ஸ்ரீல பிரபுபதாதருடன் ஓர் உரையாடல்
லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான் எனது ஆன்மீக குருவினால் கட்டளையிடப்பட்டேன், அதன்படி நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இங்கு தனியாக வந்தேன், எந்த உதவியும் பணமும் என்னிடம் இருக்கவில்லை. எப்படியோ நான் இங்கு தொடர்ந்து தங்கிவிட்டேன்.
லஹர்ட்: நீங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களை எவ்வாறு கவர்ந்தீர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: ஹரே கிருஷ்ண மந்திர கீர்த்தனமே என்னுடைய கவர்ச்சியாகும். அது மட்டுமே. நான் எந்தவொரு மாயாஜாலமும் செய்யவில்லை. மற்றவர்கள் சிலவகையான மாயாஜாலங்களை வெளிப்படுத்து கின்றனர். நான் அதுபோன்ற மாய வித்தைகளை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. டாம்ஸ்கின் ஸ்கொயர் பூங்காவில் நான் கீர்த்தனம் செய்தேன், படிப்படியாக சில இளைஞர்கள் அங்கு வந்தனர். அதன்பிறகு நாங்கள் ஸான் பிரான்ஸ்சிஸ்கோவில் ஒரு கிளையினைத் தொடங்கினோம், காலப்போக்கில் மான்ட்ரியால், போஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் என பல்வேறு கிளைகளைத் திறந்துள்ளோம்.
லஹர்ட்: நீங்கள் டாம்ஸ்கின் ஸ்கொயர் பூங்காவில் கீர்த்தனம் செய்தீர்கள், மக்கள் வந்தனர்…
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நான் ஒரு மரத்தடியில் நின்றபடி கீர்த்தனம் செய்தேன். இயற்கையாகவே சில இளைஞர்கள் அங்கு வந்து என்னுடன் இணைந்து கொண்டு ஆடத் தொடங்கினர். அதுவே தொடக்கமாகும்.
லஹர்ட்: அவர்களிடம் வழங்குவதற்கு தங்களிடம் என்ன இருந்தது? நீங்கள் பூங்காவில் கீர்த்தனம் செய்தீர்கள், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன பாடுகிறீர்கள்?” என்று அவர்கள் தங்களை வினவவில்லையா?
ஸ்ரீல பிரபுபாதர்: நான் அவர்களிடம் கூறினேன்: “கீர்த்தனம் ஆன்மீகத் தன்னுணர்விற்கானதாகும். நீங்களும் கீர்த்தனம் செய்யுங்கள், அப்போது படிப்படியாக நீங்கள் உங்களை உணர்வீர்கள். நீங்கள் ஆன்மீகமானவர்கள் என்பதையும் உடலல்ல என்பதையும் உங்களால் உணர முடியும். அதன் பின்னர் உங்களுடைய ஆன்மீக வாழ்வு ஆரம்பமாகும்.” உண்மையில் மனித வாழ்வானது ஆன்மீகத் தன்னுணர்விற்கானதாகும், ஆனால் உங்களுடைய ஆன்மீக அடையாளத்தினை உணராவிடில், நீங்கள் மிருகமாகவே இருப்பீர்கள். இதுவே மிருகத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான வேற்றுமையாகும். மனிதன் ஆன்மீக உணர்வுடையவராக இருக்க வேண்டியது அவசியம்.
லஹர்ட்: ஆன்மீகத் தன்மையினை உணர்வது எவ்வாறு?
ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் ஒருவன் தான் இந்த உடலல்ல, ஆன்மீக ஆத்மா, உடலினுள் உள்ள ஓர் ஆத்மா என்பதை உணர வேண்டும். ஆத்மா என்பது உணர்வைக் குறிக்கின்றது. இது சூரிய ஒளியைப் போன்றதாகும். ஆத்மா மிகமிக நுண்ணியது, இஃது உணர்வின் மூலமாகப் பிரகாசிக்கின்றது. இந்த உடல் அழிவுற்ற பின்னர், ஆன்மீக ஆத்மா மற்றோர் உடலுக்கு மாற்றப்படுகிறது. 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன. மரணத்தின்போது நாம் வேறோர் உடலுக்கு மாறியாக வேண்டும். இன்று நான் அமெரிக்க உடல் அல்லது இந்திய உடலில் மிகவும் வசதியாக இருக்கலாம். ஆனால் மரணத்திற்குப் பின்னர், என்னுடைய குறிப்பிட்ட அடையாளமானது மற்றொரு வகையான உடலுக்கு மாற்றப்படும்.
இயற்கையின் விதிகள் மிகவும் சூட்சுமமானவை. ஆன்மீக ஆத்மாக்களான நாம் ஸ்தூல உடல், சூட்சும உடல் என இரு உடல்களால் மறைக்கப்பட்டுள்ளோம். ஸ்தூல உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதாகும்; சூட்சும உடலானது மனம், புத்தி மற்றும் அஹங்காரத்தினால் ஆனதாகும். ஆத்மாவானது இந்த ஸ்தூல மற்றும் சூட்சும உடலுக்கு உள்ளே அமைந்துள்ளது. ஸ்தூல உடல் அழிக்கப்படும்போது, மனம், புத்தி மற்றும் அஹங்காரத்தினாலான சூட்சும உடலானது ஆத்மாவினை மற்றோர் உடலுக்கு எடுத்துச் செல்கிறது. நாம் எத்தகைய உடலைப் பெறுகிறோம் என்பது மரண நேரத்தில் இருக்கும் நம்முடைய உணர்வைப் பொறுத்ததாகும். சாஸ்திரங்களில் இதுகுறித்து ஓர் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது: ரோஜா தோட்டத்திலுள்ள நறுமணத்தையும் காற்று தாங்கிச் செல்கிறது, துர்நாற்றமான இடத்திலிருந்து துர்நாற்றத்தையும் காற்று தாங்கிச் செல்கிறது. அதுபோலவே, மனம், புத்தி மற்றும் அஹங்காரமானது ஒரு குறிப்பிட்ட உடலில் இருக்கும்போது என்னிடமுள்ள உணர்வுகளை மரண நேரத்தில் மற்றோர் உடலுக்கு எடுத்துச் செல்கிறது.
லஹர்ட்: இறுதியாகப் பார்த்தால் நாம் யார்?
ஸ்ரீல பிரபுபாதர்: இறுதியாக நாம் ஆன்மீக ஆத்மா, ஆனால் பௌதிகமாக மறைக்கப்பட்டிருப்பதால் நாம் வெவ்வேறு பௌதிகச் சூழ்நிலைகளை உருவாக்குகின்றோம், பல்வேறு ஜட உடல்களுக்கு மாற்றப்படுகிறோம்.
லஹர்ட்: இதன் நோக்கம் என்ன? இறுதியாக நிகழப்போவது என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக உணர்வைப் பெறாவிடில், இறுதியான விஷயத்தை உங்களால் அறிய இயலாது. நாம் கடவுளின் அம்சம் என்பதே இறுதியான விஷயமாகும். ஏதோ காரணத்தினால் நாம் இந்த பௌதிகச் சூழ்நிலையில் பந்தப்பட்டுள்ளோம். அந்த முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்வதே இறுதியான நிலையாகும். இதை அறிந்து இறைவனிடம் திரும்பிச் செல்வதற்கான பயிற்சியை நாம் மேற்கொள்ளாவிடில், நாம் இந்த ஜட உலகிலேயே இருக்க வேண்டியதுதான், ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிக்கொண்டே இருப்போம். எனவே, மனிதனின் புத்தியானது அவனுடைய ஆன்மீக அடையாளத்தையும் வாழ்வின் குறிக்கோளையும் உணர்ந்து அதன்படி செயல்படுவதற்கானதாகும். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும். அறியாமையினால் மூழ்கியுள்ள நிலையிலிருந்து மிகவுயர்ந்த ஆன்மீக புரிந்துணர்விற்கு மக்களைக் கொண்டு வருவதற்கான கல்வி நிறுவனமே இந்த இயக்கமாகும்.
லஹர்ட்: இந்தக் கல்வியானது உட்புறமானதா வெளிப்புறமானதா?
ஸ்ரீல பிரபுபாதர்: இது உட்புறமானது, ஆயினும் வெளிப்புற நடத்தையானது உட்புற சுபாவங்களை பாதிக்கக்கூடியதாக உள்ளது. நீங்கள் தகாத நபர்களுடன் உறவு கொள்வீர்களேயானால், தகாத பழக்கங்கள் உங்களுக்குள் உட்புறமாக வளரத் தொடங்குகிறது. நீங்கள் நல்லவர்களுடன் உறவு கொண்டால், நல்ல குணங்கள் உள்ளுர தங்களிடம் வளரத் தொடங்குகிறது. எனவே, உட்புறமும் வெளிப்புறமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. வெளிப்புற நடத்தையின் மூலமாக உட்புறச் சக்தியில் பாதிப்பு ஏற்படுகிறது, அந்த உட்புறச் சூழ்நிலையின் காரணத்தினால் நாம் மற்றொரு வெளிப்புற உடலைப் பெறுகிறோம்.
லஹர்ட்: இந்த இயக்கம் மிகவுயர்ந்த ஆன்மீகப் புரிந்துணர்வை வழங்குகிறது என்று நீங்கள் கூறினீர்கள். அஃது எவ்வாறு நிகழ்கிறது?
ஸ்ரீல பிரபுபாதர்: மக்களிடையே மறைந்திருக்கக்கூடிய அவர்களுடைய உண்மையான கிருஷ்ண உணர்வு எழுச்சி பெறுகிறது.
லஹர்ட்: அந்த உணர்வு நம்மிடம் ஏற்கனவே உள்ளது என்னும்பட்சத்தில், அதை எழுச்சி பெறச் செய்வதற்கு என்ன தேவை உள்ளது?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், கிருஷ்ண உணர்வு வழிமுறையின் மூலமாக அது வெளிக்கொண்டு வரப்படுகிறது, பக்தர்களின் சங்கம், ஹரே கிருஷ்ண கீர்த்தனம், பிரசாதம் உண்ணுதல் போன்ற செயல்பாடுகளின் மூலமாக அது செயல்படுகிறது. நீங்கள் இந்த வழிமுறையை ஏற்க வேண்டியது அவசியமாகும். உணர்வற்று இருக்கும் மனிதன் சில வழிமுறைகளின் மூலமாக உணர்விற்குக் கொண்டு வரப்படுகிறான். கிருஷ்ண உணர்வும் அதுபோன்றதே.
லஹர்ட்: பேசுவதற்கான திறன் எல்லா மனிதர்களுக்கும் உள்ளூர இருக்கின்றது. ஒரு குழந்தையினால் சமஸ்கிருதம், ஆங்கிலம், ஃபிரன்ஞ், சைனம் என எதை வேண்டுமானாலும் அவனுக்கு இருக்கும் சூழ்நிலையின் அடிப்படையில் கிரகித்துக்கொள்ள முடியும். நான் ஒரு சீனனாக இருந்தால், சீன மொழியே மிகச்சிறந்த மொழி என்று கூறுவேன். இந்தியர்கள் அதனை வேறு விதமாக எடுத்துக்கொள்வர். இவ்வாறு இருக்கும்பட்சத்தில், இறையுணர்வினை வெளிக்கொணர்தல் என்பதை பேசும் திறனை வெளிக்கொணர்வதுடன் ஒப்பிட இயலுமா, அதன் அடிப்படையில் தங்களுடைய பாதை மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தது என்று நீங்கள் கூறுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு வழிமுறை மற்றதைக் காட்டிலும் சிறந்தது அல்லது உயர்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை. கிருஷ்ண உணர்வு என்றால் இறையுணர்வு என்று பொருள். நீங்கள் சீனனாக, ஆங்கிலேயனாக, அமெரிக்கனாக–எப்படி இருந்தாலும், உங்களிடம் உணர்வு உள்ளது. அந்த உணர்வு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் இறையுணர்வை அடைய வேண்டும்.
லஹர்ட்: தங்களுடைய பாதை மட்டுமே ஒரே பாதையா? இறையுணர்வை அடைவதற்கு பல்வேறு பாதைகள் இருப்பதாக நான் நினைக்கின்றேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் ஒருவரே, இறையுணர்வும் ஒன்றுதான். அதற்கு பல வழிமுறைகள் இருக்கலாம், ஆனால் அந்த வழிமுறை உங்களை உண்மையிலேயே இறையுணர்வுக்கு அழைத்து வருமானால், அந்த வழிமுறைகள் அனைத்தையும் அங்கீகரிக்கலாம். இல்லாவிடில் அந்த வழிமுறைகள் அனைத்தும் போலியானவை. நீங்கள் கிறுஸ்துவ வழிமுறை, சீன வழிமுறை அல்லது இந்திய வழிமுறை என எந்த வழிமுறையின் மூலமாகவும் இறையுணர்வினை அடையலாம், அது முக்கியமல்ல. ஆனால் நீங்கள் இறையுணர்வை அடையாவிடில், அவை அனைத்தும் போலியானவையாகிவிடும்.
லஹர்ட்: ஒருவன் இறையுணர்வை அடைந்துவிட்டான் என்பதை உங்களால் எவ்வாறு கூற இயலும்?
ஸ்ரீல பிரபுபாதர்: நான் இறைவனின் அம்சம்; இதனால் நான் இறைவனுடைய சேவகன்” என்று புரிந்துகொள்வதே இறையுணர்வின் பொருளாகும். இதை ஒருவன் புரிந்து கொண்டால், அவனுடைய வழிமுறை சரியானது என்று பொருள்படும்.
லஹர்ட்: உங்களுடைய இயக்கத்தின் மீது சிலர் குற்றம் சாட்டுகின்றனரே?
(தொடரும்)