— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
காலம் வெகு விரைவாக மாறி வருகின்றது, நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவற்றை கிரகித்து அதற்கேற்ப மாறுவதற்கு நாம் தயாராக இல்லையெனில், சமூகம் நம்மை பழமைவாதிகளாகப் பார்க்கும்; ஊரோடு ஒத்து வாழ்வதல்லவா வாழ்க்கை? அதன்படி, ஆன்லைன் ஆன்மீகம் என்பது இன்றைய நாகரிக வாழ்வின் அவசியத் தேவையாகும்.
ஆன்லைன் வாழ்க்கை
கடந்த சில வருடங்களாகவே உலகம் டிஜிட்டல்மயமாகி வந்தது. இந்தியாவிலும் அதனைத் துரிதப்படுத்துவதற்காக “டிஜிட்டல் இந்தியா” போன்ற திட்டங்களைத் தீட்டி வந்தனர். அவை ஒரு பக்கம் செயல்பட்டு வந்தாலும், திடீரென்று உலகையே உலுக்கிய கொரோனாவினால், இந்த உலகம் மேலும் வேகமாக டிஜிட்டல்மயமாகி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும், மக்கள் தற்போது அதிகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கூகுள்பே, ஃபோன்பே முதலிய UPI செயலிகளைக் கொண்டு மக்கள் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். தினசரி செய்திகளை மொபைலில் படிக்காத இளைஞர்களே இல்லை என்று கூறலாம். சிறு குழந்தைகள்கூட இணையதள வழிக் கல்வியின் மூலமாக பாடம் கற்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வேலையாட்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி கூறியுள்ளனர். பல்வேறு கருத்தரங்குகள் ஜூம் முதலிய செயலிகளைக் கொண்டு அரங்கேறுகின்றன. விருதுகள்கூட ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகின்றன. பல தரப்பட்ட பொருட்களை வாங்க விரும்புவோர் அமேசான், ஃபிளிப்கார்ட் முதலிய செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். உணவுப் பதார்த்தங்களைக்
கூட ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வீட்டிற்கு வரவழைத்து உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், எங்கும் ஆன்லைன், எதற்கும் ஆன்லைன், எப்போதும் ஆன்லைன் என்று வாழ்க்கை மாறியுள்ளது.
ஆன்மீகத்தில் ஆன்லைன்
எல்லாவற்றிற்கும் ஆன்லைன் என்று வந்த பின்னர், ஆன்மீகத்தில் ஆன்லைன் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆன்லைன் தரிசனம், ஆன்லைன் திருவிழாக்கள், ஆன்லைன் ஆன்மீக வகுப்புகள், ஆன்லைன் கீர்த்தனம் என ஆன்மீக அன்பர்களும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப பல்வேறு ஆன்லைன் வாய்ப்புகளை ஏற்படுத்தி, தங்களது பக்தியைப் பாதுகாத்து வளர்க்கின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி உட்பட பல்வேறு முக்கிய திருவிழாக்களை பக்தர்கள் ஆன்லைன் மூலமாகக் கண்டுகளிக்கின்றனர். “ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற விளம்பரத்துடன் நிகழ்ந்த தேர் திருவிழாக்களும் ஆன்லைனிற்கு மாறியுள்ளன. வருடந்தோறும் தவறாமல் ஜகந்நாதர் ரத யாத்திரைக்குச் செல்பவர்கள் அதனை ஆன்லைனில் கண்டு திருப்தியடைகின்றனர். உலகின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு மற்றொரு பகுதியிலுள்ள பக்தரின் அருமையான சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு கிட்டுகிறது. கோயில்கள் மூடப்பட்டு விட்டனவே என்று எண்ணி வருந்திய நிலையில், பல்வேறு இதர வழிகளில் உலகையே வலம் வருவதற்கு வழிகள் பிறந்துள்ளன. 18 நாள் கீதை வகுப்புகள், பக்தி சாஸ்திரி வகுப்புகள் என பல்வேறு வழிகளில் பக்தர்கள் தங்களது பிரச்சாரத்தை ஆன்லைன் மூலமாகத் தொடருகின்றனர்.
ஆன்லைன் நிறுவனங்களுக்கு புண்ணியம்
கொரோனா சூழ்நிலையின் காரணமாக விரிவடைந்துள்ள ஆன்லைன் ஆன்மீகம் பக்தர்களுக்கு நிச்சயம் ஒரு வரமே. நவீன நாகரிக வசதிகள் மக்களை மாயையில் வயப்படுத்துகின்றன என்று ஸ்ரீல பிரபுபாதர் பல முறை கண்டித்துள்ளார்; அதே சமயத்தில், பக்தர்கள் அவற்றை கிருஷ்ண பக்தி பயிற்சியிலும் பிரச்சாரத்திலும் பயன்படுத்தினால், அவை தாம் படைக்கப்பட்டதற்கான பயனைப் பெறுவதாகவும் அவர் கூறுவதுண்டு.
