—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், பகவத் தரிசனம் முதலிய அத்தியாவசிய ஆன்மீக நூல்களைப் படிக்கச் சொன்னால், “நேரமில்லை, நேரம் கிடைத்தால் படிக்கிறேன்,” என்று கூறிய பலர், இயற்கையின் ஏற்பாட்டில் கிடைத்த நேரத்தில் என்ன செய்தனர்?
கொரோனா ஊரடங்கு சமயத்தில், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் முதலிய சமூக வலைத்தளங்களில் எவ்வளவு நேரத்தைச் செலவிட்டோம்? பகவத் கீதை முதலிய ஆன்மீக நூல்களில் எவ்வளவு நேரத்தைச் செலவிட்டோம்? ஒவ்வொருவரும் தத்தமது நிலையை இதை வைத்து தாமே எடை போடலாம்.
இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தாத நபர்கள் நிச்சயமாக ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படிப்பதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பினை வீணடித்தவர்களாகவே கருதப்பட வேண்டும். வாழ்வின் இறுதியில் நமக்கு உதவப் போவது பகவத் கீதையா, ஃபேஸ்புக்கா?
“நேரம் கிடைத்தால் படிப்பேன்,” என்று கூறியோரில் பலர், “படிக்க உட்கார்ந்தால் தூக்கம் வருகிறது,” என்று கூறி திணறியதைக் கண்டோம். படிப்பதற்கான பழக்கத்தை அன்றாட வாழ்வில் நாம் ஏற்படுத்திக் கொள்ளாவிடில், வாய்ப்புக் கிட்டினாலும் படிக்க இயலாது என்பதை பலரும் உணர்ந்திருப்பர்.
தற்போது பெரும்பாலான மக்கள் மீண்டும் சகஜ வாழ்விற்குத் திரும்பி வருகின்றனர். சகஜ வாழ்வு என்றால், ஆன்மீக நூல்களுக்கு நேரம் ஒதுக்காமல், வேகமாக ஓடும் வாழ்க்கையைக் குறிக்கிறது. சுமார் இரண்டு மாத ஊரடங்கில், பெரும்பாலான மக்கள் பெரிய அளவிலான பொருளாதார சிக்கல்களை சந்திக்கவில்லை. அவ்வாறு இருக்கையில், நாம் ஏன் மீண்டும் அந்த முழுமையான ஓட்டத்தை மேற்கொள்ள வேண்டும்? நாம் ஏன் நமது பௌதிகத் தேவைகளை (ஊரடங்கு காலத்தில் குறைத்துக் கொண்டதைப் போல) சற்று குறைத்துக் கொண்டு வாழக் கூடாது?
ஊரடங்கு காலத்தில் நீங்கள் ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படிக்க நேர்ந்திருந்தால், நிச்சயம் உங்களது வாழ்வில் மாற்றம் இருக்கும். அதாவது, நீங்களே முன்வந்து பௌதிகச் செயல்களைக் குறைத்துக் கொண்டு ஆன்மீக செயல்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்குவீர். ஒருவேளை ஊரடங்கு என்னும் பொன்னான வாய்ப்பினைத் தவறவிட்ட துர்பாக்கியசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்க நேரிட்டால், பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்: பௌதிகத் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ முடியும் என்பதை இனிமேலாவது உணர்ந்து, ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படிப்பதற்கென்று நேரத்தை ஒதுக்கி வாழ்வை வெற்றிகரமாக மாற்றுங்கள்.