ஆன்மீக வாழ்வின் விஞ்ஞானம் — பகுதி 2

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

தென்னாப்பிரிக்காவின் வெஸ்ட்வில் டர்பன் பல்கலைக்கழக தலைவரான டாக்டர் S.P. ஆலிவரிடம் ஸ்ரீல பிரபுபாதர் ஆன்மீக வாழ்வின் நடைமுறை பயிற்சியினை சாதாரண மக்களும் எவ்வாறு பெற முடியும் என்பதுகுறித்து விவாதிக்கிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: இவ்வுலகில் எவ்வாறு அமைதியாக வாழ்வது, எவ்வாறு மீண்டும் கடவுளின் திருநாட்டிற்குச் செல்வது என்பவை அனைத்தும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளன.

டாக்டர். ஆலிவர்: ஆனால், நவீன கால மனிதனை சுய ஆர்வத்துடன் இந்த ஆன்மீக முயற்சியில் ஈடுபடச் செய்வது எப்படி? நாங்கள் ஆன்மீகத்திலிருந்து வெகு தூரம் வந்துவிட்டதால், எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. மேலும், எங்களுடன் அமர்ந்து கடவுள் தம்மையே வழங்குவதில் எவ்வளவு பிரியமாக இருக்கிறார் என்பதை அறிவதற்கு, உண்மையான நம்பிக்கை கொண்ட ஒரு டஜன் ஆட்கள்கூட கிடைப்பதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் தம்மையே தருகிறார், நாம் அவரை ஏற்றுக் கொண்டால் போதும். அதற்கு சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது, மற்றபடி அனைத்தும் உள்ளன. ஆத்மா நித்தியமானது என்றும், உடல் மாற்றமடைகின்றது என்றும் கடவுள் கூறுகிறார். இஃது ஓர் எளிய உதாரணம். சிறு பாலகன் இளைஞனாகிறான், இளைஞன் முதியவனாகிறான். இந்த உண்மையை மறுப்பதற்கில்லை. என்னால் இதனைப் புரிந்துகொள்ள முடியும், உங்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். இது மிகவும் எளிமையானது. நான் பாலகனாக இருந்தபோது துள்ளிக் குதித்தது நினைவில் உள்ளது. ஆனால், இப்பொழுது என்னால் அவ்வாறு செய்ய இயலாது; ஏனெனில், நான் வேறு உடலைப் பெற்றுள்ளேன். அந்த உடலைப் பெற்றிருந்தேன் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் இப்பொழுது அந்த உடல் இல்லை. உடல் மாறினாலும் நான் அதே நபர்தான். இதனைக் காண சிறிது புத்திசாலித்தனம் தேவை. நான் இந்த உடலின் உரிமையாளன், நான் நித்தியமான ஆத்மா. இந்த உடலோ மாறிக் கொண்டே உள்ளது.

டாக்டர். ஆலிவர்: இதனை ஏற்கும் பட்சத்தில், அடுத்த பிரச்சனை எழுகிறது: இதனால் ஏற்படும் தாக்கம் என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நான் இந்த உடலல்ல என்பதை புரிந்த பின்னும், என்னைப் பற்றி கவனம் கொள்ளாது, இந்த உடலை வசதியாக வைத்திருப்பதில் நான் ஈடுபட்டால் அது தவறாகும். உதாரணத்திற்கு நான் இந்த சட்டையையும் மேலங்கியையும் ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்கிறேன்; ஆனால் உணவருந்தாமல் பசியுடன் இருந்தால், அது நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியதல்ல. அதுபோலவே, இந்த நாகரிகத்தின் அடிப்படையே தவறாக உள்ளது. உங்களது சட்டையையும் மேலங்கியையும் நான் கவனித்துக்கொள்கிறேன். ஆனால், உண்பதற்கு ஏதும் கொடுக்காமல் இருந்தால், எவ்வளவு காலம் நீங்கள் திருப்தியுடன் இருப்பீர்கள்? இதுவே அடிப்படைத் தவறாகும். உடலைப் பாதுகாப்பதும் உடலுக்கு வசதியினை அளிப்பதுமே பெளதிக நாகரிகமாகும். ஆனால், உடலின் உரிமையாளரான ஆத்மாவிற்கு எவ்வித கவனிப்பும் இல்லை. எனவேதான் அனைவரும் அமைதியின்றி உள்ளனர். அவர்கள் முதலாளித்துவம், பொதுவுடைமை என கொள்கைகளை மாற்றுகின்றனர், ஆனால் தவறு என்னவென்பதை அறிவதில்லை.

டாக்டர். ஆலிவர்: இவை இரண்டிற்கும் இடையில் சிறிய வித்தியாசமே உள்ளது, இரண்டும் பெளதிகமானதே.

ஸ்ரீல பிரபுபாதர்: அரசு அதிகாரத்தை தாங்கள் பெற்றுவிட்டால் அனைத்தும் மாறிவிடும் என்று கம்யூனிஸ்டுகள் (பொதுவுடைமைவாதிகள்) நினைக்கின்றனர். ஆனால், இதில் தவறு என்னவெனில்—முதலாளித்துவவாதிகள், பொதுவுடைமைவாதிகள் ஆகிய இருவரும் வெளிப்புற உடலினை மட்டுமே கவனிக்கின்றனர். நித்திய அடையாளத்தினை அல்லது ஆத்மாவினை கவனிப்பதில்லை. ஆத்மா அமைதி அடையும்போது அனைத்தும் அமைதியடைகிறது.

போக்தாரம் யஜ்ஞ-தபஸாம்

 ஸர்வ-லோக-மஹேஷ்வரம்

ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம்

 ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி

[பக்தரிடம்]: இந்த ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பைப் படியுங்கள்.

பக்தர்: “நானே, எல்லா யாகங்களையும் தவங்களையும் இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும் தேவர்களையும் கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத் துயரங்களிலிருந்து விடுபட்டு அமைதி அடைகிறான்.” (பகவத் கீதை 5.29)

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் என்றால் என்ன, அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஒருவன் அறிய வேண்டும் என்பதே இதன் பொருளாகும். நீங்கள் பகவானின் அம்சம் என்பதால், ஏற்கனவே அவருடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ளீர்கள். நமது பணி அந்தக் கடவுளை அறிவதே. தற்போதைய நிலையில் மக்களிடம் கடவுளைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை, மக்களுக்கு எந்தவொரு யோசனையும் இல்லை.

டாக்டர். ஆலிவர்: விண்ணிலுள்ள ஒரு செயற்கைகோளினால் ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்திற்கு செய்தியைக் கடத்த முடியும்போது, கடவுளால் நிச்சயம் தம்முடைய மனதை யாருக்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். அவருக்குக் கீழ்ப்படிவதற்கும் அவரை அறிவதற்கும் அவரை நேர்மையுடன் பின்பற்றுவதற்கும் எவனொருவன் விரும்புகிறானோ, கடவுள் தம்மை அவனுக்கு வெளிப்படுத்துவார்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், இங்கே இந்த பகவத் கீதையில் கடவுள் தம்மைப் பற்றி விளக்குகிறார். இதனை நாம் தர்க்கத்தையும் பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்க வேண்டும். அப்போது, அது கடவுளைப் பற்றிய சரியான புரிதலாக அமையும்.

டாக்டர். ஆலிவர்: ஆம், ஆனால் இதனை எப்படி பெறுவது?

ஸ்ரீல பிரபுபாதர்: போதனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன, நாம் இதனை அங்கீகரிக்கப்பட்ட உரையாடல்களின் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.

டாக்டர். ஆலிவர்: நானும் அவ்வாறே நினைக்கிறேன். இதுவே அவனது தொடக்கத்திற்கான வழி என்று நினைக்கிறேன். விஞ்ஞான சோதனைகளை பேராசிரியர்கள் எவ்வாறு ஒன்றுகூடி விவாதிக்கின்றார்களோ, அவ்வாறே நாமும் ஒன்றுகூடி இதனைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர்: இதனை அறிவதற்கான வழிமுறை இங்கே விளக்கப்பட்டுள்ளது:

தத் வித்தி ப்ரணிபாதேன

 பரிப்ரஷ்நேன ஸேவயா

உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம்

 ஜ்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:

[பக்தரிடம்]: இந்த ஸ்லோகத்தினைப் பாருங்கள்.

பக்தர்: “ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் வினாக்களை எழுப்பி அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” (பகவத் கீதை 4.34)

ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக குருவிற்குத் தொண்டு செய்வதில் இவர்கள் நடைமுறை உதாரணமாகத் திகழ்கின்றனர். இந்த ஐரோப்பிய அமெரிக்க இளைஞர்கள் அனைவரும் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் ஏன் எனக்குப் பணிவிடை செய்ய வேண்டும்? நான் ஏழ்மை நாடான இந்தியாவிலிருந்து வந்துள்ளேன். என்னால் இவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது. நான் மேற்கத்திய நாட்டிற்கு வந்தபோது என்னிடம் பணம் இல்லை. வெறும் நாற்பது ரூபாயோடு இங்கு வந்தேன். அமெரிக்காவில் வெறும் ஒரு மணி நேரத்தில் அதனைச் செலவழித்து விட முடியும். இவர்களோ என்னுடைய உத்தரவைச் செயல்படுத்துவதை உயிர்மூச்சாகக் கொண்டுள்ளனர், அதனால் முன்னேறுகின்றனர். ப்ரணிபாதேன பரிப்ரஷ்னேன—இவர்கள் என்னிடம் வினாக்களை எழுப்புகின்றனர். நான் இவர்களுக்கு விடையளிக்க முயல்கிறேன். இவர்கள் என்னிடம் முழு நம்பிக்கை கொண்டு, பணிவான சேவகர்களைப் போல எனக்கு சேவகம் புரிகின்றனர். இதுவே வழிமுறையாகும்.

ஆன்மீக குரு அங்கீகாரம் பெற்றவராக இருந்து, சீடர்கள் மிகுந்த நேர்மையானவர்களாக இருப்பின், அப்போது ஞானம் கிடைக்கப் பெறுகிறது. இதுவே இரகசியம். யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ. ஆன்மீக குருவிடமும் பகவானிடமும் அசையாத நம்பிக்கையுடையவருக்கு வேத ஞானம் அனைத்தும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆகவே, வேத சமுதாயத்தில், ஒருவன் அரசனின் மகனாக இருந்தாலும் வேறு எந்த பின்னணியைக் கொண்டவனாக இருந்தாலும், அவன் குருகுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான். கிருஷ்ணரும்கூட குருகுலத்திற்குச் சென்றிருந்தார்.

கிருஷ்ணர் தமது தோழனுடன் சேர்ந்து, காட்டிற்குச் சென்று ஆன்மீக குருவிற்காக விறகு கொண்டு வந்த கதையொன்று உள்ளது. அவர்கள் விறகு கொண்டு வருகையில், திடீரென்று கடும் மழை பொழிந்தது, அவர்களால் காட்டிலிருந்து வெளியேற முடியவில்லை. அக்கடுமையான சூழலில் அவர்கள் இரவு முழுவதும் காட்டிலேயே இருந்தனர். மறுநாள் காலை, குருநாதர் தமது மற்ற மாணவர்களுடன் காட்டிற்கு வந்து அவர்களைக் கண்டுபிடித்தார். எவரை நாம் பரம புருஷராக ஏற்கின்றோமோ, அந்த கிருஷ்ணரேகூட குருகுலத்திற்குச் சென்று பணிவான சேவகராக ஆன்மீக குருவிற்கு சேவை செய்தார்.

குருகுலத்திலுள்ள மாணவர்கள் அனைவரும் பணிவுடன் இருப்பதற்கும் குருவின் நன்மைக்காக மட்டுமே வாழ்வதற்கும் கற்றுக்கொள்கின்றனர். முதல்தர கீழ்ப்படிந்த சீடர்களாக இருப்பதற்கு அவர்கள் ஆரம்ப நிலையிலிருந்தே பயிற்றுவிக்கப்படுகின்றனர். அப்போது, சீடர்களின் மீதுள்ள பிரியத்தினால் குரு திறந்த மனதுடன் தமக்குத் தெரிந்தவை அனைத்தையும் போதிக்கின்றார். பணத்தைப் பற்றிய கேள்வியே இல்லை. இவையனைத்தும் அன்பையும் கல்வியையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றன.

டாக்டர். ஆலிவர்: நீங்கள் கூறியதில் சில பாகங்களை ஏற்பதில் எனக்கு சிரமங்கள் இருக்கலாம், அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு எனக்கு இல்லை என்பதே காரணம். ஆயினும், கடவுள் நம்முள் வாழ்கின்றார், நாம் அவரிடத்தில் அனைத்தையும் ஒப்படைக்கும்
போது, அவற்றை எவ்வாறு வழிநடத்துவது என்பதை அவர் அறிவார்—இவற்றை நான் நம்புகிறேன். அவரை திருப்திப்படுத்தும் வழியில் வாழ்வதே நமக்கிருக்கும் சவால். இங்குதான் சிரமம் எழுகின்றது: ஒழுக்கமாக வாழ்வதற்கு உத்வேகம் தேவைப்படுகிறது. ஒழுக்கமாக வாழ்வதற்கான பயிற்சியில் ஒருவன் ஈடுபட வேண்டும்; அதுமட்டுமின்றி, அவனைப் போன்றே அர்ப்பணிப்புடன் வாழக்கூடிய மற்றவர்களுடன் இணைந்து இதனைப் பயிற்சி செய்ய வேண்டும்; அப்போதுதான் இது சாத்தியமாகும்.

ஸ்ரீல பிரபுபாதர்: இதற்காகவே நாங்கள் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை அமைத்துள்ளோம்—கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை எவ்வாறு வாழ்வது என்பதைக் காண்பிக்கின்றோம். இது தேவைப்படுகிறது. கடவுள் உணர்வுடன் கூடிய நடைமுறை வாழ்க்கை இல்லாவிடில், இவை அனைத்தும் ஏட்டளவில் நின்றுவிடும். ஏட்டுக்கல்வி உதவியாக இருக்கலாம், ஆனால் அதற்கு நீண்ட காலமாகும். என்னுடைய சீடர்களுக்கு நடைமுறை ஆன்மீக வாழ்விற்கான பயிற்சி வழங்கப்படுவதால், அவர்கள் நிலைத்து நிற்கிறார்கள்.

டாக்டர். ஆலிவர்: உங்களுக்கு நான் மிகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும், எங்கள் நாட்டிற்கான உங்களது பயணத்தையும், எங்கள் மக்களையும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஹரே கிருஷ்ண.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives