வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
“மாற்றம் ஒன்றே மாறாதது”—இது பிரபலமாக அறியப்படும் வாக்கியம். நாம் நமது வாழ்வியல் தேவைகளுக்காக மாற்றங்களை செய்து கொண்டே இருக்கின்றோம். ஆயினும், எந்த நோக்கத்திற்காக நாம் மாற்றங்களை தேடுகின்றோமோ அதனை அடைகின்றோமா? இல்லையெனில், எவ்வாறு நமது நோக்கத்தை பூர்த்திசெய்வது? காணலாம். தொடர்ந்து படியுங்கள்.
ஏன் மாற்றங்கள்?
நாம் வாழும் பௌதிக உலகில் உடலின் தன்மை, பொருட்களின் தன்மை என அனைத்தும் மாறிக்கொண்டே உள்ளன. கண்களுக்கு புலப்படும் வஸ்துகள் மட்டுமின்றி, கண்களுக்குப் புலப்படாத சூட்சுமமான வஸ்துகளான மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவையும் மாறிக்கொண்டே உள்ளன. இங்கு எதுவும் நிரந்தரமான ஆனந்தத்தைத் தருவதில்லை. எனவே, நமது விருப்பு வெறுப்புகளும் மாறிக்கொண்டே உள்ளன.
இந்த உலகம் முழுவதும் தமோ மற்றும் ரஜோ குணத்தின் தாக்கத்தின் கீழ் உள்ளதாக ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார். இந்த குணங்களின் தாக்கத்தால் எழும் பேராசை, ஏக்கம், புலனின்பத்திற்கான ஆவல் ஆகியவையே நம்மை மாற்றத்திற்கு உட்படுத்து
கின்றன. நமது மனதானது குரங்கினைப் போன்றது, அதன் ஆவல் ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு தாவிக் கொண்டே உள்ளது. நம் வசம் சிறந்த பொருள் இருந்தாலும், மற்றவர்களிடம் உள்ள வஸ்துக்களின் மீது நாம் ஏக்கம் கொள்கிறோம்.
கடுமையான போராட்டம்
முதுமை காலத்தில் கழுகுகளின் அலகு வளைந்துவிடுவதால், வேட்டையாட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அந்த கழுகு தனது அலகினை உடைக்கும். இது மிகவும் வலி நிறைந்த செயலாகும். பின்னர் சில நாள்களில் புதிய அலகு உருவாகும், அது வேட்டையாட ஏதுவானதாக இருக்கும்.
கழுகினைப் போல, பொருளாதார மாற்றம், உடல் மாற்றம், அறிவு மாற்றம், அரசு மாற்றம், சமுதாய மாற்றம் என இதர மாற்றங்களிலும் நாம் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திரைப்படத்தில் வருவது போன்று, ஏழையாக பிறந்த ஒருவர் தனது பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் மாற்றிக்கொள்ள முடியாது. படிப்பது என்று எடுத்தால் இருபது வருடங்கள் படிக்க வேண்டும். தொழில் என்றாலும் அதற்கேற்ப சிரமங்கள் உள்ளன. எனவே, எதுவும் எளிதானதல்ல.
இருப்பினும், இத்தகைய மாற்றங்களுக்காக வாழ்வின் பெரும்பகுதி கஷ்டப்பட்டு உழைத்தாலும், அது நிரந்தரமாக இருப்பதில்லை. இஃது எத்தனை ஏமாற்றம் நிறைந்தது. எந்தவொரு மாற்றமும் இறுதியான மாற்றம் இல்லை, நாம் மீண்டும் அடுத்த மாற்றத்திற்காக உழைக்க வேண்டியுள்ளது. எனவே, இத்தகைய மாற்றம் தேவையா என்று புத்திசாலிகள் சிந்திப்பர்.
பொதுவாக மக்கள் பொருளாதாரத்தினை உயர்த்திக்கொண்டால், மற்ற அனைத்து சுகங்களையும் அடைந்துவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆயினும், ஏற்கனவே பொருளாதாரத்தில் முன்னேறியவர்களும் மன வருத்தம், உடல் வருத்தம், ஏமாற்றம் என்று வாழும்போது, அஃது எப்படி நல்ல முடிவாக இருக்கும் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
மயக்கும் இன்பம்
இரண்டு வகையான ஆத்மாக்கள் உள்ளனர் என்று ஷ்வேதாஷ்வதர உபநிஷத் (1.9) கூறுகிறது; ஒன்று எண்ணற்ற குணங்களை பூரணமாகக் கொண்டுள்ள உயர்ந்த ஆத்மாவாகிய பகவான், மற்றொன்று மயங்கும் தன்மை கொண்ட ஜீவாத்மாக்கள். நமக்கு இன்பம் தருவதற்கென்றே கடவுள் இந்த ஜட இயற்கையைப் படைத்துள்ளதாக உபநிஷத் கூறுகிறது. ஆனால், அந்த இன்பத்தில் மயங்கும்போது நாம் இந்த ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில் சிக்குகின்றோம். இத்தகைய இன்பத்தை அடைவதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் (மாற்றங்கள்) நமக்கு மேலும் துன்பத்தையே தருகின்றன.
இந்த பிரம்மாண்ட ஜட பிரபஞ்சங்களின் தன்மைகளை பகவான் கிருஷ்ணர் இரண்டே வார்த்தைகளில் முடித்துவிடுகிறார் (பகவத் கீதை 8.15), து:காலயம் அஷாஷ்வதம், “துன்பகரமானது, தற்காலிகமானது.”
திருப்தியின்மை
நமது அனைத்து செயல்களின் (மாற்றங்களின்) மூலம் நாம் மூன்று விதமான சுகத்தைத் தேடுகிறோம்.
(1) ஆரம்பத்தில் விஷத்தைப் போன்று இருந்தாலும் இறுதியில் அமிர்தத்தைப் போன்றதும், தன்னுணர்விற்கு ஒருவனை எழுப்புவதுமான சுகம், ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. (பகவத் கீதை 18.37)
(2) எந்த சுகம், புலன்களும் புலனின்பப் பொருள்களும் தொடர்புகொள்வதால் அடையப்படுகின்றதோ, ஆரம்பத்தில் அமிர்தம் போன்று தோன்றினாலும் இறுதியில் விஷமாகிவிடுகின்றதோ, அந்த சுகம், ரஜோ குணத்தின் தன்மையைக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. (பகவத் கீதை 18.38)
(3) தன்னுணர்வைக் காண இயலாத, ஆரம்பம் முதல் இறுதி வரை மயக்கமாக இருக்கின்ற, உறக்கம், சோம்பல், மற்றும் மாயையினால் வருகின்ற சுகம், தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. (பகவத் கீதை 18.39)
பொதுவாக, நாம் தேடும் இன்பம் தமோ குணம் அல்லது ரஜோ குணத்தை சார்ந்ததாக உள்ளது. ஸத்வ குணத்திலுள்ள இன்பத்தை தேடும் நபர்கள் மிகவும் அரிது. ரஜோ குணத்தினால் எழும் பேராசை உள்ள நபரிடம் அவர்கள் விரும்பிய பொருள் கிடைத்தாலும் திருப்தியின்மை இருக்கும். ஆட்சியாளர்களை மாற்றுகின்றோம், ஆயினும் சில காலத்திலேயே அவர்களைத் திட்டுகின்றோம். இவ்வுலகில், தமோ குணம் அல்லது ரஜோ குணத்தைச் சார்ந்த எந்த காரியமும் திருப்தியின்மையை வழங்குவதை நாம் காணலாம்.
சரியான மாற்று எது?
இதுவரை பல மாற்றங்களை சந்தித்திருப்பினும், நமக்கு முழுமையான ஆனந்தம் ஏன் கிட்டவில்லை? நமது துன்பங்களைப் போக்கி நிரந்தரமான ஆனந்தத்தைத் தரும் சரியான மாற்று எது? இந்த வினாக்கள் ஒருவரது மனதில் எழுந்தால், அஃது அவர் தன் வாழ்வில் முன்னேறுகிறார் என்பதற்கான அறிகுறியாகும். உண்மையில், நாம் புதியதாக எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, நாம் நமது இயற்கை நிலைக்குத் திரும்பினாலே போதும். அதாவது, நாம் குணங்களுக்கு அப்பாற்பட்ட தன்மையில் (சுத்த-ஸத்வ குணத்தில்) நிலை பெற வேண்டும். நமது தற்போதைய நிலையை நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு துன்புறும் மீனுடன் ஒப்பிடலாம். மீண்டும் நீரில் விடுவதைத் தவிர வேறு எந்த மாற்றமும் அதற்கு ஆனந்தத்தைத் தராது. அதுபோல, நாமும் பகவான் கிருஷ்ணரின் தொண்டன் என்னும் நமது உண்மையான நிலையினை அடைவதே சரியான மாற்றாகும்.
