வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஆங்கிலேயர்கள், அங்கிருந்த செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு, அந்நாட்டை ஆக்கிரமித்தனர். அதன் பின்னர், அவர்கள் அமெரிக்காவின் பல ஊர்களுக்கு இங்கிலாந்தினுடைய ஊர் பெயர்களை “நியூ” சேர்த்து சூட்டினர். அதன்படி, நியூ இங்கிலாந்து, நியூயார்க் முதலிய நகரங்கள் உருவாயின. ஜடவாதிகளுக்கே தங்களது ஊர்களின் மீது இவ்வளவு பற்றுதல் இருக்கும்போது, ஆன்மீக உலகின் தூதுவராக வந்த ஸ்ரீல பிரபுபாதருக்கு அவரது ஊர்களின் மீது (தெய்வீகப்) பற்றுதல் இருக்காதா, பாரதத்தின் திவ்ய ஸ்தலங்களின் பெயர்களை உலகெங்கும் சூட்டும் எண்ணம் வராதா என்ன?
ஸ்ரீல பிரபுபாதரால் உருவாக்கப்பட்ட கிருஷ்ண பக்தி இயக்கம் உலகெங்கிலும் பரவ ஆரம்பித்தவுடன், அவர், தம்மால் உருவாக்கப்பட்ட சில கோயில்களுக்கும் ஊர்களுக்கும், “நியூ” என்னும் அடைமொழியுடன் இந்திய ஆன்மீக நகரங்களுடைய பெயர்களைச் சூட்டினார். அந்தக் கோயில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
நியூ விருந்தாவனம்
கிருஷ்ணர் என்றவுடன் உடனடியாக நம் நினைவுக்கு வருவது அவரது லீலைகள் நிறைந்த விருந்தாவனமே. விருந்தாவனம், கௌடீய வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வைஷ்ணவர்களின் பக்திக்கும் தூண்டுகோலாக உள்ளது என்றால், அது மிகையல்ல. விருந்தாவனம் ஓர் ஒப்பற்ற ஸ்தலம்; விருந்தாவனம் என்னும் ஊர், அங்கு வாழ்ந்த/வாழும் பக்தர்கள், கிருஷ்ண லீலைகள் நிகழ்ந்த இடங்கள் ஆகியவை அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் நம்மை தூய பக்தியின் தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஸ்ரீல பிரபுபாதர் தமது வானபிரஸ்த வாழ்விலும் சந்நியாச வாழ்வின் ஆரம்பத்திலும் விருந்தாவனத்தில் அதிகமாகத் தங்கியிருந்தார்.
1966இல் இஸ்கான் இயக்கம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தோற்றுவிக்கப்பட்டு, பல்வேறு நகரங்களுக்கும் பரவத் தொடங்கியது. அப்போது, 1968இல், வெர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஒரு மலைப் பகுதியில் சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கிய ஸ்ரீல பிரபுபாதர், அதற்கு “நியூ விருந்தாவனம்” என்று பெயர் சூட்டினார். விருந்தாவனம் போன்றே அந்த இடத்தையும் எளிய கிராம வாழ்வின் அடிப்படையில் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்யும் இடமாக, பண்ணை சார்ந்த வாழ்வியலைக் கொண்ட இடமாக, உருவாக்க விரும்பினார். அதுமட்டுமின்றி, விருந்தாவனத்தைச் சுற்றியுள்ள வனங்களின் பெயர்களை, நியூ விருந்தாவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சூட்டி, கிருஷ்ணரை அந்தப் புதிய விருந்தாவனத்தில் குடியேற்றினார். தற்போது இவ்விடம் 1,200 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தினமும் இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மிகமிக அழகிய ராதா-விருந்தாவன-சந்திரர் அருள்பாலிக்கின்றார். மேலும், இங்குள்ள முழுமையான கிராம சூழ்நிலை, ஸ்ரீல பிரபுபாதரின் பொற்கோயில் முதலியவை இவ்விடத்தை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றியுள்ளன.
நியூ ஜகந்நாத புரி
ஒடிசா மாநிலத்திலுள்ள ஜகந்நாத புரியில், பகவான் கிருஷ்ணர் ஜகந்நாதராக அருள்பாலிக்கின்றார். ஸ்ரீல பிரபுபாதர், இஸ்கானின் ஆரம்ப காலத்தில், பக்தர்கள் பக்குவமடைந்த பின்னரே, விக்ரஹ வழிபாட்டினை அறிமுகப்படுத்த விரும்பினார். ஆயினும், 1967ஆம் ஆண்டிலேயே முந்திக் கொண்ட ஜகந்நாதர், தமது சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் ஸ்ரீல பிரபுபாதரை நாடி வந்தார். அதனைத் தொடர்ந்து, அந்த ஆண்டில், சான்பிரான்சிஸ்கோ நகரில் இஸ்கான் வரலாற்றின் முதல் ரத யாத்திரை நடைபெற்றது.
