வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
மனிதர்கள் நிலவிற்குச் செல்ல முயன்று கொண்டுள்ள தற்போதைய கால கட்டத்தில், கிருஷ்ண உணர்வானது ஏதோ பழங்கால வழக்கத்தினைப் பின்பற்றுகின்றது என்று மக்கள் நினைத்து விடக் கூடாது. உலகம் நிலவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது, நாம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்துக் கொண்டுள்ளோம். ஆயினும், நாம் நவீன விஞ்ஞான முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளோம் என்று மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நாம் ஏற்கனவே எல்லா விஞ்ஞான முன்னேற்றத்தையும் கடந்து வந்துள்ளோம். உயர்ந்த லோகங்களுக்குச் செல்வதற்கான மனிதனின் முயற்சி புதிதல்ல என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.
“நிலவில் மனிதனுடைய முதல் காலடி” என்று செய்தித்தாள்கள் தலைப்புச் செய்தியை வெளியிடுகின்றன; ஆயினும், இலட்சக்கணக்கான மனிதர்கள் நிலவிற்குச் சென்று திரும்பி வந்துள்ளனர் என்பதை இந்த நிருபர்கள் அறிவதில்லை. மனிதன் நிலவிற்குச் செல்வது இது முதல்முறை அல்ல. இஃது ஒரு பழங்கால பழக்கமாகும். இது பகவத் கீதையில் (8.16) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, ஆப்ரஹ்ம-புவனால் லோகா: புனர் ஆவர்தினோ ’ர்ஜுன, “அன்புள்ள அர்ஜுனனே, பிரம்ம லோகம் என்று அறியப்படும் மிகவுயர்ந்த லோகத்திற்குச் சென்றால்கூட, இங்கே திரும்பி வந்தாக வேண்டும்.” எனவே, கிரகங்களுக்கு இடையிலான பயணம் என்பது புதிதல்ல. இதனை கிருஷ்ண உணர்வு பக்தர்கள் ஏற்கனவே அறிந்துள்ளனர்.
நிலவிற்குச் செல்வதன் பயன் என்ன?
தற்போது ஒருவர் நிலவிற்குச் சென்றுள்ளார், ஆனால் அதனால் மனித சமுதாயத்திற்கு என்ன இலாபம்? பெருமளவிலான பணத்தையும் சக்தியையும் செலவழித்து பத்து வருட கடின உழைப்பிற்குப் பின்னர், ஒருவன் நிலவிற்குச் சென்று அதைத் தொட்டு விடுவதால், யாருக்கு என்ன இலாபம்? அவனால் அங்கேயே தொடர்ந்து வாழ முடியுமா, தன்னுடைய நண்பர்களை அங்கே அழைத்துக்கொள்ள முடியுமா? அங்கே சென்று அங்கேயே வாழ முடிந்தால்கூட அதனால் என்ன இலாபம்? நாம் இந்த பௌதிக உலகில் இருக்கும் வரை, இந்த கிரகமாக இருந்தாலும், வேற்று கிரகமாக இருந்தாலும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் அதே துன்பங்கள் நம்மைப் பின்தொடர்ந்து வரும், நாம் அவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இயலாது.
நிலவில் வாழ்வது நமக்கு சாத்தியமாகும் என்று எடுத்துக் கொண்டால்கூட, நாம் அங்கு ஆக்சிஜன் குடுவைகளுடன் சென்று வாழ நேரிட்டால்கூட, எவ்வளவு காலம் நம்மால் அங்கே தங்க முடியும்? அது மட்டுமின்றி, அங்கே தங்குவதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்தால்கூட, அவற்றினால் நமக்கு என்ன இலாபம்? அங்கே ஒருவேளை நமக்கு கொஞ்சம் அதிகமான ஆயுள் கிடைக்கலாம், ஆயினும் நாம் நிரந்தரமாக வாழ முடியாது. அஃது அசாத்தியமானதாகும். நீண்ட நெடிய வாழ்வினால் நாம் அடையக்கூடிய இலாபம் என்ன? தரவ: கிம் ந ஜீவந்தி, மரங்கள்கூட பற்பல வருடங்கள் வாழ்கின்றனவே? சான்பிரான்சிஸ்கோவிற்கு அருகில் நான் ஒரு காட்டினைப் பார்த்தேன். அங்குள்ள ஒரு மரம் ஏழாயிரம் வருடம் பழமையானதாகும். ஆனால் அதனால் என்ன நன்மை? ஒருவன் ஒரே இடத்தில் ஏழாயிரம் வருடங்கள் நின்று கொண்டிருப்பதில் பெருமை அடைவானேயானால், அதில் பெருமைக்குரியது என்று ஏதும் கிடையாது.
நேரத்தை வீணடிக்க வேண்டாம்
ஒருவன் எவ்வாறு நிலவிற்குச் செல்கிறான், எவ்வாறு திரும்பி வருகின்றான் என்பதைப் பற்றிய விளக்கங்கள் மிகப்பெரியதாகும். இவை அனைத்தும் வேத இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளன. இஃது ஒன்றும் புதிய வழிமுறை அல்ல. ஆயினும், நமது கிருஷ்ண உணர்வு சமுதாயத்தின் நோக்கம் வேறுபட்டதாகும். நாம் நம்முடைய நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. கிருஷ்ணர் கூறுகிறார், “இந்த கிரகத்திற்கோ வேற்று கிரகத்திற்கோ செல்வதற்கான முயற்சியில் உன்னுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீ இதனால் என்ன இலாபத்தை அடையப் போகிறாய்? நீ எங்குச் சென்றாலும் உன்னுடைய பௌதிகத் துன்பங்கள் உன்னைப் பின்தொடரும்.” எனவே, சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி லீலை 3.97) அதன் ஆசிரியர் மிகவும் அருமையாகக் கூறியுள்ளார்.
கேஹ பாபே, கேஹ புண்யே கரே விஷய-போக
பக்தி-கந்த நாஹி, ஜாதே ஜாய பவ-ரோக
“இந்த பௌதிக உலகில் சிலர் அனுபவிக்கின்றனர், சிலர் அனுபவிப்பதில்லை; ஆனால் உண்மை என்னவெனில், சிலர் அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் வேறு சிலர் துன்பப்படுவதாக நினைத்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் அனைவரும் துன்பப்படுகின்றனர்.”
இந்த பௌதிக உலகில் யாரேனும் நோயினால் துன்பப்படாமல் இருக்கின்றார்களா? வயோதிகத்தினால் துன்பப்படாமல் யாரேனும் இருக்கின்றார்களா? மரணமடையாதவர் யாரேனும் இருக்கின்றார்களா? வயோதிகத்தை அடைவதற்கோ நோயினால் துன்பப்படுவதற்கோ யாரும் விரும்புவதில்லை, ஆனால் அனைவரும் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். அவ்வாறு இருக்கையில், இன்பம் என்பது எங்கே இருக்கிறது? பௌதிக உலகிற்குள் இன்பம் என்பதே கிடையாது என்பதால், இந்த இன்பங்கள் அனைத்தும் அபத்தமானவையாகும். இவை அனைத்தும் நம்முடைய கற்பனை மட்டுமே. “இஃது இன்பம், இது துன்பம்” என்று நினைக்கக் கூடாது, அனைத்தும் துன்பமே! எனவே, சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளது, “உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காப்பு ஆகிய தன்மைகள் எப்போதும் உண்டு, ஆனால் அவை வெவ்வேறு தரத்தில் செயல்படுத்தப்படுகின்றன.”
உண்மையான பிரச்சனை என்ன?
உதாரணமாக, முந்தைய பிறவியில் செய்த புண்ணியச் செயல்களின் பலனாக சிலர் அமெரிக்காவில் பிறவியெடுத்துள்ளனர், இந்தியாவில் உள்ள மக்களோ ஏழ்மையினால் பாதிக்கப்பட்டு துன்பப்படுகின்றனர்; அமெரிக்கர்கள் வெண்ணை தடவிய ரொட்டியினை நன்றாக உண்கின்றனர், இந்தியர்கள் வெண்ணையின்றி உண்கின்றனர்; இருப்பினும், அவர்கள் இருவருமே உணவு உண்கின்றனர். இந்தியா ஏழ்மையினால் பாதிக்கப்பட்டுள்ளது என்னும் பட்சத்திலும், உணவின்றி மக்கள் யாரும் மடிவதில்லை. “உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காப்பு ஆகிய உடலின் நான்கு முக்கிய தேவைகளை எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் திருப்தி செய்துகொள்ள முடியும்; ஒருவன் பாவகரமான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் புண்ணியமானச் சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இருப்பினும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் நான்கு துன்பங்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதே பிரச்சனையாகும்.
