தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி.
பிப்ரவரி 2021 மாதத்தில் வெளியிட்ட உரையாடலின் தொடர்ச்சி…)
நிருபர்: ஆனால், கடவுளை எவ்வாறு நேசிப்பது என்பதைப் பற்றி ஏற்கனவே இந்நாட்டில் இருக்கக்கூடிய போதனைகளைக் காட்டிலும், மேற்கத்திய உலகில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருவதைக் காட்டிலும், நீங்கள் வழங்கும் வழிமுறை எந்த விதத்தில் வேறுபட்டது அல்லது சிறந்தது என்று உங்களால் கூற முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம். வேத சாஸ்திரங்களின்படி அவரை அதிகாரியாக நாங்கள் ஏற்றுள்ளோம். அவர் உண்மையில் கிருஷ்ணர்.
நிருபர்: தெய்வீக அருள் பொருந்தியவரே! மதிப்பிற்குரியவரே! நீங்களும் உங்களது சீடர்களும் பகவான் சைதன்யரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகக் கூறினீர். அவர் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு பூமியில் தோன்றியவர் தானே?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
நிருபர்: அவர் இந்தியாவிலா தோன்றினார்?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அவர் இந்தியாவில்தான் தோன்றினார். சாக்ஷாத் கிருஷ்ணரான அவர், கிருஷ்ணரை எவ்வாறு நேசிப்பது என்பதை போதிக்கிறார். எனவே, அவருடைய வழிமுறை மிகவும் அதிகாரபூர்வமானதாகும். உதாரணமாக, நீங்கள் இந்த நிறுவனத்தின் தலைசிறந்த நிபுணராக உள்ளீர். எனவே, புதிதாக வரும் நபர் ஒரு வேலையைச் செய்யும்பொழுது, “இவ்வாறு செய்யுங்கள்” என்று நீங்களே கற்பித்தீர்களென்றால் அது மிகவும் அதிகாரபூர்வமானதாகும். அதுபோலவே, சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றி, பகவானே பகவத் பக்தியை போதிக்கின்றார்.பகவத் கீதையிலும் பகவானே தம்மைப் பற்றி பேசுகிறார்; “என்னிடம் சரணடை. நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன்,” என்று அவர் இறுதியாகச் சொல்கிறார். இருப்பினும், மக்கள் இதனை தவறாகப் புரிந்துகொண்டனர். எனவே, எவ்வாறு சரணடைவது என்பதை போதிப்பதற்காக கிருஷ்ணரே, மீண்டும் பகவான் சைதன்யராகத் தோன்றினார். நாங்கள் பகவான் சைதன்யரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதால், இந்த வழிமுறையானது மேன்மை பொருந்தியதாகும்; கிருஷ்ணரைப் பற்றி அறிந்திராத வெளிநாட்டவர்கள்கூட இதனை பின்பற்றுகின்றனர்.
இந்த வழிமுறையானது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதுவே நான் இங்கு வருகைபுரிந்தமைக்கான முக்கிய நோக்கமாகும். “ஒரு மதம் மற்றொரு மதத்தைவிட சிறந்தது” என்றோ, “எங்களது வழிமுறை சிறந்தது” என்றோ நாங்கள் சொல்வதில்லை. பலனை வைத்து முடிவிற்கு வருவதையே நாங்கள் விரும்புகிறோம். சமஸ்கிருதத்தில் இது குறித்த வாசகம் ஒன்று உள்ளது—பலேன பரிசீயதே: “பலனைக் கொண்டே எதையும் மதிப்பிட வேண்டும்.” உங்களது வழிமுறையே மிகவும் சிறந்தது என்று நீங்கள் கூறலாம். ஆனால், பலனைக் கொண்டே அதனை நாம் தீர்மானிக்க வேண்டும். “எந்த மதத்தின் வழிமுறையினைப் பின்பற்றுவதால் ஒருவர் கடவுளிடம் அன்பு செலுத்துபவராக மாறுகின்றாரோ அந்த மதமே சிறந்தது,” என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது.
நிருபர்: ஆம். ஆனால் இந்தக் கருத்தினை உங்கள் மதம் மட்டுமே போதிக்கின்றது என்று சொல்லிவிட முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: நான் அதை விளக்குகிறேன். எங்களது வழிமுறை மட்டுமின்றி, வேறு பல மதங்களும், “கடவுளிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் கருத்தினை போதிக்கலாம். ஆனால், எங்களது வழிமுறை நடைமுறையில் நல்ல பயனைத் தரக்கூடியதாக உள்ளது.
நிருபர்: இந்த தத்துவம் தோற்றுவிக்கப்பட்ட, உலகின் கிழக்கு பகுதியான இந்தியாவில் இது வெற்றிகரமானதாக உள்ளதா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
நிருபர்: அங்கே உங்களைப் பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனரா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். சமீபத்தில், இந்தியாவில் இருந்தபோது, ஏற்பாடு செய்யப்பட்ட பத்து நாள் நிகழ்ச்சிகள் இரண்டில் நான் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சிகளில் தினமும் இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரையிலான மக்கள் கலந்து கொண்டனர். இந்தியர்கள் இயல்பாகவே கிருஷ்ண உணர்வுடையவர்கள். ஆனால், இன்றோ அவர்களது பெயரளவிலான தலைவர்கள் கிருஷ்ண உணர்வினை பௌதிக உணர்வாக மாற்ற விரும்புகின்றனர்.
நிருபர்: கிருஷ்ண உணர்வு தத்துவம் இந்து மதத்துடன் ஒத்துப்போகின்றதா?
ஸ்ரீல பிரபுபாதர்: எந்த மதத்துடனும் ஒத்துப்போகும்.
ஏனெனில், இறைவன் ஒருவரே. கிருஷ்ண உணர்வு என்பது இறை விஞ்ஞானம் ஆகும். இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள இயலும். இது கிறிஸ்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட வேண்டியது, இந்துக்களுக்கானது அல்ல என்பதில்லை. இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்பது அனைவருக்கும் பொதுவான உண்மை. அதுபோல, இறைவன் என்பவர் அனைவருக்கும் பொதுவான உண்மை. தற்போது, இறைவனிடம் அன்பு செலுத்துவதற்கான ஒரே வழிமுறை கிருஷ்ண பக்தி இயக்கம் மட்டுமே.
நிருபர்: உங்களது வழிமுறை மட்டுமே கடவுளிடம் அன்பு செலுத்துவதற்கான ஒரே வழிமுறை என்று கூறுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். குறைந்தபட்சம் தற்போதைய யுகமான கலி யுகத்தில் இதுவே வழிமுறை; ஏனெனில், இந்த வழிமுறையானது அதிகாரபூர்வமானது. கிருஷ்ணர் தமது மூல ரூபத்திலும் சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியும் இந்த வழிமுறையினை பரிந்துரைக்கிறார். இந்த யுகத்தில் தன்னை உணர, கடவுளை உணர அல்லது கடவுளிடம் அன்பு செலுத்துவதற்கான ஒரே வழி இதுவே என்று அவர் கூறுகிறார்.
கிருஷ்ணரே கூறுவதால், இஃது அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையாகும். நடைமுறையிலும் இதன் பலனைக் காண முடிகிறது. வெளிநாட்டவர்களான இந்த இளைஞர்களும் யுவதிகளும் கிருஷ்ணரைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள். ஆனால், தற்போது எனக்கு அறுபது மையங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் சராசரியாக நூறு பக்தர்கள் உள்ளனர். அவர்கள் கிருஷ்ணரின் சேவைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். இந்த வழிமுறை அங்கீகாரம் பெற்றதாக இல்லாவிடில், இஃது எவ்வாறு சாத்தியமாகும்?
நிருபர்: ஆம். நீங்கள் சொல்வது சரியே. முன்னர் தாங்கள் கிருஷ்ணரைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றுதான் அவர்களும் சொல்கின்றனர். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் கடவுளுக்கு ஒவ்வொரு விதமான பெயரினை வழங்குகின்றனர். நீங்கள் உங்கள் கடவுளை கிருஷ்ணர் என்று கூறுகின்றீர். மேற்கத்திய உலகில் பலர் தங்கள் கடவுளை இயேசு என்று அழைக்கின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். இது தொடர்பாக நாங்கள் கூறுவது யாதெனில், உங்களிடம் கடவுளின் மற்றொரு பெயர் இருக்குமானால் அதுவும் சரியானதே. நாங்கள் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே… என்று ஜபிப்பது போல நீங்களும் உங்களது கடவுளின் பெயரை ஜபியுங்கள்.
நிருபர்: ஆம். அது சரியே.
ஸ்ரீல பிரபுபாதர்: வேத சாஸ்திரங்களின் கூற்றின்படி, க்ருஷ்ணஷ் து பகவான் ஸ்வயம், “கிருஷ்ணரே முழுமுதற் கடவுள்.” அவருக்கு ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன. “கிருஷ்ணர்” என்பதே அவருடைய உண்மையான பெயர். ஆகவே, சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண நாமத்தை ஜபிக்க வேண்டுமென்று சொல்கிறார். ஆனால் கடவுளுக்கு இன்னொரு பெயர் இருக்குமானால் அதையும் ஜபிக்கலாம். கிருஷ்ணரின் நாமத்தை மட்டுமே ஜபிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. இறைவனுக்கு இன்னொரு உண்மையான பெயர் இருக்குமானால் அதை ஜபிக்கலாம். “இறைவனின் திவ்ய நாமங்களை ஜபியுங்கள்,” இதுவே எங்களது வேண்டுகோள்.
நிருபர்: அறுபதுகளின் இடைப்பட்ட காலத்தில் தாங்கள் இங்கே வந்தீர்கள். அமெரிக்காவிற்கு நீங்கள் வருவதற்கு உந்து சக்தியாக அமைந்தது எது? நான் அதை உங்களிடம் இருந்து தெரிந்துகொள்ள முயல்கிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: நான் அதனை முன்பே விளக்கியுள்ளேன். உலகம் முழுவதிலும் இந்த பிரச்சாரம் செய்யப்பட வேண்டுமென்று சைதன்ய மஹாபிரபு விரும்பினார்; மக்கள் இதனை ஏற்றுக்கொள்வர் என்றும் கூறினார். என்னுடைய ஆன்மீக குரு, “நீ இதனை செயல்படுத்த முயற்சிசெய்” என்று பணித்தார். எனவே, நான் அந்த நோக்கத்துடன் இங்கு வந்தேன். அது நிறைவேறியும் வருகிறது.
நிருபர்: நீங்கள் வருவதற்கு முன்பு உலகின் இந்த பகுதியில் இறைவன் சித்தரிக்கப்பட்டிருந்த முறை குறித்து உங்களுக்கு ஒருவித அதிருப்தி இருந்திருக்கலாம். இல்லையேல் உங்களின் வருகைக்கு எந்த அர்த்தமும் இருக்காதே.
ஸ்ரீல பிரபுபாதர்: உலகில் இந்த பகுதியில் மட்டுமல்ல, எல்லா பகுதியின் மீதும் எனக்கு அதிருப்தியே. உலகின் எல்லா பகுதியிலும் மக்கள் கடவுளின் மீது சிறிதளவே ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நாய்களிடமே அதிக ஆர்வமுடையவர்களாக உள்ளனர்.
நிருபர்: நீங்கள் கடவுளின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயல்கிறீர்கள். சரியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். மனிதப் பிறவியிலுள்ள நாம் கடவுளிடம் மட்டுமே ஆர்வமுடையவர்களாக இருக்க வேண்டும்.
நிருபர்: கடவுளுக்கு என்ன பெயர் உள்ளது என்பதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லையா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை இல்லை. மக்கள் இறை உணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இந்த யுகத்தில் அதற்கான வழிமுறை இறைவனின் திவ்ய நாமங்களை உச்சரிப்பதாகும். உங்களிடம் இறைவனின் உண்மையான பெயர் இருக்குமானால், அதனை ஜபிப்பதனாலும் நீங்கள் வெற்றியடைவீர்.
நிருபர்: ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பது உங்களது மத நம்பிக்கையில் மிக முக்கிய பங்கு வகிப்பது போல் தெரிகிறது. இல்லையா? சற்று நேரம் கழித்து உங்களையும் இங்கு அமர்ந்திருக்கும் உங்கள் சீடர்களையும் கிருஷ்ண நாமத்தை ஜபிக்குமாறு கேட்கலாம் என்று நினைக்கிறேன். அதுவே இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான நிறைவை கொடுக்கும்.
இருப்பினும், சில விஷயங்களைப் பொறுத்தவரை எனக்கு இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உங்களுடைய படைப்புகள், பத்திரிகைகள் மற்றும் இதர வெளியீடுகளிலிருந்து நான் படித்த வரை—நான் அதிகம் படிக்கவில்லை படித்த சிறிய அளவில்—இறைவனுக்கும் தனிப்பட்ட நபருக்கும் இடையேயான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். அஃது அனைவருக்கும் பொருந்தும்.
நிருபர்: உண்மையில் இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவைக் காட்டிலும் இறைவனுக்கும் தனிப்பட்ட நபருக்கும் இடையேயான உறவுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது போலத் தோன்றுகிறது. எனது புரிதல் சரியா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. நாம் முதலில் இறைவனுடனான தொலைந்துபோன நமது உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான உறவைப் பற்றி புரிந்துகொள்ளலாம்.
எவ்வாறு கிருஷ்ணரிடம் சரணடைவது என்பதை போதிக்கும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு