குரு என்றால் என்ன? (பாகம்-2)
(சென்ற இதழின் தொடர்ச்சி)
நிருபர்: தங்களின் இயக்கத்தில் தீக்ஷை பெற வேண்டுமானால், நான் என்ன செய்ய வேண்டும்?
ஸ்ரீல பிரபுபாதர்: முதலாவதாக, நீங்கள் தவறான காம வாழ்க்கையை விட்டொழிக்க வேண்டும்.
நிருபர்: அஃது எல்லா காம வாழ்க்கையையும் உள்ளடக்கியதா? தவறான காம வாழ்க்கை என்றால் என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: தவறான காம வாழ்க்கை என்பது திருமணத்திற்கு அப்பாற்பட்ட காம வாழ்க்கையாகும். எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மிருகங்கள் காமத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் மனித சமுதாயத்தில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மதத்திலும், காம வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் சில முறைகள் உள்ளன. மேலும், நீங்கள் தேநீர், சிகரெட், ஆல்கஹால், மரிஜானா என எல்லா போதை வஸ்துகளையும் விட்டொழிக்க வேண்டும்.
நிருபர்: வேறு ஏதாவது?
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மாமிசம், முட்டை, மீன் முதலியவற்றை உண்ணக் கூடாது, சூதாட்டத்தையும் நிறுத்தி விட வேண்டும். நீங்கள் இந்த நான்கு பாவச் செயல்களையும் கைவிட்டாலன்றி, உங்களுக்கு தீக்ஷையளிக்க முடியாது.
நிருபர்: உலகம் முழுவதும் உங்களுக்கு எத்தனை சீடர்கள் உள்ளனர்?
ஸ்ரீல பிரபுபாதர்: உண்மையான ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுக்கும் இடத்தில் சீடர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள், அபத்தமான விஷயங்களைப் பின்பற்றுபவர்கள் அதிகமாக இருப்பார்கள். இருப்பினும், எங்களிடம் சுமார் ஐயாயிரம் தீக்ஷை வாங்கிய பக்தர்கள் இருக்கின்றனர்.
நிருபர்: இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் வளர்ந்து வருகின்றதா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது, ஆனால் மெதுவாக. ஏனெனில், நாங்கள் பல கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றோம். மக்கள் கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை.
நிருபர்: உங்களைப் பின்பற்றுபவர்கள் எங்கு அதிகமாக உள்ளனர்?
ஸ்ரீல பிரபுபாதர்: அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய பகுதிகளில் உள்ளனர். மேலும் இந்தியாவில் கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்யும் இலட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.
நிருபர்: தங்களுடைய இயக்கத்தின் நோக்கம் என்னவென்று எனக்குக் கூற முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் நோக்கம், மனிதனின் உண்மையான உணர்வு நிலையை விழிப்புறச் செய்வதே. தற்போதைய சூழ்நிலையில் நம்முடைய உணர்வு பொய்யான அடையாளத்தில் உள்ளது. “நான் ஆங்கிலேயன்,” என்று ஒருவர் நினைக்க, வேறொருவர் நினைக்கிறார், “நான் அமெரிக்கன்.” உண்மையில் நாம் இந்த அடையாளங்களைச் சார்ந்தவர்கள் அல்ல; நாம் அனைவரும் கடவுளின் அம்சங்கள், இதுவே நம்முடைய உண்மையான அடையாளம். ஒவ்வொருவரும் இந்த உணர்வு நிலைக்கு வந்துவிட்டால், உலகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நாம் வெவ்வேறு உடைகளால் மூடப்பட்டிருந்தாலும் ஒரே தன்மையுள்ள ஆன்மீக ஆத்மா நம் ஒவ்வொருவரின் உள்ளும் இருக்கின்றது. இதுவே பகவத் கீதையில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கமாகும்.
கிருஷ்ண உணர்வு என்பது உண்மையில் ஒரு தூய்மைப்படுத்தும் முறையாகும் (ஸர்வோபாதி–விநிர்முக்தம்). எங்களுடைய நோக்கம் மக்களை எல்லா விதமான உடல் சார்ந்த அடையாளங்களிலிருந்து விடுவிப்பதாகும் (தத்–பரத்வேன நிர்மலம்). நம்முடைய உணர்வு இதுபோன்ற எல்லா அடையாளங்களிலிருந்தும் தூய்மையடையும்போது, அந்த தூய்மையான புலன்களின் மூலமாக செய்யப்படும் செயல்கள் அனைத்தும் நம்மைப் பக்குவமானவர்களாக மாற்றுகின்றன. இறுதியில், நாம் மனித வாழ்க்கையின் பூரணத்துவத்தை அடைவோம். கிருஷ்ண உணர்வு ஓர் எளிய வழிமுறையாகும். நாம் ஒரு பெரிய தத்துவவாதியாகவோ விஞ்ஞானியாகவோ வேறு யாராகவோ மாற வேண்டிய அவசியமில்லை. நாம் செய்ய வேண்டியது எல்லாம், பகவானின் தோற்றம், அவரது நாமம், அவரது குணங்கள் ஆகியவை எல்லாம் பூரணமானவை என்பதைப் புரிந்து கொண்டு, பகவானின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்.
கிருஷ்ண உணர்வு என்பது மிகப்பெரிய விஞ்ஞானம். துரதிர்ஷ்டவசமாக, இந்த விஞ்ஞானத்திற்கு பல்கலைக்கழகங்களில் எந்த தனித் துறையும் இல்லை. எனவே, மனித சமுதாயத்தின் நலனில் சிரத்தையுள்ள, அக்கறையுள்ள மனிதர்களை, எங்களுடைய இந்த மாபெரும் இயக்கத்தினைப் புரிந்துகொள்ளும்படி அழைக்கின்றோம், முடியுமானால் எங்களது நிகழ்ச்சிகளில் பங்கேற்று எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறோம். இதன் மூலம் உலகத்தின் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு விடும். இதுவே ஆன்மீக ஞானத்திற்கான மிகமிக அதிகாரபூர்வ இலக்கியமான ஸ்ரீமத் பகவத் கீதையின் தீர்ப்பாகும். உங்களில் பலர் பகவத் கீதையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்களது இயக்கம் பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டதாகும். இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், பகவான் சைதன்யர் என பல்வேறு மாபெரும் ஆச்சாரியர்களாலும் எங்களது இயக்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அனைவரும் தினசரி பத்திரிகைகளின் பிரதிநிதிகள்; எனவே, மனித சமுதாயத்தின் நன்மைக்காக, முடிந்த அளவு இந்த இயக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்படி வேண்டுகிறேன்.
நிருபர்: கடவுளைப் புரிந்து கொள்வதற்கு உங்களது இயக்கம் ஒன்றுதான் வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம்.
நிருபர்: அதை எவ்வாறு நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: அதிகாரிகளிடமிருந்தும் கிருஷ்ணரிடமிருந்தும் நிச்சயப்படுத்துகிறோம். கிருஷ்ணர் கூறுகிறார்,
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:
“எல்லா மதங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.” (பகவத் கீதை 18.66)
நிருபர்: சரணடைவது என்றால் ஒருவர் தன்னுடைய குடும்பத்தைத் துறக்க வேண்டும் என்பதா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை.
நிருபர்: ஆனால், உதாரணத்திற்கு நான் தீக்ஷை வாங்கிய பிறகு கோயிலில் வசிக்க வேண்டியது அவசியமில்லையா?
ஸ்ரீல பிரபுபாதர்: அவசியமில்லை.
நிருபர்: நான் வீட்டிலேயே தங்கலாமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், தங்கலாம்.
நிருபர்: அது சரியாக இருக்குமா? நான் எனது வேலையை விட்டுவிட வேண்டுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, நீங்கள் உங்களுடைய தீய பழக்கங்களை மட்டும் விட்டொழிக்க வேண்டும். இந்த ஜப மாலையை வைத்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்க வேண்டும், அவ்வளவே!
நிருபர்: நான் பொருளாதார ரீதியாக ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, அஃது உங்களுடைய விருப்பத்தைப் பொருத்தது. நீங்கள் கொடுத்தால் நல்லது, கொடுக்கவில்லை என்றாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. நாங்கள் யாருடைய பொருளாதார உதவியையும் நம்பியிருக்கவில்லை. நாங்கள் கிருஷ்ணரைச் சார்ந்துள்ளோம்.
நிருபர்: நான் பணம் ஏதும் தர வேண்டியதே இல்லையா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை.
நிருபர்: இதுதான் போலி குருவிடமிருந்து உண்மையான குருவை வேறுபடுத்திக் காண்பிக்கின்றதா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், ஓர் உண்மையான குருவானவர்
வியாபாரி அல்ல; அவர் கடவுளின் பிரதிநிதி. கடவுள் என்னவெல்லாம் கூறுகின்றாரோ அவற்றை அவர் அப்படியே திருப்பிச் சொல்கிறார். அவர் வேறு விதமாகப் பேசுவதில்லை.
நிருபர்: ஆனால் ஓர் உண்மையான குரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்வதையோ, சொகுசு ஓட்டலில் ஆடம்பரமான அறையில் தங்குவதையோ எவ்வாறு புரிந்துகொள்வது?
(ஸ்ரீல பிரபுபாதரின் பதிலும் உரையாடலின் இறுதிப் பகுதியும் அடுத்த இதழில் தொடரும்.)