வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
கொரோனா—எங்கும் பீதி, எல்லாரிடமும் பீதி. உலகச் செய்தித்தாள்கள் எல்லாவற்றிலும் வரலாற்றில் முதல்முறையாக ஒரே செய்தி அடைத்துக் கொண்டுள்ளது. நாடு, மொழி, இனம் என எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் அனைவரும் பேசக்கூடிய ஒரே விஷயமாக கொரோனா திகழ்கிறது. ஆட்சியாளர்கள், எதிர்கட்சிகள், பொருளாதார வல்லுநர்கள், ஜோதிட அறிஞர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் முதலியோர் இதுகுறித்து தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.
இதன் வரிசையில், கொரோனா குறித்து மக்கள் மனதில் எழும் சில ஆன்மீக ஐயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஆன்மீக காரணம் என்ன?
கண்ணிற்குத் தெரியாத எதிரியினால், மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மடிகின்றனர், கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கொடூரமாக உள்ளது. நோயிற்கான காரணத்தையும் தீர்வையும் பலரும் ஆய்வு செய்கின்றனர். அவை ஒருபுறமிருக்க, நாம் ஆன்மீக காரணங்களைப் பார்க்கலாம்.
ஆன்மீக அறிவியலின் அடிப்படையில், இந்த நோய் ஏன் தோன்றியது என்பதற்கான காரணத்தை நம்மால் உறுதியுடன் கூற முடியும். கொரோனா மட்டுமின்றி மக்களை கொத்துகொத்தாக கொல்லக்கூடிய எல்லாவித தொற்று நோய்கள், போர், இயற்கை சீற்றங்கள் முதலியவை அனைத்திற்கும், நமது ஒட்டுமொத்த பாவ விளைவுகளே காரணம்.
இன்றைய மனித சமுதாயத்தில் பசு வதை, கருவிலுள்ள குழந்தையைக் கொலை செய்தல் முதலிய மாபெரும் பாவச் செயல்கள் சகஜமாக நிகழ்கின்றன. தாயைப் போன்று மதிக்கப்பட வேண்டிய பசுக்கள் வெறும் நாவின் திருப்திக்காக, ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் தினந்தோறும் நவீன கசாப்புக்கூடங்களில் கொல்லப்படுகின்றன. அதன் விளைவுதான்—இன்றைய கொரோனா, நேற்றைய எபோலோ, மற்றும் நாளைய புதிய நோய்கள்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. பசுக்களை கருணையின்றி கொலை செய்யும் சமுதாயத்தில், மக்களும் கருணையின்றி கொலை செய்யப்படுகின்றனர்.
கடவுள் ஏன் கொரோனாவைக் கொடுத்தார்?
“கடவுள் ஏன் கொடூரமானவராக உள்ளார்? அல்லது, கடவுளுக்கும் இந்த நோயிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?”
மேலே கூறப்பட்டபடி, இந்த நோயானது நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வகை தண்டனையாகும். இதில் கடவுளின் பணி ஒரு நீதிபதியைப் போன்று தவறு செய்தோருக்கு தண்டனை வழங்குவதே. பசு வதை ஒட்டுமொத்த சமுதாயத்தின் தவறு என்பதால், சமுதாயம் முழுவதும் தண்டிக்கப்பட்டு வருகிறது. சிலர் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர், வேறு சிலர் மறைமுகமாக (ஊரடங்கு, வேலையின்மை முதலியவற்றால்) பாதிக்கப்படுகின்றனர். இதனால், கடவுள் கொடுமைக்காரராக மாறிவிடுவதில்லை. நாம் எல்லா கொடுமைகளையும் செய்துவிட்டு, தண்டனை என்று வரும்போது நீதிபதியை குறை சொல்வது நியாயமாகுமா?
சிலர், இந்த நோயிற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்றும் இது சாத்தானின் வேலை என்றும் நினைக்கலாம். ஆனால், அஃது உண்மையல்ல. உலகில் நிகழும் எந்தவொரு செயலும் முழுமுதற் கடவுளின் அனுமதியின்றி நிகழ இயலாது. அவனின்றி அணுவும் அசையாது. அதே சமயத்தில், முழுமுதற் கடவுள் நேரடியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அவசியமில்லை. அவர் ஏற்கனவே வகுத்துள்ள சட்டதிட்டத்தின் அடிப்படையில் ஜட இயற்கை சுயமாகச் செயல்பட்டு, தண்டனைகளை வழங்கி வருகிறது. எனவே, இதில் கடவுளைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
கடவுளின் தண்டனை என்றால், நோயைத் தடுக்க வேண்டாமா?
“கடவுள் கொடுத்துள்ள தண்டனை என்று கூறி, நோயைத் தடுக்காமல் அப்படியே விட்டு வைக்கலாமா? சமூக இடைவெளி உட்பட இதர வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டாமா?”
முன்னரே கூறியபடி, நாம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் நமது முந்தைய செயல்களே காரணம். கர்ம வினைகளின் செயல்பாடுகள் மிகவும் சிக்கலானவை, கவனமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. தொற்றுநோயைத் தடுப்பதற்கான செயல்களில் நாம் ஈடுபடாவிடில், “மற்றவர்களுக்குத் தொற்றுநோயைப் பரப்புதல்” என்னும் பாவச் செயலை நாம் புதியதாக ஏற்படுத்துவோம். அந்த பாவச் செயல்களின் விளைவினால் உடனடியாக நாமும் அதற்கு தண்டிக்கப்படலாம். எனவே, நோய் தடுப்பு செயல்களில் ஈடுபடுதல் என்பது மேலும் பாவங்களைச் செய்யாமல் இருப்பதாகும்.
இதனை முறையாக உணர்வதற்கு கர்ம விதிகளின் விஞ்ஞானத்தைச் சற்று அறிய வேண்டும்.
கர்ம விளைவுகள் நான்கு வகைப்படும்: (1) ப்ராரப்தம், இப்போது நாம் அனுபவிப்பதற்காக பழுத்த நிலையில் தயாராக இருக்கக்கூடிய கர்ம வினைகள்; (2) அப்ராரப்தம், வருங்காலத்தில் நாம் அனுபவிப்
பதற்காக காத்திருக்கும் கர்ம வினைகள்; (3) பீஜம், செய்த பாவச் செயலை மீண்டும் செய்வதற்கு நமது இதயத்தில் விதை வடிவில் இருக்கக்கூடிய ஆசை; (4) கூடம், அந்த ஆசை இன்னும் விதையாக உருவெடுக்காமல் இதயத்தினுள் புதைந்துக் கிடக்கும் நிலை.
ஒரு குடிகாரனை உதாரணமாக வைத்து இதனை விளக்கலாம். (1) குடிப்பழக்கம் என்னும் பாவச் செயலினால் பாதிக்கப்பட்டு, அதன் தண்டனையாக கல்லீரல் பிரச்சனையை அவன் சந்திக்கின்றான். அப்போது, அது ப்ராரப்தம் எனப்படுகிறது; அதாவது, அவன் தனது பாவத்திற்கான பலனை அனுபவிக்கும் நிலை. (2) அவனது கல்லீரல் கொஞ்சம்கொஞ்சமாகக் கெட்டு, ஆனால் இன்னும் அவனுக்கு நோய் வராமல் இருக்கும்போது, அந்த நிலை அப்ராரப்தம் எனப்படுகிறது; அதாவது, அவன் தனது பாவத்திற்கான பலனை விரைவில் அனுபவிக்கப் போகிறான். (3) குடிகாரன் மீண்டும் குடிப்பதற்கு ஆசைப்படுவது, பீஜம் எனப்படும் நிலையாகும். (4) அவன் குடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்து, அதற்கான ஆசையின்றி இருக்கும்போதிலும், மதுபானக் கடைக்கு அருகில் செல்லும்போது மீண்டும் குடிப்பதற்கான ஆசை அவனுள் எழுச்சி பெறலாம். பாவத்திற்கான ஆசைகள் அவ்வாறு உள்ளுக்குள் புதைந்திருப்பது, கூடம் எனப்படும் நிலையாகும்.
புத்திசாலி மனிதன், இதயத்தினுள் புதைந்துள்ள ஆசை முற்றிலுமாக அழியும் வரை, அதனை மீண்டும் தூண்டக்கூடிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பான். மேலும், அவன் தனது சூழ்நிலையை பக்குவமாக வைத்துக்கொள்வதன் மூலமாக அடுத்தடுத்து பாவங்களைச் செய்வதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வான். அப்ராரப்த நிலையிலுள்ள பாவங்கள் ப்ராரப்த நிலைக்கு உடனடியாக வந்துவிடாமல், நமது அன்றாடச் செயல்களின் மூலமாக நாம் நம்மைத் தடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, அசுத்தமான சூழ்நிலையில் வாழ்வதன் மூலமாகவும் தவறான செயல்களை தொடர்ந்து செய்வதன் மூலமாகவும், ஒருவன் பிற்காலத்தில் வரவிருக்கும் பாவ விளைவினை இன்றே வரவழைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது..
அதன்படி, தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைவோம் என்பதற்கான ப்ராரப்தம் நமக்கு தற்போது இல்லாமல் இருக்கலாம். ஆயினும், வருங்காலத்தில் அல்லது வரும் பிறவிகளில் ஏதோவொரு தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைவதற்கான அப்ராரப்தம் நம்மிடம் இருக்கலாம். ஒருவன் தனது தூய்மையற்ற வாழ்வின் மூலமாக, அந்த வருங்கால கர்மத்தினை தற்போதே வரவழைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
எனவே, நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நாம் அறியாதபட்சத்தில், பாதுகாப்பாக இருத்தல் சாலச் சிறந்ததாகும்.
கிருஷ்ணரை வணங்கினால் கொரோனா விலகுமா?
“கிருஷ்ணரை வணங்கினால் கர்மத்தினை தொலைத்து விட முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாம் கிருஷ்ணரை வழிபட்டு கொரோனாவை விரட்டி விட முடியுமா?”
மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கிருஷ்ணரை வணங்கி பிரார்த்தனை செய்தால், நிச்சயம் கொரோனா இந்த உலகத்தை விட்டு விலகி விடும். இதில் எள்ளளவும் ஐயமில்லை. கிருஷ்ணரை வழிபடுவதற்கான கலி யுக வழிமுறை ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஸங்கீர்த்தனமாகும். பின்வரும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையைப் படியுங்கள்:
“கொல்கத்தாவில் மிகவும் மோசமான பிளேக் தொற்று 1898இல் ஏற்பட்டது. மொத்த கொல்கத்தாவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைவரும் கொல்கத்தாவை விட்டு ஓடினர். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருந்தனர்… ஒரு பாபாஜி ஹரே கிருஷ்ண ஸங்கீர்த்தனத்தினை கொல்கத்தா முழுவதும் ஏற்பாடு செய்தார். அந்த ஸங்கீர்த்தனத்தில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், பார்சி என அனைவரும் இணைந்தனர். அவர்கள் எல்லா சாலைகளுக்கும் எல்லா வீதிகளுக்கும் எல்லா வீடுகளுக்கும் செல்ல, மக்களும் நன்கு வரவேற்று உபசரித்தனர். இறுதியில், பிளேக் கட்டுப்படுத்தப்பட்டது. இஃது உண்மை. கொல்கத்தாவின் வரலாற்றை அறிந்த அனைவரும், ஸங்கீர்த்தனத்தினால் அங்கு பிளேக் கட்டுப்படுத்தப்பட்டதை அறிவர்.
“அதே சமயத்தில், நாங்கள் எந்தவொரு பௌதிக நோக்கத்திற்காகவும் ஸங்கீர்த்தனத்தினைப் பரிந்துரைப்பதில்லை. அது நாம-அபராதமாகும். நீங்கள் ஸங்கீர்த்தனத்தை பௌதிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம், ஆனால் அஃது அனுமதிக்கப்படுவதில்லை… கடவுளை உங்களின் தொண்டில் ஈடுபடுத்துவது சரியல்ல… ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தின் மூலமாக சில பௌதிக நன்மையை நீங்கள் விரும்பினால், உங்களுக்கு அது கிட்டும்… ஆனால், கிருஷ்ண பிரேமையின் பரவசம் கிட்டாது.” (ஜுன் 20, 1973)
அதாவது, கொரோனாவை விலக்குவதற்கு நாம ஸங்கீர்த்தனம் நிச்சயம் உதவும் என்றபோதிலும், ஆச்சாரியர்கள் இதனை அவ்வாறு பரிந்துரைக்கவில்லை.
மேலும், பன்முகத் தன்மை கொண்ட இன்றைய சமுதாயத்தில், “செத்தாலும் பரவாயில்லை, கிருஷ்ணரைக் கும்பிட மாட்டேன்,” என்பதில் பலர் உறுதியாக இருப்பர். எனவே, அனைவரும் இணைந்து நாம ஸங்கீர்த்தனம் புரிவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
கோயில்களை மூடுவது ஏன்?
“புகழ்பெற்ற திருப்பதி, புரி ஜகந்நாதர், ஸ்ரீரங்கம் என மூடப்படாத கோயில்களும் மூடப்பட்டன, நிறுத்தப்படாத திருவிழாக்களும் நிறுத்தப்பட்டன. வாட்டிகன் தேவாலயம், மெக்காவிலுள்ள மசூதி என எல்லா மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்பட்டன. கடவுள் இருப்பது உண்மையானால், இவை ஏன் மூடப்பட வேண்டும்?”
உண்மையில், எந்தவொரு முக்கியமான கோயிலும் மூடப்படவில்லை, பொது மக்களுக்கான தரிசனம் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டது. பகவானின் சேவையில் தம்மை அர்ப்பணித்துள்ள பக்தர்கள் எல்லாச் சூழ்நிலையிலும் பகவத் கைங்கரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும், தொற்றுநோயின் இயல்பினை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கான தரிசனம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், சராசரி மக்கள் பக்தியின் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் கிடையாது. ஒருவன் பக்தியின் உயர்ந்த நிலையில் இருந்தால், அவனை எந்தவொரு கர்ம வினைகளும் அண்டாது. அவனால் எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்படையாமல் வாழ முடியும். ஆனால், மக்கள் அத்தகு உயர்ந்த நிலையில் இல்லை. மக்கள் தொடர்ந்து பாவம் செய்பவர்களாக இருப்பதால், கோயிலுக்குள் அவர்கள் கூடுவது கொரோனாவை துரிதப்படுத்தவே உதவும். எனவேதான், கோயில்கள் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு வராதா?
“கிருஷ்ண பக்தர்கள் கர்ம வினையிலிருந்து விடுபட்டவர்கள் என்று கூறுகிறீர். அதன்படி, கிருஷ்ண பக்தர்களை கொரோனா தாக்கக் கூடாதே! அவர்கள் ஏன் ஒதுங்கி வாழ வேண்டும்?”
கிருஷ்ணர், தம்மிடம் முழுமையாக சரணடைந்தவர்கள் எல்லா பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டவர்கள் (பகவத் கீதை 18.66) என்று கூறியுள்ளார். ஆயினும், பெரும்பாலான கிருஷ்ண பக்தர்கள் இன்னும் அவ்வாறு முழுமையாக சரணடையவில்லை; மாறாக, சரணாகதியின் பாதையில் இருக்கின்றனர். எனவே, நாம் கிருஷ்ணரிடம் எந்தளவிற்கு சரணடைந்துள்ளோமோ அதற்கு ஏற்பவே பிரதிபலன் கிடைக்கும். (பகவத் கீதை 4.11)
அதாவது, நாம் அவரிடம் சரணடைந்துள்ள நிலைக்கேற்ப, பாவத்திலிருந்து நாம் விடுபட்டிருப்போம். கிருஷ்ண பக்தியில் முன்னேறும்போது, நமது அப்ராரப்தம், கூடம், பீஜம் ஆகியவை நம்மை விட்டு படிப்படியாக விலகி விடும். ஆயினும், இப்பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய ப்ராரப்த கர்மங்கள் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு அகல்வதில்லை. பக்தியின் உயர்ந்த நிலையை அடையும் பட்சத்தில் ப்ராரப்தமும் அழிந்துவிடும்.
நம்மில் பெரும்பாலானோர் அத்தகு உயர்நிலையில் இல்லை என்பதால், நோய்கள் நிச்சயம் பக்தர்களையும் தாக்கும்; எனவே, பக்தர்களும் அதற்குரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதே சமயத்தில், கிருஷ்ணரே நம்மை என்றும் எப்போதும் பாதுகாப்பவர் என்னும் நிலையிலிருந்து பக்தன் பிறழக் கூடாது. நாம் இப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்மங்களைக்கூட, நம்முடைய சரணாகதிக்கேற்ப, கிருஷ்ணர் குறைத்தே வழங்குவார் என்பது உறுதி.
மேலும், கிருஷ்ண பக்தனின் உடல் கிருஷ்ணருக்குச் சொந்தமானது. அதனைச் சிதைத்துக்கொள்ள பக்தனுக்கு உரிமையில்லை. கிருஷ்ணரின் கோயிலை எவ்வாறு பக்தன் கவனமாகப் பராமரிக்கின்றானோ, அவ்வாறே அவன் தன் உடலையும் பராமரிக்க வேண்டும்.