பூரணத்தில் ஐக்கியமாகுதல் பேரழிவே
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
1973, ஆகஸ்ட் 13—பாரிஸ், பிரான்ஸ்
பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அருவவாத தன்மை கொண்ட ரோஸிகுருசியன் திருச்சபையின் அதிகாரியான திரு பேல்ஃபியோரி என்பவருக்கும் இடையிலான கலந்துரையாடல்.
சீடர்: (விருந்தினர்களை ஸ்ரீல பிரபுபாதருக்கு அறிமுகப்படுத்துகிறார்) பிரபுபாதரே தங்களை சந்திக்க திரு. பேல்ஃபியோரி அவர்களும் அவரது மனைவியும் வந்துள்ளனர். இவர் ரோஸிகுருசியன் திருச்சபையின் பாரிஸ் கிளையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எனப்படும் பொறுப்பில் அதிகாரியாக உள்ளார்.
ஸ்ரீல பிரபுபாதர்: ரோஸிகுருசியன் என்றால் என்ன?
சீடர்: இஃது உலகெங்கிலும் இருக்கக்கூடிய மிகப்பெரிய மத இயக்கம்.
பேல்ஃபியோரி: எங்களுடைய இயக்கம் அமெரிக்காவிலும் பிரபலமானது. எங்களது இயக்கத்தினரை நீங்கள் இதுவரை சந்தித்ததில்லையா?
ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய இயக்கத்தின் நோக்கம் என்ன?
பேல்ஃபியோரி: மனிதனின் பரிணாமம்.
ஸ்ரீல பிரபுபாதர்: “மனிதனின் பரிணாமம்.” அப்படியெனில், மனிதன் மேலும் பரிணமிக்கப் போகிறானா? பரிணாமத்தின் இறுதி நிலை என்ன?
பேல்ஃபியோரி: மனிதனை பிரபஞ்சத்துடன் அல்லது பிரபஞ்ச உணர்வுடன் மீண்டும் ஐக்கியமாக்குதல்.
ஸ்ரீல பிரபுபாதர்: பிரபஞ்ச உணர்வு. நாங்களும் தனிப்பட்ட உணர்வு, பிரபஞ்ச உணர்வு ஆகிய இரண்டு உணர்வுகளையும் நம்புகிறோம். சமீபத்தில்கூட நாங்கள் இதுகுறித்து எங்களது வகுப்பில் விவாதித்துக் கொண்டிருந்தோம். க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞ. தனிப்பட்ட ஆத்மாவும் உணர்வுடையவன், கடவுளாகிய பரமாத்மாவும் உணர்வுடையவர். எனவே, நாங்களும் பிரபஞ்ச உணர்வினை ஏற்கின்றோம், பிரபஞ்ச உணர்வு என்பது கடவுளின் உணர்வாகும். நம்முடைய உணர்வோ எல்லைக்குட்பட்டது.
பேல்ஃபியோரி: நாங்களும் இவ்விஷயத்தைப் படிக்கின்றோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: நல்லது. நமது உணர்வை பரம உணர்வுடன் தொடர்புகொள்ளச் செய்வதே உண்மையான பரிணாமமாகும். அதுவே கிருஷ்ண உணர்வு.
பேல்ஃபியோரி: நாங்கள் இறைநிலை மர்மத்தையும் தத்துவத்தையும் சீடர்களுக்கு கற்றுத் தருகிறோம். எங்களின் சீடர்கள் தங்களது பக்குவமான உணர்வைத் தேடுகின்றனர், அந்த பக்குவ உணர்வே முழுமையான பக்குவ உணர்வாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அந்த பக்குவ உணர்வின் சீரான நிலை என்ன?
பேல்ஃபியோரி: அன்பு.
ஸ்ரீல பிரபுபாதர்: அன்பு. அருமை, சிறப்பு. அப்படியெனில், உன்னத உணர்வும் தனிப்பட்ட உணர்வும் தங்களுக்குள் அன்பைப் பரிமாறிக்கொள்வதே பக்குவநிலை. சரிதானே?
பேல்ஃபியோரி: எங்களுடைய கருத்தின்படி, இறுதி உணர்வு என்பது உன்னத உணர்வுடன் ஐக்கியமாவதாகும். அஃது ஒளியுடன், சமாதியுடன், முழுமையான அன்புடன் கலந்திருப்பதாகும். இதுவே உயர்ந்தது.
ஸ்ரீல பிரபுபாதர்: அன்பு. நாம் “அன்பு” என்று கூறும்போது, இதில் இரண்டு நபர்கள் இருந்தாக வேண்டும். இஃது இருவருக்கிடையில் நடைபெறும் பரிமாற்றம். உங்களுடைய தத்துவம் என்ன கூறுகிறது?
பேல்ஃபியோரி: நாங்கள் கூறும் அன்பு அனைத்தையும் பந்தப்படுத்தி, அவற்றை ஒளியிலும் அன்பிலும் நீராட்டுவதாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், அது செயலற்ற நிலையா?
பேல்ஃபியோரி: இல்லை, செயல்கள் உண்டு.
ஸ்ரீல பிரபுபாதர்: அந்த செயல்கள் யாவை?
பேல்ஃபியோரி: கொடுப்பது.
ஸ்ரீல பிரபுபாதர்: கொடுப்பது என்றால், ஏற்பதும் இருக்க வேண்டுமே.
பேல்ஃபியோரி: கொடுப்பதும் உண்டு, ஏற்பதும் உண்டு. இருப்பினும், இறுதியான பக்குவநிலையை அடைந்தவன் தான் ஏற்பதை உடனடியாக வேறு ஒருவருக்கு வழங்கி விடுகிறான்.
ஸ்ரீல பிரபுபாதர்: சரியே. பரிமாற்றம் என்பது பிரியமான இரண்டு நபர்களுக்கிடையே நடைபெறுவது; முதல் நபர் கொடுக்கின்றார், இரண்டாம் நபர் ஏற்கின்றார். சில நேரங்களில் இரண்டாம் நபர் கொடுக்கின்றார், முதல் நபர் ஏற்கின்றார். இதுவே பரிமாற்றம். அதுபோலவே, எனக்கு பிரியமானவருக்கு நான் ஏதேனும் உண்பதற்கு வழங்கினால், அவரும் எனக்கு ஏதேனும் உண்பதற்கு வழங்குகிறார். மேலும், நான் எனது மனதின் இரகசியங்களை எனது அன்பிற்குரியவரிடம் வெளிப்படுத்துகிறேன்; அவரும் தனது மனதை என்னிடம் வெளிப்படுத்துகின்றார். இவையே அன்புப் பரிமாற்றம் எனப்படுகின்றன.
பேல்ஃபியோரி: அன்பு என்றால், அஃது இரண்டு நபர்களுக்கு இடையிலானது என்னும் தங்களது கூற்றினை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் அன்பினை அவ்வாறு கருதுவதில்லை.
அன்பு என்பதை மனிதனுக்கும் மற்றவை அனைத்திற்கும் இடையிலான பரிமாற்றம், அல்லது மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான பரிமாற்றம் என்று நாம் ஏன் நினைக்கக் கூடாது?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். பிரபஞ்ச உணர்வு என்று நீங்கள் ஏற்கனவே கூறினீர்கள். உணர்வு என்றால், அங்கே நபர் இருக்க வேண்டும். உதாரணமாக, நான் மரத்தை நேசித்தால், அதனுடைய இலை, கிளைகளையும் நேசிப்பதாகவே பொருள். நான் மரத்தினுடைய வேருக்கு நீரூற்றினால், அது தானாகவே இலை, கிளைகளையும் சென்றடைகிறது. எனவே, நான் உன்னத உணர்வினை நேசித்தால், அதாவது, பிரபஞ்சம் முழுவதும் உணர்வைப் பெற்றுள்ள பரம புருஷரை நேசித்தால், அப்போது என்னுடைய சேவை இயல்பாகவே அனைவரையும் சென்றடைகிறது.
பேல்ஃபியோரி: ஆம், எங்களுடைய தத்துவத்திலும் இந்தக் கூற்று உள்ளது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அனைத்திற்குமான ஆதிமூலத்தைக் கண்டறியாமல், அனைவரையும் அல்லது அனைத்தையும் நேசித்தல் என்பது உங்களால் முடியாது.
பேல்ஃபியோரி: அந்த ஆதிமூலத்தை நோக்கி சீடர்களைப் படிப்படியாக முன்னேற்றுவதே எங்களது சபையின் வழிமுறையாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அந்தப் படிகள் யாவை?
பேல்ஃபியோரி: இது படிப்படியான முன்னேற்றம். எங்களிடம் வரும் மாணவர்களுக்கு நாங்கள் முதலில் தீக்ஷை வழங்கி வழிநடத்துகிறோம். அவர்களுக்கென்று சில குறிப்பிட்ட கொள்கைகளும் குறிப்பிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர், அவர்கள் படிப்படியாக தத்தமது திறனுக்கும் சக்திக்கும் ஏற்ப முன்னேற்றம் பெற்று, இறுதியில் பக்குவத்தை அடைகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: அந்த பக்குவநிலையின் சிறப்பு என்ன?
பேல்ஃபியோரி: நிர்வாண என்பதே அந்த பக்குவநிலை, அதுவே ஏசு கிறிஸ்துவின் ராஜ்ஜியம். இந்த இறுதி நிலையை அடைவதற்காகவே அனைவரும் அரும்பாடுபடுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: நிர்வாண என்றால் என்ன? நிர்வாண என்றால் சூன்யம் என்று பொருள். அனைவரும் அந்த சூன்யத்திற்காகவா முயல்கிறார்கள்?
பேல்ஃபியோரி: எங்களுடைய நிர்வாண வேறுபட்டதாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அஃது என்ன?
பேல்ஃபியோரி: அஃது உயிருள்ள உண்மையினுள் நுழைவதாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: நிர்வாண என்பது சமஸ்கிருதச் சொல். இதன் பொருள், “சூன்யம்,” “அழிவு.”
பேல்ஃபியோரி: எங்களைப் பொறுத்தவரையில், நிர்வாண என்பது ஒரு முடிவு. அதாவது, பெளதிக வாழ்வை முடித்துக் கொண்டு பரம உண்மையின் மௌனத்தினுள் நுழைதல். அந்த நிலையே உண்மையான நிலை, இந்த நிலை பொய்யான நிலை, நிராகரிக்கப்பட வேண்டியது.
ஸ்ரீல பிரபுபாதர்: எதற்காக “மௌனம்?”
பேல்ஃபியோரி: “மௌனத்தினுள் நுழைதல்” என்பது இறைநிலை மர்மம் சார்ந்த சொல்.
ஸ்ரீல பிரபுபாதர்: உங்களால் அதனை விவரிக்க முடியுமா?
பேல்ஃபியோரி: இது விவரிக்க முடியாதது; ஏனெனில், இது தியானத்தின் மூலமாக உள்ளுக்குள் அடையப்படக்கூடிய ஒன்றாகும். உண்மையில் இதனை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஏன்? நீங்கள் எண்ணற்ற விஷயங்களை வார்த்தைகளால் விவரிக்கின்றீர்; ஆனால் இறுதி இலக்கு என்ன என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
(அடுத்த இதழில் தொடரும்)