வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
புத்திர் ஜ்ஞானம் அஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஷம:
ஸுகம் து:கம் பவோ ’பாவோ பயம் சாபயம் ஏவ ச
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ் தபோ தானம் யஷோ ’யஷ:
பவந்தி பாவா பூதானாம் மத்த ஏவ ப்ருதக்-விதா:
“புத்தி, ஞானம், ஐயத்திலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை, மன்னித்தல், வாய்மை, புலனடக்கம், மன அடக்கம், சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, அச்சம், அச்சமின்மை, அகிம்சை, சமத்துவம், திருப்தி, தவம், தானம், புகழ் மற்றும் இகழ்ச்சி—என உயிர்வாழிகளிடம் காணப்படும் பல்வேறு குணங்கள் அனைத்தும் என்னால் படைக்கப்பட்டவையே.” (பகவத் கீதை 10.4–5)
புத்தி என்றால் என்ன?
எல்லாவற்றின் மூல காரணம் பகவான் கிருஷ்ணர் என்பதால், அவரே அனைத்து குணங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார். இந்த ஸ்லோகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குணங்கள், கிருஷ்ணரிடம் இருப்பதால், ஜீவன்களிடமும் ஓரளவிற்கு உள்ளன. உதாரணமாக, புத்தியை எடுத்துக்கொள்வோம்.
ஒருவன் காரை இயக்குவதில் புத்திசாலியாக இருந்தால், அது பௌதிக புத்தியாகும். ஆனால், அந்த காரின் சூட்சும செயல்களையும் பரம புருஷரோடு அதற்குண்டான தொடர்பையும் அறிந்துகொள்வது உண்மையான புத்தியாகும். பௌதிகத் தளத்தில்கூட, ஓர் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒருவன் புரிந்துகொள்ள முயலும்போதுதான், அவன் புத்திசாலியாகக் கருதப்படுகிறான். அவன் தனது புத்தியை வைத்து ஒவ்வொன்றின் பின்னணியிலும் இருக்கக்கூடிய விதி நியமங்களை அறிந்துகொள்ள விரும்புகிறான். ஆயினும், ஒரு குழந்தையோ சாலையில் ஓடும் காரைப் பார்க்கும்போது, அது தானாக ஓடுவதாக நினைக்கிறது. அது முட்டாள்தனம்.
மற்றோர் உதாரணம்: இங்கே டேப் ரெக்கார்டரும் மைக்ரோஃபோனும் உள்ளது. யாரேனும் ஒரு நபர் இவற்றைத் தொடாவிடில், இவை ஒரு கணம்கூட வேலை செய்யாது என்பதை புத்திசாலியால் புரிந்துகொள்ள முடியும். ஓர் இயந்திரத்தைப் பார்த்து நாம் ஆச்சரியப்படக் கூடாது; இயந்திரத்தை யார் செயல்படுத்துகிறார்கள் என்பதை அறிவதற்கு முயல வேண்டும். அதுவே புத்தி.
மரணத்திற்கு ஏன் மருந்து கண்டுபிடிக்கக் கூடாது?
ஒரு விஞ்ஞானியைப் பார்ப்பவன், “இவர் நன்கு வேலை செய்கிறார், புத்தகங்களை எழுதுகிறார். என்னே அற்புதம்!” என்று கூறலாம். ஆயினும், அந்த விஞ்ஞானியின் உடலை விட்டு உயிர் வெளியேறிய பிறகு, அங்கு விஞ்ஞானி இருப்பதில்லை. ஏதாவது ஒரு விஞ்ஞானியினால், ஒரு மருந்தைக் கண்டுபிடித்து தனது மாணவர்களிடம் கொடுத்து, “நான் இறக்கும்போது இதை என் உடலில் செலுத்துங்கள், நான் மீண்டும் உயிர்த்தெழுவேன்,” என்று கூற முடியுமா? ஏதேனும் ஒரு விஞ்ஞானி அத்தகைய மருந்தைக் கண்டுபிடித்தாரா?
அவ்வாறு கண்டுபிடித்திருந்தால் விஞ்ஞானிகளுக்கு பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. ஐசக் நியூட்டன், ஜெகதீஷ் சந்திரபோஸ், தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன் முதலான பல விஞ்ஞானிகள் உலகளவில் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள். நாங்கள் சவால் விடுக்கிறோம், “விஞ்ஞானிகளே! நீங்கள் பல்வேறு அற்புத விஷயங்களைக் கண்டு
பிடித்துள்ளீர்கள். நீங்கள் ஏன் மரணத்திற்கு மருந்து கண்டுபிடிக்கக் கூடாது? அவ்வாறு கண்டுபிடித்து விட்டால், நீங்கள் சாகும்போது, அதனை நாங்கள் உங்களது உடலினுள் செலுத்துவோம். நீங்கள் மீண்டும் வாழலாம், மீண்டும் வேலை செய்யலாமே?”
விஞ்ஞானிகள் வெறும் கருவிகளே
உண்மையில், விஞ்ஞானிகளும் தத்துவஞானிகளும் தங்களது சொந்த திறமையின்படி செயல்படுவதில்லை; மாறாக, ஜட இயற்கையின் மயக்கத்தின் கீழ் செயல்படுகின்றனர். பகவத் கீதையில் (3.27) கிருஷ்ணர் கூறுகிறார், ப்ரக்ருதே: க்ரிய
மாணானி குணை: கர்மாணி ஸர்வஷ:, “அனைத்து செயல்களும் இயற்கையின் சட்டப்படி நடக்கின்றன.”
இதை அறியாத விஞ்ஞானிகள் அனைத்து செயல்களும் தற்செயலாக நடப்பதாகக் கூறுகின்றனர்; அப்படியெனில், உயிரினங்களுக்கு இடையில் ஏன் பல வேறுபாடுகள் உள்ளன? ஒருவன் விஞ்ஞானியாக இருக்கிறான், மற்றொருவன் முட்டாளாக இருக்கிறான். ஏன் இந்த வேறுபாடு? இந்த வேறுபாடு ப்ரக்ருதியினால் (இயற்கையினால்) உண்டாக்கப்படுகிறது. இந்த ப்ரக்ருதியைப் பற்றி கிருஷ்ணர் என்ன கூறுகிறார்? மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம், “இயற்கை என்னுடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.”
அதாவது, இயற்கை ஒரு பிரதிநிதி மட்டுமே, கிருஷ்ணரே உண்மையான கர்த்தா. நாம் வெறும் கருவிகளைப் போன்றவர்கள் மட்டுமே. நீங்கள் புத்திசாலியாக இருந்தால், “நான் கிருஷ்ணரின் கருவி மட்டுமே,” என்று உணர்வீர். நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான உறவு, ஒரு கைக்கும் கையின் உரிமையாளருக்கும் இடையிலான உறவைப் போன்றதாகும். கை என்பது என்ன? இஃது ஒரு கருவி, இதன் மூலமாக என்னால் பொருட்களை எடுத்து வேலை செய்ய முடிகிறது. அதாவது, வேலை செய்பவன் நான், கை அல்ல [கை ஒரு கருவி மட்டுமே].
ஆயினும், நாம் கிருஷ்ணருடைய பிரதிநிதிகள் மட்டுமே என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. ஏன்? அஹங்கார-விமூடாத்மா, அவர்கள் அஹங்காரத்தால் மயங்கியுள்ளனர். எனவே, “நான் ஒரு விஞ்ஞானி,” “நான் ஒரு தத்துவவாதி,” “நான் ஒரு ராக்ஃபெல்லர்,” “நான் ஒரு தொழிலதிபர்,” “நான் ஒரு ஸ்வாமி” என்றெல்லாம் நினைக்கிறார்கள். இல்லை. நீங்கள் கிருஷ்ணரின் கையிலுள்ள ஒரு கருவி மட்டுமே. கருவி என்பதால், நீங்கள் கிருஷ்ணருடைய விருப்பத்தின்படி பணியாற்ற வேண்டும். கிருஷ்ண உணர்வில் சேவை புரிந்தால், அஃது உண்மையான புத்திசாலித்தனம்; மாறாக, கிருஷ்ணருக்கு எதிராக வேலை செய்தால், அது முட்டாள்தனம்.
உண்மையான நாகரிகம்
ஆத்மாவையும் ஜடத்தையும் புரிந்துகொள்வதே உண்மையான அறிவாகும். ஆத்மாவினால் தீண்டப்பட்டுதான் ஜடப் பொருள் செயல்படுகிறது; அதாவது, ஜடம் ஆத்மாவைச் சார்ந்துள்ளது. இதுவே அறிவு; ஜடத்திற்கு முக்கியத்துவம் வழங்கி, ஆத்மாவைப் புறக்கணிப்பது அறிவல்ல. தற்போதைய கல்வி முறை, வாழ்வின் ஆன்மீகப் பக்கத்தைப் புறக்கணிப்பதால், யாரிடமும் உண்மை அறிவு இல்லை. அவர்கள் வாழ்வின் பௌதிகப் பக்கத்தை மட்டுமே அறிகின்றனர். எனவே, பகவத் கீதையினுடைய கூற்றின்படி, தற்போதைய நாகரிகம் முட்டாள்களின் நாகரிகமாகும். அவர்கள் காரின் மீது அதிக அக்கறை செலுத்துகின்றனர், ஓட்டுநரின் மீது கவனம் செலுத்துவதில்லை.
ஜடம் எது, ஆத்மா எது என்பதைப் புரிந்துகொள்வதே உண்மையான அறிவு. உண்மையாக முன்னேறிய சமுதாயத்தில் அனைத்து மக்களிடமும் இந்த அறிவு உள்ளது. அவர்கள் வாழ்வின் ஆன்மீகப் பக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, மனித வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது என்பதையும் அறிந்துள்ளனர். மனித வாழ்வு முக்கியமானது; ஏனெனில், பௌதிக பந்தத்தினால் கட்டுண்டிருக்கும் ஆத்மா தனது படிப்படியான பரிணாமத்தின் மூலமாக இந்த மனிதப் பிறவியைப் பெற்றுள்ளான்.
பரிணாமத்தில் பெறப்பட்ட பிறவி
பத்ம புராணத்தில் பரிணாமக் கொள்கை விளக்கப்பட்டுள்ளது. ஆத்மா கீழ்நிலை உயிரினத்தி
லிருந்து பரிணமிக்கிறது—நீர்வாழ் உயிரினத்தில் தொடங்கி, தாவரம், கிருமி, பறவை, மனிதன் என பரிணமித்து, இறுதியில் நாகரிக மனித வாழ்வை அடைகிறது.
நாம் தற்போது நாகரிக மனித வாழ்வை அடைந்திருப்பது நல்லதிர்ஷ்டமே; ஆயினும், துரதிர்ஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானோர் இதனை உடலைப் பராமரிப்பதற்காகவே பயன்படுத்துகிறோம். உணவு, உறக்கம், தற்காத்தல், மற்றும் பாலுறவிற்காக மட்டும் வாழ்வதன் மூலம், மதிப்புமிக்க மனித வாழ்வை வீணடிக்கிறோம். மனிதப் பிறவியில் ஆத்மா தன்னை பந்தத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மக்கள் வாழ்வின் ஆன்மீகப் பக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, தேவைக்கு அதிகமான மக்கள் பெருக்கம் ஏற்படுகிறது.
மக்கள்தொகை பெருகுவது ஏன்? பள்ளியில் மாணவர்கள் கீழ் வகுப்புகளிலிருந்து உயர் வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவதாக வைத்துக்
கொள்வோம். அவர்கள் இறுதி வகுப்பிற்கு வரும்போது, அதில் தேர்ச்சி பெறாவிடில், அந்த வகுப்பு நெரிசல் மிக்கதாகி விடும். அதுபோலவே, மக்கள் மேன்மையான வாழ்விற்கு உயர்த்தப்படாத காரணத்தினால், தற்போதைய நாகரிகத்தில் அவ்வப்போது மக்கள் பெருக்கம் அதிகமாக உள்ளது. அவர்கள் மனித வாழ்வில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அச்சமயத்தில், மக்கள்தொகையைக் குறைக்க இயற்கையின் ஏற்பாட்டில், ஏதேனும் ஓர் உயிர்கொல்லி தொற்றுநோய் அல்லது போர் ஏற்படுகிறது.
உண்மையான பெருமை
எனவே, மக்கள் மிகவும் பெருமையுடன் வாழும்போதிலும், அவர்களிடம் உண்மையான புத்தியோ அறிவோ இல்லை. கடவுள் உண்மையான அறிவைத் தருகிறார். அஃது இங்கே விளக்கப்பட்டுள்ளது, புத்திர் ஜ்ஞானம் அஸம்மோஹ, புத்தி, அறிவு, மயக்கத்திலிருந்து விடுதலை—இவையாவும் கடவுளின் பரிசு. எனவே, நாம் அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பரிசைப் பயன்படுத்துவதற்காகவே இந்த மனிதப் பிறவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் நமக்கு நல்ல உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார், நல்ல புத்திசாலித்தனத்தை வழங்கியுள்ளார், அறிவளிக்கும் நூல்களை வழங்கியுள்ளார். அவர் தாமே நேரடியாக பகவத் கீதையை வழங்கியுள்ளார். இவற்றை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது? இவற்றை முறையாகப் பயன்படுத்தினால், நீங்கள் நாகரிக மனிதர்கள் என்று அழைக்கப்படலாம். அவ்வாறு செய்யாவிடில், விலங்கு மனப்பாங்கையே பின்பற்றுவீர்; பெண் நாயைப் பின்தொடரும் நாய்களைப் போலவோ பெண் பன்றியைப் பின்தொடரும் பன்றிகளைப் போலவோ இருப்பீர்.
ஸ்ரீமத் பாகவதம் (11.9.29) கூறுகிறது, லப்த்வா ஸு-துர்லபம் இதம் பஹு-ஸம்பவாந்தே, இந்த மனித உடல் பற்பல பிறவிகளுக்குப் பிறகு, கோடானு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு அடையப்படுகிறது. நாம் இந்த உடலை திடீரென்று தற்செயலாகப் பெற்றுள்ளோம் என்று எண்ண வேண்டாம். பூனை, நாய் முதலான எத்தனையோ உடல்கள் உள்ளன, நாம் அத்தகு உடல்களின் நீண்ட பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இந்த மனித வடிவத்தை (மானுஷ்ய) அடைந்துள்ளோம்.
மனித வாழ்வின் மதிப்பு என்ன?
அவ்வாறு பெறப்பட்ட மனித வாழ்வின் மதிப்பு என்ன? இதில் நீங்கள் மிகவுயர்ந்த முழுமையை அடைய முடியும், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர முடியும்.
அடுத்ததாக, இந்த உடல் அநித்யம், தற்காலிகமானது என்று விவரிக்கப்பட்டுள்ளது. இது பயனுள்ளது என்றாலும், நிரந்தரமானதல்ல. எனவே, நீங்கள் தீரர்களாக—நிதானமானவர்களாக, புத்திசாலி
களாக—இருக்க வேண்டும் என்று பாகவதம் அறிவுறுத்துகிறது. மனித வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? தூர்ணம் யதேத ந பதேத் அனு-ம்ருத்யு யாவன் நி:ஷ்ரேயஸாய. மிகவுயர்ந்த பொருளை வெகு விரைவில் அடைவதற்காக, மனித வாழ்வை முறையாகப் பயன்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். ஏன் வெகு விரைவில்? ஏனெனில், மரணம் எப்போது வரும் என்று உங்களுக்குத் தெரியாது. “நான் ஓர் இளைஞன். நான் விரும்பியதைச் சாப்பிடலாம், குடிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம், ரசிக்கலாம்,” என்று நினைத்து விட வேண்டாம். அவ்வாறு இருந்து விடாதீர். நீங்கள் சற்றும் தாமதிக்கக் கூடாது. பிரகலாத மஹாராஜர் தமது அன்னையின் கருப்பையில் இருந்தபோது, நாரத முனியால் அறிவுறுத்தப்பட்டார், மிகச்சிறந்த பக்தரானார். அவருக்கு ஐந்து வயது இருக்கும்போது, அவர் தமது பள்ளித் தோழர்களை கிருஷ்ண உணர்வை உடனடியாக ஏற்கும்படி அறிவுறுத்தினார்.
