வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம், எதையேனும் செய்து காப்பாற்றிவிடுங்கள் என்று கதறுகின்றோம். சிகிச்சை ஏன் சில நேரங்களில் பலனளிக்கிறது, சில நேரங்களில் பலனளிப்பதில்லை? சற்று ஆராய்வோம்.
மருத்துவ முன்னேற்றம்
இன்று ஆங்கில மருத்துவம் உலகம் முழுவதும் பரவி பல இலட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து வருகிறது. ஆயினும், 19ஆம் நூற்றாண்டில்தான் இந்த வைத்திய முறை உருவாகத் தொடங்கியது. அதற்கு முன்பாகவே, நாட்டு வைத்தியம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம் முதலியவை நமது நாட்டில் இருந்து வருகின்றன. மக்களின் நோய்களைத் தீர்ப்பதற்கு இந்த மருத்துவ முறைகள் ஏதோ ஒரு வழியில் உதவுகின்றன. இன்றைய மக்கள் வியாதியிலிருந்து உடனடியாக விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணத்தால், ஆங்கில மருத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டு அங்குச் செல்கின்றனர். இருப்பினும், சற்று தொய்வு அடைந்திருந்த ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள், ஆங்கில மருத்துவத்தின் பக்க விளைவுகளால் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புகின்றன. இன்று, ஏறக்குறைய 30 வகையான மருத்துவ பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வியாதிகளுக்கு பல்வேறு மருத்துவ முறைகளால் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
வியாதிகள் தற்செயலா?
ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதைப் போன்று காணப்பட்டாலும், வியாதி வந்தவுடன் அவரது வாழ்வே திசைமாறி விடுகின்றது. அதுபோலவே, தற்செயலாக ஏற்படும் விபத்தினால் குடும்பமே நிலைகுலைந்து போவதைப் படிக்கின்றோம், பார்க்கின்றோம். இவை எல்லாம் தற்செயலாக நிகழ்கின்றனவா? திடீரென்று வருகின்றனவா என்று பார்த்தால், நிச்சயம் இல்லை. இந்த உலகில் எந்தவோர் உயிர்வாழிக்கும் வரக்கூடிய இன்ப துன்பங்கள் எதுவும் தற்செயலானது இல்லை.
வியாதிகள் பெரும்பாலானோருக்கு வயதாகும்போது வருகின்றன என்றாலும், பலரும் பிறவியிலேயே வியாதிகளுடன் பிறப்பதைப் பார்க்கின்றோம், நம்மில் பலரும் அவ்வாறு இருக்கலாம். பிறவியிலேயே சிலர் வியாதியுடன் பிறப்பது ஏன் என்பதற்கு, ஒரு பிறவியை மட்டும் நம்பக்கூடிய கிறிஸ்துவம், இஸ்லாம் முதலிய மதங்களினால் பதில் கூற இயலவில்லை. ஆயினும், வேத கலாச்சாரத்தில் இதற்கு முழுமையான பதில் உள்ளது.
வியாதிகளுக்கும் மரணம் உட்பட அதனால் ஏற்படும் பலவித துயரங்களுக்கும் கர்ம வினைகளே காரணம். அதாவது, இந்த உலகில் நாம் செய்யும் எந்தவொரு செயலுக்கும் உடனடி பலனும் பின்விளைவுகளும் உண்டு. நாம் ஒரு செயலைச் செய்யும்போது, அஃது உடனடியாக பலனைக் கொடுக்கின்றது. அந்தப் பலனை அனுபவிக்கும்போது அதற்கு பின்விளைவுகள் ஏற்படுகின்றன. அதாவது, நாம் அடுத்ததொரு இன்பதுன்பத்திற்கு ஆளாக நேரிடுகிறது. உதாரணமாக, மாமிசத்தினைத் தின்பவர் அதன் சுவையின் மூலமாக உடனடி இன்பத்தினை அனுபவிக்கலாம். ஆனால், அஃது அந்த விலங்கினைக் கொல்வதற்கு காரணமாக அமைவதால், அவர் எதிர்காலத்தில் ஒரு விலங்கின் உடலை ஏற்று மற்றவர்களால் வெட்டப்படும் துன்பத்தினை அனுபவிக்க வேண்டியிருக்கும். இதுவே கர்ம வினை எனப்படுகிறது.
தொடர்ந்து வரும் கர்ம வினை
செய்த செயலை நாம் மறந்தாலும், வேறு உடலுக்கு நாம் மாறிவிட்டாலும், நமது கர்ம வினை என்றும் நம்முடன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அதாவது, ஒரு கொலையைச் செய்துவிட்டு, இடத்தை மாற்றிக்கொள்வதாலோ வேறு ஆடைக்கு மாறிவிடுவதாலோ தண்டனையிலிருந்து தப்ப முடியாது. கடவுளின் காவல் மிகவும் சூட்சுமமானது, அவர் பல சாட்சிகளை வைத்துள்ளார், அவர்களிடமிருந்து நம்மால் தப்பிக்க முடியாது. எனவே, நமது செயல்கள் பல பிறவிகள் கழித்தும் நிச்சயம் பலனை (இன்பம் அல்லது துன்பத்தினை) அளிக்கும்.
நம்முடைய செயலுக்கான எண்ணற்ற சாட்சிகளில் மிகவும் நெருக்கமாக இருப்பவர் பரமாத்மா. ஆத்மாவும் பரமாத்மாவும் அருகருகே இருப்பதால், ஆத்மாவின் எல்லாச் செயல்களையும் எண்ணங்
களையும் அவர் அறிந்துள்ளார். எனவே, நாம் ஏதேனும் வியாதிகளினால் துன்பப்படும்போது, அதற்கு நாம் முன்பாக செய்த கர்மமே காரணம் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மருத்துவம் குணப்படுத்துவதில்லையா?
கர்ம வினையே காரணம் என்று கூறும்போது, மருத்துவம் குணப்படுத்துவதில்லையா என்ற கேள்வி எழலாம். ஆம், மருத்துவமனைகளில் இருந்து இன்பத்துடன் வெளியே வரும் மக்களை பார்க்கின்றோம். பல வியாதிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வெற்றிகரமாக குணப்படுத்தி வெளியே அனுப்புகிறார்களே, நாமே பலமுறை சென்று வந்திருப்போமே, பிறகு எப்படி சிகிச்சையைக் குறை கூற முடியும்?
பெரியம்மை போன்ற பல வியாதிகளை முற்றிலும் அழித்துவிட்டதாகவும் போலியோ போன்ற வியாதிகளை இந்தியாவை விட்டே துரத்திவிட்டதாகவும் பல வியாதிகளுக்கு மருந்து உள்ளதாகவும் மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறதே? அவை எப்படி பொய்யாகும்? ஆம், மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது சில வியாதிகளை துரத்திவிட்டார்கள் என்று குதூகலிக்க முடியும். ஆயினும், நாம் துரத்தியுள்ள வியாதிகளைக் காட்டிலும் புதியதாகப் பெற்றுள்ள வியாதிகள் ஏராளமாக உள்ளனவே.
மேலும், மருத்துவ சிகிச்சையின் பலனும் தற்காலிகமானதாக உள்ளது. அதாவது, புற்றுநோய் போன்ற வியாதிகள் மீண்டும் நம்மைத் தாக்குகின்றன, அல்லது வியாதிகளைப் போக்க வழங்கும் மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன, அல்லது இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு ஆயுள் முழுவதும் மருந்து எடுக்கும் நிலை ஏற்படுகிறது, அல்லது நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு நமது உணவு முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, ஸ்ரீல பிரபுபாதர் கூறுவார், வியாதிகளுக்கு நல்ல மருத்துவம் பார்ப்பது முன்னேற்றம் அல்ல, வியாதிகள் இல்லாத நிலையே உண்மையான முன்னேற்றம்.
வியாதிகள் நிரந்தரமானவை
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் பகவான் கிருஷ்ணர் நான்கு வித துயரங்களைக் கொடுத்துள்ளார்: பிறப்பு, இறப்பு, முதுமை, மற்றும் நோய். இவை மட்டுமின்றி, மேலும் மூன்று விதமான துன்பங்களாலும் நாம் அவதிப்படுகிறோம்: (1) உடலாலும் மனதாலும் ஏற்படும் துயரம் (அத்யாத்மிக), (2) பிற உயிர்களால் ஏற்படும் துயரம் (அதிபௌதிக), மற்றும் (3) தேவர்களால் ஏற்படும் துயரம் (அதிதெய்விக).