புலனின்பத்திற்கான நோக்கமின்றி, ஜடவுலகப் படைப்புகளை அவற்றின் உண்மையான படைப்பாளியான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்தினால், அதுவே உண்மையான துறவு என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி கூறுகிறார். அதை விடுத்து, “துறவு” என்ற போர்வையில், பௌதிகப் பொருட்களைத் துறத்தல், பொய்யான துறவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இன்றைய டிஜிட்டல் உலகில், பக்தர்களாகிய நாமும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற பயன்பாட்டின் மூலமாக, ஜூம், யூ டியுப், ஃபேஸ்புக் முதலிய நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே பக்தி சேவை செய்து புண்ணியத்தைச் சேகரிக்கின்றனர்.
ஆன்லைன் ஆன்மீகத்தின் சிறப்புகள்
கொரோனா பெருந்தொற்று போன்ற சூழலில், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்போது, அவர்கள் செய்வதற்கென்று ஏதேனும் செயல்கள் இருந்தாக வேண்டும். வேலையே இல்லாமல் வெட்டியாக அமர்ந்திருந்தால், நிச்சயம் மனம் புலனின்பத்தை நோக்கி நம்மை திசைதிருப்பி விடும். மனம் அதன் சிந்தனையினை ஒருபோதும் நிறுத்தாது, அதனை நாம் சரியான விஷயத்தை சிந்திப்பதற்காகப் பயன்படுத்தாவிடில், நிச்சயம் அது தவறானவற்றை சிந்திக்கத் தொடங்கி விடும். அதன் பின்னர், அதனை மீண்டும் கடிவாளம் போட்டு இழுத்து வருவதற்கு நாம் மிகவும் சிரமப்பட வேண்டும். ஆகவே, ஆன்லைன் ஆன்மீகம் என்பது ஆன்மீக அன்பர்களுக்கு அற்புதமான வழியில் உதவுகிறது என்று சொல்லலாம்.
நாம் வாழும் ஊரில் பகவத் கீதை வகுப்புகள் நடத்தக்கூடிய இஸ்கான் கோயில்கள் இல்லாமல் இருக்கலாம், அல்லது தொலைவில் இருக்கலாம், அல்லது வீட்டு/அலுவலக வேலைகளின் காரணமாக நேரில் சென்று வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். இதுபோன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்களால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பக்தர்களுக்கு ஆன்லைன் ஆன்மீக வகுப்புகள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல்வேறு முன்னேறிய பக்தர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கும் இது வழிவகை செய்கிறது. முன்பெல்லாம் அத்தகு பக்தர்கள் எப்போது நம்முடைய ஊருக்கு வருவார்கள் என்று காத்திருப்போம்; இப்போதோ அவர்களை மிக எளிதில் நம்முடைய வீட்டிற்கே ஆன்லைன் மூலமாக அழைத்து விடுகிறோம்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நடுத்தர மக்களைப் பொறுத்தவரையில், ஆன்லைன் பயன்பாடுகள் பல்வேறு விஷயங்களில் செலவுகளைக் குறைத்து விட்டன என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆன்லைன் ஆன்மீகத்தின் குறைபாடுகள்
அதே சமயத்தில், ஆன்லைன் ஆன்மீகத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது, மறுத்து விடக் கூடாது. அவற்றையும் அறிவோம்.
கீர்த்தனம், நர்த்தனம்: கலி யுகத்திற்கான யுக தர்மம், ஹரி நாம ஸங்கீர்த்தனமே. ஸங்கீர்த்தனம் என்றால், பக்தர்கள் ஒன்றுகூடி பகவானின் திருநாமங்களை உரக்கப் பாடி ஆடுவதாகும். ஆன்லைனில் நிச்சயம் அதற்கான வாய்ப்பு இல்லை. பூஜைகளை தரிசிக்கலாம், ஞானத்தைப் பெறலாம்; ஆனால் யுக தர்மத்தை நிறைவேற்ற முடியுமா? யுக தர்மத்தைக் கடைப்பிடிக்காமல், மற்றவற்றைப் பின்பற்றினால் முழுப் பயனை அடைய முடியுமா? நிச்சயமாக இல்லை.
வீட்டிலிருந்தபடி ஒருவர் ஹரி நாமத்தை ஜபம் செய்யலாம், மறுக்கவில்லை. ஆயினும், ஜபத்தைக் காட்டிலும் கீர்த்தனம் சக்தி வாய்ந்த வழிமுறை என்று ஆச்சாரியர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர், பக்தர்களும் தங்களது அனுபவத்தில் உணரலாம்; ஜபிக்கும்போது மனம் எங்கே செல்கிறது, கீர்த்தனத்தில் மனம் எங்கே செல்கிறது என்று யோசித்துப் பார்க்கலாம். ஒரு சிலர் வேறு ஊர்களில் நிகழும் கீர்த்தனத்தை ஆன்லைனில் பார்க்கலாம். ஆனால், கீர்த்தனம் பார்ப்பதற்கானதன்று; பாடுவதற்கும் ஆடுவதற்கும் உரியது. சிலர் ஆன்லைனில் கேட்டு பின்பாட்டு பாடலாம், ஆனால் நிச்சயம் அவ்வாறு பாடுதல் நேரடியாக கீர்த்தனத்தில் இணைவதற்கு கொஞ்சம்கூட இணையாகாது.
அப்படியே பாடினால்கூட, யாரேனும் ஆன்லைன் கீர்த்தனத்தில் கலந்து கொண்டு, தங்களது வீட்டில் ஆடுகிறார்களா? நிச்சயமாக இல்லை. செயற்கையாக ஆடலாம், ஆனால் அது நடைமுறைக்கு நிச்சயம் ஒத்துவராது. பல்வேறு பக்தர்களுடன் இணைந்து பாடி ஆடுவதற்கு ஈடு இணை இல்லை. கீர்த்தனமும் நர்த்தனமும் கலி யுக தர்மம், அவற்றை ஆன்லைன் மூலமாக நம்மால் சரிவர பெற முடியாது.
பிரசாதம்: பல்வேறு பக்தர்களைக்கூட பக்தர்களாக்கி பக்குவப்படுத்துவதில், கிருஷ்ண பிரசாதம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பகவானுடைய நாமத்தையும் பகவத் தத்துவத்தையும் அங்கீகரிக்க இயலாத
வர்கள்கூட பகவத் பிரசாதத்தை அங்கீகரித்து, அதன் மூலமாகத் தூய்மை அடைகின்றனர். அந்த வாய்ப்பு ஆன்லைனில் கிட்டுமோ? ஒரு சில கோயில்களில் ஆன்லைன் மூலமாக பிரசாதம் கிடைக்கிறது என்றும், வீட்டிலேயே பிரசாதம் செய்கிறோம் என்றும் சிலர் கூறலாம். ஆயினும், பக்தர்களுடன் கோயிலில் அமர்ந்து பிரசாதம் ஏற்பதற்கு, அது நிச்சயம் இணையாகாது என்பதை அனைவரும் அறிவோம்.
ஆடல், பாடல், பிரசாதம் ஏற்றல் ஆகிய மூன்றையும் ஸ்ரீல பிரபுபாதர் தம்முடைய பல்வேறு உரைகளில் வலியுறுத்தியுள்ளார். மக்கள் ஒன்றுகூடி கிருஷ்ண நாமத்தை பாடி, ஆடி, கிருஷ்ண பிரசாதம் ஏற்பதற்கான வசதியினை வழங்குவதற்காகவே இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை அமைத்துள்ளோம் என்பதை அவர் தமது சொற்பொழிவுகள் பலவற்றின் இறுதியில் தெளிவாகக் கூறியுள்ளார். அதாவது, இம்மூன்றும் நமது பக்திப் பாதையில் முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமானவை. நிச்சயமாக, நம்மால் இவற்றை ஆன்லைனில் பெற முடியாது.
கிருஷ்ணருக்கான தொண்டு: உண்மையான கிருஷ்ண பக்தி என்பது, பகவானது விக்ரஹங்களை தரிசிப்பதிலும் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் முடிந்து விடுவதில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உண்மையான முறையில் தொண்டாற்ற வேண்டும். ஆகவே, ஸ்ரீல பிரபுபாதர் “பக்தி” என்று வெறுமனே கூறாமல், பெரும்பாலும் “பக்தித் தொண்டு” என்றே குறிப்பிடுவார். பகவத் கைங்கரியத்தில் (தொண்டில்) ஈடுபடாமல், பகவத் பக்தியை வளர்ப்பது அசாத்தியம்.
ஆன்லைன் வகுப்புகளில் அறிவை வளர்க்கலாம், ஆனால் அந்த அறிவு பக்குவமடைய வேண்டுமெனில், அந்த அறிவு அனுபவ அறிவாக வளர்ச்சி பெற வேண்டுமெனில், கைங்கரியத்தில் ஈடுபடுதல் அவசியம். இஸ்கான் கோயில்கள் அத்தகு கைங்கரியத்திற்கான முக்கிய இடமாகத் திகழ்கின்றன. ஆன்லைனில் கோயிலை சுத்தம் செய்ய முடியுமா? கிருஷ்ணருக்காக காய்கறிகளை நறுக்க முடியுமா? மற்றவர்களுக்கு பிரசாதம் பரிமாற முடியுமா? கிருஷ்ணருக்கு மாலை தொடுக்க முடியுமா? கைங்கரியத்தை கைகளால்தான் செய்ய முடியுமே தவிர, ஆன்லைனில் செய்ய முடியாது.
ஒரு குருவை பணிவுடன் அணுகி, அவருக்குத் தொண்டு செய்து, கேள்விகள் எழுப்பி ஆன்மீக அறிவைப் பெற வேண்டும் என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (4.34) கூறுகிறார். ஆன்லைனில் அறிவைப் பெற முயல்கிறோம், ஆனால் ஆன்லைனில் குருவிற்கு எவ்வாறு தொண்டாற்ற முடியும்? தொண்டு செய்யாமல் பெறப்படும் அறிவு நிச்சயம் பக்குவமான நிலைக்கு நம்மைக் கொண்டு வராது. ஆன்லைன் கல்வி அரைகுறை கல்வியாகவே இருக்கும்.
பக்த சங்கம்: பக்தியின் மற்றொரு முக்கியமான அங்கம், பக்தர்களின் சங்கம். ஆன்லைன் மூலமாக ஓரளவு சங்கத்தைப் பெறலாம்; ஆயினும், உண்மையான சங்கம் என்பது, வெகுமதிகளைப் பரிமாறுவதிலும் ஆன்மீக இரகசியங்களைப் பரிமாறுவதிலும் கிருஷ்ண பிரசாதத்தைப் பரிமாறுவதிலும் அடையப்படுகிறது. பக்தர்களுக்கு இடையிலான நட்புறவு பக்தியில் நம்முடைய முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இதனை ஆன்லைன் மூலமாக வளர்ப்பது மிகமிக கடினம்.
ஒருமுகமான மனம்: ஆன்லைன் நிகழ்ச்சிகள் நிச்சயம் மனதை ஒருமுகப்படுத்துவதில்லை. நேரில் உபன்யாசம் கேட்பதற்கும் ஆன்லைனில் கேட்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. உபன்யாசத்திற்கு நடுவில் தொ(ல்)லைபேசி அழைப்புகள், Mute போட்டுவிட்டு மற்றவர்களுடன் அரட்டை, பல்வேறு வீட்டு/அலுவலக வேலைகள் என நம்மை திசைதிருப்பும் விஷயங்கள் ஏராளம்.
மாறுபட்ட உணர்ச்சிகள்: ஆன்மீகச் செயல்களை நேரில் சென்று செய்வதற்கும் ஆன்லைனில் செய்வதற்கும் இடையே நம்முடைய பக்தி உணர்ச்சியில் பெருத்த மாறுபாடு உண்டு. பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து விருந்தாவன பூமிக்குச் செல்வதும் ஆன்லைனில் விருந்தாவனம் செல்வதும் எவ்வாறு சமமாக முடியும்? அவ்வாறு பயணித்து பகவானின் முன்பாக விழுந்து வணங்குவதும் வீட்டில் நம்முடைய அலைபேசியில் பகவானது படத்தை வைத்து அதன் முன்பாக விழுந்து வணங்குவதும் சமமாகுமா? மிகவும் முன்னேறிய பக்தர்களுக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகலாம், பெரும்பாலான அன்பர்களுக்கு நிச்சயம் ஆன்லைனில் பெறப்படும் பக்தி உணர்ச்சிகளும் நேரில் பெறப்படும் உணர்ச்சிகளும் மாறுபட்டவை.
ஆச்சாரக் கல்வி: பக்தித் தொண்டில் “முறையான நடத்தை” (ஆச்சாரம்) என்பதும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ஆச்சாரக் கல்வியை நிச்சயமாக ஆன்லைனில் பெற முடியாது. உண்மையில், ஆச்சாரக் கல்வி வீட்டிலேயே ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய உலகில், நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்குக்கூட ஆச்சாரக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. உண்மையைச் சொன்னால், ஆச்சாரத்திற்கு எதிரான பழக்கங்களையே மக்கள் பெரும்பாலும் பெற்றுள்ளனர். இஸ்கான் கோயில்களுக்கு வந்து பக்தர்களுடன் பழகினால்தவிர, ஆச்சாரக் கல்விக்கு வாய்ப்பே இல்லை.
ஆன்லைன்: யாருக்கு இலாபம்?
இதுபோன்ற குறைபாடுகள் ஆன்லைன் ஆன்மீகத்தில் உள்ளன. இருப்பினும், முன்னரே கூறப்பட்டபடி, நேரில் சென்று ஆன்மீகப் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பில்லாத தருணங்களில், நிச்சயம் இந்த ஆன்லைன் ஆன்மீகக் கல்வி நமக்கு அவசியமாகிறது. “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” என்ற தமிழ் பழமொழியையும், “Something is better than nothing,” “Blind uncle is better than no uncle” ஆகிய ஆங்கில பழமொழிகளையும் நினைவில் கொண்டு, கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும்.
மேலும், இன்றைய உலகில் நம்முடைய ஆன்மீக குருவிடமிருந்து எப்போதும் நேரில் சென்று செவியுறுதல் என்பது கடினமே. பெரும்பாலான குருமார்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டுள்ளனர் என்பதால், ஆன்லைன் வழியினை அவர்களிடமிருந்து செவியுறுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆன்லைன்: யாருக்கு நஷ்டம்?
நேரில் சென்று பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளபோதிலும், “அதுதான் ஆன்லைனில் கிடைக்கிறதே” என்ற எண்ணத்தில், பலரும் தற்போது சற்று சோம்பேறிகளாகி இருப்பதைக் காண்கிறோம். ஊரடங்கு பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும், கோயில்கள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், ஞாயிறு விருந்து உள்ளிட்ட நிகழ்வுகள் வழக்கமாகிவிட்ட நிலையிலும், இந்த ஒன்றரை வருட பழக்க தோஷத்தினால், “ஆன்லைனே போதும்” என்று நினைக்கத் தொடங்கி விட்டால், நிச்சயம் நமக்கு அது நஷ்டமே.
ஆன்லைனில் நிறைய கிடைக்கிறது, எப்போது வேண்டுமானாலும் கிடைக்கிறது என்பன போன்ற எண்ணங்களினால், முறையான சத்சங்கத்திற்கான பாரம்பரிய வழக்கத்தினை நாம் புறக்கணிக்கத் தொடங்கி விட்டால், அது நஷ்டத்தில் முடியும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் அனுபவத்தை நாம் நிச்சயமாக குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. முன்னரே கூறியபடி, பல தரப்பட்ட மக்களுக்கு இது பேருதவியாக அமைந்துள்ளது. இக்கட்டுரை எவ்விதத்திலும் ஆன்லைன் ஆன்மீக வகுப்புகளுக்கு எதிரானதல்ல, நிச்சயம் நாங்கள் அதனை ஊக்குவிக்கின்றோம். பல்வேறு இஸ்கான் கோயில்களில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும்படி நாங்கள் தொடர்ந்து வாசகர்களை ஊக்குவிக்கின்றோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மாறாக, “ஆன்லைனே போதும்” என்று இருந்து விடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையே இக்கட்டுரை.
ஆன்லைனில் கிடைக்கும் இலாபத்தை ஏற்றுக் கொண்டு, நஷ்டத்தைப் புறந்தள்ளினால், அது நன்மையில் முடியும். நம்முடைய ஊரிலுள்ள இஸ்கான் கோயில் முழுமையாகத் திறந்து விட்டால், அங்குச் சென்று ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்ளுதல் நன்று. அதை விடுத்து, ஆன்லைன் என்று அமர்ந்திருந்தால், அத்தகு சோம்பேறித்தனம் நம்மை ஆன்மீக பாதையிலிருந்து விலக்கி விடுவதற்கான அபாயம் உண்டு.
ஸ்ரீல பிரபுபாதர் நமக்குக் கொடுத்திருக்கின்ற இந்த அற்புதமான இஸ்கான் இயக்கத்தில், நமக்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. ஆடல், பாடல், பிரசாதம், கைங்கரியம், பக்த சங்கம், ஆச்சாரக் கல்வி முதலியவற்றை நேரில் சென்று அனுபவியுங்கள். இயலாதவர்கள், கூடிய வரை ஆன்லைனில் சங்கம் பெற்று அனுபவியுங்கள். ஏதேனும் வழியில் நாம் கிருஷ்ணரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நம்முடைய வாழ்க்கை பக்குவமடையும்.