இதுவே உண்மையான பிரச்சனை. “நான் என்ன உண்பேன்?” என்பது பிரச்சனை அன்று. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இந்த பிரச்சனை இல்லை. காலையில் பொழுது புலர்ந்தவுடன் அவை உடனடியாக “கீ கீ கீ கீ” என்று சப்தமிடுகின்றன. தங்களுக்கான உணவு கிட்டும் என்பதை அவை அறிந்துள்ளன. அனைவரின் தேவையும் இறைவனின் ஏற்பாட்டினால் நிறைவேற்றப்படுவதால், யாரும் மடிவதில்லை, அதிக மக்கள் தொகை என்று ஏதும் கிடையாது. மக்கள் அனுபவிக்கக்கூடியதன் தரத்தில் வேறுபாடு உள்ளது என்றபோதிலும், உயர்தர பௌதிக இன்பத்தைப் பெறுவது வாழ்வின் இறுதி நோக்கம் அன்று. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதே உண்மையான பிரச்சனையாகும். இந்த பிரபஞ்சத்தினுள் பயணம் செய்வதில் நேரத்தை வீணடிப்பதன் மூலமாக, இப்பிரச்சனையினைத் தீர்த்து விட முடியாது. ஒருவன் மிகவுயர்ந்த கிரகத்திற்குச் சென்றால்கூட, இந்த பிரச்சனையினைத் தீர்க்க முடியாது; ஏனெனில், மரணம் எல்லா இடத்திலும் உள்ளது.
கிருஷ்ண லோகத்திற்குச் செல்வோம்
வேத வாக்கின்படி, நிலவில் ஒருவனது ஆயுள் பத்தாயிரம் வருடங்களாகும், அங்குள்ள ஒரு நாள் என்பது இங்குள்ள ஆறு மாதத்திற்கு சமமானதாகும். எனவே, பத்தாயிரத்தை 180 வருடங்களுடன் பெருக்கும்போது கிடைப்பதே நிலவில் ஒருவனின் ஆயுளாகும். எனினும், பூமியிலுள்ள மனிதர்கள் நிலவிற்குச் சென்று அங்கே நீண்ட காலம் வாழ்வது என்பது அசாத்தியமானதாகும். அது சாத்தியமாக இருக்குமெனில், ஒட்டுமொத்த வேத இலக்கியமும் தவறாகி விடும். அங்குச் செல்வதற்கு நாம் முயற்சி மேற்கொள்ளலாம், ஆனால் அங்கே வாழ்வது சாத்தியமானதன்று. இந்த அறிவு வேதங்களில் காணப்படுகிறது. எனவே, நாங்கள் இந்த கிரகத்திற்கோ அந்த கிரகத்திற்கோ செல்வதில் ஆர்வம் கொண்டிருப்பதில்லை. நாங்கள் கிருஷ்ணர் வசிக்கக்கூடிய கிரகத்திற்கு நேரடியாகச் செல்வதில் ஆர்வம் கொண்டுள்ளோம். கிருஷ்ணர் பகவத் கீதையில் (9.25) கூறுகிறார்:
யாந்தி தேவ-வ்ரதா தேவான்
பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:
பூதானி யாந்தி பூதேஜ்யா
யாந்தி மத்-யாஜினோ ’பி மாம்
“ஒருவன் நிலவிற்குச் செல்லலாம், சூரியனுக்குச் செல்லலாம், கோடிக்கணக்கான இதர கிரகங்களுக்குச் செல்லலாம், அல்லது பௌதிகத்தில் அதிக பற்றுதல் கொண்டுள்ளவன் இங்கேயேகூட வசிக்கலாம்—ஆனால் என்னுடைய பக்தர்களாக இருப்பவர்களோ என்னிடம் வருகின்றனர்.” இதுவே எங்களுடைய இலக்கு. கிருஷ்ண உணர்வில் தீக்ஷை பெறும்போது, சீடன் இறுதியில், உன்னத கிரகமாகிய கிருஷ்ண லோகத்திற்குச் செல்ல முடியும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. நாங்கள் ஏதும் செய்யாமல் அமர்ந்து கொண்டிருப்பதில்லை, நாங்களும் மற்ற கிரகங்களுக்குச் செல்ல முயன்று கொண்டுள்ளோம்; ஆனால் நாங்கள் எங்களது நேரத்தை வீணடிப்பதில்லை.
பௌதிக கிரகங்கள் எல்லாவற்றிலும் நான்கு வகையான பௌதிகத் துன்பங்கள் இருப்பதால், புத்திசாலி மனிதன் அவற்றின் எந்தவொரு கிரகத்திற்கும் செல்ல விரும்புவதில்லை. இந்த பிரபஞ்சத்திலுள்ள மிகவுயர்ந்த லோகமாகிய பிரம்ம லோகத்தினுள் நுழைந்தால்கூட, நான்கு வகையான துன்பங்கள் நம்மைப் பின்தொடரும் என்பதை பகவத் கீதையிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பிரம்ம லோகத்திலுள்ள ஒரு நாள் என்பது நம்முடைய கணக்கின்படி கோடிக்கணக்கான வருடங்கள் நீண்டது என்பதையும் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம், இவை உண்மையானவை.
மிகவுயர்ந்த லோகமாகிய பிரம்ம லோகத்தைக்கூட அடைய முடியும்: ஆனால், அங்கு செல்வதற்கு ஸ்புட்னிக்கின் வேகத்தில் சென்றால்கூட 40,000 வருடங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 40,000 வருடங்கள் விண்வெளியில் பயணிப்பதற்கு யார் தயாராக உள்ளனர்? ஒரு குறிப்பிட்ட கிரகத்தினுள் நுழைவதற்கு நாம் நம்மை தயார் செய்து கொண்டால், அதனுள் நம்மால் நுழைய முடியும் என்பதை வேத இலக்கியங்களிலிருந்து அறிகின்றோம். தேவர்கள் வசிக்கக்கூடிய உயர்ந்த கிரகத்தினுள் நுழைவதற்கு தயார்படுத்திக் கொண்டால், ஒருவனால் அங்குச் செல்ல முடியும். அதுபோலவே, ஒருவனால் கீழ்நிலை கிரகங்களுக்கும் செல்ல முடியும், அல்லது இந்த கிரகத்திலேயே தொடர்ந்து வசிக்கவும் முடியும். இறுதியாக, ஒருவன் விரும்பினால், அவனால் பரம புருஷ பகவானின் கிரகத்தினுள்ளும் நுழைய முடியும். இவை அனைத்தும் நாம் நம்மை தயார் செய்துகொள்வதில்தான் உள்ளது.
எனினும், நம்முடைய பௌதிக பிரபஞ்சத்தினுள் இருக்கக்கூடிய எல்லா கிரக அமைப்புகளும் தற்காலிகமானவை. சில குறிப்பிட்ட பௌதிக கிரகங்களில் ஆயுள் மிகவும் நீண்டதாக இருக்கலாம், ஆனால் பௌதிக பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்வாழிகளும் காலப்போக்கில் அழிவிற்கு உட்பட்டவர்கள், அவர்கள் மீண்டும் தங்களது மறுவுடலை வளர்த்தாக வேண்டும். பல்வேறு தரப்பட்ட உடல்கள் உள்ளன. மனித உடல் நூறு வருடம் வாழக்கூடியதாகும், ஒரு பூச்சியின் உடலோ பன்னிரண்டு மணி நேரம் வாழலாம். இவ்வாறாக, வேறுபட்ட உடல்களின் ஆயுளும் வேறுபடுகின்றன. ஆன்மீக லோகமாகிய வைகுண்ட லோகத்தினுள் ஒருவன் நுழைந்தால், அப்போது நித்தியமான வாழ்வையும் பூரண ஆனந்தத்தையும் அறிவையும் அவன் அடைகிறான். மனிதன் அதற்காக முயன்றால், அந்தப் பக்குவத்தினை அவனால் அடைய முடியும். இதனை பகவத் கீதையில் பகவானே கூறுகிறார், “பரம புருஷ பகவானைப் பற்றிய உண்மையை அறிந்துள்ளவர்கள் எவரும் அவரது இயற்கையினை அடைய முடியும்.”
கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம்
இந்த முன்னேறிய விஞ்ஞான கருத்தினை பொதுமக்களிடம் பரப்புவதே எங்களுடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும், இதற்கான வழிமுறை மிகவும் எளிதானது. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் பகவானின் திருநாமங்களை எளிதாக உச்சரிப்பதன் மூலமாக, ஒருவன் தனது இதயத்திலுள்ள களங்கங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்தி, தான் முழுமுதற் கடவுளின் அம்சம் என்பதையும் தனது கடமை அவருக்குத் தொண்டாற்றுவதே என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த வழிமுறை மிகவும் இன்பகரமானதாகும்: நாங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுகிறோம், இசைக்கு ஏற்றவாறு ஆடுகிறோம், அருமையான பிரசாதத்தினை உண்கின்றோம். இந்த வாழ்வை அனுபவித்துக் கொண்டே, மறுவாழ்வில் இறைவனின் திருநாட்டினுள் நுழைவதற்கு நாங்கள் எங்களை தயார் செய்கின்றோம்.
இவை கற்பனையால் உருவாக்கப்பட்டதல்ல, இவை அனைத்தும் உண்மையானவை. ஏதுமறியா மனிதனுக்கு இவை கற்பனையைப் போன்று தோற்றமளிக்கலாம் என்றபோதிலும், இறையுணர்வை அடைவதில் தீவிரமாக இருப்பவனுக்கு கிருஷ்ணர் உள்ளுக்குள் இருந்தபடி தம்மை வெளிப்படுத்துகிறார். கிருஷ்ணர், ஆன்மீக குரு ஆகிய இருவரும் நேர்மையான ஆத்மாவிற்கு உதவுகின்றனர். அனைவரின் இதயத்தினுள் பரமாத்மாவாக அமர்ந்துள்ள முழுமுதற் கடவுளின் வெளிப்புறத் தோற்றமே ஆன்மீக குருவாவார். பரம புருஷ பகவானைப் புரிந்துகொள்வதில் உண்மையான ஆர்வத்துடன் இருப்பவனுக்கு, உண்மையான ஆன்மீக குருவை நோக்கி அவனை வழிகாட்டுவதன் மூலமாக பரமாத்மா உடனடியாக உதவுகிறார். இவ்விதமாக, ஆன்மீகத்தை நாடுபவன் உள்ளேயும் வெளியேயும் உதவி பெறுகிறான்.
இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் கடவுளைப் புரிந்துகொள்ளும் நோக்கத்திற்கானதாகும். வெளிப்புறத்திலிருந்து நமக்கு உதவும் பொருட்டு, கிருஷ்ணரின் பிரதிநிதியாக நம்முடன் வசிப்பவரே ஆன்மீக குரு; பரமாத்மாவாக இருக்கும் கிருஷ்ணரோ உள்ளிருந்தபடி நமக்கு உதவுகிறார். உயிர்வாழி அத்தகு வழிகாட்டுதல்களை சாதகமாக ஏற்றுக் கொண்டு தனது வாழ்க்கையை வெற்றிகரமானதாக்க முடியும். இந்த இயக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக ஒவ்வொருவரும் எங்களது அதிகாரபூர்வமான நூல்களைப் படிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் பகவத் கீதை உண்மையுருவில், பகவான் சைதன்யரின் உபதேசங்கள், ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், பக்தி ரஸாம்ருத சிந்து முதலிய பல்வேறு நூல்களை பிரசுரித்துள்ளோம். மேலும், நாங்கள் ஒவ்வொரு மாதமும் பல்வேறு மொழிகளில் பகவத் தரிசனம் என்னும் எங்களுடைய பத்திரிகையையும் பிரசுரிக்கின்றோம். பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியின் குழியினுள் மனித சமுதாயம் மீண்டும் வீழ்ச்சியுறாமல் காப்பதே எங்களின் திருப்பணியாகும்.