வெற்று கர்வம் வேண்டாம்
எனவே, ஐநூறு ஆண்டுகள் பழமையான மரமாகவோ ஐம்பது இலட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாகவோ இருப்பதில் எவ்வித மதிப்பும் இல்லை. நீங்கள் ஐந்து ஆண்டுகள் மட்டும் வாழ்ந்தால்கூட, ஆன்மீக அறிவைப் புரிந்து கொண்டால், உங்களது வாழ்க்கை பக்குவமானதாக அமையும். இந்தக் கூற்று ஸ்ரீமத் பாகவதத்தில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
“உங்களது ஆயுள் நீண்டது என்று எண்ணி பெருமைப்படுகிறீர்களா? பூனைகளும் நாய்களும் பத்து-இருபது ஆண்டுகளில் இறந்து விடுவதைக் கண்டும், மனிதர்கள் எழுபது-எண்பது ஆண்டுகள் வாழ்வதைக் கண்டும், நீங்கள் பெருமைப்படுகிறீர்களா?”
ஸ்ரீமத் பாகவதம் (2.3.18) இதற்கு விடையளிக்கிறது, தரவ: கிம் ந ஜீவந்தி, “மரத்தைப் பார்க்கவில்லையா? அஃது ஐநூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள்கூட வாழ்கிறது.”
“இருப்பினும், மரத்தால் சுவாசிக்க முடியாது.”
பஸ்த்ரா: கிம் ந ஸ்வஸந்தி, “ஆனால், நீங்கள் [கொல்லனுடைய பட்டறையில் இருக்கக்கூடிய] துருத்திகளைப் பார்க்கவில்லையா? அது வெறும் தோலினால் உருவான பை. ஆயினும், அதுவும், ‘புஸ், புஸ், புஸ்’ என சுவாசிக்கிறது. எனவே, உங்களுடைய சுவாசத்தை அற்புதமானது என்று ஏன் நினைக்கிறீர்கள்?”
“சரி, துருத்திகள் சுவாசிக்கின்றன. ஆனால் அவற்றால் உணவையும் உடலுறவையும் அனுபவிக்க முடியாதே.”
ந காதந்தி ந மேஹந்தி கிம் க்ராமே பஷவோ ’பரே: “ஆனால், நாய்களும் பன்றிகளும்கூட உடலுறவை அனுபவிக்கின்றதே! அவையும் உண்கின்றனவே!”
இவ்வழியில் பாகவதம் பௌதிகவாதிகளின் முட்டாள்தனமான பெருமையை பகுத்து ஆய்வு செய்கிறது. நீங்கள் இத்தகு தவறான பெருமைகளைக் கைவிட்டு, கிருஷ்ண உணர்விற்கு வர வேண்டும். அதுவே வாழ்க்கையின் பக்குவம். இல்லையெனில், நீங்கள் பூனைகள் அல்லது நாய்களைப் போன்றவர்களே. நான் உங்களை கடுமையாக விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், உண்மையைத்தான் கூறுகிறேன்.
எனவே, புத்தி, ஞானம், அஸம்மோஹ—நல்ல புத்திசாலித்தனம், உண்மையான அறிவு, குழப்பத்திலிருந்து விடுபடுதல்—ஆகியவற்றிற்காக இந்த மனித வாழ்வை சரியாகப் பயன்படுத்த வேண்டும். பகவத் கீதையை புத்தியுடனும் அறிவுடனும் நன்றாக ஆய்வு செய்து படித்தால், நீங்கள் பக்குவமடைவீர். இதுவே கிருஷ்ண பக்தி. இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்; உங்களது மனித வாழ்வை வீணாக்கி விட வேண்டாம். இதுவே எங்களின் வேண்டுகோள். அதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குவதே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். இதைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண.