வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ராஜ-வித்யா ராஜ-குஹ்யம்
பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம்
ஸு-ஸுகம் கர்தும் அவ்யயம்
“இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் மிக இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இதுவே தர்மத்தின் பக்குவ நிலையாகும். இஃது அழிவற்றதும் பேரின்பத்துடன் செயலாற்றப்படுவதும் ஆகும்.” (பகவத் கீதை 9.2)
உண்மையான அறிவு
வித்யா என்றால் “கல்வி,” ராஜ என்றால் “அரசன்.” எது கல்வியின் அரசன்?
பெளதிக உலகில் நாம் பல்வேறு விதமான வாழ்க்கை நிலைகளில் இருக்கின்றோம். கல்வியைப் பொறுத்தவரை, சிலர் M.A., சிலர் B.A., சிலர் மூன்று வருட பள்ளிக்கல்வி, சிலர் நான்கு வருடக் கல்வி என்று உள்ளனர். இவ்வாறு கல்வியில் வேறுபட்ட படித்தரங்கள் உள்ளன. இவற்றில் மிகவுயர்ந்த நன்மையளிப்பதாக, மிகச்சிறந்ததாக—அதாவது முதலிடத்தில் இருப்பது எது? மிகச்சிறந்த கல்வி—ராஜ வித்யா—கிருஷ்ண உணர்வே. நான் யார் என்பதைப் புரிந்துகொள்வதே உண்மையான அறிவு. இதனை உணராத வரை நாம் அறிவற்றவர்களே.
சைதன்ய மஹாபிரபு தமது பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, நவாப் ஹுசைன் ஷாவின் நிதி மந்திரியான ஸநாதன கோஸ்வாமி அவருடைய முதல் சீடரானார். சைதன்ய மஹாபிரபுவின் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, ஸநாதனர் பணியிலிருந்து ஓய்வு பெற்று சைதன்யருடன் இணைந்தார். அவர் பகவான் சைதன்யருடனான முதல் சந்திப்பிலேயே, “கல்வி என்றால் என்ன?” என்பதை விசாரித்தார்.
ஸநாதனர் மிகச்சிறந்த பண்டிதராக இருந்தார். அந்நாள்களில், இந்தியாவில் பாரசீக மொழியும் கற்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆங்கிலம் கற்பிக்கப்பட்டதைப் போலவே, பாட்டானியர்களின் ஆட்சிக் காலத்தில் பாரசீக மொழி அரசு மொழியாக இருந்தது. ஸநாதன கோஸ்வாமி பாரசீகம், சமஸ்கிருதம் உட்பட பல்வேறு மொழிகளில் சிறந்த பண்டிதராக இருந்தார். இருப்பினும், அவர், “கல்வி என்றால் என்ன?” என்று வினவினார்.
அவர் ஏன் அவ்வாறு விசாரித்தார்? அவர் பகவான் சைதன்யரிடம் கூறினார், “பொதுவாக மக்கள் என்னை பண்டிதனாகக் கருதுகிறார்கள். நானும் என்னை அவ்வாறு பண்டிதனாக ஏற்றுக் கொண்டு முட்டாளாக வாழ்கிறேன்.”
அதற்கு சைதன்யர் வினவினார், “நீங்கள் மிகச்சிறந்த பண்டிதர்தானே? தாங்கள் சமஸ்கிருத பண்டிதர், பாரசீக பண்டிதர். அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்களை முட்டாளாக நினைக்க வேண்டும்?”
ஸநாதனர் பதிலளித்தார், “நான் யார் என்பதே எனக்குத் தெரியாது. எனவே, என்னால் என்னை ஒரு பண்டிதனாக நினைக்க முடியவில்லை. துன்பங்களை விரும்பாவிட்டாலும், பெளதிகத் துன்பங்கள் என்னை வாட்டுகின்றன. நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்லப் போகின்றேன் என்பதே எனக்குத் தெரியவில்லை; இருந்தும்கூட, மக்கள் என்னை பண்டிதனாக நினைக்கின்றனர். அவர்கள் என்னை சிறந்த பண்டிதனாக அழைப்பதில் நானும் பெருமையடைகிறேன். ஆயினும், உண்மையில் ‘நான் யார்’ என்பதையே தெரியாத அளவிற்கு நான் ஒரு முட்டாளாக இருக்கிறேன்.”