கிருஷ்ண பக்தனாதல் என்னும் இந்த மாற்றத்தினை நமது சொந்த முயற்சியினால் அடைய இயலாது. நம்மிடம் அதற்கான பக்குவமோ அறிவோ கிடையாது. மேலும், போலியான மதங்கள், பல ஏமாற்றும் மத குருமார்களால் நொடிந்து போய் உள்ள நமக்கு உதவுவதற்காக பகவான் கிருஷ்ணர் கருணையுடன் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) வழங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு மற்றும் வேத சாஸ்திரங்களின் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
நிரூபிக்கப்பட்ட வழிமுறை
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ஸ்ரீல பிரபுபாதரால் ஸ்தாபிக்கப்பட்டு, ஜாதி, மதம், இனம், நிறம், பால் என எந்த பாகுபாடுமின்றி உலகிலுள்ள அனைவருக்கும் கிருஷ்ண பக்தராகும் வாய்ப்பினை நல்கி வருகிறது. கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்யத் துவங்கியும் வாழ்வின் துன்பங்கள் அகலவில்லை என சிலர் நினைக்கலாம். நிரூபிக்கப்பட்ட இந்த வழிமுறை முழுமையான பலனைத் தரவில்லை எனில் நாம் வழிமுறையை ஒழுங்காகப் பின்பற்றவில்லை என்பதே பொருளே தவிர வழிமுறையில் எந்த குறைபாடும் இல்லை.
மருத்துவர் வழங்கும் மருந்துகளை முறையாக எடுக்காது, மருந்து வேலை செய்யவில்லை என்று குறை கூறுவது அபத்தம். அதே போன்று, நாம் கிருஷ்ணரின் திருப்திக்காக சேவைகளை செய்ய வேண்டும். அதனை விடுத்து நாம் கிருஷ்ண பக்தியினை நமது புலன்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் செய்தோமெனில், அஃது உடனடியாக முழுமையான பலனை வழங்காது. பொறுமை அவசியம். ரஜோ குணத்தினால் நாம் பொறுமையைக் கைவிட்டால், கிருஷ்ண பக்தியில் முன்னேற இயலாது.
மேலும், கிருஷ்ணரின் சக்தியான மாயை நம்மை சோதிப்பதற்கு பல சோதனைகளை தருவாள். அதில் நாம் தளர்ந்துவிட்டால் கிருஷ்ண உணர்வினை இழக்க நேரிடும். நாம் கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்கும்போது, கிருஷ்ணரின் கருணையால் மேலும் உன்னத பக்தி நிலையான பிரேம பக்தியை அடைவோம்.
முடிவான மாற்றம்
இரண்டு வகையான உலகங்கள் உள்ளன. ஒன்று என்றும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த ஜட உலகம். இதற்கு நேரெதிரான மாற்றமற்ற ஆன்மீக உலகம் ஒன்று உள்ளது. “மாற்றம் இல்லை” என்றால், அங்கு அனைத்தும் அப்படியே மெழுகு பொம்மைகளைப் போன்று அசையாது நிற்கும் என்பதல்ல. அங்கே செயல்களே இல்லை, செயல்களை நிறுத்திவிடுவோம், செயல்களைப் புரியும் ஆசைகள் இல்லை, செயல்களுக்குத் தேவையான உருவம் இல்லை என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது.
அங்கே செய்யப்படும் எல்லா செயல்களும் ஆனந்தத்தைத் தருவதாகும், அங்கு ஆனந்தத்தினைத் தவிர வேறு எதுவும் இல்லை. கிருஷ்ணரை மட்டுமே தினமும் பார்த்தாலும், சேவை செய்தாலும் அஃது ஒவ்வொருநாளும் புதிது புதிதான ஆனந்தத்தினை வழங்கிக் கொண்டே இருக்கும். சலிப்பு என்ற பேச்சுக்கு இடமே கிடையாது. சலிப்பு என்பது ஜடத்தில் ஏற்படுகிறது, ஆன்மீகம் அதற்கு நேரெதிரான தன்மை கொண்டது. மேலும், நாம் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் சார்ந்து இருப்பவர்கள் அல்லர். எனவே, மற்றவரை அல்லது மற்றவற்றை சார்ந்து வாழும் வாழ்வில் எழும் ஏமாற்றங்கள் அங்கு கிடையாது.
பிறவிதோறும் நாம் அலைந்து திரிந்து, கானல் நீரினைப் பருக முயன்று தோல்வியடைகிறோம். இதற்கான உபாயம் உண்மையான நீரினைத் தேடுவதாகும். அதே போல, நாம் அலைந்து தேடிய உண்மையான ஆனந்தத்தை அடைய கிருஷ்ண பக்தியே உபாயமாகும். மாற்றங்களைத் தேடும் அனைத்து போராட்டங்களுக்கும் முடிவுகட்ட நேர்மறை மாற்றமாகிய கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்வோமாக.
I’m captivated by your natural ability to turn ordinary topics into compelling writing. Well done!
Excellent post, I really enjoyed reading it. Your writing style is extremely engaging and the ideas are highly insightful. Thank you for sharing!