—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
செல்வத்தில் மயங்கியுள்ள மனிதர்களில் பெரும்பாலானோர் நீதி நியாயத்தைப் பொருட்படுத்துவதில்லை; மது, மாது, மாமிசம், சூது ஆகியவற்றில் தாராளமாக ஈடுபடுகின்றனர். ஆகவே, ஏழையாக இருப்பவனின் நிலை சிறப்பானது என்று கூறப்படுகிறது.
ஏழை மனிதன் மற்றவர்களின் வலியைத் தன்னுடைய வலியாகக் கருதுவதால், யாருக்கும் தீங்கிழைக்க விரும்புவதில்லை. ஏழ்மையிலிருந்து உயர்வு பெற்றவன் (தனது பழைய நிலையை மறக்காமல்) ஏழைகளின் நன்மைக்காக தர்ம காரியங்களில் ஈடுபடுவதையும் காண்கிறோம். ஏழை மனிதன், பகவானின் கருணையால் தனக்குக் கிடைப்பவற்றை வைத்து திருப்தியடைகிறான், பெரும்பாலும் கர்வத்தினால் பாதிக்கப்படுவதில்லை.
ஆகவே, பௌதிகச் செல்வச் செருக்கிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புவோர், வேத வழக்கத்தின்படி, தங்களை எப்போதும் ஏழ்மை நிலையிலேயே வைத்துக்கொள்கின்றனர். பௌதிக முன்னேற்றத்தினால் எழும் கர்வமானது ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும். மேலும், அளவுக்கதிகமாக உண்டு கொழுத்துப்போகுதல் ஏழைக்குச் சாத்தியமில்லை. அவனால் தேவைக்கு அதிகமாக உண்ண முடியாது என்பதால், அவனது புலன்களும் கட்டுப்பாட்டில் இருக்கும். புலன்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவன் மோசமான செயல்களில் ஈடுபட மாட்டான்.
ஏழ்மையின் மற்றொரு நன்மை என்னவெனில், ஏழையின் வீட்டிற்கு சாதுக்களால் எளிதாக வர முடியும், சாதுக்களின் சங்கத்தினை ஏழையினால் எளிதில் பெற முடியும். செல்வந்தர்கள் தங்களது வீட்டினுள் பெரும்பாலும் மற்றவர்களை அனுமதிப்பதில்லை என்பதால், சாதுக்களும் அங்குச் செல்வதில்லை. வேத வழக்கத்தின்படி, மக்களுக்கு ஆன்மீக அறிவுரைகளை வழங்க விரும்பும் சாதுக்கள் யாசகர்களின் போர்வையில் கிருஹஸ்தர்களின் வீடுகளுக்குச் செல்வர். நவீன காலத்தில், அதே நோக்கத்துடன் பக்தர்கள் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீடுவீடாகச் செல்கின்றனர்.
அப்போது, பல்வேறு உலகாயத விஷயங்களினால் ஆன்மீகத்தை மறந்துள்ள இல்லறத்தவர்கள் அத்தகு சாதுக்களின் சங்கத்தைப் பெற்று நன்மையடைய முடியும். செல்வந்தர்களின் வீடுகளுக்கு அவ்வாறு செல்லுதல் கடினமானது என்பதால், சாதுக்களின் சங்கத்தை ஏற்று முக்தியடைவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு செல்வந்தர்களைக் காட்டிலும் ஏழைகளுக்கு அதிகமாக உள்ளது.
ஆகவே, பிராமணர்கள் தொன்றுதொட்டு தங்களை எப்போதும் ஏழ்மையில் வைத்திருந்தனர். கிருஷ்ண பக்தியில் ஆர்வமுடைய ஒவ்வொருவரும், தங்களது பௌதிக நிலையை முன்னேற்றுவதற்காக அல்லும்பகலும் அரும்பாடுபட்டு உழைப்பதற்கு பதிலாக, ஏழ்மையைப் பற்றி வருந்தாமல், தத்தமது கர்மத்தினால் வழங்கப்பட்டுள்ளவற்றைக் கொண்டு திருப்தியுற்று, பக்தித் தொண்டில் கவனம் செலுத்த வேண்டும்.
(ஸ்ரீல பிரபுபாதரின் கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் நூலின் பத்தாவது அத்தியாயத்தில் காணப்படும் கூற்றுகளை வைத்து எழுதப்பட்டது.)