ஆத்ம ஞானத்தின் அவசியம்

Must read

இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பரிணாமச் சுழற்சியில் பெறப்படும் மனிதப் பிறவி, இறை நம்பிக்கை, பௌதிக விஞ்ஞானத்தின் பயனற்ற நிலை முதலியவற்றைப் பற்றி உரையாடுகிறார்.

(சென்ற இதழின் தொடர்ச்சி)

டாக்டர் பென்ஃபோர்ட்: மக்கள் வேறு உருவங்களில் மீண்டும் பிறக்கிறார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

ஸ்ரீல பிரபுபாதர்: நாய், பூனை, மரம், ஊர்வன, பூச்சி, மீன் என பல்வேறு உருவங்களைக் காண்கிறோம். இந்த உருவங்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? இந்த பல்வேறு உருவங்களைப் பற்றிய உங்களின் விளக்கம் என்ன? அஃது உங்களுக்கு தெரியாது.

டாக்டர் பென்ஃபோர்ட்: பரிணாம வளர்ச்சியினால் சாத்தியமாகின்றன.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. “மீன்,” “புலி,” “மனிதன்” போன்ற பல்வேறு உயிர்வாழிகள் ஏற்கனவே இருக்கின்றன. இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளைப் போன்றதாகும். இங்கே ஒரே சமயத்தில் பல தரப்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன என்றபோதிலும், வாடகை தருவதற்கான திறனைப் பொறுத்து உங்களால் அதனுள் ஏதேனும் ஒன்றில் குடியேற முடியும். அதுபோலவே, உயிர்வாழி தனது கர்மத்திற்கேற்ப ஏதேனும் ஓர் உருவத்தைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இங்கே பரிணாமம் இருக்கின்றது, ஆனால் இஃது ஆத்மாவின் பரிணாமம். ஆத்மா மீனிலிருந்து தாவர வாழ்விற்கு பரிணமிக்கிறது, தாவர வடிவிலிருந்து பூச்சியின் உடலிற்குள் நுழைகிறது. பூச்சி உடலுக்கு அடுத்த நிலை பறவை. அதன் பின்னர், மிருகங்கள் என இறுதியில் ஆத்மா மனித உருவிலான வாழ்விற்கு பரிணமிக்கலாம். தகுதியுடையவனாக இருந்தால், அவன் மனித உருவிலிருந்து மேலும் முன்னேறி பயணிக்கலாம். இல்லையெனில், அவன் மீண்டும் பரிணாமச் சுழற்சியினுள் நுழைய வேண்டியிருக்கும். எனவே, உயிர்வாழியின் பரிணாமச் சுழற்சியில் இந்த மனித உடல் மிகவும் முக்கியமான சந்திப்பாகும். பகவத் கீதையில் (9.25) கிருஷ்ணர் கூறுகிறார்,

யாந்தி தேவ-வ்ரதா தேவான்

பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:

பூதானி யாந்தி பூதேஜ்யா

யாந்தி மத்-யாஜினோ ’பி மாம்

வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதனை அடையலாம். பல்வேறு லோகங்கள் உள்ளன. நீங்கள் தேவர்கள் வாழக்கூடிய லோகங்களுக்குச் சென்று அங்குள்ள உடலை ஏற்கலாம், அல்லது முன்னோர்கள் (பித்ருக்கள்) வாழும் இடத்திற்குச் செல்லலாம், அல்லது இந்த பூலோகத்திலேயே வேறு உடலைப் பெறலாம், அல்லது கிருஷ்ண லோகம் எனப்படும் கடவுளின் லோகத்திற்கும் செல்லலாம். இவ்வாறாக, மரணத்தருவாயின்போது விரும்பும் கிரகத்திற்கு ஒருவன் தன்னை மாற்றிக்கொள்ளும் முறைக்கு யோகம் என்று பெயர். உடல் சார்ந்த யோகம், தத்துவ யோகம், பக்தி யோகம் என பல்வேறு யோக வழிமுறைகள் உள்ளன. பக்தர்களோ கிருஷ்ணர் வாழும் கிரகத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும்.

டாக்டர் பென்ஃபோர்ட்: ஒரு விஷயம், உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்: கிழக்கிலும் சரி, மேற்கிலும் சரி, தத்துவ கருத்துகளுக்கு முற்றிலும் எதிராக இருப்பதை சிலர் புத்திசாலித்தனம் என்று நினைக்கின்றனர். கடவுளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் நினைத்தால், அதற்கான வழிமுறையை அவர் மேலும் எளிமைப்படுத்தி இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில் நீங்கள் கடவுளை நம்பவில்லையா?

டாக்டர் பென்ஃபோர்ட்: நான் கடவுளை நம்பவில்லை என்று கூறவில்லை; ஆதாரங்கள் கிடைக்கும் வரை நான் எந்த முடிவிற்கும் வருவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், கடவுள் உள்ளார் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா இல்லையா?

டாக்டர் பென்ஃபோர்ட்: இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், அது நிரூபிக்கப்படாமல் உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆயினும், கடவுள் உள்ளார் என்று நீங்கள் சில சமயங்களில் எண்ணுகிறீர்கள். அப்படித்தானே?

டாக்டர் பென்ஃபோர்ட்: ஆம்.

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் சந்தேகத்துடன் வாழ்கின்றீர், உங்களால் உறுதியாக நம்ப முடியவில்லை. இருப்பினும், உங்களின் உள்மனம் கடவுள் உள்ளார் என்று சிந்திக்க வைக்கின்றது. அப்படித்தானே? உங்கள் அறிவு முழுமையற்று இருப்பதால், நீங்கள் சந்தேகத்துடன் உள்ளீர்கள். மற்றபடி நீங்கள் கடவுளைப் பற்றி நினைப்பதில் ஆர்வமாக உள்ளீர்கள். ஆயினும், நீங்கள் விஞ்ஞானியாக இருப்பதால், விஞ்ஞானபூர்வமாக உணராத வரையில், நீங்கள் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இதுவே உங்களின் நிலைப்பாடு. அதே சமயத்தில், உங்களது தரப்பிலிருந்து, நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள்.

டாக்டர் பென்ஃபோர்ட்: சில நேரங்களில்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், சில நேரங்களிலா எப்பொழுதுமா என்பது பொருட்டல்ல. அனைவரின் நிலைப்பாடும் அதுவே. ஒருவன் மனித உடலில் இருக்கும் வரை, அவனிடம் கடவுளைப் பற்றிய உணர்வு உறங்கிய நிலையில் நிச்சயமாக உண்டு. அதனை முறையான பயிற்சியின் மூலமாக வளர்த்தால் போதும். வாழ்வில் மற்றவற்றிற்கு எவ்வாறு பயிற்சி தேவைப்படுகிறதோ, அவ்வாறே இதற்கும் பயிற்சி தேவை. உதாரணமாக, நல்ல கல்வியின் மூலமும் நல்ல பயிற்சியின் மூலமும், நீங்கள் விஞ்ஞானியாக உள்ளீர்கள். அதுபோலவே, அனைவரிடமும் உறங்கிய நிலையில் இருக்கும் கடவுள் (கிருஷ்ண) உணர்வினை எழுப்புவதற்கு தகுந்த பயிற்சி வேண்டும். ஆயினும், பல்கலைக்கழகங்களில் இந்தக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. இதுவே நவீன கால கல்வியின் குறைபாடாகும். கிருஷ்ண உணர்வில் இருக்க வேண்டும் என்பதற்கான விருப்பம் ஒருவனிடம் இருந்தால்கூட, துரதிர்ஷ்டவசமாக, அதிகாரத்தில் உள்ளவர்கள் கடவுளைப் பற்றிய கல்வியினை வழங்குவதில்லை. எனவே, மக்கள் கடவுளற்ற நிலைக்குச் செல்கின்றனர். மேலும், வாழ்வில் உண்மையான மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறுவதில் தோல்வியுறுகின்றனர்.

மக்கள் ஏன் மதங்களில் விருப்பமின்றி உள்ளனர், அவர்கள் ஏன் தேவாலயங்களுக்கு வருவதில்லை போன்ற காரணங்களை ஆராய்வதற்காக, சான்டியாகோ நகரில், போதகர்கள் சிலர் ஒரு கூட்டத்தினைக் கூட்ட உள்ளனர். ஆனால், அதற்கான காரணம் எளிது. இந்த வாழ்க்கை, குறிப்பாக மனித வாழ்க்கை கடவுளை உணர்வதற்கானது என்பதை உங்கள் அரசாங்கம் அறியவில்லை. அவர்கள் “உணர்வு” எனும் முக்கியமான துறையைத் தவிர அறிவின் மற்ற அனைத்து துறைகளையும் ஆதரிக்கின்றனர்.

டாக்டர் பென்ஃபோர்ட்: ஆம், நிச்சயமாக. அரசாங்கம், தேவாலயம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட பிரிவே அதற்கான காரணமாகும்.

