தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி.
(ஒளிப்பதிவை ஆரம்பிப்பதற்கு முன்பாக)…
நிருபர்: மதிப்பிற்குரிய ஐயா! நாம் இப்போது பதிவு செய்யும் இந்த நேர்காணல் பின்னர் ஒருநாள் ஒளிபரப்பப்படும்.
பிரபுபாதர்: சரி.
நிருபர்: உண்மையில் எனக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியாது.
பிரபுபாதர்: (சிரிக்கிறார்)
நிருபர்: அதனால், நான் கேள்வி கேட்கும்போது எனது அறியாமை வெளிப்படலாம். நீங்கள் எனக்கு அதில் உதவ வேண்டும். நீங்கள் மிகச்சிறந்த நிபுணர், எனக்கு இதில் மிகமிகக் குறைவாகவே தெரியும்.
ஸ்ரீல பிரபுபாதர்: நிபுணராக இருப்பது கிருஷ்ணரே. அவரே தலைசிறந்த நிபுணர்.
நிருபர்: ஆம், கிருஷ்ணரே நிபுணர். இதை நான் அறிந்துள்ளேன். உண்மையில், கிருஷ்ணரே எல்லாம்.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணரே நிபுணர் என்பதை முழுமையாக ஏற்பவன் அதிகாரம் பொருந்திய நபராகிறான்.
நிருபர்: ஆம், அதன்படி நீங்கள் அதிகாரமுடையவர்.
ஸ்ரீல பிரபுபாதர்: நான் மட்டுமல்ல, யாரெல்லாம் கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் அனைவரும் அதிகாரமுடையவர்கள். என்னுடைய நூலான பகவத் கீதை உண்மையுருவில் ஓர் அதிகாரம் பொருந்திய நூல்.
நிருபர்: ஆம், நான் அதை அறிவேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஐம்பதாயிரம் பிரதிகள் அச்சிடுகிறோம். நீங்கள் இந்த உண்மையான பகவத் கீதையிலிருந்து வினாக்களை எழுப்பலாம். அது நன்றாக இருக்கும். நான் அதற்கு விளக்கம் தருகிறேன்.
நிருபர்: சரி.
(ஒளிப்பதிவு தொடங்கப்படுகிறது. நிருபர் தனது அறிமுகப் பேச்சினைத் தொடங்குகிறார்:) வேத சாஸ்திரங்களின்படியும் குரு பரம்பரையில் வந்த மாபெரும் சாதுக்களுடைய கூற்றின்படியும், பகவான் கிருஷ்ணரே பூரண உண்மை, அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். அவர் நித்தியமான, ஆனந்தமான, மற்றும் ஞானமயமான உடலைக் கொண்டவர். கடவுள் எண்ணற்ற ரூபங்களையும் விரிவுகளையும் பெற்றுள்ளார்; இருப்பினும், அவருடைய எல்லா ரூபங்களிலும் மூல தெய்வீக ரூபமாக இருப்பது, இடையர்குல சிறுவனின் ரூபமே. இந்த உருவத்தை அவர் தமது மிகவும் அந்தரங்க பக்தர்களுக்கு மட்டுமே வெளிக்காட்டுகிறார். வேத சாஸ்திரங்களில் கிருஷ்ணரைப் பற்றிய தகவல்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. இன்று நம்முடைய விருந்தினராக உரையாட வந்திருப்பவர்—நான் முன்னரே கூறிய மாபெரும் சாதுக்களின் சீடப் பரம்பரையில் வந்தவர்; அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர்—தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்.
இவர் மேற்கத்திய உலகில் கிருஷ்ண தத்துவத்தை எடுத்துரைக்கும் தலைசிறந்த குருவாகத் திகழ்கிறார், வார்த்தைகளால் உபதேசிப்பது மட்டுமின்றி தாமே ஓர் உதாரணமாக வாழ்கிறார். இவர் தமது ஆன்மீக குருவினுடைய கட்டளையின்படி 1965இல் இந்நாட்டிற்கு வந்தார். கிருஷ்ணரின் சீடரான இவர் இந்தியாவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய பகவான் ஸ்ரீ சைதன்யரின் பரம்பரையில் வந்த குருவாவார். உண்மையில், அந்த பரம்பரை கிருஷ்ணர் இவ்வுலகில் வாழ்ந்து உபதேசம் வழங்கிய காலக்கட்டமான 5,000 வருடங்களைக் கடந்து செல்கிறது.
[ஸ்ரீல பிரபுபாதரை நோக்கி:] ஐயா, வருக. கிருஷ்ண உணர்வு என்றால் என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வோர் உயிர்வாழியும் கிருஷ்ணரின் அம்சம். கிருஷ்ணர் பல்வேறு விரிவுகளைக் கொண்டவர். அந்த விரிவுகள், சுய விரிவுகள் என்றும் பின்ன விரிவுகள் (பிரிந்த விரிவுகள்) என்றும் இரு வகைப்படுகின்றன. நாம்—அதாவது ஜீவன்கள்—கிருஷ்ணரின் பின்ன விரிவுகளாவோம். கிருஷ்ணருடன் நமக்கு மிக நெருங்கிய உறவு உண்டு என்றபோதிலும், எப்படியோ பௌதிக உலகத்தின் தொடர்பினால், நாம் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம். இதனால், நாம் கிருஷ்ணரின் அம்சம் என்பதை ஏறக்குறைய மறந்து விட்டோம். ஆயினும், அதுவே உண்மை, ஆனால் ஜீவன் அதனை மறந்து வாழ்கிறான். ஒரு செல்வந்தனின் மகன் ஏதோ காரணத்தினால் தன் தந்தையை மறந்து தெருவில் ஒரு ஏழையைப் போல எவ்வாறு திரிந்து கொண்டிருப்பானோ, அவ்வாறே ஜீவனும் இவ்வுலகில் திரிந்து கொண்டுள்ளான். ஆனால், இஃது அவனுடைய உண்மையான நிலை அல்ல. அவன் மறந்த நிலையில் வாழ்கிறான்.
இவ்வாறாக, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில், ஜீவன் கிருஷ்ணருடைய அம்சம் என்னும் உண்மையான உணர்வை எழுப்புவதற்கு முயல்கிறோம். அவன் ஏன் இந்த பௌதிக உலகில் வாழ்ந்து, மூவகை துன்பங்களை அனுபவிக்க வேண்டும்? அவனது உண்மையான உணர்வை மீட்க நாங்கள் விரும்புகிறோம். அந்த உண்மையான உணர்வே கிருஷ்ண உணர்வாகும்.
ஒரு ஜமீன்தாரின் குடும்பத்தில் பிறந்தவனுக்கு அவனது குலப்பெயர் தானாகவே வழங்கப்படும். துரதிர்ஷ்டவசமாக அவன் தனது வீட்டை மறந்து விட்டால், அவன் ஏதோ ஒரு பெயரை ஏற்க வேண்டிவரும். அதுபோலவே, அடையாளத்தை இழந்து நிற்கும் நமக்கு உண்மையான உணர்வினை வழங்குவதே வேத சாஸ்திரங்களின் நோக்கமாகும். அஹம் ப்ரஹ்மாஸ்மி—“நான் ஆத்மா.”
நிருபர்: ஐயா, நீங்கள் இந்த நாட்டிற்கு 1965இல் உங்களுடைய ஆன்மீக குருவின் ஆணையின் பேரில் வந்துள்ளீர்கள் என்பதை அறிவேன். உங்களது அந்த ஆன்மீக குரு யார்?
ஸ்ரீல பிரபுபாதர்: எனது ஆன்மீக குரு, ஓம் விஷ்ணுபாத பரமஹம்ச பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதர்.
நிருபர்: நாம் சற்று முன்பு உரையாடிய குரு பரம்பரையானது கிருஷ்ணர் வரை செல்கிறது. அதில் உங்கள் குருவானவர் உங்களுக்கு முன்பாக உள்ளவரா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். குரு பரம்பரை கிருஷ்ணரில் தொடங்கி 5,000 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது.
நிருபர்: உங்களின் ஆன்மீக குரு இன்னும் உயிரோடு இருக்கிறாரா?
ஸ்ரீல பிரபுபாதர்: அவர் 1936இல் இறைவனடி சேர்ந்து விட்டார்.
நிருபர்: அப்படியெனில், இந்த இயக்கத்திற்கு தற்போதைய உலகளாவிய தலைவர் நீங்கள்தான். தங்களை அவ்வாறு கூறலாமா?
ஸ்ரீல பிரபுபாதர்: எனக்கு பல ஆன்மீக சகோதரர்கள் இருக்கிறார்கள், ஆயினும், இந்தக் கட்டளை எனது ஆன்மீக குருவினால் ஆரம்ப காலத்திலேயே எனக்கு வழங்கப்பட்டது. எனவே, நான் எனது குருவை திருப்திப்படுத்த முயல்கிறேன். அவ்வளவுதான்.
நிருபர்: நீங்கள் இந்த அமெரிக்க நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டீர்கள். இஃது உங்களுடைய வரம்பிலுள்ள நிலப்பகுதி என்று கூறலாமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ம்ம். “எனது நிலப்பகுதி.” என் ஆன்மீக குரு, “ஆங்கிலம் பேசும் மக்களிடம் இந்த தத்துவத்தைக் கூறு” என்று மட்டுமே எனக்கு அறிவுறுத்தினார்.
நிருபர்: ஆங்கிலம் பேசும் உலகிற்கு?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், முக்கியமாக மேற்கத்திய உலகிற்கு. அவர் என்னிடம் இப்படித்தான் கூறினார்.
நிருபர்: ஐயா, நீங்கள் வந்துள்ள இந்த நாடு சமயம் இல்லாத நாடல்ல. அமெரிக்காவில் எங்களுக்கு பல மதங்கள் உள்ளன. பெரும்பாலான மக்கள் தங்களை சமய நம்பிக்கை கொண்டவர்களாகவே கருதுகின்றனர். மக்கள் கடவுளை நம்புவோராகவும் ஏதேனும் மதச் செயல்களில் தங்களை ஈடுபடுத்தியவர்களாகவும் உள்ளனர். ஏற்கனவே சமய உணர்வுள்ள மக்களைக் கொண்ட இந்நாட்டிற்கு வந்து, உங்களது தத்துவத்தை சேர்ப்பதால், இங்கு என்ன செய்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தீர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: நான் முதன் முதலில் உங்களுடைய நாட்டிற்கு வந்தபோது, பட்லரில் ஓர் இந்திய நண்பரின் விருந்தினராகவே இருந்தேன்.
நிருபர்: பென்சில்வேனியா நகரத்திலா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அது ஒரு சிறிய பகுதியாக இருந்தபோதிலும், அங்கு பல தேவாலயங்கள் இருந்ததைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன்.
நிருபர்: பல தேவாலயங்கள்—ஆமாம், ஆமாம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், பல தேவாலயங்கள் உள்ளன. அவற்றில் பல இடங்களில் நான் உரையாடியுள்ளேன், எனது நண்பர் அதற்கு ஏற்பாடு செய்தார். நான் எந்த சமய வழக்கத்தைத் தோற்கடிப்பதற்காகவும் இங்கு வரவில்லை. எனது நோக்கம் அதுவல்ல. எங்களின் திருப்பணி—சைதன்ய மஹாபிரபுவின் திருப்பணி—கடவுளை எவ்வாறு நேசிப்பது என்பதை அனைவருக்கும் கற்பிப்பதே.
நிருபர்: ஆனால், கடவுளை எவ்வாறு நேசிப்பது என்பதைப் பற்றி ஏற்கனவே இந்நாட்டில் இருக்கக்கூடிய போதனைகளைக் காட்டிலும், மேற்கத்திய உலகில் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவதைக் காட்டிலும், நீங்கள் வழங்கும் வழிமுறை எந்த விதத்தில் வேறுபட்டது அல்லது சிறந்தது என்று உங்களால் கூற முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதரின் பதிலை அடுத்த இதழில் காணலாம்.