—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
“அர்ஜுனன் ஒரு முட்டாள்,” என்று ஒருவர் கூறினார். கேட்பவர்களுக்கு இயல்பாகவே கோபம் வரும். அர்ஜுனனை எவ்வாறு “முட்டாள்” என்று கூற முடியும்? அர்ஜுனனுக்கு நிகரான வில்லாளி யாருமே இல்லை, துரோணரின் தலைசிறந்த சீடன் அவன், திறமை வாய்ந்த சத்திரியனிடம் இருக்க வேண்டிய எல்லா நற்குணங்களும் அவனிடம் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உற்ற நண்பனாக இருந்த அவனை எப்படி முட்டாளாகக் கருத முடியும்?
அவ்வாறு அவனை “முட்டாள்” என்று கூறியது வேறு யாருமில்லை, அந்த சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே. பகவத் கீதையின் தொடக்கத்தில், அர்ஜுனன் தனது உறவினர்களைப் போர்க்களத்தில் பார்த்து மயக்கமுற்ற தருணத்தில், கிருஷ்ணர் அவனை அவ்வாறு கண்டிக்கிறார்: “நீ அறிவாளியைப் போலப் பேசுகிறாய், ஆனால் கவலைப்பட வேண்டாதவற்றிற்காகக் கவலைப்படுகிறாய். அறிஞர்கள் வாழ்பவர்களுக்காகவோ மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை.” (பகவத் கீதை 2.11)
கிருஷ்ணரது இக்கூற்றின்படி, இவ்வுலகிலுள்ள நாம் அனைவரும் முட்டாள்களே. ஏனெனில், நாம் கவலைப்பட வேண்டாதவற்றிற்காகக் கவலைப்படுகிறோம். அதாவது, அழியப்போகும் இந்த உடலிற்காகக் கவலைப்படுகிறோம். ஆத்மாவைப் பற்றி சிந்திப்பதில்லை, உடல், உடல் சார்ந்த உறவுகள், உடல் சார்ந்த இன்பம் இவற்றையே எப்போதும் எண்ணிக் கொண்டுள்ளோம். ஆகவே, நாம் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும்—விஞ்ஞானி, கவிஞன், மருத்துவன், செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நிபுணன், நாட்டின் அதிபர் என யாராக இருந்தாலும்—உலகமே போற்றும் பிரபலமாக இருந்தாலும், நாம் முட்டாள்களே.
ஜடம், ஆத்மா, இறைவன்—இந்த மூன்றையும் உணர்வதே உண்மையான அறிவு, இவற்றை அறிந்தவனே உண்மையான அறிஞன். மற்றவர்கள் அனைவரும் முட்டாள்களே. ஆத்ம ஞானத்தைப் புரிந்துகொள்ளாமல், அர்ஜுனன் அறிஞனைப் போலப் பேசியதை கிருஷ்ணர் ரசிக்கவில்லை. இந்த உலகிலும், பலர் அதுபோன்று வாய் கிழிய மணிக்கணக்கில் உடல் சார்ந்த விஷயங்களை அறிவார்தமாகப் பேசுவதாக நினைத்துப் பேசுகின்றனர். ஆயினும், கிருஷ்ணர் அவற்றை அங்கீகரிக்க மாட்டார்.
நம்முடைய உடல் இன்றோ நாளையோ மடியப் போகிறது என்பதால், அழியாமலிருக்கும் ஆத்மாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். நாமோ ஆத்மாவைப் பற்றி கண்டுகொள்ளாமல் வாழ்கிறோம். அர்ஜுனன் உண்மையில் முட்டாள் கிடையாது, ஆயினும் அர்ஜுனனை சிறிது நேரம் அவ்வாறு மயக்கி, உண்மையான முட்டாள்களான நம்மையே கிருஷ்ணர் கண்டிக்கின்றார்.
ஆகவே, இனிமேலும் அவ்வாறு வாழாமல், கீதையைப் படித்து கிருஷ்ணரின் அறிவுரைகளை ஏற்போம், கிருஷ்ணரிடம் சரணடைவோம், புத்திசாலிகளாக வாழ்வோம்.