எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை அடைகின்றதா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

ஆன்மீக வாழ்வைப் பயிற்சி செய்ய ஒருவர் விரும்பினால், எத்தனையோ மதங்கள் இருக்கின்றன, அந்த மதங்களுக்குள் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. அந்தந்த மதங்களும் அந்தந்த பிரிவுகளும் தத்தமது பாதையை இதர பாதைகளைக் காட்டிலும் உயர்ந்தது என்று வாதாடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான அத்தகு விவாதங்களுள், “எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை வழங்குகின்றன” என்னும் புதிய விவாதம் சமீப காலத்தில் உருவெடுத்துள்ளது. கடலை நோக்கிச் செல்லும் பல்வேறு நதிகளைப் போல, பல்வேறு மதங்கள், பல்வேறு பிரிவுகள் அனைத்தும் ஒரே கடவுளை நோக்கிய வெவ்வேறு பாதைகள் என்று இவர்கள் வாதிடுகின்றனர். நவீன மக்களிடையே இத்தகு எண்ணங்கள் வேகமாக பரவி வருவதையும் நாம் காண்கிறோம். இவற்றை சற்று இங்கே விவாதிக்கலாம்.

வேற்றுமையில் ஒற்றுமை

பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார், “மதம் என்பதற்கு ஆயிரம் பதிப்புகள் இருக்கலாம், ஆனால் உண்மையில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது.” ஏறக்குறைய அதே காலத்தைச் சார்ந்த இந்தியாவின் இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார், யதா மத ததோ பத, “எத்தனை அபிப்பிராயங்கள் உள்ளனவோ அத்தனை பாதைகள் உள்ளன.” எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை அடைகின்றன என்ற கருத்து மேலை நாடுகளிலும் இந்தியாவிலும் இன்று வலுவாக வேரூன்றி இருப்பதற்கு இவர்கள் இருவரும் முக்கிய காரணிகள் என்று கூறினால், அது மிகையாகாது. உலகம் சுருங்கி வரும் தற்போதைய தருணத்தில், பல்வேறு மதத்தினரும் ஒரே மதத்தின் பல்வேறு பிரிவினரும் இணக்கமாக வாழ்வது பற்றி யோசிக்கையில், இவர்களுடைய கருத்துகள் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன.
இருப்பினும், இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம், யூதம், சீக்கியம் என அனைத்து மதங்களும் ஒரே இலக்கை வழங்குவது சாத்தியமா? இந்த மதங்களின் நம்பிக்கைகளும் தத்துவங்களும் வழிமுறைகளும் வேறுபட்டு காணப்படுவதை யார் வேண்டுமானாலும் எளிதில் உணர முடியும். ஏன், இவர்கள் விரும்பும் இலக்குகள்கூட மாறுபடுகையில், எவ்வாறு எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை வழங்க முடியும்?

இதர மதங்களை அல்லது இதர அபிப்பிராயங்களை ஏற்கக்கூடிய பண்பு மற்ற மதங்களைக் காட்டிலும், இந்து மதத்தில் மேலோங்கி இருப்பதை அனைவரும் அறிவர். இந்து மதம் தொன்றுதொட்டு பல்வேறு பிரிவுகளுடனும் பல்வேறு அபிப்பிராயங்களுடனும் வாழ்ந்து வளர்ந்து வந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று நாம் கூறலாம். எனவே, அபிப்பிராய பேதங்கள் நிறைந்த இந்து மதத்தில், எல்லா அபிப்பிராயங்களும் ஒன்றுதான் என்று கூறும் மற்றொரு அபிப்பிராயமும் (பேதமும்) உள்ளே நுழைந்து விட்டது.

சாஸ்திரங்களுக்கு விரோதமானது

பேதங்களை அகற்றுவதாகக் கூறி புதிய பேதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பெயரளவு சமத்துவக் கருத்து, முற்றிலும் சாஸ்திரத்திற்கு விரோதமானது. இந்தியாவில் தோன்றிய மத வல்லுநர்கள் அனைவரும் தத்தமது சித்தாந்தங்களை சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்தே நிலைநாட்ட முயற்சி செய்தனர். யாரும் எக்காலத்திலும் சாஸ்திரங்களைப் புறக்கணித்துவிட்டு வெறும் அரசியல் காரணத்திற்காக புதியதொரு வழிமுறையை ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் தற்காலத்தில் இந்து மதம் என்ற தலைப்பின் கீழ் அனைத்து அபிப்பிராயங்களையும் உள்ளே கொண்டுவரும் பொருட்டு, சாஸ்திரத்திற்கும் யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட இக்கருத்து பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

உரிய மரியாதையுடன் பேதங்களை விவாதித்து சாஸ்திர ரீதியில் உண்மையை உணரும் அறிவுபூர்வமான நிலை இன்றைய சமுதாயத்தில் வேகமாக குறைந்து வருகிறது. அவ்வாறு இருப்பினும், எல்லாப் பாதைகளும் ஒரே நன்மையை வழங்குபவை அல்ல என்பதை இங்கே யாம் சாஸ்திரபூர்வமாக விளக்குவதற்கு முயற்சித்துள்ளோம்.

இட்லி சாப்பிடக்கூடிய பொருள், கார் சாப்பிட முடியாத பொருள்–இதில் அபிப்பிராய பேதத்திற்கு இடமில்லை. இரண்டுமே ஒரே நன்மையைக் கொடுப்பவை என்று கூறுபவன் முட்டாள்.

ஆச்சாரியர்களை விட நாம் அறிவாளிகளா?

இந்திய மத வரலாற்றில் வைஷேஷிகம், நியாயம், யோகம், ஸாங்கியம், கர்ம மீமாம்ஸாம், வேதாந்தம் ஆகிய ஆறு தத்துவங்கள் படிக்கப்பட்டு வந்தன. அவற்றில் வேதாந்த தத்துவம் மற்ற எல்லாத் தத்துவங்களிலும் சிறந்ததாக நிலைநாட்டப்பட்டது. ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் சிறந்தது அல்லது உயர்ந்தது என்று கூறினால், நிச்சயமாக அந்த மற்றொன்று பக்குவமானதல்ல என்பதும், அவையனைத்தும் ஒரே இலக்கை வழங்குபவை அல்ல என்பதும் தெளிவானதாகும். மேலும், வேதாந்த தத்துவத்திற்கு மத்தியிலும், அத்வைதம், வைஷ்ணவம் என்று இரண்டு முக்கியப் பிரிவுகள் இருப்பதைக் காண்கிறோம்.

இவையெல்லாமே ஒன்று என்றால், அந்த தத்துவங்களை நிலைநாட்டுவதற்கும் போலியான தத்துவங்களை முறியடிப்பதற்கும் அரும்பாடுபட்ட மாபெரும் ஆச்சாரியர்கள் அனைவருடைய திருப்பணிகளையும் நாம் புறக்கணிப்பதாகிவிடும். அத்வைதத்தையும் வைஷ்ணவத்தையும் சமமாகக் கருதுபவன், சங்கரர், இராமானுஜர், மத்வர், சைதன்ய மஹாபிரபு போன்ற மாபெரும் ஆச்சாரியர்களைக் காட்டிலும் தன்னை புத்திசாலியாக நினைப்பவனாகிறான். அத்வைதமும் வைஷ்ணவமும் ஒன்று என்றால், இராமானுஜர் அத்வைதத்திற்கு எதிராக போராடியது ஏன்? அத்வைதிகளும் இராமானுஜரை சமாளிக்க போராடியது ஏன்? வழிவழியாக வந்த அந்த ஆச்சாரியர்கள் அனைவரைக் காட்டிலும் நம்மை புத்திசாலிகளாக நினைத்து, அனைத்தும் சமம்” என்று கூறுதல், நம்மைப் போன்ற ஒரு முட்டாள் யாரும் இல்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டுகிறது.

இருவகையான வேற்றுமைகள்

வேற்றுமைகளில் பலவகைகள் இருப்பினும், அவற்றிற்கு மத்தியில் இரண்டு முக்கிய வகைகள் காணப்படுகின்றன: (1) உண்மையின் வேற்றுமை, (2) சுவையின் வேற்றுமை. “இட்லி சாப்பிடக்கூடிய பொருள், கார் சாப்பிட முடியாத பொருள்,” இவை உண்மையான வாக்கியங்கள். இதில் அபிப்பிராய பேதத்திற்கு இடமில்லை. “இட்லி சாப்பிடக்கூடிய பொருள் அல்ல, கார் சாப்பிடக் கூடிய பொருள்,” என்று யாரேனும் கூறினால், அத்தகு வாதத்தை ஏற்க முடியாது. ஏனெனில், அஃது உண்மைக்கு புறம்பானது. அதே நேரத்தில், சிலருக்கு இட்லி பிடிக்கலாம், சிலருக்கு தோசை பிடிக்கலாம், சிலருக்கு மாருதி கார் பிடிக்கலாம், சிலருக்கு ஃபோர்டு கார் பிடிக்கலாம். அஃது ஒவ்வொருவரின் விருப்பம். இட்லியை விரும்புபவர்கள் அதுவே மிகச்சிறந்த உணவு என்று வாதிடலாம், ஆனால் இட்லியும் காரும் ஒன்று என்றால், அஃது உண்மைக்கு புறம்பானதாகும்.

அதுபோல, வெவ்வேறு கொள்கைகளையும் குறிக்கோளையும் கொண்டுள்ள எல்லா தத்துவங்களும் ஒரே விளைவைக் கொடுக்கும் என்று கூறுதல் ஏற்க முடியாததாகும். உதாரணமாக, அத்வைதமும் வைஷ்ணவமும் ஒன்று என்று கூறினால், அது நிச்சயம் ஏற்க முடியாததாகும். அதே நேரத்தில், வைஷ்ணவர் களுக்கு மத்தியிலுள்ள சில பேதங்கள் சுவையின் வேற்றுமைகளாக அறியப்பட்டு ஏற்கப்படுகின்றன. அத்வைதத்தின் குறிக்கோள் பிரம்மனுடன் ஒன்றாக கலத்தல், வைஷ்ணவர்களின் குறிக்கோள் வைகுண்டத்தில் பகவானுக்கு சேவை செய்தல். இவை இரண்டையும் எவ்வாறு ஒன்று என்று கூற முடியும்? எனவே, எல்லா தத்துவங்களும் ஒரே இலக்கை நிச்சயம் வழங்க இயலாது.

வெவ்வேறு குணமுடைய மக்கள் தங்களது குணத்திற்கு ஏற்ற வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய விளைவும் அந்த வழிபாட்டிற்கு ஏற்பவே இருக்கும்.

மத சகிப்புத்தன்மை

எல்லா மதங்களும் பாதைகளும் சமம் என்பதன் மூலமாக, மக்களிடையே மத சகிப்புத்தன்மையை வளர்க்க முடியும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், மதங்கள் காட்டும் பாதையினை ஒவ்வொருவரும் தத்தமது நிலையில் தத்துவ அறிவுடன் பயிற்சி செய்கையில், இயற்கையாகவே அங்கே மத சகிப்புத்தன்மை இடம்பெறும். அதை விட்டுவிட்டு செயற்கையான முறையில், எல்லாம் ஒன்றுதான் என்று கூறுவது அபத்தமானதாகும்.

சண்டைகள் என்பது கலி யுகத்தின் இயற்கை என்பதால், ஒரே மதத்தைச் சார்ந்தவர்களும் ஒரே பிரிவைச் சார்ந்தவர்களும் ஏன் ஒரே இயக்கத்தைச் சார்ந்தவர்களும்கூட தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே, எல்லாம் ஒன்றுதான் என்று கூறி சண்டையைத் தவிர்ப்பதற்கான முயற்சியானது மேலும் சண்டையை வளர்த்துள்ளதே தவிர நிச்சயமாக எந்த நன்மையையும் வழங்கவில்லை.

இந்திய வரலாற்றில், ஒவ்வொருவரும் தத்தமது கொள்கைகளை ஆழமாக படித்து உண்மையை உணர்வதற்கு முயற்சி செய்துள்ளனர். மதச் சண்டைகள் என்பது எங்கோ சில இடத்தில் அரிதாக நிகழ்ந்த சம்பவங்கள். ஆனால் இன்றைய உலகில் எல்லாம் சமம் என்ற போர்வையில் அனைத்து தத்துவ வாத விவாதங்களும் மடிந்து போய் வெறும் கர்வம் மட்டும் எஞ்சியுள்ளது. எது சரி, எது தவறு என்பதை தத்துவபூர்வமாக அலசி ஆராயும் பாங்கு மக்களிடம் மடிந்துவிட்டது என்று கூறலாம். ஒவ்வொருவரும் தன்னை ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையுடனும் பிரிவுடனும் அடையாளப்படுத்திக் கொண்டு அதுவே சிறந்த முறை என்று கர்வத்துடன் வாழ்கின்றனர். வேடிக்கை என்னவெனில், எல்லாம் சமம் என்று கூறுபவர்கள்கூட, “எல்லாம் சமம்” என்ற தங்களுடைய தத்துவமே உயர்ந்தது என்று வாதிடுகின்றனர்.

எல்லாப் பாதைகளையும் சோதிக்க வேண்டும்

எல்லாப் பாதைகளும் சமம் என்று கூறுபவர்களின் மற்றொரு வாதம்: யாரொருவர் எல்லாப் பாதைகளிலும் பயணம் செய்தாரோ அவரால் மட்டுமே பாதைகளின் உயர்வு தாழ்வுகளை உணர முடியும், அவ்வாறு பயணம் செய்பவரின் கூற்றின்படி எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை அடைகின்றன, நீங்கள் பயணம் செய்துவிட்டு வாதிடுங்கள்.

இந்த வாதம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறையில் துளியும் ஒத்துவராது. ஒரு பாதையில் பயணம் செய்து அதன் இறுதிப் பலனை அடைந்தவரால், வேறு பாதையின் ஆரம்பத்திற்கு வர முடியுமா? எல்லாப் பாதைகளும் முக்தி வழங்கும் என்றால், முக்தியை அடைந்தவன் மீண்டும் வீழ்ச்சியடைந்து அடுத்த பாதைக்கு ஏன் வர வேண்டும்?  அவனால் எவ்வாறு வர முடியும்? அவன்தான் முக்தி பெற்று விட்டானே. அதுமட்டுமின்றி, வெவ்வேறு பாதைகள் வெவ்வேறு இலக்கினைச் சுட்டிக் காட்டுகையில், அவை அனைத்தும் எவ்வாறு ஒன்றாகி விட முடியும்?

விஷத்தை பருகுவதாலும் நீரைப் பருகுவதாலும் ஒரே பலனை அடைய முடியும் என்று கூறுபவன் நிச்சயமாக முட்டாள்; அதிலும் பெரிய முட்டாள், “நான் அனைத்தையும் பருகிவிட்டு கூறுகிறேன், இரண்டும் சமம் தான்” என்று கூறுபவன். உண்மையில், அவன் விஷத்தை பருகவில்லை; அவ்வாறு பருகியிருந்தால் உங்களுடன் அவனால் பேச முடியாது. அதுபோல, பல்வேறு பாதைகளில் பயணம் செய்தவன் என்று உண்மையில் யாரும் இருக்க முடியாது. தத்துவங்களின் உண்மையையும் பொய்யையும் சாஸ்திரங்களை வைத்தும் புத்தியை வைத்தும் அறிந்து கொண்டு சரியான பாதையில் பயணிக்க வேண்டும், அதை விட்டுவிட்டு சாஸ்திரங்களை நம்பாமல் எல்லாப் பாதைகளிலும் பயணம் செய்து பார்க்கிறேன் என்று கூறுபவன், உண்மையில் எங்கும் பயணம் செய்யாமல் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். ஆயினும், மடமை என்னவெனில், குருடர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுவதைப் போல அவர்களும் மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

 கிருஷ்ணரை வழிபடுவோர் ஆன்மீக உலகை அடைந்து அங்கே பகவானுடன் உறவுகொள்கின்றனர். தேவர்களை வழிபடுவோர் ஆன்மீக உலகை அடைய முடியாது.

வெவ்வேறு பாதைகள் வெவ்வேறு இலக்குகள்

வெவ்வேறு பாதைகள் அல்லது வெவ்வேறு வழிபாடுகள், வெவ்வேறு இலக்குகளை வழங்குபவை என்பதை கிருஷ்ணர் பகவத் கீதையில் (9.25) பின்வருமாறு கூறுகிறார்:

யாந்தி தேவ-வ்ரதா தேவான்
பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:
பூதானி யாந்தி பூதேஜ்யா
யாந்தி மத்-யாஜினோ ‘பி மாம்

“தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பர், முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர், பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடையே பிறப்பர். மேலும், என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.” இங்கே ஒவ்வொருவரும் தத்தமது வழிபாட்டிற்கு ஏற்ற இலக்கை அடைகின்றனர் என்று கிருஷ்ணர் தெள்ளத் தெளிவாக குறிப்பிடுகிறார். தேவர்களை வழிபடுதல் ஸத்வ குணத்தையும், முன்னோர்களை வழிபடுதல் ரஜோ குணத்தையும், பூதங்களை வழிபடுதல் தமோ குணத்தையும் சார்ந்ததாகும். குணத்திற்கு ஏற்ற பலன் என்பதே கீதையில் உரைக்கப்படுகிறது. குணத்திற்கு ஏற்ப செய்யப்படும் வழிபாடுகள் இந்த ஜடவுலகத்தின் பல்வேறு கிரகங்களுக்குச் செல்ல உதவுமே தவிர, ஆன்மீக உலகத்திற்குச் செல்ல (முக்தி பெறுவதற்கு) உதவாது. கிருஷ்ணரை வழிபடுதலோ குணத்திற்கு அப்பாற்பட்டதாகும். அதனால், என்னை வழிபடுவோர் என்னுடன் வாழ்வர்,” என்று கிருஷ்ணர் இங்கே தெளிவாக உரைக்கிறார்.

தேவர்களை வழிபடுவதால் அடையப்படும் இலக்கு வேறு, கிருஷ்ணரை வழிபடுவதால் அடையப்படும் இலக்கு வேறு என்பதை கிருஷ்ணர் கீதையின் மற்றோர் இடத்திலும் (7.23) குறிப்பிடுகிறார்: தேவான் தேவ-யஜோ யாந்தி, மத்-பக்தா யாந்தி மாம் அபி. அதாவது, தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடம் செல்வர், கிருஷ்ணரை வழிபடுவோர் கிருஷ்ணரிடம் செல்வர். இரண்டு வழிபாடுகளுக்கும் தெளிவான வேறுபாடு கொடுக்கப்பட்டுள்ளது. முக்குணங்களுக்கு ஏற்ற வழிபாட்டினையும் அதன் வெவ்வேறு பலன்களையும் கிருஷ்ணர் கீதையின் பதினேழாவது அத்தியாயத்திலும் எடுத்துரைத்துள்ளார்.

சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் இரயிலில் பயணித்தால், நீங்கள் மும்பை செல்ல மாட்டீர்கள். எல்லா இரயில் பாதைகளும் ஒரே இடத்தை நோக்கிச் செல்கின்றன என்று கூறுவது எவ்வாறு மடமையோ, அதுபோலவே எல்லா வழிபாடுகளும் ஒரே நன்மையைத் தரும் என்று கூறுவதும் மடமையாகும். எல்லா முறைகளும் ஒரே இலக்கை அடையும் என்றால், கிருஷ்ணர் பகவத் கீதையைச் சொல்வதற்கு அவசியமே இல்லையே. அர்ஜுனன் சண்டையிட்டால் சண்டையிடட்டும், இல்லையென்றாலும் பரவாயில்லை, இரண்டும் ஒன்றுதான் என்று கிருஷ்ணர் விட்டிருக்கலாமே.

கீதையின் மற்றோர் இடத்தில் (18.58), கிருஷ்ணர் கூறுகிறார், மச்-சித்த: ஸர்வ துர்காணி, மத்-ப்ரஸாதாத் தரிஷ்யஸி,  “எனது கருணையுடன் எனது அறிவுரையின்படி செயல்பட்டால், நீ விடுதலை பெறுவாய்.” இல்லாவிடில், அத சேத் த்வம் அஹங்காரான், ந ஷ்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி, “நான் கூறுவதைக் கேட்காமல் அஹங்காரத்தின்படி செயல்பட்டால், நீ அழிந்து விடுவாய்.”

மற்ற பாதைகளின் தன்மைகள்

ஒரே இலக்கை அடைவது குறித்து வாதிடுபவர்கள் கீதையின் 5.4-5 ஸ்லோகங்களை மேற்கோள் காட்டுகின்றனர். அங்கே கிருஷ்ணர், ஸாங்கிய யோகத்தையும் கர்ம யோகத்தையும் ஒப்பிட்டு, இரண்டும் ஒரே பலனைக் கொடுக்கின்றது என்று உரைக்கின்றார். ஆம், அதுவும் உண்மையே. அங்கீகரிக்கப்பட்டுள்ள யோக வழிமுறைகளை முறைப்படி பின்பற்றுபவன் படிப்படியாக ஒரு பாதையிலிருந்து அடுத்த பாதைக்கு முன்னேற்றமடைந்து, இறுதியில் பக்தி யோகத்தின் தளத்திற்கு வர முடியும். (கலி யுகத்தில் இதர யோகங்களைப் பின்பற்றுவதற்கான சூழல் இல்லை என்பதும், நேரடியாக பக்தி யோகத்தை ஏற்பதற்கு சாஸ்திரங்கள் பரிந்துரைப்பதையும் பகவத் தரிசன வாசகர்கள் அறிவர்)

ஏகம் ஸத் விப்ர பஹுதா வதந்தி (ரிக் வேதம் 1.164.46), “ஒரேயொரு பரம்பொருள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது,” என்னும் வேத வாக்கியத்தினை சிலர் முன்வைக்கலாம். ஆம், பரம்பொருள் ஒன்றுதான். அந்த பரம்பொருள் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுவதும் உண்மையே. ஆனால், பரம்பொருள் என்று ஒருவர் கற்பனை செய்வதெல்லாம் பரம்பொருள் ஆகிவிட முடியாது. கற்பனை செய்யப்படும் பெயர்களெல்லாம் பரம்பொருளின் பெயர்களாகி விடவும் முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட பாதைகள் படிக்கட்டுகள்

பகவத் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், ஸாங்கிய யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என பல்வேறு யோக முறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த யோக முறைகளில் பக்தி யோகமே உன்னதமானது என்றும், மற்ற யோகங்கள் பக்தி யோகத்திற்கான படிக்கட்டுகள் என்றும் கீதை விளக்குகின்றது.

கர்ம யோகத்தைப் பின்பற்றும் ஒரு கர்ம யோகியின் நோக்கம் பொதுவாக ஸ்வர்க லோகத்திற்கு ஏற்றம் பெறுவதாகும். ஆனால் ஸ்வர்க லோகம் நிரந்தரமானதல்ல என்பதை காலப்போக்கில் அவன் உணரும்போது, அவன் ஞானத்தை வளர்க்கும் பாதைக்கு (ஞான யோகத்திற்கு) வருகிறான். அந்த ஞானி பரம்பொருளை உருவமற்ற ஜோதியாக வழிபட்டு பிரம்மஜோதியில் ஐக்கியமாகி விட நினைக்கிறான். ஆனால் பிரம்மஜோதியில் ஐக்கியமாவதால் பக்குவமான இன்பத்தை அடைய முடியாது என்பதை அவன் உணரும்போது, அவன் இதயத்தினுள் அமர்ந்துள்ள பரமாத்மாவை தியானித்து (தியான யோகத்தில்) வைகுண்டம் செல்ல நினைக்கிறான். பரமாத்மாவின் உணர்வில் அவன் மேலும் முன்னேற்றம் பெறும்போது, அந்த பரமாத்மாவிற்கு நேரில் சேவை செய்ய (பக்தித் தொண்டு புரிய) அவன் விரும்புகிறான். அந்த நிலையே பக்தி யோகம் எனப்படுகிறது.

எனவே, ஒரு விதத்தில் பார்த்தால், எல்லாப் பாதைகளும் இறுதியில் பக்தியின் தளத்தை அடைய உதவுபவை. ஆனால் அந்த பாதைகளே இறுதி இலக்கை வழங்கும் என்று நினைத்தல் தவறாகும்.

பக்தி யோகமே உயர்ந்த பாதை

பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்தின் இறுதியில் (46-47), கர்ம யோகிகளைக் காட்டிலும் ஞான யோகி சிறந்தவன் என்றும், ஞான யோகியைக் காட்டிலும் தியான யோகி சிறந்தவன் என்றும், எல்லா யோகிகளிலும் பக்தன் சிறந்தவன் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், அனைத்து யோகங்களும் சமம் என்று கூற முடியுமா என்ன?

ஞான யோகத்தைக் காட்டிலும் பக்தி யோகமே சிறந்தது என்பதை கிருஷ்ணர் மீண்டும் பகவத் கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் தெளிவாகக் கூறுகிறார். மேலும், பிரம்மன் உணர்வு, பரமாத்மா உணர்வு ஆகியவற்றைக் காட்டிலும், பகவானை நேரடியாக உணரும் உணர்வானது இரகசியங்களில் உத்தமம் என்றும் கிருஷ்ணர் கீதையில் (18.64) கூறுகிறார். கிருஷ்ணர் இதர யோகங்களை இரகசியம், மிக இரகசியம் என்று கூறுகிறார், ஆனால் பக்தி யோகத்தினை உத்தம இரகசியம் என்று தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.

ஞான யோகத்தை முறையாகப் பின்பற்றுபவன் பற்பல பிறவிகளுக்குப் பிறகு, தன்னிடம் சரணடைகிறான் என்று கிருஷ்ணர் கீதையின் மற்றொரு இடத்தில் (7.19) கூறுகிறார். அதாவது, ஞான யோகம் முறையாக செயல்படுத்தப்பட்டால், அதனால் அடையப்படும் இலக்கு பக்தி யோகமே. ஞான யோகம் ஒரு படிக்கட்டு போன்று செயல்படுகிறது. ஞான யோகப் பாதையும் பக்தி யோகப் பாதையும் ஒன்று என்றால், ஞான யோகி பக்தியை ஏற்கிறான் என்பதற்கு என்ன அர்த்தம்?

முடிவுரை

மக்கள் ஆன்மீகத்தில் சோம்பேறிகளாக இருப்பதால், பல்வேறு தத்துவங்களையும் முரண்பாடுகளையும் அலசி ஆராய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. மக்களின் சோம்பேறித்தனத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் அயோக்கியர்கள், “எல்லாப் பாதைகளும் ஒன்றுதான். நீ ஏன் பகவத் கீதையைப் படிக்க வேண்டும்? கால்பந்து விளையாடினால் போதும். கால்பந்து விளையாடுவதும் கீதையைப் படிப்பதும் ஒரே பலனைக் கொடுக்கும்,” என்றெல்லாம் கூறி, மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

ஆன்மீகப் பாதைகள் பல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அவை அனைத்தும் ஒரே இலக்கை வழங்காது என்பதை நாம் உணருதல் அவசியம். அந்த பாதைகள் அங்கீகாரம் பெற்றதாக (கற்பனையானதாக இல்லாமல்) இருந்தால், நிச்சயம் அவை நல்விளைவுகளைக் கொடுக்கும். ஆனால் அவை அனைத்தும் ஒரே விளைவைக் கொடுக்காது. எனவே, ஆன்மீக விஷயங்களை தத்துவபூர்வமாக ஆராய முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து, தத்துவங்களை மறைத்து, வெறும் மனஎழுச்சியில் “எல்லாம் ஒன்றுதான்” என்று கூறி, தத்துவ ஆராய்ச்சிகளை புதைத்து விட வேண்டாம். ஏமாற்றுவதற்கு நிச்சயம் பலர் வருவர், ஏமாறாமல் தப்பிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives