—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பார்வையாளருக்கும் பங்குதாரருக்கும் உள்ள வேற்றுமையை அனைவரும் அறிவர். ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது, அதில் பார்வையாளராக இலட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளலாம். ஆனால் அதில் பங்குதாரராக இருப்பவர்கள் சிலரே. அதாவது, நேரடியாக விளையாடுவோர், அவர்களது உதவியாளர்கள், அணியின் உரிமையாளர்கள், போட்டிக்கான நிர்வாகத்தில் ஈடுபடுவோர் முதலியோரை பங்குதாரர்கள் என்று கூறலாம். பார்வையாளராக இருப்பதைவிட பங்குதாரராக இருத்தல் அதிக இன்பத்தையும் அனுபவத்தையும் கொடுக்கும்.
அதுபோலவே, கோயிலுக்குச் செல்வோரிலும் பெரும்பாலானோர் பார்வையாளராகவே உள்ளனர்; அதாவது, பெருமாளை சேவித்துவிட்டு கோயிலை வலம் வருவர், கொஞ்சம் பிரசாதம் கிடைத்தால் ஏற்றுக்கொள்வர், அவ்வளவுதான். அங்கே பங்குதாரராக (பகவானின் கைங்கரியத்தில் நேரடியாக) ஈடுபடுவோர் மிகக்குறைவு. இருப்பினும், எல்லாரும் நேரடியாக கைங்கரியம் செய்ய முடியாது என்பதால், யாரும் அதனைப் பெரிதாக நினைப்பதில்லை.
ஆயினும், எல்லாரும் நேரடியாக கைங்கரியம் செய்வதற்கும் ஓர் ஆன்மீக வழி உண்டு. அதுதான் நாம ஸங்கீர்த்தனம். பகவானின் திருநாமத்தை ஒருவர் பாடும்போது, மற்றவர்களும் அவரைப் பின்தொடர்ந்து பாட முடியும். இதனை நீங்கள் இஸ்கான் கோயில்களில் காணலாம். அதாவது, இஸ்கானில் நீங்கள் வெறும் பார்வையாளராக இருக்கத் தேவையில்லை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே—என்று பாடும்போது, நீங்களும் திருப்பிப் பாடுங்கள், பங்குதாரராக இருங்கள்.
சில நேரங்களில், எங்களது கோயிலுக்குப் புதிதாக வருபவர்கள் கீர்த்தனத்தின்போது அமைதியாக இருப்பதைக் காண்கிறோம். தயவுசெய்து அதுபோன்று பார்வையாளராக மட்டும் இருக்க வேண்டாம், வாய்விட்டு பாடி பங்குதாரராக இருங்கள். இது கடினமான மந்திரமோ அறியாத பாசுரமோ கிடையாது, இது மிகமிக எளிய வழிமுறை. அதே சமயத்தில், மிகவுயர்ந்த பலனைக் கொடுக்கும் வழிமுறை.
வாயிருந்தால்போதும், நீங்களும் பாடலாம், வேறு செலவோ கட்டணமோ கிடையாது. இதில் ஒரு குழந்தைகூட பங்குதாரராக முடியும். ஜாதி, மதம், இனம், மொழி, வயது, செல்வம், கல்வி என எதையும் பொருட்படுத்தாமல், இதில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராகலாம். ஆகவே, நீங்கள் இஸ்கான் கோயிலுக்குச் செல்லும்போதும், இஸ்கான் பக்தர்கள் நாமத்தைப் பாடிக் கொண்டு உங்களது இல்லத்திற்கு அருகே வரும்போதும், ரத யாத்திரையின்போதும், அதுபோன்ற இதர தருணங்களிலும் ஓரமாக ஒதுங்கி வேடிக்கை பார்க்காமல், உற்சாகத்துடன் நாம கீர்த்தனத்தில் பங்குதாரராக வாருங்கள்.