அந்த ஜகந்நாதர் சான்பிரான்சிஸ்கோ நகரத்தை ஒட்டிய பெர்க்லி நகரத்தின் கோயிலில் வீற்றுள்ளார். ஜகந்நாதரின் கருணையை வெளிப்படுத்தும் விதமாக, ஸ்ரீல பிரபுபாதர் அந்த திவ்ய ஸ்தலத்திற்கு “நியூ ஜகந்நாத புரி” என்று பெயர் சூட்டினார். இன்றும் சான்பிரான்சிஸ்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது.
நியூ துவாரகை
ஜராசந்தனின் தொல்லையிலிருந்து மதுராவாசிகளைக் காக்க கிருஷ்ணரால் ஏற்படுத்தப்பட்ட நகரமே துவாரகை. அங்கே கிருஷ்ணர், விருந்தாவனத்தில் இருந்ததைப் போன்று எளிமையாக அல்லாது, ராஜாவாக செல்வச் செழிப்புடன் கம்பீரமாக வீற்றிருந்தார்.
1967இல், அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸில், தயானந்தரும் அவரது மனைவி நந்தராணியும் ஒரு கோயிலை ஏற்படுத்தி பிரச்சாரப் பணியை முன்னெடுத்தனர். வெகுவிரைவிலேயே பக்தர்கள் பலர் சேர்ந்தனர். ஸ்ரீல பிரபுபாதர் அங்கிருந்த நான்கு கட்டிடங்களை விலைக்கு வாங்கி, கோயிலை நிர்மாணித்து, விக்ரஹ வழிபாட்டின் உயர்ந்த பக்குவத்தைக் கற்றுக் கொடுத்தார்.
நாம் பொதுவாக, விருந்தாவன கிராமத்தைச் சேர்ந்த எளிமையான ராதா-கிருஷ்ணரை வணங்குகிறோம். எனினும், செல்வச் செழிப்புமிக்க அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அந்நாட்டின் அனைத்து வளங்களையும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கும் விதமாக, ஸ்ரீல பிரபுபாதர் துவாரகையின் செல்வச் செழிப்பை அனுபவிக்கும் கிருஷ்ணரை, ருக்மிணி-துவாரகாதீஷர் என்னும் பெயரில், பிரதிஷ்டை செய்தார். எனவே, அவர் அவ்விடத்திற்கு “நியூ துவாரகை” என்று பெயர் சூட்டினார்.
இஸ்கான் இயக்கம் நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டபோதிலும், நியூ துவாரகையின் பக்தர்கள் அயராது அருந்தொண்டு ஆற்றியதால், இவ்விடம் இஸ்கானின் தலைமையிடமாக மாற்றப்பட்டது. பக்திவேதாந்த புத்தக நிறுவனம் (வட அமெரிக்க கிளை) இங்கிருந்துதான் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்கின்றது.
அமெரிக்காவில் இஸ்கானை நிலைநாட்டிய ஸ்ரீல பிரபுபாதர் வெறும் ஐந்தே ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்கும் கிருஷ்ண உணர்வை அறிமுகப்படுத்திவிட்டார். எனினும், இந்தியாவில் அவர் எதையும் தொடங்காது இருந்தார். அப்போது, 1970களில், நியூ துவாரகையைச் சேர்ந்த ருக்மிணி-துவாரகாதீஷர் ஸ்ரீல பிரபுபாதரை இந்தியாவிற்குத் திரும்பிச் சென்று இந்தியர்களுக்கும் கிருஷ்ண உணர்வை அளிக்குமாறு ஆணையிட்டார். இல்லையெனில், இந்தியாவில் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்யும் யோசனை ஸ்ரீல பிரபுபாதருக்கு அப்போதைக்கு இல்லை. எனவே, இந்தியாவில் வசிக்கும் நாம் அனைவரும் ருக்மிணி-துவாரகாதீஷருக்கு கூடுதல் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
நியூ தாலவனம்
விருந்தாவனத்தைச் சுற்றியுள்ள வனங்களில் ஒன்று, பனை மரங்கள் நிறைந்த தாலவனம். மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணரும் அவரது நண்பர்களும், ஒருமுறை, பனம்பழ மணத்தால் மனதைப் பறிகொடுத்து, தாலவனத்திற்குச் செல்ல, பலராமர் அங்கிருந்த தேனுகாசுரனை வதம் செய்தார்.
அந்த தாலவனத்தை நினைவூட்டும் வகையில், அமெரிக்காவின் மிசிசிப்பி என்னும் பகுதிக்கு, ஸ்ரீல பிரபுபாதர் 1974இல் “நியூ தாலவனம்” என்று பெயர் சூட்டினார். பசு பராமரிப்பிற்கு மிகவும் சாதகமான இவ்விடத்தில், 1,200 ஏக்கர் விளைநிலத்துடன் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீ ஸ்ரீ ராதா-ராதாகாந்தர் பக்தர்களின் சேவைகளை ஏற்று ஆனந்தமாய் அருள்பாலித்து வருகிறார்.
நியூ மாயாபுர்
பகவான் கிருஷ்ணரின் கலி யுக அவதாரமான சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலமே மாயாபுர். கலி யுக மக்களாகிய நமக்கு எத்தகுதியும் இல்லை என்றபோதிலும், சைதன்ய மஹாபிரபுவின் கருணையினால், நாமும் பக்தித் தொண்டில் சேர்க்கப்பட்டுள்ளோம், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைப் பெற்றுள்ளோம், பகவத் பிரேமையையும் அடைய முடிகிறது.
1975ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற ஸ்ரீல பிரபுபாதர், அங்கே அமைக்கப்பட்டிருந்த பண்ணைக் கோயிலில் கூறினார், “இந்த இடம் மிகவும் அருமையானது. இதை வைகுண்டமாக மாற்றுங்கள். இஃது ஏற்கனவே வைகுண்டம்தான். இங்கு கிருஷ்ணர் உள்ளார். நல்லவிதமாக மாற்றுங்கள். அமைதியாக வாழுங்கள். நரகத்தனமான நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ளீர்கள்… பசுக்களைப் பராமரித்து, எளிய வாழ்க்கையை மையமாக வைத்து அமைதியாக வாழுங்கள்.”
சைதன்யரையும் அவரது மாயாபுரையும் நினைவுபடுத்தும் வகையில், அந்த இடம் “நியூ மாயாபுர்” என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீல பிரபுபாதர் இங்கே 1975இல் கௌர-நிதாய் விக்ரஹங்களையும், 1976இல் கிருஷ்ண-பலராமர் விக்ரஹங்களையும் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டினைத் தொடக்கி வைத்தார்.
நியூ பானிஹாட்டி
பகவான் பலராமரின் அவதாரமான நித்யானந்த பிரபுவின் கருணையைப் பெற ஸ்ரீல ரகுநாததாஸ கோஸ்வாமி மேற்கு வங்காளத்திலுள்ள பானிஹாட்டி என்னும் இடத்தில் பெரிய உற்சவத்தை நடத்தினார். அதன் நினைவாக, அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள கோயிலுக்கு, ஸ்ரீல பிரபுபாதர், “நியூ பானிஹாட்டி” என்று பெயரிட்டார். இக்கோயிலில் இன்றுவரை பானிஹாட்டி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது
நியூ நவத்வீபம்
மேற்கு வங்காளத்திலுள்ள நவத்வீபத்தில் பகவான் சைதன்யரின் பல்வேறு லீலைகள் நடைபெற்று உள்ளன. விருந்தாவனத்திலிருந்து வேறுபாடற்ற இத்திருத்தலத்தில், அவதாரங்களில் பலர் தங்களது பக்தர்களின் பக்திக்கு இணங்கி காட்சி கொடுத்துள்ளனர். இத்திருத்தலத்தின் நினைவாக, அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள ஹானலூலு என்னுமிடத்தில் உள்ள கோயிலுக்கு “நியூ நவத்வீபம்” என்று பெயர் கொடுத்த ஸ்ரீல பிரபுபாதர், அங்கே 1972ஆம் ஆண்டு மே மாதத்தில் பஞ்ச தத்துவ விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்தார். அவர் ஸ்ரீமத் பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்திற்கான தமது விளக்கவுரையை இக்கோயிலில்தான் நிறைவு செய்தார்.
இறுதியாக
இங்கிலாந்தில் “நியூ கோகுலம்,” ஜப்பானில் “நியூ கயா” என்றெல்லாம் புதிய திவ்ய ஸ்தலங்களை உருவாக்கி, அங்கெல்லாம் கிருஷ்ண வழிபாட்டினையும் கிருஷ்ண உணர்வினையும் பிரபுபாதர் வளர்த்துள்ளார். இந்தியாவில் பல்வேறு பக்தர்களாலும் ஆச்சாரியர்களாலும் எண்ணற்ற திவ்ய ஸ்தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்ரீல பிரபுபாதரோ, தனி நபராக, நூற்றுக்கும் மேற்பட்ட திவ்ய ஸ்தலங்களை உலகெங்கிலும் உருவாக்கியுள்ளார். இன்று ஸ்ரீல பிரபுபாதரின் கருணையால் திவ்ய ஸ்தலங்கள் எங்கும் உள்ளன. பயன் பெறுவோம், பக்தியை வளர்ப்போம், உலகெங்கிலும் உள்ள உறவினர்களுக்கும் சொல்வோம், அவர்களும் சென்று பயனடைவதாகட்டும்.