—சியாமசுந்தர பிரபுவின் நினைவுகளிலிருந்து
ஒரு சமயம் நாங்கள் மாயாபுரில் தங்கியிருந்தபோது, எங்களிடம் 1948இல் தயாரிக்கப்பட்ட பழமையான கார் ஒன்று இருந்தது, ஹட்சன் கார் என்று நினைக்கின்றேன். [ஒருநாள் நாங்கள் பிரபுபாதருடன் வெளியே புறப்பட்டோம்.] அந்தப் பெரிய காரை நான் ஓட்டினேன். நாங்கள் பிரதான சாலையைக் கடந்து கிளைச் சாலையினுள் நுழைந்தோம். அன்றைய காலத்தில், மாயாபுரின் பிரதான சாலையில் பயணித்த அனைவரும் அஃது எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை அறிவர். அப்படியெனில், கிளைச் சாலை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.
நாங்கள் பக்திசித்தாந்தரின் சகோதரரான லலித் பிரசாத் என்பவரைக் காண்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர் மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். அவரது இடத்திற்குச் செல்வதற்கான வழிகூட எங்களுக்குச் சரியாகத் தெரியாது. அந்தச் சாலையில் உள்ளது என்பதை மட்டுமே அறிவோம். கிட்டத்தட்ட பாதி தூரத்தைக் கடந்து, ஒரு பெரிய நீரோடையின் மேல் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் பாலத்தை (தரைப் பாலத்தை) அடைந்தோம். ஆனால், அப்போதைய மழை வெள்ளத்தில் அந்தப் பாலத்தின் கரை சுமார் மூன்று அடி அளவிற்கு நன்றாக அரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கால்வாயைக் காரில் கடக்க வேறு எந்த வழியும் இல்லை என்று தோன்றியது. அதுமட்டுமின்றி, நாங்கள் அந்தப் பாலத்தைக் கடந்த பின்னர், மேலும் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியிருந்தது.
பிரபுபாதர் நிலைமையை ஆராய்ந்தார். அவர் காரை விட்டு வெளியேகூட வரவில்லை; நிலைமையை மட்டும் லேசாக ஆராய்ந்தார், அவ்வளவுதான். பிரம்மானந்தரும் மற்ற பலவான்களும் காரின் பின்புறத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களை கீழே இறங்குமாறு கூறிய பிரபுபாதர், “சியாமசுந்தர், நீங்கள் காரைச் சற்று பின்னால் எடுத்து, நிறுத்தாமல் வேகமாக ஓட்டுங்கள், நாம் பாலத்தைக் கடந்துவிடலாம்,” என்று கூறினார்.
அதன்படி, நான் சுமார் 50 அடி பின்னால் வந்து, அந்தப் பழைய வண்டியில் துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாவைப் போல சீறிப் பாய்ந்தேன். அற்புதம்! நாங்கள் பாலத்தைக் கடந்துவிட்டோம். பெரும் சப்தத்துடன் அந்த சிமெண்ட் பாலத்தின் மீது பறந்தோம், கடந்தோம். அற்புதம்! அது ஸ்டீவ் மெக்குயின் நடித்த “கிரேட் எஸ்கேப்” என்ற திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல இருந்தது. மற்றவர்கள் நீரில் இறங்கி பாலத்தைக் கடந்து, எங்களுடன் காரில் அமர, நாங்கள் புறப்பட்டோம். பிரபுபாதர் எல்லாத் துறைகளிலும் திறமை வாய்ந்தவர்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!
மூலம்: ITV குழுவின் சித்தாந்த தாஸரால் பதிவு செய்யப்பட்ட Śrīla Prabhupāda – Remembrances என்னும் வீடியோ பதிவிலிருந்து.