—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
சமுதாயத்தில் நிகழும் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு கிருஷ்ணரே காரணம் என்றும், அதனால் பகவத் கீதையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிலர் கூறுகின்றனர். ஆம், மக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிவுபடுத்தும் வர்ணாஷ்ரம முறையினை வழங்கியவர் கிருஷ்ணரே, இதில் எந்த ஐயமும் இல்லை. கிருஷ்ணரே இதனை பகவத் கீதையில் (4.13) கூறியுள்ளார். அதே சமயத்தில், கிருஷ்ணர் கூறும் வர்ணங்கள் இன்றைய ஜாதி அமைப்பிலிருந்து வேறுபட்டவை என்பதை பெரும்பாலான நபர்கள் கவனிப்பதில்லை.
வர்ணங்கள் நான்கு, ஜாதிகளோ நூற்றுக்கணக்கில் உள்ளன. வர்ணங்கள் ஒருவர் செய்யும் தொழிலையும் அவருடைய குணத்தையும் அடிப்படையாகக் கொண்டவை, ஜாதியோ பிறப்பை அடிப்படையாக வைத்து கூறப்படுகிறது. வர்ணத்திற்கும் ஜாதிக்கும் தொடர்பே இல்லை என்று நாம் கூறவில்லை; ஆனால் வர்ணம் தகுதியின் அடிப்படையிலானது என்பதை வலுவாக சுட்டிக்காட்ட வேண்டியது நம் கடமை.
உதாரணமாக, சமுதாயத்தில் (அல்லது எந்தவொரு கட்சியில் எடுத்துக் கொண்டாலும்) அதன் உறுப்பினர்களுடைய தகுதியின் அடிப்படையில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி என பாகுபாடுகள் இருக்கின்றன. இந்த அணிகளைப் போன்றதே வர்ணமும், பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு மருத்துவரின் மகனை எவ்வாறு மருத்துவன் என்று கூற முடியாதோ, ஒரு வழக்கறிஞரின் மகனை எவ்வாறு வழக்கறிஞன் என்று கூற முடியாதோ, அவ்வாறே ஒரு பிராமணனின் மகனை பிராமணன் என்றோ, சூத்திரனின் மகனை சூத்திரன் என்றோ கூறி விட முடியாது. மருத்துவரின் மகன் மருத்துவத்தைக் கற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவனை மருத்துவனாக ஏற்கின்றோம்; அதுபோலவே, வேத சாஸ்திரங்களைக் கற்று அதன்படி உரிய தகுதிகளுடன் வாழ்ந்தால் மட்டுமே பிராமணனின் மகனை பிராமணனாக ஏற்க முடியும். இதுவே வேத வழிமுறை.
இன்றைய காலக் கட்டத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்துவிட்டு அமெரிக்கா சென்று வேலை பார்ப்பவர்களும் பிராமணனாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பிராமணனுக்குரிய தொழிலும் குணங்களும் ஒரு ஜாதி பிராமணனிடம் இல்லாவிடில், அவனை ஒருபோதும் பிராமணனாக ஏற்க முடியாது. அதுபோலவே, சூத்திர குடும்பத்தில் பிறந்தும் சூத்திரனின் தொழிலும் குணமும் இல்லாவிடில், அவனை சூத்திரனாக ஏற்க முடியாது.
கிருஷ்ணர் வழங்கிய தூய்மையான வர்ணாஷ்ரம வழிமுறை இன்று பிறப்பின் அடிப்படையிலான ஜாதி முறையாகத் திரிபடைந்து காணப்படுகிறது. புனிதமான காவிரி நதியில் குப்பைகள் கிடக்குமெனில், அந்த குப்பைகளைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, காவிரியை நிந்திக்கக் கூடாது. அதுபோலவே, இன்று திரிபடைந்து கிடக்கும் வர்ணத்தை சரிப்படுத்த வேண்டுமே தவிர, அதனை தூற்றக் கூடாது. வர்ண அமைப்பு மிகவும் விஞ்ஞானபூர்வமான சமுதாய அமைப்பாகும். இது முறையாகச் செயல்படுத்தப்பட்டால், சமுதாயத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கும் பேருதவியாக அமையும்.