இதுவே நமது தற்போதைய நிலை. கல்வியில் முன்னேறியவர்கள் என்று கூறி நாம் கர்வமடைகிறோம். ஆனால், யாராவது உங்களிடம் வந்து, “நீங்கள் யார்” என்று வினவினால், யாராலும் அதற்கு விடையளிக்க முடிவதில்லை. அனைவருமே “நான் இந்த உடல்” என்ற எண்ணத்தில்தான் இருக்கிறோம். உண்மையில், நாம் இந்த உடல் அல்ல. இதனை நான் பலமுறை விவாதித்துள்ளேன். “நான் இந்த உடல் அல்ல” என்ற அறிவு பரிட்சையில் தேர்ச்சி பெற்றவரே உண்மையான அறிவாளி. இதுவே ஆரம்பம்.
இரகசியமான அறிவு
கிருஷ்ணர் இத்தகைய அறிவையே அர்ஜுனனுக்கு வழங்குகின்றார். இதனை அவர் ராஜ-வித்யா என்று கூறுகின்றார். ராஜ-வித்யா என்றால் தன்னையறிந்து அதற்கேற்ப செயல்படுவதாகும். நான் யார் என்பதை நான் அறியாவிட்டால், எனது நிலைமை குறித்து நான் தவறாகப் புரிந்துகொள்வேன், எனது செயல்கள் அனைத்திலும் அறியாமையின் தவறுகள் ஏற்படும். “நான் இந்த உடல் அல்ல” என்பதை அறிந்தால் மட்டும் போதாது. நீங்கள் ஆன்மீகமயமானவர் என்பதையும் உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். அந்த ஆன்மீகச் செயல்களே கிருஷ்ண உணர்வாகும். இதுவே ராஜ-வித்யா, “அறிவின் அரசன்” என்று அறியப்படுகிறது.
ராஜ-குஹ்யம் என்றால் “மிகவும் இரகசியமானது” என்று பொருள். கிருஷ்ண உணர்வை அவ்வளவு எளிதில் அடைய முடியாது. இருப்பினும், கிருஷ்ணர் மற்றும் சைதன்யரின் கருணையினால், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம, ஹரே ஹரே என்ற மஹா மந்திர உச்சாடனத்தின் மூலமாக, கிருஷ்ண உணர்வு மிகவும் எளிதாக நமக்கு வழங்கப்படுகின்றது.
உயிரினங்களின் வகைகள்
பகவான் சைதன்யர் உயிரினங்களைப் பற்றிய ஓர் ஆய்வை வழங்கியுள்ளார். அவர் அதனை பிரபஞ்சமெங்கும் எண்ணிலடங்காத உயிரினங்கள் நிறைந்துள்ளனர் என்று கூறி தொடங்குகின்றார். நாம் பூமியை ஆராய்ந்தால் இங்கே எண்ணற்ற உயிரினங்களைக் காணலாம், காற்றை ஆராய்ந்தால் அதிலும் எண்ணற்ற உயிரினங்களைக் காணலாம். நீரின் ஆழத்திலும் எண்ணற்ற உயிர்களைக் காண்பீர்கள். இவ்வாறாக, பிரபஞ்சமெங்கும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.
பகவான் சைதன்யர் அந்த உயிரினங்களை அசைவன, அசையாதன என இரண்டு வகையாகப் பிரிக்கின்றார். மரம், கல், தாவரம், புல் போன்றவற்றால் நகர முடியாது. சில கற்களுக்கும் உயிர் உண்டு, ஆனால் கற்களால் அந்த உணர்வை விருத்தி செய்துகொள்ள முடியாது. அவை அதீத அறியாமையினால் மூடப்பட்டுள்ளன. அதுபோல, தனது நிலையைப் புரிந்துகொள்ளாமல், மனித உடலில் வாழ்பவர்களும்கூட கிட்டத்தட்ட கற்களைப் போன்றவர்களே.
நீர்வாழிகள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, மனிதர்கள், தேவர்கள் என அசையும் உயிரினங்கள் பல உள்ளன. அவற்றுள் மனிதர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. 84,00,000 வகையான உயிரினங்களில் 4,00,000 வகை மட்டுமே மனித உடல்கள். ஸ்ரீ சைதன்யர் கூறுகின்றார், “இந்த 4,00,000 மனித இனங்களிலும் கற்றறிந்தவர்கள் மிகவும் குறைவு. அவ்வாறு கற்றறிந்தவர்களிலும் சாஸ்திர ஞானம் பெற்றவர்கள் மிகவும் குறைவு.” மக்கள் கூறுகின்றனர்: “நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன்,” “நான் இந்து,” “நான் முஸ்லிம்.” இருப்பினும், இன்றைய உலகில், மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்பவர்களிலேயே பெரும்
பாலானோர் சாஸ்திரங்களை நம்புவதில்லை.
மூன்று வகையான தர்மச் செயல்கள்
சாஸ்திர நம்பிக்கையுள்ளவர்கள் புண்ணியச் செயல்களால், தர்மச் செயல்களால் கவரப்படுகின்றனர். தர்மச் செயல்கள் மூன்று வகைப்படும்: யஜ்ஞ-தான-தப. யஜ்ஞ என்றால் “யாகம்,” தான என்றால் “தானம்,” தப என்றால் “தவம்.” பிரம்மச்சரிய வாழ்வும் சந்நியாச வாழ்வும் தவத்திற்குரியதாகும். தவம் என்றால் ஆன்மீகத்தில் முன்னேறும் பொருட்டு தன்னிச்சையாக சிரமங்களை ஏற்பதாகும். தானம் என்றால் தனது பெளதிக வளங்களை மற்றவர்களுக்கு தன்னிச்சையாக வழங்குவதாகும்.
யாகத்தைப் பொறுத்தவரையில், அதற்கான அனுபவம் தற்போது நம்மிடம் இல்லை. இருப்பினும், மஹாபாரதம் போன்ற வரலாற்று நூல்களின் மூலமாக நாம் யாகத்தைக் குறித்த அறிவைப் பெறுகின்றோம். முன்பெல்லாம் மன்னர்கள் மிகப்பெரிய யாகங்களை செய்தனர். தங்கம் வெள்ளி, என்று இலட்சக்கணக்கில் செல்வத்தை தானமாக வழங்கினர். இன்றைய வாழ்வில் அவை சாத்தியமில்லை, பண்டைய மன்னர்களுக்கு அவை சாத்தியமாக இருந்தன. மன்னர்கள் மக்களிடமிருந்து வரி வசூலித்தனர்; இருப்பினும், மன்னர்கள் யாகங்களை மேற்கொண்டபோது, அச்செல்வங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கினர். இன்றைய அரசாங்கமும் வரி வசூலிக்கின்றது, ஆனால் அதனை விநியோகிப்பதேயில்லை. எனவே, யாகம் குறித்த எண்ணமே நம்மிடம் இல்லை.
யாகம் என்பது மன்னர் அல்லது அரசாங்கத் தலைவரின் கடமையாகும், தானம் என்பது கிருஹஸ்தர்களுக்கான கடமையாகும், தவம் என்பது பிரம்மச்சாரிகள், சந்நியாசிகள் மற்றும் (ஓய்வு பெற்றவர்களான) வானபிரஸ்தர்கள் ஆகியோரின் கடமையாகும். இதுவே கட்டுப்பாடுடன்கூடிய தர்ம நெறியாகும். சாஸ்திர நம்பிக்கை உடையவர்கள் இத்தகைய நெறிகளை ஏற்கின்றனர். பெரும்பாலான மக்கள் மத நம்பிக்கையை மட்டும் ஏற்கின்றனர், ஆனால் அதற்குரிய செயல்களை மேற்கொள்வதில்லை. இருப்பினும், இவ்வாறான இலட்சக்கணக்கான மக்களுள் சிலர் தர்மத்தை உண்மையான முறையில் பின்பற்றி, யாகம், தவம், தானம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.
கிருஷ்ண உணர்வு—நேரடி வழிமுறை
ஸ்ரீ சைதன்யர் கூறுகின்றார்: “யாகம், தானம் மற்றும் தவத்தை மேற்கொண்டுள்ள இலட்சக்கணக்கானவர்களுள் மிகச்சிலரே ‘நான் இந்த உடல் இல்லை’ என்னும் அறிவைப் பெறுகின்றனர். ஆயினும், ‘நான் ஆத்மா’ என்னும் தத்துவ அறிவு மட்டுமே பக்குவமாகாது. பெளதிகப் பிணைப்பிலிருந்து விடுபட்டு முக்தி நிலையை அடைய வேண்டும். ஆத்ம ஞானத்தை அறிந்துள்ள ஆயிரக்கணக்கான மனிதர்களுள் உண்மையான முக்தியைப் பெற்றவர்கள் மிகவும் குறைவு. அவ்வாறு முக்தி பெற்ற ஆயிரக்கணக்கானவர்களுள் மிகச்சிலரே கிருஷ்ணரை அறிகின்றனர்.”