எனவே, இவ்வுலகிலுள்ள அனைவரும் ஏதோவொரு வியாதி அல்லது வருத்தத்தில் இருந்து கொண்டுதான் இருப்பர். நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் புலன்களும்கூட முதுமையின் காரணமாக துயரமளிக்க ஆரம்பிக்கலாம். பார்வை மங்குதல், கேட்கும் திறனை இழத்தல், நடக்க முடியாது போகுதல், பசியின்மை முதலிய முதுமையின் தன்மைகளும் வியாதிகளின் பரிமாணங்களே.
ஆகவே, வியாதிகள் இந்த உலகில் நிரந்தரமானவை. சிலருக்கு பிறக்கும்போதே வருகின்றன, சிலருக்கு சில காலம் கழித்து வருகின்றன, மற்றவர்களுக்கு மரணத்திற்கு முன்பாக வருகின்றன. வெகு சிலர் தனது கடைசி தருணம் வரை உடலால் எந்த வியாதியையும் அனுபவிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்களும் மனதால் அல்லது மற்றவர்களால் நிச்சயம் துன்பத்தை அனுபவித்திடுவர்.
ஏன் சிகிச்சை பலனின்றி?
பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கியுள்ள ஜீவாத்மா ஒரு குறிப்பிட்ட உடலை ஏற்கும்போது, அதனை விட்டு வெளியேறும் நாள் ஏற்கனவே குறிக்கப்பட்டு விட்டது. இந்த உலகில் எந்த உடலும் நிரந்தரமானது கிடையாது. உடலை விட்டு நீங்க வேண்டிய தருணம் வரும்போது, அதனைத் தடுப்பவர் எவரும் கிடையாது, மரணத்தினை யாராலும் நிறுத்த முடியாது. பெரும் யோகிகள் பல்லாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தாலும், அவர்களாலும் இந்த ஜடவுடலில் நீடித்து இருக்க முடியாது. முதல் காரணம், இந்த உடல் அசௌகரியமானது; இரண்டாவது காரணம், ஜடத்தின் தன்மை எப்போதும் நிரந்தரமற்றது என்பதாகும். எனவே, ஆத்மா உடலை விட்டு நிச்சயம் வெளியேறியாக வேண்டும்.
இன்றைய மருத்துவ விஞ்ஞானம் நோய்க்கு மருத்துவம் பார்ப்பதைப் போன்று நம்மை ஏமாற்றுகின்றது; ஏனெனில், அவர்களால் மரணத்தினை நிச்சயம் தடுக்க முடியாது. அணுகுண்டு தயாரித்து மரணத்தை துரிதப்படுத்த நேரிடலாம், ஆனால் அதனை நிறுத்தி வைக்க முடியாது. இந்த உலகம் மிருத்யு லோகம், மரண உலகம் என்று அறியப்படுகிறது. இங்கு வரும் அனைத்து உயிர்களும் மரணத்தினைச் சுவைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எனவே, “மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள்” என்று சொல்பவர்களும் ஒருநாள் கொஞ்சம்கொஞ்சமாக சிகிச்சை பலனின்றி இறந்தே தீர வேண்டும். கர்ம வினை அனுமதிக்கும் பட்சத்தில், மருத்துவர்கள் ஒருவனது வாழ்நாளை சில காலம் நீட்டிப்பதுபோலத் தோன்றலாம்; நீட்டிப்பு ஒருபோதும் நிரந்தரமல்ல என்பதை உணர வேண்டும். கர்ம வினை அனுமதிக்காவிடில், சிகிச்சை பலனின்றி சென்றாக வேண்டும்.
யாருக்கும் மரணமடைய விருப்பமில்லை, மருத்துவர்களுக்கும் தோல்வியடைய விருப்பம் இல்லை. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் வைத்தியம் பார்த்தும் இறந்துபோன பெரும் செல்வந்தர்கள் இந்த உலகத்தில் ஏராளம். “சிகிச்சை பலனின்றி இறந்தார்” என்று கூறி விடுவர்.
மரணத்திற்கு மருந்து உண்டா?
“சிகிச்சை பலனின்றி” என்ற வார்த்தையை கூர்ந்து கவனித்தால், இதில் அஹங்காரம் இருப்பதைக் காணலாம். நாம் கொடுக்கும் மருந்து அந்த நோயாளிக்கு பலன் தரவில்லை என்று கூறி விடுகிறோமே தவிர, மரணத்திற்கு மருந்தே கிடையாது, மரணத்திற்கு சிகிச்சையே இல்லை என்று கூறுவதில்லை.
மரணத்தைத் தடுக்கும் மருந்துகள் எதுவும் எந்த மருத்துவர்களிடமும் இல்லை. ஆயினும், மரணத்திற்கு மருந்தில்லை என்னும் எதார்த்த உண்மையை ஏற்க பலரும் மறுக்கின்றனர். அவர்களின் அறியாமையே அதற்கான காரணம்.
தீர்வு
எல்லா துயரத்திற்கும் நிரந்தர தீர்வு கடவுளால் வழங்கப்படுகின்றது. விஞ்ஞானிகளால் நிச்சயம் மரணத்திற்குத் தீர்வினைக் கொடுக்க இயலாது. அவர்களுக்கும் சேர்த்தே தீர்வு பகவத் கீதையிலிருந்து பெறுகிறோம்.
ஆத்மா என்றும் நிரந்தரமானவன். அவனுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. அவன் பகவானின் அம்சம், எவ்வாறோ இந்த ஜடவுலகில் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளதால், முதுமை, நோய் என்பனவற்றால் துன்பப்படுகிறான். இதுதான் அடிப்படை பிரச்சனை. இதிலிருந்து வெளியேற வேண்டுமெனில், நாம் பகவான் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும். நமது உணர்வு கிருஷ்ணரின் உணர்வாய் மாறிட வேண்டும்.
இங்குக் காணும் ஒவ்வொரு பொருட்களின் மீதும் பற்றுதலை வளர்த்துக்கொள்வதால், அதை அனுபவிக்கும் ஆசை அதிகமாகிறது. எனவே, நமக்கு மீண்டும்மீண்டும் பிறவி கிடைக்கின்றது (பிருஹத் ஆரண்யக உபநிஷத் 4.4.6). அதனை பற்றின்மை என்னும் ஆயுதத்தால் வெட்டி, நாம் பிரம்மன் (பகவானின் அம்சம்) என்பதை உணரும்போது, நமது பிறவிப்பிணி நீங்கிவிடும் (பிருஹத் ஆரண்யக உபநிஷத் 4.4.7). பிறப்பு நின்றுவிடும்போது மற்ற எல்லா பிரச்சனைகளும் நின்றுவிடும், வியாதிகளும் நம்மைத் தொடரப் போவதில்லை. இந்த நிலையினையே நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.
பகவானின் தாமரைத் திருவடிக்கு சேவை செய்து நமது உணர்வினை அவரை நோக்கித் திருப்பும்போது, பகவான் நம்மை மீண்டும் ஏற்றுக்கொள்கிறார். இல்லாவிடில், ஒவ்வொரு பிறவியிலும் சிகிச்சை பலனின்றி இறக்கவே செய்வோம்.
நமது உணர்வினை கிருஷ்ண உணர்வாய் மாற்றிட தற்போதைய கலி யுகத்தில் பகவானுடைய திருநாமத்தைச் சொல்வதே வழியாகும். எனவே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தினை நித்தமும் கூறி பகவானின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம், விடுதலை பெறலாம்.
ஒவ்வொரு முறையும் மருத்துவத்தை நம்பி சிகிச்சை பலனின்றி இறக்கப் போகிறோமா அல்லது நோயினை நிரந்தரமாகக் குணப்படுத்தும் கிருஷ்ண உணர்வை ஏற்று விடுதலை பெறப் போகிறோமா என்பது நமது கையில்தான் உள்ளது.