறிவு (உணர்வு) ஏற்படுகிறது.
உண்மையான தியானம் கடவுள் உணர்வில் மனதைத் திளைக்கச் செய்வதே.