எனவே, கிருஷ்ணரை அறிவது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும், கிருஷ்ணர் கருணைமயமானவர். பொதுவான வழிமுறைகளின் மூலமாக முக்தியடைதல் இந்த கலி யுகத்தில் மிகவும் கடினமானது என்பதை அவர் அறிந்துள்ளார். பொதுவான வழிமுறை என்றால்—முதலில் கல்வி கற்க வேண்டும், அதன் பிறகு தர்மத்தைப் பின்பற்ற வேண்டும், அதன் பிறகு தானங்களையும் யாகங்களையும் மேற்கொள்ள வேண்டும், அதன் பிறகு உண்மையான அறிவின் தளத்திற்கு வர வேண்டும், அதன் பிறகே முக்தியின் நிலைக்கு வர முடியும். எனவேதான், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நேரடி வழிமுறையான கிருஷ்ண உணர்வை நமக்கு வழங்கியுள்ளார்.
கலி யுக மக்களின் பிரச்சனைகள்
விதிகளின் மூலமாக முக்தி பெறுதல் அவ்வளவு எளிதல்ல. பாகவதம் இந்த யுக மக்களை, ப்ராயேணால்பாயுஷ:, “குறைந்த ஆயுளுடையோர்” என்று குறிப்பிடுகிறது. மேலும், மந்தமானவர்கள், அதாவது அறிவற்றவர்கள் என்று கூறுகிறது. இன்றைய மனிதர்கள் இருபத்துநான்கு மணி நேரத்தில் பன்னிரண்டு மணிநேரம் உறங்குகின்றனர், மீதி பன்னிரண்டு மணி நேரத்தில் பத்து மணி நேரம் பொருள் ஈட்டுவதில் செலவிடுகின்றனர். எஞ்சியிருப்பது இரண்டு மணிநேரம் மட்டுமே, அதில் எங்கிருந்து ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வது? அவர்களுக்கு நேரமே இருப்பதில்லை.
மேலும், யாரேனும் ஆன்மீக முன்னேற்றத்தில் ஆர்வமாக இருந்தால், அவர்களைக் கவருவதற் கென்றே எண்ணற்ற போலியான ஆன்மீக இயக்கங்கள் உள்ளன. அடுத்ததாக, மந்த-பாக்ய: பெரும்பாலானோர் துரதிர்ஷ்டசாலிகள். பெரும்பாலான மக்கள் உண்பது, உறங்குவது, உடலுறவு, தற்காப்பு போன்ற அடிப்படை வசதிகள்கூட அற்றவர்களாக இருக்கின்றனர். இவை விலங்குகளுக்குக்கூட எளிதாக கிடைக்கின்றன. ஆனால் இந்த யுக மக்களோ, இருப்பிடம், உணவு, மனைவி போன்றவற்றை அடைவதற்குக்கூட மிகவும் சிரமப்படுகின்றனர்.
இறுதியாக, உபத்ருத—மேற்கூறிய எல்லா வற்றையும்விட, மக்கள் எப்போதுமே வியாதிகளாலும் எண்ணற்ற பிரச்சனைகளாலும் கவலை அடைந்துள்ளனர்.
கலி யுக மக்களுக்கான நல்வாய்ப்பு
இதுவே இன்றைய யுக மக்களின் நிலையாகும். எனவேதான், வழக்கமான விதிகளின் மூலமாக முக்தியடைதல் மக்களுக்கு கடினம் என்று எண்ணிய கிருஷ்ணர், தமது காரணமற்ற கருணையின் மூலமாக, ஸ்ரீ சைதன்யராக அவதரித்து வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவத்தை, ஆன்மீகப் பேரின்பத்தை—ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம, ஹரே ஹரே என்னும் மந்திர உச்சாடனத்தின் மூலமாக விநியோகிக்கின்றார். இந்த உச்சாடனம் எளிமையானது. நாம உச்சாடனத்தில் ஈடுபடுவதற்கு, முக்தி பெற்றவர், பந்தப்பட்டவர், பதவி, கெளரவம் என எந்தவொரு பாகுபாடும் இல்லை. இதில் அனைவரும் பங்குகொண்டு பேரின்பம் அடையலாம். இந்த வழிமுறை பவித்ரம், “தூய்மையானது” எனப்படுகின்றது. இம்முறையை ஏற்பவர் யாராயினும் அவர் தூய்மையடைகின்றார், தூய்மை உடனே ஆரம்பமாகின்றது.
உத்தமம் என்றால் “சிறந்தது” என்று பொருள். உத்தமம் என்பதற்கான பொருளை பத்ம புராண ஸ்லோகம் ஒன்றின் மூலமாக விளக்கலாம்:
அப்ராரப்த-பலம் பாபம் கூடம் பீஜம் பலோன்முகம்
க்ரமேணைவ ப்ரலீயேத விஷ்ணு-பக்தி-ரதாத்மனாம்
உன்னத அறிவாகிய கிருஷ்ண உணர்வைப் பெறுபவரின் அனைத்து பாவ விளைவுகளும் அதன் விதைகளும் படிப்படியாக அழிந்துபோகின்றன என்பதே இதன் பொருளாகும். இதற்கான உதாரணத்தை நாம் பகவத் கீதையில் படித்துள்ளோம்—நெருப்பில் போடப்படுபவை சாம்பலாக்கப்படுவதைப் போலவே, கிருஷ்ண உணர்வு என்னும் நெருப்பு எரியத் தொடங்கிய உடனேயே கடந்த கால பாவ விளைவுகள் அனைத்தும் சுட்டெரிக்கப்படுகின்றன.
பாவங்களை ஒழிக்கலாம், வாரீர்
நமது துன்பங்களுக்கான காரணம் பாவச் செயல்களே. பாவச் செயல்களுக்கான காரணம் அறியாமை. பாவச் செயல்களின் விளைவுகளை அறியாத மனிதன் அவற்றில் ஈடுபடுகின்றான். அறியாமையில் இருக்கும் குழந்தைக்கு நெருப்பைத் தொட்டால் என்னவாகும் என்பது தெரியாது. இருப்பினும், குழந்தை நெருப்பைத் தொட்டவுடனேயே, அது குழந்தையின் கைகளைச் சுட்டெரிக்கிறது. குழந்தை என்பதற்காக நெருப்பு எவ்வித சலுகையும் வழங்குவதில்லை. நெருப்பு எப்போதும் நெருப்புதான். அதுபோலவே, இந்த பெளதிக உலகம் எவ்வாறு இயங்குகிறது, இதனுடைய சட்டதிட்டங்கள் யாவை, இதனைக் கட்டுப்படுத்துபவர் யார், அவர் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் முதலியவற்றை நாம் அறியாமல் இருக்கலாம். இருப்பினும், அறியாமையின் காரணமாக தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் செயல்களை, கண்டிப்புடன் செயல்படும் இயற்கை ஒருபோதும் மன்னிப்பதில்லை.
எனவே, அறியாமையே துன்பங்களுக்கான காரணம் என்பதால், நாம் உண்மையான அறிவைப் பெறுவதற்கு முயல வேண்டும். உண்மையான அறிவு என்றால், நான் யார், இந்த உலகம் எப்படிப்பட்டது, கடவுள் யார், கடவுளுக்கும் எனக்கும் என்ன உறவு என்பனவற்றை அறிவதாகும். இவற்றை அறிய வேண்டியது அவசியம். தொழில்துறை வல்லுநராக, அல்லது ஏதேனும் ஒன்றில் நிபுணராக இருப்பது முக்கியமல்ல. அஃது உண்மையான அறிவு அல்ல. நாம் யார் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயலாற்ற வேண்டும், இதுவே உண்மையான அறிவு. இத்தகைய அறிவினை மனித வாழ்வில் மட்டுமே பெற முடியும்; மிருக வாழ்வில் அல்ல. எனவேதான், நமக்கு அறிவை வழங்குவதற்காக, நம்மை வழிநடத்துவதற்காக, நாகரிக உலகின் அனைத்து பகுதிகளிலும் எண்ணற்ற மத நூல்கள் உள்ளன. இவற்றை நாம் நிராகரிக்கக் கூடாது.
கீதையைப் படிப்போம்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகின்றார், “மக்கள் பரமனுடனான உறவை நினைவிற்கெட்டாத காலத்திலிருந்தே மறந்திருப்பதால், சாஸ்திர அறிவை வழங்குவதற்காக பகவான் எண்ணற்ற பிரதிநிதிகளை அனுப்பி வைக்கின்றார்.” எனவே, நாம் சாஸ்திரங்களால், குறிப்பாக பகவத் கீதையால் வழங்கப்படும் பலன்களை ஏற்க வேண்டும். பகவத் கீதையில் எல்லா அறிவும் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். உங்களுடைய புத்திசாலித்தனத்தைக் கொண்டு இதனைப் புரிந்துகொள்ள முயலுங்கள், அப்போது அனைத்தும் தெளிவாக்கப்படும்.
பகவத் கீதையினால் வழங்கப்படும் நன்மைகளை நாம் ஏற்க வேண்டும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம, ஹரே ஹரே எனும் உன்னத ஒலியதிர்வுடன் கீதையைப் படிக்கத் தொடங்கினால், அதைப் புரிந்துகொள்வதற்கான நமது ஆற்றலும் அதிகரிக்கும்.
மிக்க நன்றி.