ஸ்ரீல பிரபுபாதர்: காரணங்கள் பல இருக்கலாம். ஆனால், முதன்மையான காரணம் தற்போதைய யுகமான கலி யுகமே [சண்டையும் சச்சரவுகளுமான யுகம்]. மக்கள் புத்திசாலிகளாக இருப்பதில்லை என்பதால், அறிவின் துறைகளில் இந்த முக்கியமான துறையினை அவர்கள் தவிர்க்க முயலுகின்றனர். விலங்குகள் எத்தகு அறிவில் மும்முரமாக இருக்கின்றனவோ, அந்தத் துறையில் இந்த மனிதர்களும் மும்முரமாக இருக்கின்றனர். உங்களது அறிவின் முன்னேற்றம் இந்த நான்கு விஷயங்களில் அடைந்து விடுகிறது—உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, மற்றும் தற்காப்பு. உதாரணமாக, நீங்கள் மரணத்தினை வழங்கும் பல்வேறு ஆயுதங்களைக் கண்டுபிடிக்கின்றீர்கள், அதனை அரசியல்வாதிகள் தற்காப்பிற்காகப் பயன்படுத்துகின்றனர். கருவுறு

தலைத் தடுப்பதற்கான பல இரசாயனங்களைக் கண்டுபிடிக்கின்றீர்கள், அதனை மக்கள் அதிக அளவில் பாலுறவில் ஈடுபடுவதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

டாக்டர் பென்ஃபோர்ட்: நிலவிற்குச் செல்லும் திட்டத்தினைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: அதுவும் உறக்கத்தின் பிரிவில் வருகிறது. நீங்கள் அதிகமான பணத்தைச் செலவிட்டு அங்கே சென்று உறங்குகிறீர்கள், அவ்வளவுதான். அதை விடுத்து உங்களால் அங்கே என்ன செய்ய முடியும்?

டாக்டர் பென்ஃபோர்ட்: நீங்கள் அங்குச் சென்று கற்றுக்கொள்ளலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அங்குச் சென்று உறங்கலாம். அவ்வளவே. உறங்குதல். நீங்கள் பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்கிறீர், பதிலுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.

டாக்டர் பென்ஃபோர்ட்: அது மிகவும் மதிப்பு வாய்ந்தது.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, இல்லவே இல்லை. உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காப்பு என்னும் நான்கு கொள்கைகளே எல்லாவற்றிற்கும் பின்னணியாக உள்ளன, இவற்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உடலுக்கு அப்பாற்பட்ட அறிவு உங்களுக்கு இல்லையெனில், உங்களால் இந்த உடலின் எல்லைக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய முடியாது. உடலைப் பற்றிய அறிவு உங்களிடம் மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் இருக்கலாம்; ஆயினும், உங்களின் எல்லாச் செயல்களும் உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காப்பு என்னும் இந்த நான்கு கோட்பாடுகளின் வரம்பிற்குள் இருக்கின்றன. இந்த அறிவு கீழ்நிலை விலங்குகளின் மத்தியிலும் காணப்படுகிறது. எவ்வாறு உண்பது, எவ்வாறு உறங்குவது, எவ்வாறு உடலுறவில் ஈடுபடுவது, எவ்வாறு தற்காப்பது என்பனவற்றை அவைகளும் அறிந்துள்ளன.

டாக்டர் பென்ஃபோர்ட்: ஆனால், அணுக்கரு இயற்பியலைப் (Nuclear Physics) பற்றி அவற்றிற்கு எதுவும் தெரியாதே!

ஸ்ரீல பிரபுபாதர்: அதை வைத்து, விலங்குகளைக்

காட்டிலும் உங்களை முன்னேறியவர்கள் என்று கூறி விட முடியாது. ஒரே விஷயத்தை நீங்கள் சற்று மெருகேற்றி வைத்துள்ளீர். நீங்கள் மாட்டு வண்டியிலிருந்து காருக்கு முன்னேறியுள்ளீர், அவ்வளவுதான். இது ஜட அறிவின் வெறும் உருமாற்றம் மட்டுமே.

டாக்டர் பென்ஃபோர்ட்: இந்த பௌதிக உலகின் வடிவமைப்பினைப் பற்றிய அறிவு அதில் உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அது மனித சக்தியை வீணடிப்பதாகும்; ஏனெனில், உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காப்பு என்னும் இந்த நான்கு கோட்பாடுகளைத் தாண்டி உங்களால் செயல்பட முடிவதில்லை. நாய் தரையில் உறங்கலாம், நீங்கள் நல்ல குடியிருப்பில் உறங்கலாம், ஆனால் உறங்கிய பின்னர் உங்களின் ஆனந்தமும் நாயின் ஆனந்தமும் ஒன்றே. உங்களிடம் எத்தனையோ மின் உபகரணங்களும் இதர ஜட வசதிகளும் இருக்கலாம். ஆனால், நீங்கள் உறங்கும்போது அவை அனைத்தையும் மறந்துவிடுகிறீர்கள். எனவே, உறங்குவதற்கான இந்த மாபெரும் வசதிகள் வெறும் கால விரயமே.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives